ஆரோக்கியம், வரும் முன் காக்க 8 நிமிட வாசிப்பு

அரிப்புக்கும் உண்டு அடைக்கும் தாழ்!

கு.கணேசன்
19 Dec 2021, 4:59 am
0

ரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்ற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல் ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது அலர்ஜியின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

அடிப்படைக் காரணம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் - ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின் (Leukotriene) எனும் வேதிப்பொருள்களை வெளியேற்றும். இவை ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்கிற மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேசமுடியும். இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்புக் கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச்செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், இது அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

நச்சு அரிப்பு

அரிப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமானது, ’அர்ட்டிகேரியா’   (Urticaria) என்று அழைக்கப்படுகிற ‘நச்சு அரிப்பு’ நோய். இதற்கு ‘ஹைவ்ஸ்’ ( Hives ) என்று இன்னொரு பெயரும் உண்டு. உலகில் 100ல் 20 பேருக்கு இந்த பாதிப்பின் காரணமாகத்தான் உடலில் அரிப்பு ஏற்படுவதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தோலில் பல இடங்களில் பூரான் கடித்த மாதிரி வீங்கிவிடும். தோல் தடித்துச் சிவந்துவிடும். சிலருக்கு இந்தத் தடிப்பு தோலில் கத்தியால் கீறியதுபோல் கோடுகோடாக இருக்கும்; இன்னும் சிலருக்கு வட்ட வட்டமாகத் தோல் தடித்துவிடும். வானில் மாறி மாறித் தோன்றும் மேகக் கூட்டங்கள் போல், தோலில் வெவ்வேறு வடிவங்களில் தடிப்புகள் தோன்றி மறைவது உண்டு. இந்தத் தடிப்புகளில் நடுவில் விரலை வைத்து அழுத்தினால், அங்கு சிவப்பு நிறம் மாறிவிடும். நச்சு அரிப்பை உறுதி செய்ய உதவும் ஒரு முக்கியமான அறிகுறி இது. உடலில் மேல்தோலில் எங்கு வேண்டுமானாலும் இந்தத் தடிப்புகள் தோன்றக்கூடும்.

வகைகள்

சிலருக்கு நச்சு அரிப்பு திடீரென்று ( Acute ) வரலாம். இன்னும் சிலருக்கு நாட்பட்டும் ( Chronic ) வரலாம். மிகவும் லேசான அரிப்பில் இருந்து கடுமையான அரிப்பு வரை தொல்லை தரலாம்.  இது சில நிமிடங்களிலும் மறைந்து விடலாம். அரிப்பு பல வாரங்கள் வரைத் தொடரவும் செய்யலாம். ஆறு வாரங்கள் வரை நீடிப்பது ’திடீர்’ வகையைச் சேர்ந்தது. ஆறு வாரங்களுக்கு மேல் அரிப்பு நீடிக்குமானால் அது ’நாட்பட்ட அரிப்பை’க் குறிப்பது.

தூண்டும் காரணிகள்

நச்சு அரிப்புக்கு நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக் கொள்ளாதது முக்கியக் காரணியாக இருக்கிறது. பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, நட்ஸ், முந்திரி, செர்ரி பழங்கள், சாக்லேட் போன்றவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம். உணவுகளில் கலக்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், பதப்படுத்த உதவும் வேதிப்பொருள்கள் போன்றவையும் நச்சு அரிப்பைத் தூண்டக்கூடியவையே.

உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, பெனிசிலின், சல்ஃபா போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆஸ்பிரின், புரூஃபென், நிமிசுலைட் போன்ற வலி நிவாரணிகள், மலேரியா மருந்துகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மேலும், கொசுக்கடியில் தொடங்கி சிலந்திக் கடி வரை பலதரப்பட்ட பூச்சிக் கடிகள் நச்சு அரிப்பை உண்டாக்கும். கடுமையாக உடற்பயிற்சி செய்தால்கூட இந்தத் தொல்லை ஏற்படலாம். சிலருக்கு தோலை அழுத்துவதுபோல் உடைகளை அணிந்தால் அந்த அழுத்தம் காரணமாக நச்சு அரிப்பு ஏற்படுவது உண்டு. சிலருக்கு குளித்து முடித்ததும் அரிப்பும் தடிப்பும் ஏற்படும். அதிலும் அருவியில் குளிப்போருக்கு இது ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

குளிரும் வெயிலும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் பலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்த ஒரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. சொத்தைப் பல், தொண்டை அழற்சி, சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப்பாதை அழற்சி, சைனஸ் பாதிப்பு போன்றவை இவ்வாறு நச்சு அரிப்பை உண்டாக்குகின்றன. குடலில் புழு இருந்தால் உடம்பில் அரிப்பு ஏற்படலாம்.

கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் பல பெண்களுக்கு நச்சு அரிப்பு ஏற்படுவதற்கு தைராய்டு சுய எதிரணுக்கள் (Thyroid Auto Antibodies) காரணமாகின்றன. கட்டுக்கு அடங்காத நச்சு அரிப்புக்கு முடக்குவாதம், ’லூபஸ் எரித்திமட்டோசிஸ்’ ஆகிய நோய்கள் காரணமாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. உடம்பெல்லாம் அரித்தால், அது உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை, பித்தப்பைப் பிரச்னை, ஹார்மோன் பிரச்னை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’ எனும் மூளை நரம்புப் பிரச்னை, பரம்பரைத்தன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த நோய்களின்போது தோலில் தடிப்பு தோன்றாது.

மனப் பிரச்சினைகள்

நச்சு அரிப்புக்குக் கோபம், கவலை, பயம், மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் தங்கள் உடலில் ஒரு பூச்சி ஊறுவதுபோல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் இவர்கள் எந்நேரமும் உடலை சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் இந்த வகை அரிப்பு சரியாகும்.

என்ன பரிசோதனை?

வழக்கமான ரத்தப் பரிசோதனை, சிறுநீர் மற்றும் மலப் பரிசோதனைகள் முதலில் மேற்கொள்ளப்படும். முக்கியமாக, IgE பரிசோதனை உதவும். இதைத் தொடர்ந்து அலர்ஜியை அறிய உதவும் தோல் பரிசோதனைகள் செய்யப்படும். காரணம் தெரிந்ததும் அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படுவது நடைமுறை.

என்ன சிகிச்சை?

அரிப்பைக் குறைக்க ஆன்டிஹிஸ்டமின் மாத்திரைகளும். லோஷன்களும், வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு மாத்திரைகளும், அரிப்பைத் தடுக்க மான்டிலூகாஸ்ட் மாத்திரைகளும் தரப்படும். இவற்றை மருத்துவர் சொல்லும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டியது மிக முக்கியம். இது போல் இந்த மாத்திரைகளை திடீரென்று ஒரு நாளில் நிறுத்திவிடவும் கூடாது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறிது சிறிதாகத்தான் குறைத்து, அதன் பிறகு நிறுத்த வேண்டும். அப்போதுதான் அரிப்பு மீண்டும் வராமல் இருக்கும்.

தடுப்பது எப்படி?

1.   உங்களுக்கு ஒவ்வாத உணவுகளைப் பட்டியல் போட்டு அவற்றை ஒதுக்கி வையுங்கள்.

2.   மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே கடைகளில் மாத்திரை, மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

3.   கடுமையான வேதிப்பொருள்களால் ஆன குளியல் சோப்புகளைப் பயன்படுத்தாதீர்கள்.

4.   தளர்ந்த உடைகளை அணியுங்கள். தோலுக்கு அழுத்தம் தருகிற லெகின்ஸ் போன்ற உடைகளை பெண்கள் அணியக்கூடாது.

5.   குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டாம்.

6.   நீச்சல் குளங்களில் தனியாக குளிப்பதைத் தவிருங்கள்.

7.   கடுமையான வெயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் சன் ஸ்கிரீன் களிம்பை உடலில் தடவிக் கொள்ளுங்கள்.

8.   வீட்டில் பூச்சிகள் வளர்வதைத் தடுக்க வீட்டுச் சுவர்களில் சில வேதிப்பொருள்களைத் தடவுகிற ஏற்பாட்டை செய்துகொள்ளுங்கள்.

9.   அடிக்கடி உடலைச் சொறியாதீர்கள்.

10.  குடல் புழுவுக்கு முறைப்படி மருந்து சாப்பிடுங்கள்.

 

(தொடர்ந்து பேசுவோம்)

கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அசோக்வர்த்தன் ஷெட்டி பேட்டிவருமுன் காக்கதைவான் தனி நாடாக நீடிக்குமாகொஞ்ச நேரம் வேலையில்லாமல்தான் இருங்களேன்!மக்கள் பணிதாண்டவராயனைத் தேடி…தனியுரிமைபொதுத் துறை நிர்வாகிபெகஸஸ் சுயாட்சி – திரு. ஆசாத்முரசொலி கலைஞர்மருத்துவப் படிப்புகமலா ஹாரிஸ் அருஞ்சொல்கலைக்களஞ்சியம்குடலைக் காப்போம்!பசுமை விருதுபாஜகவின் அச்சம்ஆஆகசிம் கார்டுஇந்தியக் கல்விமுறைநேரு படேல் விவகாரம்உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல்ஆசிரியர்கள்முரசொலி வரலாறுஇந்தத் தாய்க்கு என்ன பதில்?கல்கத்தாபாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம்writer samasஎழுத்தாளர் ஜெயமோகன்மூட்டழற்சி நோய்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!