கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 8 நிமிட வாசிப்பு

பக்வந்த் மான்: ஆஆகவின் புது முகம்

டி.வி.பரத்வாஜ்
31 Mar 2022, 5:00 am
0

டெல்லியைத் தாண்டி ஆம்ஆத்மி கட்சி வென்றிருப்பதும், ஆட்சியமைத்திருப்பதும் இந்தியாவையே பேச வைத்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. பலரும் இந்த வெற்றியை அர்விந்த் கேஜ்ரிவாலுடைய வெற்றியாக மட்டுமே பேசுகின்றனர். அப்படிப் பார்ப்பதும், பேசுவதும் ஆஆகவின் இந்த வெற்றியை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவாது. உத்தர பிரதேச பாஜகவின் வெற்றியை எப்படி மோடியோடு மட்டும் தொடர்புபடுத்திப் பேசுவது நமக்கு முழுமையான சித்திரத்தைத் தராதோ அப்படிதான் இதுவும். உள்ளூர் முகங்களையும், உள்ளூரின் கள அரசியலையும் புரிந்துகொள்வது முக்கியம். அந்த வகையில், பக்வந்த் மானைப் புரிந்துகொள்வதன் வழியாகவே பஞ்சாப் ஆஆகவின் வெற்றியை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

அரசியல் கட்சியில் தொண்டராகச் சேர்ந்து சில ஆண்டுகள் உழைத்து, கட்சியில் பல பொறுப்புகளை ஏற்று, போராட்டங்களில் ஈடுபட்டு, சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகி, பிறகு முதல்வர் பதவி நோக்கி நகரும் வகையறாவைச் சேர்ந்தவர் இல்லை பக்வந்த் மான்.  தனக்கிருந்த டி.வி. புகழால் ஒரு கட்சியில் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானவர். 

வளர்ந்த பாதை

சங்ரூர் மாவட்டத்தில் பக்வந்த் மான் பிறந்த சடோஜ் கிராமத்தில் உள்ள அனைவருமே சொந்தம் கொண்டாடும் அளவுக்கு அனைவருடன் பழகியவர்.

பக்வந்த் சிங் மானின் தந்தையார் மொஹீந்தர் சிங், நடுநிலைப் பள்ளிக்கூட முதல்வர். தந்தையுடன் சைக்கிளில் தினமும் பள்ளிக்கூடம் செல்வார். ஆசிரியர் என்பதால் மகனை நன்றாகப் படித்து, முன்னுக்கு வரச் சொல்வார் தந்தை. மகனோ பாட்டுகளை சொந்தமாக இட்டுக்கட்டிப் பாடுவதிலும் நகைச்சுவையாக எதையாவது பேசி மற்றவர்களைச் சிரிக்க வைப்பதிலுமே ஆர்வம் அதிகம் கொண்டிருந்தார்.

தன்னுடைய வகுப்புத் தோழர்களைப் போல, ஆசிரியர்களைப் போல குரலை மாற்றிப் பேசுவார் பக்வந்த் மான். வீதிகளில் செல்லும் மோட்டார் பைக், டிராக்டர்களைப் போலவே ஒலியெழுப்பி மலைக்கவைப்பார். பள்ளியில் படிக்கும்போது சுமார் மாணவர்தான். பிறகு கல்லூரியில் சேர்ந்தார் ஷாஹீத் (தியாகி) உத்தம் சிங் கல்லூரியில் ஓராண்டுதான் படித்தார். அதற்குள் ஏராளமான ரசிகர்கள். கல்லூரி கேன்டீனில் அவரைச் சுற்றி எப்போதும் பெரிய விசிறிகள் வட்டம் இருக்கும்.

ஒரு டிராக்டர் விவசாய நிலத்தில், சாலையில், மேடு ஏற நேரும்போது எப்படியெல்லாம் ஒலியெழுப்பும் என்று தத்ரூபமாக அவர் செய்துகாட்டுவதை அனைவரும் இமை கொட்டாமல் பார்த்து ரசிப்பார்கள். அவரது பல குரல் பேச்சாற்றலும் அனைவரையும் கவர்ந்தது.

கல்லூரி கலை விழாவில் ஒரு காயலாங்கடைக்காரரைப் போல வேடமிட்டு வந்து, அவரைப் போலவே பேசினார். காயலாங்கடைக்காரர்களுக்கு என்றே தனி பாணியில் இருக்கும் ஒரு சைக்கிளையும் மேடையேற்றி கலகலப்பூட்டினார். தந்தைக்கு இது பிடிக்கவில்லை. ‘படிப்பில் கவனம் செலுத்து, இவையெல்லாம் அப்புறம்!’ என்று சொல்லிப்பார்த்தார். மகனின் கலையார்வம் அதிகரிக்க கல்லூரிப் படிப்பு ஓராண்டோடு நின்றது.

நகைச்சுவை ராஜ்ஜியம்

1992இல் 19 வயதே நிரம்பிய பக்வந்த் மானை, லூதியானாவைச் சேர்ந்த இசைத் தட்டு தயாரிப்பாளர் ஜர்னைல் குமான் வியாபாரரீதியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

விதவிதமாக நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவைத்து அதை அவர் பணமாக்கிக்கொண்டார். முதலில் கிடைத்த புகழால் ஏதும் புரியாமல் இருந்த பக்வந்த் மான், சில நாள்கள் பொருத்தே சுரண்டலை உணர்ந்தார்.

பஞ்சாபி மொழியில் பிரபலமாக இருந்த பாடல்களை அதே மெட்டில் கேலிசெய்து, நம்மூரில் நிகழ்த்தப்பட்ட ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியைப் போல நகைச்சுவை கலந்து வெற்றிக்கொடி நாட்டினார். ‘குல்ஃபி கர்மா கரம்’ (சூடான ஐஸ்கிரீம்) என்ற அந்த காசெட்டுகள் பஞ்சாபில் தீயாக விற்றுத்தீர்ந்தன.

இந்தியாவில் மட்டும் அந்த ஆல்பம் 50 லட்சம் கேசட்டுகள் விற்றது. அதுபோக திருட்டு காசெட்டுகள் வேறு லட்சக்கணக்கில் விற்றன. வெளிநாடுகளில் விற்றதற்கு அளவே இல்லை. பல்வேறு சமூகப் பிரச்சினைகளை மிகவும் அநாயசமாக கேலிசெய்திருந்தார். 1994இல் நாடு முழுக்க அவருடைய நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன. பிறகு பிரிட்டன், கனடா, அமெரிக்கா என்று பறந்தார். தொலைக்காட்சியில் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு அவருடைய நகைச்சுவைத் தொடர் ஒளிபரப்பானது.

அரசியல் வருகை

இப்படி நகைச்சுவை மன்னனாக இருந்த பக்வந்த் மான் திடீரென்று தீவிர அரசியலுக்கு வந்தார். 2012இல் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் 2017இல் ஆஆக வேட்பாளராக பிரகாஷ் சிங் பாதலை ஜலாலாபாத் தொகுதியில் களம் புகுந்தார். இம்முறையும் தோல்விதான் என்றாலும், பெரும் கவனத்தை ஈர்த்தார். பஞ்சாபில் ஆஆக மாநிலத் தலைவராக இருந்தார் மான். பஞ்சாபில் போதை மருந்துக் கடத்தல் பெரிய விவகாரம். இது தொடர்பாக அகாலி தளத்தின் தலைவர் மீது குற்றம் சுமத்தினார் அர்விந்த் கேஜ்ரிவால்; பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதை விரும்பாத மான், மாநில ஆஆக தலைவர் பதவியையே ராஜிநாமாசெய்தார். பத்து மாதம் கழித்து சமாதானமாகி மீண்டும் அப்பொறுப்பை எடுத்துக்கொண்டார்.

அரசியலால் விவாகரத்து

2015இல் அவர் முழு நேர அரசியலராவதை விரும்பாத அவருடைய மனைவி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார். பிறகு விவாகரத்தும் நடந்துவிட்டது. கட்சிக்காக சொத்துகளையெல்லாம் விற்றார் பக்வந்த் மான்.

பக்வந்த் மானுக்குக் குடிப் பழக்கம் உண்டு; அதாவது பொது இடங்களுக்கே குடித்துவிட்டு வரும் அளவுக்குத் தீவிரமாக! இதனால் ‘பக்-வந்த்’ என்ற பெயரைக் கேலிசெய்து ‘பெக்-வந்த் மான்’ என்றே நண்பர்கள் அழைத்தனர். ஆனால், அதையும் அவர் தன்னுடைய இயல்புகளில் ஒன்றாக ஆக்கிவிட்டார். ‘நாடாளுமன்றத்துக்கே குடித்துவிட்டு வந்தார்’ என்று ஆஆகவில் அவருடன் இருந்த யோகேந்திர யாதவும் ஹரீந்தர் சிங் கால்சாவும் 2015, 2016-களில் புகார்செய்தனர். ஓர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலத்துக்கும்கூட அவர் குடித்துவிட்டுச் சென்றது உண்டு. பிரதமர் மோடியும்கூட இந்தப் பழக்கத்துக்காக பக்வந்த் மானை ஒரு முறை கிண்டலடித்திருக்கிறார்.

நல்ல வாசகர். கல்லூரிப் படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்கள் வாசிப்பார் பக்வந்த் மான். வானொலியில் தினமும் செய்திகள் கேட்பார். பஞ்சாபின் தியாகிகள், வீரர்கள் தொடர்பிலான பாடல்களைப் பாடுவார். பகத் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே அவர் மஞ்சள் நிற தலைப்பாகை அணிகிறார்.

ஆஆகவின் எதிர்காலம்

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92இல் ஆஆக சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் ஆஆகவின் முகமாக அறியப்பட்டவர் பக்வந்த் மான். விளைவாகவே முதல்வர் ஆக்கப்பட்டார்.

ஆஆக சித்தாந்த அடிப்படையிலான கட்சி இல்லை என்றாலும், டெல்லிபோல அல்லாமல் பஞ்சாபில் அது பஞ்சாபிய அடையாளம் ஒன்றை வரித்துக்கொள்வதுபோலத் தெரிகிறது. முதல்வராகப் பதவியேற்ற விழாவை பகத் சிங்கின் கட்கர் களன் கிராமத்தில் பக்வந்த் மான் வைத்துக்கொண்டது ஒரு குறியீடு என்றே சொல்லலாம்.

தன்னுடைய நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாக 25,000 பேருக்கு அரசு வேலைவாய்ப்புக்கு முதலில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.  

தில்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு தொடங்கிய ‘மொஹல்லா கிளீனிக்’ என்ற ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளும் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ எனப்படும் நவீனப்படுத்தப்பட்ட அரசு பள்ளிக்கூடங்களும் தில்லிக்கு அதிகம் போய் வரும் பஞ்சாபியர்களுக்குக் கண்ணில் மறையாத காட்சிகளாகிவிட்டன. கல்வி, சுகாதாரம் மற்றும் திறமையான நிர்வாகம் எனும் விஷயங்களை முன்வைத்தே ஆஆகவுக்கு அவர்கள் வாய்ப்பளித்திருக்கிறார்கள். அது போக ஏராளமான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்துக்கு முன்னுரிமை, கடன் தள்ளுபடி அறிவிப்புகள் எல்லாம் கூடுதல் போனஸ். பஞ்சாபியர்களுக்கு விவசாயம், தொழில்துறை இரண்டும் இரு கண்கள். இரண்டுக்கும் பல திட்டங்களை ஆஆக முன்வைத்திருக்கிறது. இவையெல்லாம் பக்வந்த் மான் முன்னுள்ள சவால்கள்.

பிரிட்டன், கனடா வாழ் சீக்கியர்களின் பிரச்சாரமும் ஆஆக வெற்றிக்குத் திரைமறைவுக் காரணங்கள். விவசாயிகள் போராட்டத்தை வெற்றிகரமாக பின்னின்று நிறுத்திய ‘அர்த்யாஸ்’ எனப்படும் மண்டி தரகர்களுக்கு ஆஆகபோல நெளிவு – சுளிவுகள் மிகுந்த கட்சி வேறில்லை. எல்லாமாகச் சேர்ந்து அமோக வெற்றியைக் குவித்திருக்கிறது. தன்னை வெற்றிகரமான நிர்வாகி என்று பக்வந்த் மான் நிரூபித்தாக வேண்டும். இது அவர் முன்னுள்ள சவால். அர்விந்த் கேஜ்ரிவால் பாஜக, காங்கிரஸைப் போல டெல்லியிலிருந்து ஆஆகவை இயக்க முற்படாமல் சுதந்திரமாக பக்வந்த் மான் செயல்பட அனுமதிக்க வேண்டும். இது அவர் முன்னுள்ள சவால். பஞ்சாபில் ஆஆகவின் நகர்வுகள் எப்படியிருக்கின்றனவோ அவற்றைப் பொருத்தே நாடு தழுவிய அதன் கனவு அமையும். அந்த வகையில் டெல்லிக்கு வெளியே பரவ முனையும் ஆஆகவின் கனவைத் தீர்மானிக்க வல்லவர்களில் பக்வந்த் மானும் ஒருவர் ஆகியிருக்கிறார்!

 

டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


2






அதிகம் வாசிக்கப்பட்டவை

பெக்கி மோகன் கட்டுரைபிரதமர் நரேந்திர மோடிமேலாளர் ஊழியர் பிரச்சினைஹார்ட் அட்டாக்writer samasசாதனைச் சிற்பி 2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுநேரு-காந்தி குடும்பம்ஜெயின்கள்சமயத் தலைவர்சீர்த்திருத்தங்கள்ராஜீவ் காந்தி கொலை வழக்குஎஸ்.சந்திரசேகர் கட்டுரைபொருளாதாரம்பா.இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது அருஞ்சொல்காலை உணவுசட்டத் திருத்தம் அருஞ்சொல்விஹாங் ஜும்லெமுளைமத அமைப்புகள்அப்துல் ரஸாக் குர்னா பேட்டிஇயற்கைநக்சல்பாரிஅண்ணா நூலகம்மன்னார்குடி அன்வர் கடை புரோட்டாமுத்துலிங்கம் சிறுகதைகள்ஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்சிபிஐமயிர்தான் பிரச்சினையா?ஒரு நிமிடம் யோசியுங்கள் முதல்வரே!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!