கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 10 நிமிட வாசிப்பு

முதுகு வலிக்கு என்ன தீர்வு?

கு.கணேசன்
08 May 2022, 5:00 am
1

முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் நம்மால் பார்க்க முடியாத ஒரே இடம் முதுகு. நாம் அதிகம் அலட்சியப்படுத்தும் இடமும் அதுதான். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சமயத்திலாவது முதுகு வலியால் அவதிப்பட்டிருப்போம். அதனால்தான் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காக சிகிச்சை பெறும் பிரச்சினைகளில் கீழ் முதுகு வலி (Low Back Pain) இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 

என்ன காரணம்?

காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பதுபோலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறிதானே தவிர இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்குப் பல காரணங்கள் உண்டு. இந்தப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு (Inter Vertebral Disc) எனப்படும் சவ்வு ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை முதன்மைக் காரணங்களாகச் சொல்லலாம்.

சமயங்களில் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைபடுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90% முதுகெலும்புத் தொடர்பான காரணங்களாகவும். மீதி 10% வயிற்றுப் பகுதி தொடர்பானதாகவும் இருக்கின்றன.

பணி நிமித்தமாக தொடர்ந்து பல மணி நேரங்களுக்கு அமர்ந்தே இருப்பது, கூன் விழுந்த நிலையில் உட்காருவது, தொடர்ச்சியாகக் கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச்சத்துக் குறைவு, தரையில் விழுவது, உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல் பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு சவ்வில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.

‘எலும்பழற்சி’ (Osteomyelitis) எனும் தொற்றாலும், காசநோய் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக (Spinal canal stenosis) இருக்கும். இன்னும் சிலருக்குக் கீழ் முதுகும் ‘சேக்ரம்’ எனும் இடுப்பு எலும்பும் இணைகிற இடத்தில் பிறவியிலேயே பிழை உண்டாகி இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு இளமையிலேயே கீழ் முதுகு வலி வந்துவிடும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்றுநோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரலாம். இது 50 வயதுக்கு மேல் வரக்கூடும்.

முதுமை காரணமாகவும் இந்த வலி தொல்லை கொடுக்கும். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள சவ்வு தேயந்துவிடும் இதனால் வலி வரும். புதிதாக வாங்கிய பந்தை கீழே எறிந்தால் நன்கு துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக அந்தப் பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும். அதுபோலவே வயதாக ஆக சவ்வில் நீர்ச்சத்து குறைந்துவிடுவதால் குஷன்போல் இயங்குகிற தன்மையும் குறைந்துவிடுகிறது. அதிர்ச்சியைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் முதியவர்களுக்குக் கீழ் முதுகு வலி வருகிறது.

எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயதாகும்போது இந்த கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்து மிருதுவாகிவிடும். இதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ (Osteoporosis) என்று பெயர். இந்த எலும்புகள் விரைவில் தேய்ந்து கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

சியாட்டிகா என்பது என்ன?

முதுகு வலிக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிகவும் பிரதான காரணங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று, சவ்வு விலகுவது (Disc prolapse). அடுத்தது, முள்ளெலும்புகளின் பின்புறமுள்ள அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது. இந்தக் காரணங்களால் தண்டுவட நரம்பு செல்லும் பாதை குறுகிவிடுகிறது. இதனால் தண்டுவட நரம்பு அழுத்தப்படுகிறது. இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள் நெரிக்கப்பட்டு, ரத்த ஓட்டம் குறைந்து நரம்பு முறையாக இயங்க வழி இல்லாமல் வலி ஏற்படுகிறது. பொதுவாக, காலுக்கு வரும் ‘சியாட்டிக் நரம்பு’ இவ்வாறு பாதிக்கப்படும். இதனால்தான் இதற்கு ‘சியாட்டிகா’ (Sciatica) எனப் பெயர் வந்தது.

ஆரம்பத்தில் இந்த வலியானது கீழ் முதுகில் அவ்வப்போது ஏற்படும். பெரும்பாலானோர் இதை வாய்வு வலி என்று தீர்மானித்து சிகிச்சை செய்யாமல் இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் இந்த வலி கடுமையாகித் தொடைக்குப் பின்புறத்திலோ, காலுக்கோ மின்சாரம் பாய்வதைப்போல் ‘சுரீர்’ என்று பரவும். படுத்து உறங்கும்போது இந்த வலி குறைந்து, பிறகு நடக்கும்போது வலி அதிகமாகும். காலில் உணர்ச்சி குறையும். நாளாக ஆக மரத்துப்போன உணர்வும் ஏற்படும். முதுகைப் பின்னாலோ, முன்னாலோ வளைப்பதில் சிரமம் உண்டாகும். பலமாகத் தும்மினாலோ முக்கினாலோ வலி கடுமையாகும்.

பரிசோதனையும் சிகிச்சையும்

கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருப்பதால் முதுகு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்து காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சவ்வு வீங்குவது அல்லது விலகுவது காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலியானது வலி நிவாரணிகள், 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசியோதெரபி மற்றும் ட்ராஷன் சிகிச்சையில் குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு முதுது தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவது உண்டு.

தொடர்ந்து பல வாரங்களுக்கு வலி இருக்குமானால், நடக்கவோ நிற்கவோ குனியவோ முடியவில்லை என்றால். கால் மரத்துப்போனால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது வரும். முன்பு முதுகுத் தசைகளைத் திறந்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இடம்பெயர்ந்துவிட்ட சவ்வை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் உலோகத்தால் ஆன செயற்கை சவ்வை வைத்துவிடுவார்கள்.

இப்போது ‘லம்பார் எண்டாஸ்கோப்பிக் டிஸ்கெக்டமி’ (Lumbar Endoscopic Discectomy) எனும் நவீன அறுவை சிகிச்சையில், லேப்ராஸ்கோப் முறையில், முதுகில் சில துளைகள் மட்டும் போட்டு, விலகியிருக்கும் சவ்வை அகற்றி, தண்டுவடம் – நரம்புப் பகுதியில் இருக்கிற அழுத்தத்தை நீக்கிவிடும்போது கீழ் முதுகு வலியும் கால் குடைச்சலும் சரியாகிவிடும். எந்த அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டாலும் அதற்குப் பிறகு முதுகுத் தசைகளுக்கான பிசியோதெரபி பயிற்சிகளைச் செய்ய வேண்டியது முக்கியம். அப்போதுதான் அந்தத் தசைகளுக்குப் பலம் கிடைக்கும். முதுகு வலி மீண்டும் ஏற்படாது.

‘ஸ்பாண்டிலோ லிஸ்தெசிஸ்’ என்றால் என்ன?

முதுகெலும்பில் - முக்கியமாக லம்பார் எலும்புகளில் - ஏற்படும் கோளாறு இது. ஒன்றின் மேல் ஒன்றாகச் செங்கல்களை அடுக்கி வைத்ததுபோல் இருக்க வேண்டிய எலும்புகள், ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருக்கும் நிலைமையை ‘ஸ்பாண்டிலோ லிஸ்தெசிஸ்’ (Spondylolisthesis) என்கிறோம். இதனால் முதுகுத் தண்டுவட நரம்புகள் அழுத்தப்படும். அப்போது பிரச்சினை ஏற்படும். கீழ் முதுகு வலி, ஒரு காலில் அல்லது இரண்டு கால்களில் வலி பரவுதல், கால்களில் மதமதப்பு, கால் பலவீனம், நடப்பதிலும் குனிவதிலும் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகள். பொதுவாக பிறவிக் கோளாறு, விபத்து, அடிபடுதல், அழற்சி, முதுகெலும்பு அதீத பயன்பாடு போன்றவை காரணமாக இது ஏற்படுகிறது. சுமை தூக்குபவர்கள், விளையாட்டு வீரர்கள் ஜிம் பயற்சிகள் மற்றும் எடை தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்கிறவர்களுக்கு இது ஏற்படும் அபாயம் அதிகம். இதற்கும் அறுவை சிகிச்சைதான் உதவும். இடம் மாறிய எலும்புகளை சரியான இடத்துக்குக் கொண்டுவந்து, அவை மீண்டும் விலகிவிடாமல் இருக்க, உலோக ஸ்குரூக்களை எலும்புகளில் பொருத்தி நிலை நிறுத்துவார்கள். இதனால் நோய் குணமாகும்.

‘ஸ்பாண்டிலோசிஸ்’ வலி எது?

அசையும் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதை ‘ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Ankylosing spondylitis) என்றும் ‘ஸ்பாண்டிலோசிஸ்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த நோய் முதலில் கீழ் முதுகு வலியாக ஆரம்பித்து, பிறகு இதர மூட்டுகளுக்கும் பரவும். இந்த நோயின்போது முதுகெலும்பில் கடுமையான இறுக்கம் தோன்றுவதால், முதுகை அசைக்கவே முடியாத அளவுக்கு வலி மிகக் கடுமையாக இருக்கும். உட்கார்ந்தால் முதுகு வலி அதிகமாகும். நின்றால் அல்லது நடந்தால் வலி குறையும். இதற்கும் வலி நிவாரணிகள்தான் ஆரம்பத்தில் தரப்படும். வலி குறையாதபோது அறுவை சிகிச்சை செய்து வீக்கமுள்ள முதுகெலும்பை இயல்பு அளவுக்குக் கொண்டுவருவார்கள்.

முதுகு வலியைத் தடுக்க…

  1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.  நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
  2. சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது போன்றவை முதுகு வலி வராமல் தடுக்கும்.
  3. காற்றடைத்த பானங்கள், குளிர்பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  4. முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில்தான் படுக்க வேண்டும்; கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லுவார்கள். இவற்றில் உண்மையில்லை. சரியான மெத்தையில் பக்கவாட்டில் சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.
  5. அதிக எடையைத் தூக்கக்கூடாது. அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக்கொள்வது இன்னும் நல்லது.
  6. குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.
  7. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக் கூடாது.
  8. நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.
  9. உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும்.
  10. புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். போதை மாத்திரைகள் சாப்பிடாதீர்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1


அதிகம் வாசிக்கப்பட்டவை

ஹண்டே சமஸ் பேட்டிநீட்வீட்டுக்கடன் சலுகைரஷ்யாவின் தாக்குதல்விரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!பிராந்தியக் கட்சிகள்வரிபொறியியலில் போதாமைநாகலாந்து துப்பாக்கிச் சூடுபயன்பாடு மொழிதாய்மொழிவழிக் கல்விபுஷ்கர் சந்தைசீர்திருத்தங்கள்தோற்றப்பாட்டியல்நடைப்பயிற்சிஉயர்சாதி ஏழைகள்துணை தேசியம்தேசிய புள்ளிவிவரம்கற்பவர்களின் சுதந்திரம்மொழியும் பிம்பங்களும்பொய்ச் செய்திகள்ப.சியின் தொழில் பசிநடைமுறையே இங்கு தண்டனை!மாட்டிறைச்சிகுறைந்த பட்ச விலைமக்களவைத் தொகுதிகள்பொதுச் சுகாதாரம்அம்பேத்கர் எனும் குலச்சாமிஜெர்மனி தேர்தல் முறைநடவடிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!