தலையங்கம் 3 நிமிட வாசிப்பு

திமுகவின் பலம் நாடாளுமன்றத்தைத் தாண்டியும் அதிகரிக்கட்டும்!

ஆசிரியர்
28 Sep 2021, 5:01 am
10

மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் பலம் மிக்க கட்சியாக உருவெடுக்கிற திமுக, டெல்லியில் தனது கவனத்தைக் கூர்மைப்படுத்த சரியான வரலாற்றுத் தருணமாக இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக (301), காங்கிரஸ் (52) இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் அடுத்த பெரிய கட்சியாக உருவெடுத்தது திமுக (24). ஒட்டுமொத்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில், மக்களவையில் 301, மாநிலங்களவையில் 94 என்று 395 உறுப்பினர்களுடன் பாஜக முதலிடத்தில் இருக்கிறது. மக்களவையில் 52, மாநிலங்களவையில் 33 என்று 85 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மக்களவையில் 22, மாநிலங்களவையில் 11 என்று 33 உறுப்பினர்களுடன் திரிணமுல் காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்த வரிசையில், மக்களவையில் 24, மாநிலங்களவையில் 7 என்று 31 உறுப்பினர்களுடன் திமுக நான்காவது இடத்தில் இருந்தது.

இப்போது மாநிலங்களவையில் மேலும் மூன்று இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் மொத்த பிரதிநிதித்துவத்தில் 34 என்கிற எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறுகிறது திமுக. இது திமுகவுக்கு ஒரு வரலாற்றுத் தருணம் என்று சொல்வதில் மிகை இருக்க முடியாது. ஓர் அரசியல் கட்சி என்கிற வரையறையைத் தாண்டி தன்னுடைய பாத்திரத்தை இரண்டு வகைகளில் திமுக இன்று விஸ்தரிக்க முடியும். முதலாவதாக, தமிழகத்தின் உரிமைகளுக்கான முன்னகர்வுகளை உளப்பூர்வமாக முன்னெடுப்பதன் வாயிலாக மாநிலங்களுக்கான முன்னுதாரண பிரதிநிதி என்கிற இடம் நோக்கி அது நகர முடியும். இரண்டாவதாக, எதிர்க்கட்சிகளின் வரிசையில் ஆக்கபூர்வமான மாற்று அரசியலை முன்வைக்கும் கூட்டாட்சி சக்தியாக அது தன்னைத் திரட்டிக்கொள்ள முடியும்.

முந்தைய காலங்களில், ஆளும் கூட்டணியின் ஒரு சக்தி வாய்ந்த பங்காளியாக இருந்தது போன்ற ஒரு முக்கியத்துவம் இப்போது இல்லை என்பதாலேயே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்ந்திருக்க வேண்டியது இல்லை. முன்னெப்போதையும்விட இப்போதுதான் அவர்கள் துடிப்பாகச் செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாட்டின் சூழல் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் எண்ணிக்கை அளவில் பலவீனப்பட்டிருப்பதுகூட பெரிய இழப்பு இல்லை; அக்கட்சியின் தலைமை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பலவீனப்பட்டிருப்பது நாடு எதிர்கொண்டிருக்கும் பேரிழப்பாகும். இடதுசாரிகள் சிந்தனைத் தளத்தில் திவால் ஆகிவிட்டார்களோ என்று எண்ணும் அளவுக்கு ஸ்தம்பித்து நிற்கிறார்கள். பெரும்பான்மை மாநிலக் கட்சிகளின் போக்கு எந்த வகையிலும், பாஜகவின் மையப் போக்குக்கு மாற்றாக இல்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சி சீற்றத்துடன் பாஜகவை எதிர்கொள்கிறது என்றாலும், நாடு தழுவிய ஒரு கூட்டாட்சி மாற்றை முன்வைக்க தத்துவார்த்தத் தளத்தில் அதற்குப் பெரிய பின்புலம் இல்லை.

நிச்சயமாக, இவை எல்லாமும்கூடி திமுகவை மைய அரங்கின் கவனத்துக்குக் கொண்டுசெல்கின்றன. இந்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகட்டும்; ‘நீட்’ - மருத்துவப் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், அத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகட்டும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் குரல் தேசிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த விஷயங்கள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டவைதான் என்றாலும், கூட்டாட்சி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொடுத்துவரும் உறுதியான குரலோடு இணைத்துப் பார்க்கப்படுவதால் இவை கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

திமுக அடுத்த நிலைக்கு இந்த விஷயத்தை எடுத்துச்செல்ல ஏனைய கட்சிகளோடு உரையாட வேண்டும்; பாஜகவுடனும்கூட. டெல்லிக்குச் செல்வது என்பது நாடாளுமன்றத்தில் பேசுவது என்பதாக மட்டும் குறுகிடக் கூடாது. தமிழகத்துக்கு வெளியே எல்லா மாநிலங்களுக்கும் சென்று எல்லாக் கட்சிகளுடனும் திமுக பேச வேண்டும். முக்கியமாக இந்தி பேசும் மாநிலங்களுடன் உரையாட ஆரம்பிக்க வேண்டும். சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்று இளம் தலைவர்கள் முக்கியப் பங்காற்றிடும் ஒரு புதிய அணிவரிசை இன்று உருவாகியிருக்கிறது; சித்தாந்தத் தளத்தில் கூட்டாட்சியின் முக்கியத்துவம் தொடர்பில் இந்தி மாநிலங்களிலும் பேசும் சூழல் உருவாகியிருக்கிறது. திமுகவால் அவர்களிடம் பேச முடியும்.

பாஜக என்பது இன்று ஒரு கட்சி மட்டும் இல்லை; அது ஒரு சிந்தனையாகவும், பண்பாட்டு போக்காகவும் மாறிவருகிறது; தேர்தல் வியூக எதிர்ப்பு மட்டும் எடுபடாது; மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்களிடம் உரையாடுவதன் வழியாகவே பாஜகவுக்கான மாற்றத்தை உண்டாக்க முடியும். திமுகவின் நிறுவனர் அண்ணா கூறியதுபோல, நாட்டின் கூட்டாட்சிக்கான உறுதியான கூர்முனையாக திமுக செயலாற்றுவதற்கான சூழல் இன்று உருவாகிவிட்டிருக்கிறது. திமுகவின் பலம் அதன் எண்ணிக்கையைத் தாண்டியும் அதிகரிக்கட்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (10)

Login / Create an account to add a comment / reply.

V.AGORAM    3 years ago

நல்ல ஆரம்பம் நல்ல முடிவை தரும் நிச்சயம் சரியான நேரத்தில் சரியான பாதையில் செல்லும் முதல்வருக்கு வாழ்த்துக்கள் பாராட்டக்குள் அரிமா அகோரம் ஆசிரியர் திருப்புன்கூர்.மயிலாடுதுறை மாவட்டம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Gokul   3 years ago

நிச்சயமாக தி மு க வின் செயல் அகில இந்திய அளவில் விஸ்தீரிக்க படவேண்டும். நல்ல கட்டுரை. இந்த நேரத்தில் தேவை இல்லாமல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களின் அடாவடி அரசியல் குற்றச்சாட்டு வராதவாறு பார்த்துக்கொள்வது முதல்வருக்கு அவசியம்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

M.G.Selvamani   3 years ago

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அமைத்த அடித்தளத்தை ஸ்டாலின் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சித்தாந்தத்தை நீர்த்துபோக கலைஞருக்கு தடையாய் M.G.R. இருந்ததை போன்ற சூழல் இன்று தமிழ்நாட்டில் இல்லை. எனவே, ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் மேலும் ஒரு ஆளுமையாக இந்திய ஒன்றியத்தில் பரிமலிக்க சூழலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொருள் பொதிவுடன் எழுதப்பட்ட கட்டுரை. #அருஞ்சொல்லின் பணி தொய்வின்றி தொடர் வாழ்த்துக்கள் ❤️

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

V.AGORAM    3 years ago

அருமையான கட்டுரை.தி.மு.க மேம்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

M Mohanasundaram   3 years ago

தத்துவார்த்த பிண்ணனி கொண்டதோடு அல்லாமல் தமிழர் நாகரிகம் மற்றும் தொல்லியல் ஆய்வு தரவுகளின் அடிப்படையிலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும்..நிச்சயம் உங்கள் தலையங்கம் அதைச் செய்யும்

Reply 6 1

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

இப்போதைக்கு AAPயும் திமுகவும் தான் தேசிய அளவில் bjpக்கு மாற்று.

Reply 2 3

Login / Create an account to add a comment / reply.

THENI MUTHU PRASATH   3 years ago

ஆமாம் இப்பொழுது திமுகவிற்கு இது சரியான பாதை என்றே சொல்லலாம்.மாநில தலைமையில் இருந்து தேசிய தலைமை நோக்கி சொல்ல ஆரம்பமாக அமையட்டும்

Reply 5 2

Login / Create an account to add a comment / reply.

NAVIN   3 years ago

"இப்போது மக்களவையில் மேலும் மூன்று இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் மொத்த பிரதிநிதித்துவத்தில் 34 என்கிற எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறுகிறது திமுக" - மாநிலங்களவையில் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக மக்களவை என்றே எழுதப்பட்டுள்ளது. சரி செய்திடுங்கள் ஐயா.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   3 years ago

ஆசிரியரின் தலையங்கம் கூறுகிற கருத்து இன்று அறிவார்ந்தவர்கள் மத்தியில் பெரும் விவாதா பொருளாக உள்ளது. உண்மையில் தேசிய அரசியலில் இன்று எதிர்ப்புகள் முனைமழுங்கி உள்ளதோ என்று அரசியலாளர்களின் செயல் மட்டும அல்ல ஊடகங்களின் செயல்பாடும் உண்மையை சொல்லி வெகுஜனங்களை விழிப்படைய செய்வதில் முரணாகவே செயல்படுகிறார்கள். மக்கள் கிளர்ச்சிகளுக்கு அரசு செவிசாய் பதில்லை என்பதைவிட வெகுதளத்தில் விவாதிக்கும் பொருளாக்க மலைபோன்ற இன்றைய வெகுஜன சக்திகளுக்கு ஏதோ தடையாக உள்ளது.. இந்த சூழலில் திமுக போன்ற அரசியல் கட்சி நாடாளவில் அனைத்து சக்திகளுடனும் இணைந்து பொது கருத்துகளை விவாதித்து அரசின் கவனத்தை மட்டும் அல்ல மக்களின் நம்பிக்கையையும் பெறக்கூடிய சக்தி திமுகவுக்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சருக்கு உள்ளது. திமுக இதற்கு முன் இப்படி ஈடுபட்ட பல அரசியல் நகர்வுகளில் நாடு நிச்சயம் தன் ஸ்திரதன்மையை மேலும் உறுதிபடுத்தி உள்ளது. இது இன்றும் நாட்டு மக்களுக்கு மிக பெரிய வாய்ப்பாக அமைந்ததை மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை..அந்த வகையில் நாட்டின் பல்வேறு பொது பிரச்சினைகள் மட்டுமின்றி மாநில வளர்ச்சி திட்டங்களிலும் அனைத்து தளத்திலும் திமுக அதன் அளப்பரிய செயல்களை வேகப்படுத்த அதன் தலைவர் முயற்சிக்கிறார். மேலும் தொடர விரைவுபடுத்த தங்களை போன்ற ஊடகங்களும் உரிய பங்காற்றுவதும் பெரிதும் உதவும். தேர்தல் யுக்திகள் அல்லாத மாற்று திட்டத்தை முன்வைத்து ஒன்றிய அளவில் திமுகவின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறும் வகையில் அதன் தலைமை முன்னெடுக்கும் செயல் அமையவேண்டும். இது இன்றைய ஒன்றிய தேவை. நீலனூர் கே கே தாஸ்.

Reply 9 0

Login / Create an account to add a comment / reply.

Mahi Murugesan   3 years ago

அற்புதமான கட்டுரை. தற்போதைய தேவையும் இதுதான். திமுக தலைமையில் இருப்பவர்கள் வரை இந்த கட்டுரை சென்று சேரவேண்டும்.

Reply 10 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜலதோஷம்புத்துணர்வுதேர்தல் நிதி நன்கொடைப் பத்திரம்மன்னிப்புபள்ளிக்கல்வியில் தேர்தலும் ஜனநாயகப் பாடமும்தமிழகக் காவல் துறை அருஞ்சொல் தலையங்கம்இலக்குநோக்கிய உயிரி வேதிவினைஅணு அச்சுறுத்தலுக்குத் தீர்வுமானுட செயல்கள்ஏவூர்திகிராமமாஹேக்கிங் கல்வி பயில்வது எப்படி?அம்பானியின் வறுமைதிருபுவன் தாஸ் படேல்எண்கள் பொய் சொல்லாதுஎடியூரப்பாநளினிசியரா நூஜன்ட்மாபெரும் கார்ப்பரேட் மோசடியோகேந்திர யாதவ் கட்டுரைபாலின சமத்துவம்மின் உற்பத்திவானொலிநினைவுச் சின்னம்அல் அக்ஸாவட்டி விகிதம்விதி எண் 267ராஜன் குறைபுத்தாக்க முயற்சிசீர்த்திருத்தங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!