கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 8 நிமிட வாசிப்பு
குடல் இறக்கம்: என்ன செய்வது?
வயிற்றில் ஏற்படும் நோய்களில் சில வயிற்றுக்கு வெளியேயும் தெரியும். இந்த ரகத்தில் ‘நான்தான் முதலாவது’ என்று முந்திக்கொள்வது ‘ஹெர்னியா’ எனும் குடல் இறக்கம்! குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்புத் திசு, வயிற்றின் தசைச் சுவர் ஒரு துவாரம் வழியாக வெளியில் பிதுங்கித் தெரியும். அதுதான் ‘குடல் இறக்கம்’ அல்லது ‘குடல் பிதுக்கம்’ (Hernia). பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எவருக்கும் இது வரலாம் என்றாலும் நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கும் முதியோருக்கும் வருவது அதிகம்.
‘குடல் இறக்கம்’ என்றால் என்ன?
ஊதிய பலூனை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். நீண்ட பலூனில் காற்றை ஊதும்போது, அது நல்ல பலூனாக இருந்தால் ஒரே சீராக விரிவடையும். சிலவற்றில் ஒன்றிரண்டு இடங்களில் சில புடைப்புகள் தெரியும். பலூனில் காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது பலம் குறைந்த பகுதியில் அப்படிப் புடைப்பு ஏற்படுகிறது. இப்படித்தான் வயிற்றில் குடல் பிதுக்கமும் உண்டாகிறது. இதைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
உடலிலேயே வயிற்றின் முன்பக்கமும் பின்பக்கமும்தான் தசைகளின் ராஜ்ஜியம் அதிகம். இவற்றில் முதுகுப் பக்கம் தூண்போல் நிற்கும் முதுகெலும்பும் அதைச் சுற்றியுள்ள தசைகளும் பலம் வாய்ந்தவை. அதனால் அங்கு ஆபத்து இல்லை.
முன்பக்கம் உள்ள தசைகள் சற்றே பலம் குறைந்தவை. இதற்குக் காரணமும் இருக்கிறது. வயிற்றின் உறுப்புகளை ஒரு போர்வைபோல் போர்த்தியிருக்கும் இந்தத் தசைகள், நாம் மூச்சுவிடும்போது உப்பி மீண்டும் பழைய நிலைக்கு வரத் தோதாக இருக்கின்றன. இதனால்தான் நாம் மூச்சு விடும்போதெல்லாம் வயிற்றுத் தசைகள் மேலும் கீழும் அசைந்துகொண்டே இருக்கின்றன. இந்தத் தசைகளின் பலவீனம் குடல் இறக்கத்துக்குப் பாதை தருகிறது.
வயிற்றில் எந்த இடத்திலும் குடல் இறக்கம் ஏற்படலாம் என்ற போதிலும், தொப்புள், தொடை, அறுவை சிகிச்சைத் தழும்பு ஆகிய இடங்களில் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். தொப்புளுக்கு மேலும் கீழும் வகிடு எடுத்ததுபோல் இருக்கும் மையக்கோட்டில் உள்ள தசைகள் ரொம்பவே பலம் குறைந்தவை. சிலருக்கு இந்த இடத்திலும் குடல் இறக்கம் ஏற்படுவதுண்டு.
குடல் இறக்கம் வரும் இடத்தைப் பொறுத்து இதன் வகை பிரிக்கப்பட்டுள்ளது.
1. தொடை இடுக்கு குடல் இறக்கம் (Inguinal hernia)
ஆண்களை அதிகம் பாதிக்கிற ரகம் இது. அடிவயிறும் தொடையும் இணைகிற இடத்தில் உட்பக்கமாக இது ஏற்படுகிறது. வயிற்றையும் விதைப்பையையும் (Scrotum) இணைப்பதற்கு சின்ன ‘குகைப் பாதை’ இருக்கிறது. ஆண்களுக்கு இதன் வழியாக விந்துக் குழாய், ரத்தக் குழாய், நிணநீர்க் குழாய், நரம்பு எனப் பல சங்கதிகள் விதைப்பைக்குச் செல்கின்றன.
பொதுவாகவே, ஆண்களுக்கு இந்தப் பாதை டி.வி. கேபிள் வயர் மாதிரி மிகவும் இறுகலாக இருக்கும். சாதாரணமாக, வயிற்றிலிருந்து எதுவும் இதன் வழியாக வெளியில் வரமுடியாது. சிலருக்கு மட்டும் பரம்பரை, உடல் வாகு அல்லது நோய் காரணமாக இங்குள்ள வயிற்றுச் சுவர் பலமிழந்து தளர்ந்துபோகும். அப்போது ‘குகைப் பாதை’யில் கொஞ்சம் இடம் கிடைக்கும். இதற்காகவே காத்திருந்தது போல், குடலின் சிறு பகுதி விதைப்பைக்குள் இறங்கிவிடும். அங்கே புதிதாக ஒரு வீக்கம் தோன்றும். இதுதான் தொடை இடுக்கு குடல் இறக்கம். வலப்பக்கம், இடப்பக்கம் என இரண்டு பக்கமும் இது ஏற்படலாம்.
2. மேல் தொடை குடல் இறக்கம் (Femoral hernia)
பெரும்பாலும் பெண்களுக்கு வருகிற குடல் இறக்கம் இது. மேல் தொடையின் தொடக்கத்தில் ஒரு குழாய்ப் பாதை (Femoral canal) இருக்கிறது. இதன் வழியாக வயிற்றிலிருந்து காலுக்கு ரத்தக் குழாய்கள், நரம்புகள், நிணநீர்க் குழாய்கள் செல்கின்றன. இது பலம் இழந்துவிடும்போது இந்த வகை குடல் இறக்கம் ஏற்படுகிறது.
3. தொப்புள் குடல் இறக்கம் (Umbilical hernia)
சிலருக்குத் தொப்புள் தசைகள் பலவீனமாகும்போது அங்கே குடல் இறக்கம் ஏற்படுகிறது. அப்போது தொப்புள் பெருத்துத் தொங்குகிறது. இன்னும் சிலருக்கு அறுவை சிகிச்சை தழும்பில் இது ஏற்படுகிறது. என்ன காரணம்? இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது தையல் போட்டிருப்பார்கள். நாளாக நாளாக, சில காரணங்களால் இந்தத் தையல் போட்ட இடத்தைச் சுற்றி தசைகள் பலவீனமாகும். அப்போது அதன் அருகில் இருக்கும் குடல் பகுதி அந்தத் தழும்பு வழியாக வெளியில் ‘எட்டிப் பார்க்கும்’. இதுதான் ‘தழும்பு குடல் இறக்கம் (Incisional hernia). உடல் பருமனாக உள்ள பெண்களுக்குத்தான் இந்த பாதிப்பு அதிகம். மேலும், பெண்களுக்கு 'சிசேரியன்’, கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என வயிற்றில் அறுவை சிகிச்சை தழும்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் அங்கே குடல் இறக்கம் தோன்றவும் வாய்ப்பு மிக அதிகம்.
காரணிகள் என்ன?
குடல் இறக்கம் ஏற்பட இதுவரை சொன்ன காரணங்களோடு இன்னும் பல காரணிகளும் உண்டு. நாட்பட்ட ஆஸ்துமா, தீராத இருமல், அதிக பளுவைத் திடீரெனத் தூக்குவது, நீடித்த மலச்சிக்கல், சிறுநீர்த் துளை அடைப்பு (Stricture urethra), புராஸ்டேட் வீக்கம், வயிற்றில் ஏற்படும் கட்டிகள், கர்ப்பம், முதுமை.
என்ன அறிகுறிகள்?
சிறிய நெல்லிக்காய் அளவுக்குப் புடைப்பு தெரிவது குடல் இறக்கத்தின் ஆரம்ப அறிகுறி. நீண்ட தூரம் நடந்தால், பலமாக இருமினால், மலம் கழிக்க முக்கினால் இந்தப் புடைப்பு பெரிதாகும். குழந்தைகள் அழும்போதும் இதே நிலைமைதான்.
இதைத் தொட்டால் வலிக்காது; படுக்கும்போது அதுவாகவே சமர்த்தாக மறைந்துவிடும். அல்லது விரலால் தள்ளினால் வயிற்றுக்குள் போய்விடும். எனவே, நம்மில் பலர் இதைப் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்வதில்லை. இதை வெளியில் சொல்ல வெட்கம் தடுக்கும் என்பதால் இதற்கு சிகிச்சை எடுக்க வருபவர்கள் ரொம்பவே குறைவு!
இந்தப் புடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாம்பழம் சைஸுக்கு வளர்ந்துவிடும். அப்போது இது வயிற்றுக்குள் திரும்பிப் போக சண்டித்தனம் செய்யும். அப்படியானால், வயிற்றுக்குள் போக முடியாத அளவுக்கு வீக்கம் பெரிதாகிவிட்டது என்று அர்த்தம். இது அங்குள்ள நரம்பை அழுத்தும். இதனால் அங்கே ‘யாரோ பிடித்து இழுக்கிற மாதிரி’ வலி ஆரம்பிக்கும். அடுத்ததாக வயிறு உப்பி ‘காற்று’ போகாது. இந்த நேரத்தில்தான் அலறியடித்துக் கொண்டு சிகிச்சைக்கு ஓடுவோம். அப்போது மருத்துவர் ‘நீங்கள் ஆபத்தான நிலைமையில் இருக்கிறீர்கள்’ என்பார்.
அந்த ஆபத்து எது?
அந்த ஆபத்துக்குப் பெயர் ‘முறுக்கிக்கொண்ட குடல் இறக்கம்’ (Strangulated hernia). குடல் இறக்கத்தை ஆரம்பத்தில் கவனிக்காமல்விட்டால் நேரும் பேராபத்து இது. எந்த ஒரு குடல் இறக்கமும் சாதாரண நிலையில் ‘கண்ணி வெடி’ மாதிரி இருக்கும்! அது எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாது. வெடித்தால் விளைவுகள் விபரீதமாகும். அப்படி ஆவதுதான் மேலே சொல்லப்பட்ட குடல் இறக்கம்.
வயிற்றிலிருந்து உள்ளுக்கும் வெளிக்குமாக ‘விசிட்’ செய்த குடல் திடீரென்று ‘கோபம் வந்து’ முறுக்கிக் கொள்ளும். இதன் கழுத்தில் ஒரு முடிச்சு விழும். இதனால் அந்தப் பகுதிக்கு ரத்தம் வருவது நின்றுவிடும். குடல் அழுகி செத்துவிடும். அங்கே ஓட்டை விழுந்து வயிற்றுக்குள் மலம் கசியும். வயிறு உப்பி, வலி எடுக்கும். வாந்தி வரும். ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரும். இதற்கு அவசர அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு. எனவே, குடல் இறக்கத்தைப் பொறுத்தவரை பிரச்சினை பெரிதாவதற்குள் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்துவிட வேண்டும். அதற்கு யோசிக்கக் கூடாது!
என்ன சிகிச்சைகள்?
குடல் இறக்கத்துக்கு ஆரம்பத்திலேயே திட்டமிட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு 100% சுகப்படும். சிகிச்சைக்குத் தாமதமானால் மீண்டும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- ஹெர்னியாட்டமி (Herniotomy): குழந்தைகள் / இளைஞர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் இதைச் செய்துகொள்ளலாம். வயிற்றைத் திறந்து, குடல் இறக்கத்தைக் கண்டுபிடித்து, அதன் துவாரம்வரை திறந்து, அதிலுள்ள குடலை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, துவாரத்தைத் தைத்து மூடுவது இதன் செயல்முறை.
- ஹெர்னியோரேபி (Herniorraphy): நடுத்தர வயதினருக்கு தசை மற்றும் தசைநார்கள் வலுவிழந்துபோனால், 'புரோலின் இழை' கொண்டு அத்தசைகளைத் தைத்துச் சரிப்படுத்தும் அறுவை சிகிச்சை இது.
- ஹெர்னியோபிளாஸ்டி (Hernioplasty): வயதானவர்கள் மற்றும் புரோலின் இழை கொண்டு தசைகளைத் தைத்து வலுப்படுத்த முடியாதவர்களுக்கு ‘புரோலின் வலை’யை (Prolene mesh) அத்தசைகளுக்கு இடையில் வைத்துத் தைத்துவிடுவார்கள். இந்த வலையின் இடைவெளியில் தசைகள் வளர்ந்து இறுக்கத்தை ஏற்படுத்தும். இதன் பலனால் தசைகள் பலப்படும். மீண்டும் குடல் இறக்கம் வராது.
- லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை: இதுவரை சொன்னவை எல்லாமே வயிற்றைத் திறந்து செய்யும் அறுவை சிகிச்சைகள். வயிற்றைத் திறக்காமல், ‘லேப்ராஸ்கோப்பி’ முறையில் சில துளைகள் மட்டும் போட்டு குடல் இறக்கம் சரிசெய்யப்படுகிறது. இப்போதைக்கு இதுதான் நவீன முறை. இதில் நோயாளிக்கு வலி குறைவு. ரத்த இழப்பு இல்லை. மருத்துவமனையில் சில நாட்களுக்குத் தங்கினால் போதும். சீக்கிரத்தில் வேலைக்குத் திரும்பிவிடலாம். எனினும், யாருக்கு மேற்கொள்வது என்பதை அறுவை சிகிச்சை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
(பேசுவோம்...)
1
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 2 years ago
நல்ல பதிவு அய்யா....
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 2 years ago
very informative sir
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.