வாழ்வியல், வரும் முன் காக்க 3 நிமிட வாசிப்பு

ரஅ பாதித்தால் பக்கவாதம் வரலாம்: சமாளிப்பது எப்படி?

கு.கணேசன்
09 Oct 2021, 5:00 am
1

இன்றைய வாழ்வியல் நோய்களில் ‘உயர் ரத்த அழுத்தம்’ முக்கியமானது என்று பார்த்தோம். அதைக் கட்டுப்படுத்தத் தவறியவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பாதிப்பு எனப் பல தொல்லைகள் தொடர்வதைக் காண்கிறோம். மாரடைப்பையும் சிறுநீரகப் பாதிப்பையும்கூட சரியான நேரத்தில் கவனித்து, சரியான சிகிச்சை பெற்றுவிட்டால், முழுவதுமாக நோயின் பிடியிலிருந்து மீண்டுவிடலாம். ஆனால், பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே முழுவதுமாகக் குணமாகும். பலரையும் இது நிரந்தரமாகப் படுக்கையில் கிடத்திவிடும். அப்போது, அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஆகவே, பக்கவாதம் வருமுன் காப்பதுதான் முக்கியம்.

பக்கவாதம் வருவது எப்படி?

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலிழந்துபோவதைப் 'பக்கவாதம்' (Stroke) என்கிறோம். பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால், பேச்சு பாதிக்கும்.

பெருமூளையின் குறிப்பிட்ட ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து அடைத்துக்கொள்ளும்போது பக்கவாதம் வரும். சமயங்களில், உடலில் வேறு பகுதிகளிலிருந்து ரத்த உறைவுக் கட்டி மூளைக்கு வந்து அடைத்துக்கொள்வதுண்டு. இது பொதுவாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கெட்ட கொழுப்பு மிகுதல், இதய வால்வு கோளாறுகள் காரணமாக வருவது உண்டு. அடுத்து, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் வரும். ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தாலும் தலையில் அடிபட்டாலும் ரத்தக்குழாய் வெடித்து இம்மாதிரி ஏற்படும். சிலருக்கு மூளையில் சிறு பலூன்போல் வீங்கியிருக்கும் ரத்த நாளம் (Aneurysm) வெளியில் தெரியாமல் அமைதியாக இருந்துவிட்டு, திடீரென வெடிக்கலாம். அப்போதும் இந்த ஆபத்து ஏற்படும்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை இது ஆண்களுக்கு வருகிற முதுமை நோயாக அறியப்பட்டது. இப்போதோ இது யாருக்கும் வரலாம் என்கிற நிலைமை இருக்கிறது. குறிப்பாக, இளம் வயதினரும் பெண்களும்கூட இந்தப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதற்கு முறையற்ற வாழ்வியல்தான் முக்கியக் காரணம்.

அலார அறிகுறிகள்

பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது. பக்கவாத நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வரும்போது, "அஞ்சு நிமிஷம் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் சார் இருந்தார். பாத்ரூமுக்குப் போய்ட்டுத் திரும்பும்போது மயங்கி விழுந்தாரு. அப்புறம் பார்த்தா ஒரு கை வரலே, ஒரு கால் வரலே, வாய் கோணிப்போச்சு, மூச்சு மட்டும் வருது....." என்றுதான் சொல்வார்கள். ஆனால், நோயாளியானவர் நன்றாக யோசித்துப் பார்த்தாரென்றால், முழுமையான பக்கவாதம் வருவதற்கு முன்பு, அவருக்கு முன்னறிவிப்பு செய்வதைப்போல சில அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறைந்திருக்கும். அவற்றை அலட்சியப்படுத்தியிருப்பார். அந்த அலார அறிகுறிகள் என்ன?

1. முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு.

2. பேசும்போது திடீரென்று வார்த்தைகள் குழறுதல். வாய் லேசாக கோணுதல்.

3. நடக்கும்போது தள்ளாடுதல். தலைச்சுற்றுதல்.

4. பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாவது.

5. உணவை வாய்க்குக் கொண்டுசெல்லும்போது கை தடுமாறுவது.

6. கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காமல்போவது.

7. வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.

பொன்னான நேரம் 

இந்த அறிகுறிகள் வெளியில் தெரிந்த 4 மணி நேரத்துக்குள் நோயை உறுதி செய்து, சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் பாதிப்பு குறையும். ஆகவே, அந்தப் பொன்னான நேரத்தை வீணடித்துவிடாதீர்கள். சிகிச்சைக்கு முன்பு, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகள் செய்யப்படும். அவற்றுடன் இசிஜி, டாப்ளர், சி.டி./எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படும்.

என்ன சிகிச்சை?

ரத்த உறைவால் ஏற்படும் பக்கவாத பாதிப்புக்கு ‘டிபிஏ’ (TPA) எனும் மருந்து இருக்கிறது. அறிகுறிகள் தெரியத் தொடங்கிய 4 மணி நேரத்துக்குள் இதைச் செலுத்திவிட்டால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். சிலருக்கு ரத்த உறைவு கடுமையாக இருக்கும். அப்போது, ‘டிபிஏ’ மருந்தும் கொடுத்து, ரத்தக்குழாய்க்குள் ‘கதீட்டர்’ குழாயைச் செலுத்தி, அந்த அடைப்பை அகற்றுவார்கள். பிறகு, அந்த இடத்தில் ‘ஸ்டென்ட்’ வைத்துவிடுவார்கள்.

ஆனால், ரத்தக்கசிவு காரணமாக பக்கவாதம் வந்தவர்களுக்கு இந்த மருந்தும் ‘ஸ்டென்ட்’டும் உதவாது. அறுவை சிகிச்சை செய்து ரத்தக்கசிவை நிறுத்துவார்கள். ரத்தம் உறைந்து கட்டியாகியிருந்தால்,  அகற்றுவார்கள். இதனால் உயிரிழைப்பைத் தடுக்க முடியும்.

இவற்றைத் தொடர்ந்து இயன்முறை சிகிச்சை, பேச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற புனர்வாழ்வு பயிற்சிகள் முக்கியம். நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல  முன்னேற்றம் கிடைக்கும்.  ஆரம்பத்தில் கைகால்களை அசைக்கமுடியாமல் இருந்தவர்கள்கூட, சில மாதங்களில் பிடிமானத்துடன் நடப்பார்கள். மெதுவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். இந்தப் பயிற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டியதுதான் இங்கு முக்கியம்.

தடுப்பதுதான் எப்படி?

1. ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்: முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

2. ரத்தக்கொழுப்பு – கவனம்: கெட்ட கொழுப்பு 100 மி.கி/டெ.லி.க்குள் இருக்க வேண்டும்.

3. சர்க்கரையளவு கட்டுக்குள் இருக்கட்டும்: ஹெச்பிஏ1சி (HbA1C) அளவு 6.5%க்குக் கீழ் இருக்க வேண்டும்.

4. உடல் எடையைப் பராமரியுங்கள்: சமச்சீரான உணவு சாப்பிடுங்கள். குறிப்பாக சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எண்ணெய் வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்து உடல் எடையைப் பராமரியுங்கள்.

5. புகைப்பழக்கம் வேண்டவே வேண்டாம்: புகை பிடிக்கும் பழக்கம் பக்கவாதத்துக்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. புகையிலையில் இருக்கும் நிகோடின் ரத்தக்குழாய்களைத் தாக்குகிறது. ரத்தக்கொழுப்பு படிவதற்கு வழி அமைக்கிறது.

6. மதுவைத் தவிருங்கள்: மது அளவுக்கு மீறினால் கல்லீரலில் கொழுப்பு சேரவும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியவும் ஊக்குவிக்கிறது.

என்ன உடற்பயிற்சி செய்யலாம்?

கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்று அவசியம்.

சுலப நடை - தினமும் 45 நிமிடங்கள்.

வேக நடை  - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 30 நிமிடங்கள்.

மெல்லோட்டம் - மணிக்கு 3 கி.மீ. வேகம். தினமும் 30 நிமிடங்கள்.

ஓடுதல் - மணிக்கு 3.5 கி.மீ. வேகம் - தினமும் 15 நிமிடங்கள்.

டென்னிஸ் - தினமும் 40 நிமிடங்கள்.

நீச்சல் - தினமும் 40 நிமிடங்கள்.

சைக்கிள் ஓட்டுதல் - மணிக்கு 8 கி.மீ. வேகம். தினமும் 40 நிமிடங்கள்.

மன நலம் முக்கியம்: மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையும், போதுமான ஓய்வும், சரியான அளவு தூக்கமும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். தியானமும், யோகாவும் மன அழுத்தம் குறைய உதவும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com
பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ravikumar C   3 years ago

"ஓடுதல் - மணிக்கு 3.5 கி.மீ. வேகம் - தினமும் 15 நிமிடங்கள்." இது சரியான தகவல்தானா? 3.5கி.மீ என்பது மிக மிக குறைவான வேகம். தெளிவு படுத்த வேண்டுகிறேன்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நிர்வாகிகள்விவசாயிகளைத் தாக்காதீர்இதிகாசம்சல்மான் ருஷ்டிக்காக ஒரு பிரார்த்தனைவரிவிதிப்புஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிகூட்டுத்தொகைசம்பா சாகுபடிபன்னிரெண்டாம் வகுப்புகவின்கேர்அமித் ஷா காஷ்மீர் பயணம்கட்டமைப்புப் பொறியாளர்அச்சமின்றி வாழ்வதற்கான எனது உரிமைபோபால்மதிப்பு கூட்டு வரிமூன்று அம்சங்கள்ஸ்ரீசங்கராச்சாரியார்நீதி நிபுணர்பிராணர் – பிராமணரல்லாதோர் பிளவைக் கூர்மைப்படுத்துகசசி தரூர்திராவிடப் பேரொளிசூரிய மின்சக்திசுயசார்புஅண்ணா நூலகம்வெற்றிக்கு மிக அருகில் விவசாயிகள் போராட்டம்இலங்கைக்கு இவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏன்?அரசாங்கம்ராம்நாத் கோயங்காபி.எஸ்.கிருஷ்ணன்ரெட்ரோகிரேட் எஜாகுலேஸன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!