கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 10 நிமிட வாசிப்பு

பல் வலி தீர என்ன வழி?

கு.கணேசன்
12 Jun 2022, 5:00 am
2

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சொல்வார்கள். இதன் அர்த்தம் ‘அளவுக்கு மீறி சாப்பிட வேண்டும்’ என்பது கிடையாது. ‘உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்’ என்பதை வலியுறுத்தும் உணவுப் பழக்கம் இது.

செரிமானம் எனும் செயல்பாடு உணவு மெல்லுதலில் இருந்தே தொடங்குகிறது. அதற்குப் பற்களின் ஆரோக்கியம்தான் அடிப்படை. ஆனால், முகத்தின் அழகைக் கூட்டுவதற்கு நாம் காட்டும் அக்கறையில் கால் பங்குகூட பற்களைப் பராமரிப்பதற்குக் காட்டுவது இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை. 

பற்களைப் பொறுத்தவரை உணவைக் கூழாக்கும் அரவை இயந்திரம் என்பதாக மட்டுமே அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். ‘பல் போனால் சொல் போச்சு’ என்று சொல்லிவிட்டதால், பேச்சுக்குப் பலம் சேர்ப்பவன் என்ற அளவில் திருப்திப்படுகிறோம். ஆனால், பற்களின் நலம் கெட்டால், அது இதயம் உள்ளிட்ட உறுப்புகளையும் உருக்கிவிடும் என்று மருத்துவர்கள் நாங்கள் சொல்கிறோம். ஏன்? பற்களின் பாதுகாப்புக்கும் பொது ஆரோக்கியத்துக்கும் தொப்புள்கொடி உறவு இருக்கிறது, அதனால்!

சாம்பிராணி வாசனை பூஜை அறைக்கு மட்டுமா சொந்தம்? வீட்டுக்கும்தானே! அதுமாதிரி, “பற்களின் பராமரிப்பு என்பது பற்களுக்கான பாதுகாப்பு மட்டுமல்ல; அது உடலுக்கும் ஆனது” என்னும் புரிதல் வேண்டும். அதுபோல் பற்களின் பாதுகாப்பு குழந்தை பிறந்தவுடன் தொடங்கிவிட வேண்டும். அதைவிட முக்கியம், பற்களைப் பாழாக்கும் பழக்கங்களைத் தவிர்த்தாலே போதும், பற்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும்.

அவை என்ன பழக்கங்கள்?

இதைக் குழந்தைகளிடம் இருந்தே தொடங்குவோம். இன்றைக்கு இனிப்பு பிடிக்காத குழந்தை இருக்கிறதா? அப்படியிருந்தால், அது குழந்தையாக இருக்காது.

நம் பாரம்பரிய வாழ்வியலில் வெல்ல மிட்டாய், அதிரசம், தேன்குழல், சிறுதானிய லட்டு, கொழுக்கட்டை, கடலை மிட்டாய், பொரி உருண்டை, எள்ளுருண்டை, சில்லுக் கருப்பட்டி, இஞ்சிமரப்பா எனப் பல்லில் ஒட்டாத இனிப்புகளை மட்டுமே தின்னக் கொடுத்துக் குழந்தைகளை வளர்த்தோம். இப்போதோ நிலைமை தலைகீழ்!

நாட்டு வெல்லத்துக்கு மாற்றாக வெள்ளை சர்க்கரையையும் செயற்கை இனிப்பையும் எப்போது கண்டுபிடித்தார்களோ அப்போது ஆரம்பித்தது பற்களுக்கும் ‘தலைவலி’. தமிழ்நாட்டின் காவிரிப் பிரச்சினைபோல் இதற்கும் என்றைக்கும் தீர்வு இல்லை. காரணம், சர்க்கரையில் செய்யப்படும் எல்லா இனிப்புகளும் பற்களைச் சிதைக்கும் மோசக்காரர்கள். இந்த அடிமை மோகத்திலிருந்து குழந்தைகள் விலகி வருவது அத்தனை எளிதில்லை.

குழந்தை பிறந்ததுமே நாம் வழங்கி மகிழ்வது சாக்லெட்! இது ஒன்று போதும், பற்கள் ஆட்டம் காணும்! அடுத்ததாக, ஐஸ்கிரீம், ஐஸ்வாட்டர், அட்டைபோல் ஒட்டிக்கொள்ளும் மிட்டாய்கள், பிஸ்கட்டுகள், இனிப்பு மாவுகள், ஜவ்வு போன்று இழுக்கப்படும் சூயிங்க வகையறாக்கள், செயற்கை இனிப்பு பானங்கள், கிரீம் கேக்குகள், பேக்கரி பண்டங்கள், சிப்ஸ், லேஸ், குர்குரே போன்ற நொறுக்குத் தீனிகள், பீட்ஸா, பர்கர், ஃபிரெஞ்சு ஃபிரை, தந்தூரி அயிட்டங்கள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்… போதாக்குறைக்கு, ஊடக விளம்பரங்கள் ஆசை காட்டி வாங்கவைக்கும் வணிக உணவுகள்.

குழந்தைகளுக்கு வேண்டுமானால், இவை எல்லாம் சிரிக்க வைத்தே சொக்க வைக்கும் மோகினிகளாகத் தோன்றலாம். “அவை ஆரோக்கியத்தையே அழித்துவிடும் அந்நியப் படைகள்” என்பதைப் பெற்றோர் நாம்தான் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். செய்கிறோமா? இல்லை! அதனால்தான், பால்நிலவாக ஒளிர வேண்டிய குழந்தையின் பற்களில் சொத்தை விழுந்து, தேய்நிலவாகி, வலி எடுத்து, கண்ணீர் வழிந்து, முகம் கோணியதும், பதறிப்போய் பல் மருத்துவரைத் தேடுகிறோம்.

அடுத்து, சர்க்கரை சிந்திய இடத்தில் ஈக்களும் இறந்து கிடந்தால், எறும்புகளுக்குக் கொண்டாட்டம் கூடிவிடுமல்லவா? அதுபோல் பற்களைக் கெடுப்பதில் தவறான உணவுப் பழக்கம் முந்திக்கொள்கிறது என்றால், வளர்ச்சிப்பருவத்தில் குழந்தைகள் கையாளும் தவறான வழிமுறைகளும் பின்னிக்கொள்கின்றன. உதாரணத்துக்கு, பல் தேய்க்காமல் காலையில் காபி சாப்பிடுவது, சாப்பிட்டதும் வாயைக் கொப்பளிக்கத் தவறுவது, நகம் கடிப்பது, விரல் சூப்புவது, பாட்டில் மூடியைப் பற்களால் திறப்பது, கொதிக்கக் கொதிக்க பானங்கள் குடிப்பது… இவை எல்லாமே பற்களைப் பாழடிக்கும் பழக்கங்கள்தான்.

பல்லில் என்ன பிரச்சினை?

நம் மக்களிடம் ஒரு பொதுவான குணம் உண்டு. “பல்லில் பிரச்சினை என்றால்தான் பல் மருத்துவரைப் பார்ப்பது” என்ற ‘கொள்கைப் பிடிப்பு’தான் அது. தினமும் இருவேளை பல் துலக்க வேண்டும் என்று சொன்னாலும் அதைப் பின்பற்றுவதில்லை. பல்லைக் கெடுக்கும் பழக்கங்களை விட்டொழியுங்கள் என்றாலும் கேட்பதில்லை. அதனாலேயே நாட்டில் 53% பேருக்குச் சொத்தைப் பல் இருக்கிறது. 57% பேருக்கு வாய் நாறுகிறது. 34% பேருக்குப் பல் கூசுகிறது. 63% பேருக்கு ஈறுகள் தேய்ந்துள்ளன.

சரி, இவையெல்லாம் எப்படி ஏற்படுகின்றன?

பல்லுக்கு முதல் பகைவன் பல் சொத்தை. ஒட்டிக்கொள்ளும் இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த ‘அமிலக் கரையான்’ எனாமலுக்கு எதிரி. அதனால் பல் சொத்தையாகிறது. புகைபிடிப்பதாலும் புகையிலை போடுவதாலும் பற்களில் காரை படிகிறது. அதில் பாக்டீரியாக்கள் குஷியாகக் குடியேறி பல் சொத்தைக்குப் பாதை போடுகிறது. பல் வலி தொல்லை கொடுக்கிறது.

ஈறுகள் என்பவை பற்களைப் பாதுகாக்கும் அரண்கள். அவை வலுவிழந்தால் பற்களுக்கு ஆயுள் குறைந்துவிடும். பற்கள் சுத்தமில்லாமல் இருப்பது, பல் சந்துகளில் உணவுத் துகள்கள் தங்குவது, குச்சி / குண்டூசியால் பல் குத்துவது… இப்படிப் பல்வேறு நிலைமைகளில் ஈறுகள் வீங்கிச் சீழ்பிடிக்கும்; சாப்பிட முடியாது; வலிக்கும்; ரத்தம் கசியும்; வாய் நாறும்; பல் ஆடும். இந்த அநியாயத்தைத் தடுக்க ‘வாய் சுத்தம்’ அத்தியாவசியம்.

பிதாமகன்கள்!

சிசுவுக்குத் தாய்ப்பால் புகட்டியதும், மிருதுவான துணியை இளஞ்சூடான நீரில் நனைத்து, மென்மையாக அதன் ஈறுகளைத் துடைப்பதில் தொடங்குகிறது பல் பராமரிப்பு. அனைத்துப் பற்களும் முளைத்த பிறகு தினமும் இருமுறை பல் துலக்குவதைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் நன்றாக வாய் கொப்பளிப்பதைச் சிறுவயதிலிருந்தே வழக்கப்படுத்த வேண்டும். தினமும் கேரட் போன்ற காயைக் கடித்துத் தின்னும் பழக்கம் வேண்டும். இந்த மூன்றும் பல் பராமரிப்பின் பிதாமகன்கள்.

எது நல்ல பேஸ்ட்?

இந்தக் கேள்விக்குப் பதில் தேடும் பொதுஜனம் “உப்பு இருக்கிறது; கால்சியம் சத்து தருகிறது; வாய் மணக்கிறது” என்றெல்லாம் ஊடகங்களில் கூவிக்கூவி விற்கப்படும் பல வண்ண பேஸ்ட் விளம்பரங்களைப் பார்த்துக் குழம்பிப்போகின்றனர்.

பொதுவாகச் சொன்னால், ஃபுளோரைடு கலந்த பேஸ்ட்தான் பெஸ்ட்! இது பற்களுக்குப் பலம் சேர்க்கிறது. அடுத்ததாகப் புரிந்துகொள்ள வேண்டியது ஜெல் பேஸ்ட் ஆகாது என்பது. அதிலுள்ள சிலிக்கா எனாமலை சிதைக்கிறது. அதனால்! பற்கூச்சத்துக்குத் தனி பேஸ்ட் உள்ளது. இரவில் நடப்பதற்குத் தெருவிளக்கு போதும்; திருவிழா வெளிச்சம் தேவையில்லை! அதுபோல் பிரஷ் நிறைய பேஸ்ட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை; ஒரு பட்டாணி அளவு எடுத்து, பல் துலக்கினாலே போதும்.  

பல் துலக்குவது எப்படி?

பல் பிரச்சினைக்கு மின் சிகிச்சை சரிப்படுமா, ஸ்டெம் செல் சிகிச்சை செயல்படுமா என்று மருத்துவ உலகம் ஆய்வு செய்கிறது. ஆனால், நாமோ பல் துலக்கும் கலையையே இன்னும் ஒழுங்காகக் கற்றுக்கொள்ளவில்லை. பற்களை வேகவேகமாகத் தேய்க்கிறோம். நீண்ட நேரம் தேய்க்கிறோம். முன்னும் பின்னுமாக அழுத்தித் தேய்க்கிறோம். இவை சரியானமுறை கிடையாது. இப்படித் தேய்த்தால் கரியாவது காசு மட்டுமல்ல முத்துப் பல் வரிசையும்தான். பதிலாக, மேல் தாடைப் பற்களை மேலிருந்து கீழும், கீழ்த் தாடைப் பற்களைக் கீழிருந்து மேலும் வட்டச் சுழற்சியில், மிதமான அழுத்தம் கொடுத்துத் துலக்க வேண்டும். பற்களின் வெட்டும் பரப்புகளை வட்டவடிவில் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.

பல் துலக்கி - கவனிக்க!

  • தலைப்பகுதியில் சிறிய வளைவுள்ள மென்மையான பல் துலக்கி நல்லது.
  • பற்களைத் துலக்கி முடிந்ததும், பிரத்யேக மூடியால் பல் துலக்கியை மூடுங்கள்.
  • 2 மாதங்களுக்கு ஒருமுறை பல் துலக்கியை மாற்றுங்கள்.
  • வயதானவர்கள் ‘இன்டர் டென்டல் பிரஷ்’ பயன்படுத்துவது நல்லது.
  • குழந்தைக்குப் பல் முளைத்ததும், பெற்றோர் தங்கள் விரலில் ‘ஃபிங்கர் பிரஷை’ மாட்டிக் கொண்டு, பல் துலக்கிவிடலாம்.
  • பெரியவர்கள் ‘பல் செட்’டையும் பல் துலக்கியால் சுத்தப்படுத்த வேண்டும்.
  • ‘எலெக்டிரிக் டூத் பிரஷ்’ இருக்கிறது. அதையும் பயன்படுத்தலாம்.

உணவுகள் உதவுமா?

பற்களின் உறுதிக்குக் கால்சியமும் பாஸ்பரஸும் தேவை. அதற்குப் பால், பால் சார்ந்த உணவுகள் உதவும். இறைச்சி, மீன், முட்டை பச்சையிலைக் காய்கறிகள், வாதுமை, ஆரஞ்சு பல்லுக்குப் பலம் சேர்க்கும். கேரட், ஆப்பிள், வெள்ளரி பற்களைச் சுத்தப்படுத்தும். சின்ன வயதிலிருந்தே இந்த உணவுப் பழக்கம் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

2-2-2 விதி தெரியுமா?

பள்ளியில் படித்த ‘பாஸ்கல் விதி’யை மறந்தாலும் மறக்கலாம். பல்லைப் பாதுகாக்கும் பொன்னான ஒரு விதியை மறக்கக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்குத் துலக்க வேண்டும். வருடத்துக்கு இரண்டு முறை பல் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். இதுதான் அந்த விதி. இதன்படி செயல்பட்டால் பல் நலம் காக்கப்படுவது உறுதி. அப்போது பல் வலிக்கு நிச்சயம் ‘டாடா’ காண்பிக்கலாம்!

என்ன சிகிச்சை?

இத்தனை முன்னெடுப்புக்குப் பிறகும் பல்லில் பிரச்சினை என்றால் நவீன பல் மருத்துவம் கைகொடுக்கிறது. முன்பெல்லாம் பல் சொத்தைக்குப் பல்லை அகற்றுவதுதான் ஒரேவழி. தற்போது அதற்கு ‘வேர் சிகிச்சை’ (Root canal treatment) பிரபலம். ஈறுகளில் மயக்கம் கொடுத்து, பல்லை டிரில் செய்து, சொத்தையைத் துப்புரவாக அள்ளி எடுத்துவிட்டு, சில வேதிப்பொருள்கள் கொண்டு அந்தக் குழியை நிரப்புகிறார்கள். பிறகு ‘கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். பல் சொத்தை சரியாகிறது. பல் வலி காணாமல் போகிறது. தவிர, பற்காரை உள்ளவர்களுக்கு 'ஸ்கேலிங்' / ‘பிளீச்சிங்’ சிகிச்சையில் சரிசெய்கிறார்கள். மோசமான ஈறு வீக்கத்துக்கு அறுவை சிகிச்சையும் உள்ளது. வாய் நாற்றம் அதில் சரியாகிறது.

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   3 years ago

Awesome article Sir!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

VELLINGIRI M    3 years ago

மிகவும் பயனுள்ள கட்டுரை.நன்றி மருத்துவர் ஐயா.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

நீர் மேலாண்மைஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்மாநிலங்களவையின் சிறப்புமாநிலத் தலைகள்: ரமண் சிங்புலம்பெயர்ந்தோர் விவகாரம்Milkசட்ரஸ்தியாகராய ஆராதனாசிக்கிம்ஊர்வலம்ஒரு துறவியின் மனநிலையில் வாழ்பவன் நான்: சாரு பேட்டஒரு தேசம் ஈராட்சி முறைசெல்லப் பெயர்அத்திமரத்துக்கொல்லைசாதியைத் தவிர்ப்பது எப்போது சாத்தியமாகும்?அதிகாரப்பரவலாக்கம்ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - அரிய வகை ஏழைகள்சிற்றிலக்கியங்கள்சமஸ் - எஸ்.பாலசுப்ரமணியன்உடல் உழைப்புஉலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம்பத்திரிகையாளர்நல்ல ஆண்சிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிடி.ஜே.ஆப்ரஹாம்சாரநாத் கல்வெட்டுகோயில்களில் என்ன நடக்கிறது?இந்தியத் தொழில்நுட்பக் கழகம்பே டிஎம்தங்க ஜெயராமன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!