கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 8 நிமிட வாசிப்பு
கொழுப்பு மிக்க கல்லீரல் ஆபத்தானதா?
சமீப காலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமான மருத்துவ வார்த்தைகளில் ‘ஃபேட்டி லிவர்’ (Fatty Liver) ஒன்றாகிவிட்டது. முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வரக் கூடியதாக இருந்த இந்தச் சிக்கல், இப்போது குழந்தைகளுக்கும் வருகிறது என்பதுதான் நம்மை உஷார்ப்படுத்துகிறது.
ஃபேட்டி லிவர்!
பெயரே நோயைச் சொல்கிறது. கொழுப்பு மிக்க கல்லீரல்! இது எப்படி ஏற்படுகிறது? எதற்கும் அசராத கல்லீரல், இரண்டு விஷயங்களில் ‘ஆட்டம்’ காண்கிறது. ஒன்று, மது. மற்றொன்று, கொழுப்பு. மதுவில் இருக்கும் ஆல்கஹால் எப்படி பலசாலி கல்லீரலையும் நோஞ்சான் ஆக்கி, நம்மை மரணக் குழிக்குள் தள்ளுகிறது என்பதைச் சென்ற வாரம் பார்த்துவிட்டோம். ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் பிரச்சினைக்கு நாம் சாப்பிடும் சர்க்கரை பிளஸ் கொழுப்பு மிகுந்த உணவுகள்தான் முக்கியக் காரணம்.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்து வைப்பதே கல்லீரல்தான். அவசரத்துக்கு உடலுக்கு சக்தியை வழங்க இயற்கை தந்திருக்கும் ஏற்பாடு இது. இப்படிச் சேகரிக்கப்படும் கொழுப்பு ஒருகட்டத்தில் கல்லீரலுக்கு எதிரியாகிவிடுகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்று சொல்லியிருக்கிறார்கள். ‘வயிற்றில் போடும் சோற்றில்’ இதை நாம் மறந்துவிடுகிறோம். அதன் விளைவுதான் ஃபேட்டி லிவர்!
நம் முன்னோரை நினைத்துப்பாருங்கள். காட்டிலும் மேட்டிலும் கடுமையாக உழைப்பார்கள். ஆனாலும், மூன்று வேளை சாப்பாடே அன்றைக்கெல்லாம் அரிது. நாமோ உடல் உழைப்பும் இல்லாமல், உடற்பயிற்சியும் செய்யாமல், மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடுகிறோம். இது போதாது என்று இடையிடையே நொறுக்குத்தீனி, வார இறுதி பார்ட்டி, மாதம் ஒரு பஃபே விருந்து. அதிலும் ஃபாஸ்ட் ஃபுட், பாக்கெட் ஃபுட், ரெடிமேட் ஃபுட், ரெட்மீட், கார்ன் சிரப், ஜெல்லி, கேக், சிப்ஸ், ஐஸ்கிரீம், செயற்கை இனிப்புகள், குளிர் பானங்கள் என நமது உணவுமுறை முற்றிலும் மாறிவிட்ட பிறகு, உடல் பருமன் பிரச்சினை அதிகமாகிவிட்டது. ஆல்கஹாலை வாழ்நாளில் ஒருமுறைகூடத் தொடாதவருக்கும் உடல் பருமனால் ஃபேட்டி லிவர் வரலாம். எப்படி?
கொழுப்பாக மாறும் சர்க்கரை
வழக்கமாக, காலையில் நான்கு இட்லி சாப்பிடுகிறீர்கள். சாம்பாருக்குப் பதிலாக சிக்கன் குருமாவை ஊற்றிவிட்டால் போதும், அன்றைக்கு மட்டும் இட்லிக் கணக்கு எட்டாகி விடும். அதேசமயம் உடலுழைப்பு கூடவில்லை; உடற்பயிற்சியும் செய்யவில்லை. அப்படியானால், இட்லியால் அதிகமாகிப்போன மாவுச்சத்து கொழுப்பாக மாற்றப்பட்டு கல்லீரலில் சேமிக்கப்படும். சிக்கனில் இருக்கும் கொழுப்பும் அங்கே வந்து சேரும். மாலையில் காபி, டீக்கு பதிலாக மென்பானம் குடிக்கிறீர்கள். அதிலுள்ள ஃபிரக்டோஸ் எனும் சர்க்கரை கல்லீரலுக்கு வரும்போது, கொழுப்பாக மாறிவிடும்.
இப்படியான ஒரு தவறான உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகிறீர்கள் என்றால், இதன் விளைவாக அனுதினமும் அதிகரிக்கும் கொழுப்பை முதலில் தொடைக்கும் அப்புறம் இடுப்புக்கும் கல்லீரல் அனுப்பிவைக்கும். அடுத்தகட்டமாக வயிற்றுக்கு அனுப்பும். அங்கே ‘தொப்பை’ தொடங்கும்.
இன்ச் டேப் வைத்து இடுப்புச் சுற்றளவை அளந்தால், ஆண்களுக்கு 88 செ.மீ., பெண்களுக்கு 80 செ.மீ. இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டினால் ஆபத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டோம் என்று அர்த்தம். இந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்டு உணவைக் குறைத்து, உடற்பயிற்சி செய்து, உடற்பருமனைக் கட்டுப்படுத்தினால் ஃபேட்டி லிவர் வராமல் தடுக்கலாம். இல்லையென்றால், தான் சேகரித்த கொழுப்பை இடுப்புக்கும் தொடைக்கும் சளைக்காமல் அனுப்பிக்கொண்டிருந்த கல்லீரல், ஒரு கட்டத்தில் அழுத்துப் போய், தன்னிடமே வைத்துக்கொள்ளும். அப்போதுதான் ஃபேட்டி லிவர் தலைகாட்டும்.
மன அழுத்தம் முக்கியக் காரணம்!
இந்தப் பிரச்னைக்கு, மிக முக்கியக் காரணியாக தற்போது வளர்ந்து வருவது மன அழுத்தம்! நீங்கள் ஆரோக்கிய உணவைத்தான் சாப்பிடுகிறீர்கள். துரித உணவை நினைத்துப் பார்ப்பதே இல்லை. உடலையும் ஃபிட்டாக வைத்திருக்கிறீர்கள். மதுவைத் தொடுவதில்லை. என்றாலும், கடுமையான மன அழுத்தம் இருக்கிறது என்றால், நீங்கள் அழைக்காமலேயே வந்துவிடும் ஃபேட்டி லிவர்! எப்படி? மன அழுத்தம் காரணமாக சில ஹார்மோன்கள் எக்குத்தப்பாக சுரந்து, காய்ச்சி ஆறவைத்த பாலில் ஆடை கட்டுவதைப்போல கல்லீரலில் கொழுப்பைச் சேர்த்துவைக்கும்.
ஃபேட்டி லிவர் பிரச்சினைக்கு அடுத்த காரணம், சர்க்கரை நோய். இதில் இன்சுலின் சரியாகச் சுரக்காது என்பதால், ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாது. அதுபோல் தேவைக்கு மேல் உள்ள கொழுப்பு அமிலங்களும் ரத்தத்தில் தேங்கும். இவற்றைக் கல்லீரல் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். இதுவும் ஓர் அளவுக்குத்தான். அதற்குள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்திவிட்டால், ஃபேட்டி லிவருக்கு இடமில்லாமல் போகும். தவறினால், ‘கிரேட் ஒன் ஃபேட்டி லிவர்’ (Grade I Fatty Liver) தலை எடுப்பதைத் தடுக்க முடியாது.
அது என்ன “கிரேட் ஒன் ஃபேட்டி லிவர்”?
உணவிலிருந்து வருகிற கொழுப்பு மொத்தமும் கல்லீரலில் சேரும் ஆரம்பநிலைக்கு “கிரேட் ஒன் ஃபேட்டி லிவர்” என்று பெயர். பெண்கள் ஃபேசியல் செய்யும்போது சில கிரீம்களை முகத்தில் பூசிக்கொள்வதைப்போல, கல்லீரலின் மேற்புறம் மட்டுமே கொழுப்பு படியும் நிலை இது. இது எந்தவோர் அறிகுறியையும் வெளிக்காட்டாமல், எந்த வழியிலும் ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் ‘அமைதி’யாக இருக்கும். வேறு காரணத்துக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது, ஃபேட்டி லிவர் இருப்பது எதேச்சையாகத் தெரியும்!
இந்த நேரத்தில் நாம் உஷாராகிவிட வேண்டும். ‘கிரேட் ஒன்’னுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இது “கிரேட் டூ”வுக்குத் தாவிவிடும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 'கிரேட் டூ'வில் கல்லீரலில் அநேக பாதிப்பு இருக்கும். ஆனாலும் உயிருக்கு ஆபத்து இருக்காது. என்ன காரணம்?
இதுவரை மேற்பூச்சாக இருந்த ‘கொழுப்புக் கோஷ்டிகள்’ கல்லீரலுக்குள் ஊடுருவுவதால் அங்கே அழற்சியும் வீக்கமும் உண்டாகின்றன. கல்லீரல் செல்கள் இருக்கும் இடத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாகக் கொழுப்பு செல்கள் இடம் பிடிக்கின்றன. வீட்டில் சமையல் அறையெங்கும் விருந்தாளிகள் அமர்ந்துவிட்டால், சமையல் எப்படி நடக்கும்? அப்படித்தான், இப்போது கல்லீரலின் செயல்பாடு குறைந்து செரிமானக் கோளாறுகள் ஏற்படும். வயிறு வலிக்கும். வாந்தி வரும். காமாலை எட்டிப்பார்க்கும். அத்தோடு சிரமங்கள் நின்றுகொள்ளும். இதற்காக பயப்படத் தேவையில்லை.
பரிசோதனைகள் என்ன? சிகிச்சைகள் என்ன?
ஏதோ “கிரேட் டூ ஃபேட்டி லிவர்” என்றதும் கல்லீரலே கெட்டுவிட்டதோ என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். கொழுப்பின் காரணமாக கல்லீரலில் நேர்ந்திருக்கும் பாதிப்பைத் துல்லியமாக அறிவதற்கு என்சைம் பரிசோதனைகள் இருக்கின்றன. அத்துடன் ‘லிவர் பயாப்சி’யும் கைகொடுக்கிறது. பயாப்சி எடுக்கப் பயப்படுபவர்களுக்காகவே ‘ஃபைப்ரோஸ்கேன்’ (Fibroscan) எனும் நவீன சோதனை இப்போது வந்துள்ளது. இதன் மூலம் நோயைக் கணித்து வாழ்க்கைமுறை மாற்றங்கள், தகுந்த மாத்திரை, மருந்துகள், வைட்டமின் இ கலந்த ஆன்டிஆக்ஸிடென்டுகள், ஃபிளவினாய்டு நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டு 'கிரேட் டூ'வை 'ஜீரோ கிரேட்' ஆக்கிவிடலாம்.
ஆனால், இப்போதாவது நீங்கள் ‘திருந்தி’விட வேண்டும். இல்லையென்றால், 'கிரேட் திரி ஃபேட்டி லிவர்' எனும் பேராபத்தைச் சந்திக்க வேண்டியது வரும். 'கிரேட் திரி'யில், இதுவரை கல்லீரலில் அழற்சி ஏற்பட்ட இடங்களில் தழும்புகள் தோன்றி, சுருங்கும். தேங்காய்க்குள்ளே இருக்கிற ‘பருப்பி’ல் அதன் வெளிப்பக்கம் இருக்கிற நார்கள் இடம்பிடித்துவிட்டால் எப்படி இருக்கும்? கற்பனை செய்துபாருங்கள். அப்படித்தான் கல்லீரல் இப்போது இருக்கும். இதற்கு ‘ஃபைப்ரோசிஸ்’ என்று பெயர். இதுவே நாளடைவில் ‘சிரோசிஸ்’ எனும் கல்லீரல் சுருக்க நோய்க்குக் கொண்டு சென்று உயிருக்கு உலை வைக்கும். ஆனால், நவீன தொழில்நுட்பத்தில், இந்த நோய்க்குக் ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ (Liver transplantation) செய்து உயிரைக் காப்பாற்றவும் வசதி இருக்கிறது என்பது ஆறுதல்.
எனினும், அதற்கு ஆகும் செலவு அதிகம். சிரமங்களும் கூடுதல். ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டால் இத்தனை துன்பங்கள் தேவையே இல்லை. மதுவை மறந்து, எடையைக் குறைத்து, சர்க்கரை நோயைச் சரிசெய்துவிட்டால் போதும், கெட்டுப்போன கல்லீரலும் உடம்பின் காவல்காரராக மாறிவிடும்!
தடுக்கும் மந்திரங்கள் பத்து
- உடல் எடையைச் சரியாகப் பேண வேண்டும்.
- கொழுப்பு மிகுந்த உணவுகளான ரெட் மீட், ஃபாஸ்ட் ஃபுட், பாக்கெட் ஃபுட் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
- நொறுக்குத் தீனிகளை ஓரங்கட்டுங்கள்.
- கீரைகள், பழங்கள், காய்கறிகள் தேவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மதுவை விலக்குங்கள்.
- தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம்.
- மன அழுத்தம் ஆகாது.
- 6 - 8 மணி நேரம் இரவுத் தூக்கம் தேவை.
- ஒமேகா 3 சத்துள்ள மீன் உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- நீரிழிவை நெருங்க விடாதீர்கள்.
(பேசுவோம்)
5
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
பாமாலின் உட்பட இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களின் பங்கை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Anna Durai 3 years ago
உயிர் ,ஆரோக்கியம் குறித்த மருத்துவ தரவுகளை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்னதில் இருந்து தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை மீண்டும் மீண்டும் நிறுவும் மருத்துவர் கணேசன் ஐயாவுக்கு நன்றி
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.