தலையங்கம் 3 நிமிட வாசிப்பு
பள்ளிகள் திறப்போடு புதிய செயல்முறைக்கும் திட்டமிடுங்கள்
தமிழகத்தில் நவம்பர் முதல் எல்லாப் பள்ளிகளையும் முழுமையாக இயக்கும் முடிவுக்கு அரசு வந்திருப்பது வரவேற்புக்குரிய முடிவு. முன்னதாக 9-12 மாணவர்களுக்கான பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஏற்கெனவே அனுமதிக்க அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது 1-8 மாணவர்களுக்கும் நவம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதித்திருப்பதன் வழியாக வீடடங்குச் சூழலிலிருந்து மாணவர்கள் முழுமையாக விடுவிக்கப்படுகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கிறார். “பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மாணவர்கள் இடையே பெரும் மன அழுத்தத்தையும், சமூகத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பள்ளிகள் திறப்பின்போது பல அடுக்கு முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு வழிகாட்டல்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்றின் பரவல் பெருமளவு கட்டுக்குள் இருந்தாலும், மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் நீடிக்கிறது. வரவிருக்கும் மாதத்தைக் கடந்துவிட்டால், இன்னும் துணிச்சலாகப் பள்ளிகளை இயக்கலாம் என்று அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தக் காலகட்டத்திலேயே உள்ளாட்சித் தேர்தலும் நடக்கவிருப்பதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. உத்தர பிரதேசம் பெரும் தொற்று பாதிப்புக்குள்ளாக அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு காரணமாக அமைந்ததையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கலாம்.
கரோனாவுக்கு முந்தைய பள்ளிக் கல்விச் சூழலை மீட்டெடுப்பதற்கு உலக நாடுகள் முழுக்கவுமே முயற்சிகள் நடக்கின்றன. உள்ளூரில் கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு, வகுப்புகளை நடத்துவது தொடர்பில் முடிவு எடுப்பதே உலகம் முழுக்க இப்போதைய வழிமுறையாக மாறியிருக்கிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னமும் எல்லோருக்கும் சாத்தியமாகாத நிலையில், ஆசிரியர்கள் - ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது வலியுறுத்தப்படுகிறது. பள்ளி வகுப்பறைகள் காற்றோட்டமாக இருப்பதும், மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதும், கூடுமானவரை முன்னெச்சரிக்கையோடு செயல்படுவதும் அறிவுறுத்தப்படுகிறது. ஓரளவுக்கு மேல் மனத் துணிவின் அடிப்படையில்தான் எல்லா நாடுகளுமே பள்ளிகளை இயக்குகின்றன. சமூகத்தில் ஏனைய பெரும்பான்மைச் செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு, பள்ளிக்கூடங்களை மூடிவைத்திருப்பது நியாயமே இல்லை என்பதே நிலைப்பாடு.
தமிழக முதல்வருடைய அறிக்கையில், நாம் பெரிதும் கவனம் கொடுத்து விவாதிக்க வேண்டிய விஷயம், ‘வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மாணவர்கள் இடையே உருவாகிவரும் மன அழுத்தமும், சமூகத்தில் ஏற்பட்டுவரும் பெரும் கற்றல் இடைவெளியும்’ ஆகும். யுனெஸ்கோவின் அறிக்கை உள்பட பல ஆய்வறிக்கைகள் இந்த விஷயத்தைக் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றன. ‘குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதால், சமூகத்தின் தொடர்பை இழந்து தவிக்கிறார்கள்; உடல்ரீதியான செயல்பாடுகளும், நண்பர்களுக்கு இடையேயான பிணைப்பின்மையும் அவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன’ என்பது திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டப்படுகிறது. கற்றலில் இது கடுமையான தாக்கத்தை உண்டாக்கும்.
முன்னதாக, பள்ளிகள் திறக்கப்பட்ட 9-12 வகுப்பு மாணவர்களுடனான ஆசிரியர்களின் அனுபவங்களைத் தமிழக அரசு கேட்க வேண்டும். மாணவர்களுடைய படிப்பில் பெரிய பின்னடைவு நிலவுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். “முந்தைய வகுப்பைக் கடந்ததற்கான வெளிப்பாடே பல மாணவர்களிடம் இல்லை; பாடங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்; பலர் தேங்கி நிற்கிறார்கள் - தடுமாறுகிறார்கள்” என்கிறார்கள் ஆசிரியர்கள். “கரோனாவால் விடுபட்ட காலகட்டத்தையும் சேர்த்து, இரண்டு வருடங்களுக்கான வகுப்புகளையும் இணைத்து நடத்துவதுபோல, ஒரு பாடத்திட்டத்தை நாம் உருவாக்கினால்கூட நல்லது; அதேசமயம், மாணவர்களுக்குப் பெரும் சுமையையும், நெருக்கடியையயும் தந்திடாத வகையில் இதை நாம் திட்டமிட வேண்டும்; கற்பித்தலிலும் புதிய செயல்முறையைத் திட்டமிட வேண்டும்” என்கிறார்கள்.
பொதுவாகவே கற்றலில் பெரிய இடைவெளியை எதிர்கொள்ளும் பள்ளிகள் இப்போது இன்னும் கூடுதல் கவனத்தைக் கோருகின்றன. இடைநிற்றல் விவகாரத்தையும் நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும்.
தமிழகப் பள்ளிக்கல்வித் துறை இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமான கல்வியாளர்களை உள்ளடக்கி ஒரு குழுவை அரசு அமைக்கலாம். மாவட்டவாரியாக நூறு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அழைத்து, அவர்களுடைய அனுபவங்களை இக்குழுவினரைக் கேட்கச்செய்து, அதற்கேற்ப ஒரு செயல்திட்டத்தையும், பாடத்திட்டத்தையும் வடிவமைக்கலாம். ஏனென்றால், முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் போதாது என்பதையே கள நிலவரங்கள் சொல்கின்றன.
பள்ளிகள் திறப்பு, செயல்பாடு எனும்போது கரோனாவுக்குப் பிறகு, பாதுகாப்பே பிரதானம் என்று ஆகிவிட்டிருக்கிறது. அது சரிதான், அதற்கு இணையான முக்கியத்துவத்தை மீண்டும் கற்றலோடு சங்கடமின்றி குழந்தைகளை இணைப்பதற்கும் நாம் கொடுக்க வேண்டும்.







பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Kalaiselvan j 4 years ago
(தனியார்) பள்ளிகள் திறப்பு என்பது மாணவர்களுக்கு உற்சாக மனநிலையினை தருவதாக இருந்தாலும் பள்ளி கட்டணம் கட்ட வேண்டிய கட்டாய சூழலை எதிர்கொள்ளும் நிலையில் பெற்றோர்களும் கட்டணத்தை வாங்க வேண்டிய தேவைகள் நிறைந்த நெருக்கடியில் (தனியார்) பள்ளிகளும் உள்ளன என்பதே தற்போதைய நிலை.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
kALIDAS 4 years ago
தலையங்கத்தில் ஆசிரியர் கூறியுள்ள கருத்து பெற்றோர்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுகிற கருத்து தான் அரசு மிக கவனமாக கையாள்கிறது. அதே வேளையில் பள்ளி திறப்பின் அவசியம் பலதரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலனூர் கே கே தாஸ்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
udhaya kumar 4 years ago
பல நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் குழந்தைகளை வாரத்திற்கு மூன்று பாடவேளைகளாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அது அஅவர்களை மற்ற மாணவர்களோடு மேலும் இணக்கமடைய செய்யும்.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Anna.Ravi 4 years ago
இப்பெருந்தொற்று காலத்தில் பள்ளித் திறப்பு என்பது சவாலுக்குரிய செயல்பாடாகும். குறிப்பாக அரசுப் பள்ளிகளில் சுகாதார கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கிராமப்புற உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தொகுப்பூதியத்தில் தூய்மைப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நகர்புற பள்ளிகளுக்கு அவ்வசதி இல்லை. பள்ளி வளாகத்தூய்மை, கழிப்பறை தூய்மைப் பணியை முறையாக மேற்கொள்ள முடிவதில்லை. இக்கட்டுரையாசிரியர் குறிப்பிடுவது போல கல்வியாளர்கள், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைக்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளியின் அமைவிடச் சூழல், இவற்றைக் கவனத்தில் கொண்டு நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கான வாய்ப்புகளோடு திட்டமிட்டால் சிறப்பாக இருக்கும். அத்துடன் அனைவருக்கும் அர்பணிப்பு உணர்வு என்பது இன்றைய கூடுதல் தேவையாக உள்ளது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.