கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 6 நிமிட வாசிப்பு

அலர்ஜி எப்படி ஏற்படுகிறது?

கு.கணேசன்
13 Nov 2021, 5:00 am
1

ன்றைய வாழ்வியலில் உணவுமுறை ரொம்பவே மாறிவிட்டது. சுற்றுப்புறச் சூழல் படு மோசமாகிவிட்டது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் அனுதினமும் காற்று மாசுபடுவதைச் சொல்லிமாளாது.  சுத்தம் காக்கும் கடமையை அலட்சியப்படுத்தும் மக்களால், தெரு, சந்து, சாலையோரம் எனத்  திரும்பும் இடமெல்லாம் குப்பை.

சுத்தமான காற்றையும் குடிநீரையும் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் விதமாகக் கற்றுக்கொண்டிருக்கும் நம் மரபணுக்கள், அசுத்தங்களைக் கண்டு மிரள்கின்றன. அதன் விளைவாக ‘அலர்ஜி’ எனும் எதிர்வினையை உண்டாக்கி அந்த அசுத்தங்களை வெளியேற்ற முயற்சி செய்கின்றன. அந்தப் போராட்டத்தின் விளைபொருள்களாகப் பல நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. அவற்றைத்தான் நம் ‘அலர்ஜி நோய்கள்’ என்கிறோம்.

முன்பெல்லாம் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுக்கு அலர்ஜி இருந்தால் பரம்பரைரீதியாக அவர்கள் வாரிசுகளுக்கும் வரலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது. இப்போது, அது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எதனாலும் வரக் கூடும் என்பது கண்கூடாகிவருகிறது. காரணம், ஆரோக்கியம் தரும் நம் பாரம்பரிய உணவிலிருந்து ரொம்பவே விலகிவிட்டோம். மோசமான அந்நிய உணவு மோகத்துக்கு அடிமையாகிவிட்டோம். துரித உணவுகளுக்கும் உடனடி உணவுகளுக்கும் அதிக இடம் கொடுத்துவிட்டோம்.

இந்த உணவுகளில் கவர்ச்சிக்காகவும் ருசிக்காகவும் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் நம் மரபணுக்களுக்குப் பழக்கப்படாதவை. அந்த மாதிரியான அந்நிய உணவுகளை உண்ணும்போது நம் மரபணுக்கள் அவற்றை எதிர்த்துப் போராடுகின்றன. அப்போது அலர்ஜி நோய்கள் எட்டிப் பார்க்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில், ஆண்களும் பெண்களும் தங்களை அழகூட்டுவதற்குப் பல வகை செயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். சோப்பு, பற்பசையில் தொடங்கி முகம், நகம், முடி என உடலின் அனைத்துப் பகுதிகளையும் அழுகுபடுத்த உதவும் செயற்கைப் பொருட்களில் கலக்கப்படும் வேதிப்பொருட்களைக் கண்டதும் நம் மரபணுக்கள் பகை நாட்டுப் படைகளை விரட்டி அடிப்பதுபோல் துரத்துகின்றன. அப்போதெல்லாம் அலர்ஜி நோய்களால் நாம் அவதிப்படுகிறோம்.

அலர்ஜி என்பது என்ன?

நமக்கு ஒத்துக்கொள்ளாத ஒரு பொருள் நம் உடலுக்குள் நுழைந்தால் அல்லது உடலுக்குள்ளேயே இருந்தால், உடலானது அதை எதிர்க்கிறது. அந்த எதிர்வினையைத்தான் நாம் ‘அலர்ஜி’ (Allergy) என்கிறோம். இந்த எதிர்வினையின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி இருக்கும். உதாரணமாக, ஒருவர் தூசு நிறைந்த அறைக்குள் நுழையும்போது 5 முறை தும்மல் போடுகிறார் என்றால் அது சாதாரணம். மாறாக, 50 முறை தும்மல் போட்டால் அது அவருடைய அலர்ஜியின் வெளிப்பாடு. கொசு கடித்தால் சிறிது நேரம் அரிப்பதும்; வலிப்பதும் இயல்பு. அதுவே இரவு முழுவதும் அரித்தால் அது அலர்ஜி. அலர்ஜிக்குப் பல காரணங்கள் இருப்பதுபோல், அலர்ஜியின் வெளிப்பாடும் இப்படிப் பலவிதமாக இருக்கும்.

பெரும்பாலானோர் தங்களுக்கு அலர்ஜி ஏற்படுவதை ஒரு கெட்ட செயலாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால், அலர்ஜி என்பது நம் உடலுக்குப் பாதுகாப்பு தருகிற நல்லதொரு செயல்; எதிரியை ஓரங்கட்டுகிற நல்வினை என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், உடலில் இயங்கும் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) எனப்படும் தற்காப்புப் படையை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

உடலின் ராணுவம்!

நாம் உறங்கினாலும் நம் தற்காப்புப் படை உறங்குவதில்லை; இதற்கு இருபத்தி நான்கு மணி நேரமும் நம்மைக் 'காவல் காக்கும்' வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'கேம்ப் ஆபீஸ்'! ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். 'T' அணுக்கள், 'B' அணுக்கள், 'மேக்ரோபேஜ்' அணுக்கள், 'எதிரணுக்கள்' ( Antibodies ) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.   

ரத்தக் குழாய்களும் ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க் கிருமிகள், நஞ்சாகிப்போன உணவுகள்,  எதிர்பாராத விஷக்கடிகள் போன்றவற்றுடன்தான் யுத்தம். இந்த ‘எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப்படை தன்னிடமுள்ள ‘சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை  அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இம்மாதிரியான எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் 'தளபதி'க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து அல்லது துன்பங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.

நம் உடலின் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப்படை தருகின்ற சக்திக்கு 'நோய் எதிர்ப்பு சக்தி' அல்லது 'நோய்த் தடுப்பாற்றல்' (Immunity) என்று பெயர்.

தடுப்பாற்றல் – அலர்ஜி : என்ன வித்தியாசம்?

நோய்த் தடுப்பாற்றல் என்பது உடலுக்கு ஒவ்வாத கிருமிகளை ஒழிப்பதற்கு உடலில் உருவாகிற எதிர்ப்பு சக்தி; இது எல்லோருக்கும் ஒரே மாதிரி நிகழ்கிற நிகழ்வு. ஆனால், அலர்ஜி என்பது உடலுக்கு ஒவ்வாத பொருளை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கான எதிர்வினை. இது எல்லோருக்கும் ஏற்படுகிற நிகழ்வல்ல. ஒருவருக்கு ஒத்துக்கொள்ளாத ஒரு பொருள் அடுத்தவருக்கு ஒத்துக்கொள்ளும். அப்போது இந்த எதிர்வினை அவருக்கு ஏற்படுவதில்லை.

இந்த அலர்ஜி எப்படி ஏற்படுகிறது?

உடலுக்கு ஒவ்வாத ஒரு புறப்பொருள் அல்லது உடலின் உட்பொருள் உடலுடன் தொடர்புகொள்கிறபோது ரத்த வெள்ளையணுக்களின் சிப்பாய்கள் அதை எதிரியாக எண்ணித் தாக்கத் தொடங்கிவிடும். அப்போது ரத்தத்தில் அந்த ஒவ்வாத பொருளுக்கு ‘இமுனோகுளோபுலின் - இ’ (IgE) எனும் எதிரணுப் புரதம் உருவாகும். இந்தப் புரதத்தை ரத்தப் பிளாஸ்மா செல்கள் உருவாக்குகின்றன. ஒவ்வாத பொருள் முதல்முறையாக உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இது அந்த ஒவ்வாமைப் பொருளைக் கைதுசெய்துவிடும். புரதத்தால் இப்படிக் ‘கைதுசெய்யப்பட்ட’ ஒவ்வாமைப் பொருளால் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அதேநேரம் இந்தப் புரதமும் ஒவ்வாமைப் பொருளும் சேர்ந்து, ரத்தத் திசுவில் உள்ள மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, 'புரோட்டியேஸ்', ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene)  போன்ற பல  வேதிப்பொருள்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால் அலர்ஜியின் முக்கிய அறிகுறிகளான அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படும்.

முக்கியமான அலர்ஜி பிரச்சினைகளை அடுத்தடுத்து சொல்கிறேன்.

(பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Raja M   3 years ago

எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய அறிமுகம் நன்றி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மதவியம்சமஸ் - குமுதம்ரஷ்ய ராணுவம்கலைஞர்சுந்தர் சருக்கைஐக்கிய நாடுகள் சபைவல்லபபாய் படேல்இயந்திரமயம்லாரன்ஸ் பிஷ்ணோய்லயிப்புசொல்லும் செயலும்பக்கவாட்டு பணி நுழைவுவருவாய்ப் பற்றாக்குறைசுந்தர் சருக்கைக் கட்டுரைஜாட்டுகள்உரிமையியல்மது கொள்கைகுடும்ப விவரங்கள்ஒரே சமயத்தில் தேர்தல்: மோசமான முடிவுபிஎன்எஸ்எஸ்திரைப்படக் கல்வியாளர்கிறிஸ்தவர்கோர்பசெவ்: மாபெரும் அவல நாயகர்சாய்நாத் இந்திய இதழியலின் மனசாட்சிகுதிநாண் தட்டைச்சதைபாரதிஅந்தரங்கச் சுத்தம்ஓய்வுபெற்ற டிஜிபிகள்எம்ப்ரஸ் மில்ஸ்சைபர் குற்றம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!