கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

தசைநார் வலிக்கு என்ன தீர்வு?

கு.கணேசன்
15 May 2022, 5:00 am
0

வாழ்நாளில் வலியை உணராத மனிதரைப் பார்ப்பது அரிது. உடல் வலி, தலை வலி, பல் வலி, கை வலி, கால் வலி, முதுகு வலி, முழங்கால் வலி, மூட்டு வலி என ஏதேனும் ஒரு வலியால் வேதனைப்படுவதைப் பார்க்கிறோம். இவற்றுக்கெல்லாம் காரணம் கண்டுபிடிக்க முடியும். அதற்கேற்ப சிகிச்சையும் தர முடியும். ஆனால், இன்ன காரணம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாத தசை வலி ஒன்று உண்டு. ‘ஃபைப்ரோமயால்ஜியா’ (Fibromyalgia) என்று அதற்குப் பெயர். முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த நோய் இப்போது இளம்வயதினருக்கும் ஏற்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இதைக் குணப்படுத்த முடியும்; தடுக்க முடியும். 

ஃபைப்ரோமயால்ஜியா என்றால் என்ன?

பரவலான உடல் வலியைக் குறிக்கும் மருத்துவ வார்த்தை இது. ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிற நோய் இது. குறிப்பாகச் சொன்னால் 25லிருந்து 60 வயதுக்கு உட்பட்ட பெண்களைத்தான் இது பெரும்பாலும் பாதிக்கிறது. உடல் வலியோடு உடல் களைப்பு, உறக்கமின்மை, ஞாபக மறதி போன்றவையும் தொல்லை கொடுக்கும். முதுகு வலி, இடுப்பு வலி, தலை வலி மட்டுமல்லாமல் உடலின் பல இடங்களில் வலி ஏற்படும். கை, கால் குடைச்சல் அதிகம் தொல்லை கொடுக்கும்.

ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கமும் வலி ஏற்படுவது இதன் சிறப்பு. உதாரணமாக, இடது கை வலித்தால் அதேவேளையில் வலது கையும் வலிக்கும். வீட்டிலோ, அலுவலகத்திலோ, அன்றாடப் பணிகளைச் செய்யவிடாது. உற்சாகத்தைக் குறைக்கும். மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும். உலக அளவில் கோடிக்கணக்கான பெண்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள் என்றால், இந்த நோயின் கொடுமையைப் புரிந்துகொள்ளுங்கள்.

காரணம் என்ன?

இதற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். சமயங்களில் பல காரணங்கள் ஒன்று சேர்ந்துகொள்ளும். என்றாலும், மருத்தவ ஆராய்ச்சியாளர்களின் முடிவுப்படி சிலவற்றை இங்குக் குறிப்பிடலாம்.

ஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மை பாதிக்கப்படுவதுதான் இந்த நோய் வர முக்கியக் காரணம். நமக்கு உடலில் வலி ஏற்படும்போது ‘செரட்டோனின்’ ஹார்மோன் சுரக்கும். நாம் வலியால் பாதிக்கப்படாத அளவுக்கு அந்த வலியை இது கட்டுப்படுத்தும். ஃபைப்ரோமயால்ஜியா ஏற்படுபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அல்லது முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இதனால் லேசான வலியைக்கூட இவர்களால் தாங்க முடியாது.

அடுத்து, சிலருக்கு நரம்பு மண்டலத்தில் வலியை உணரச்செய்கிற வேதிப்பொருட்களின் அளவு அதிகரித்துவிடும். அப்போது அவர்களுக்கு ஃபைப்ரோமயால்ஜியா வரும். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கும் நீண்ட காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறோம். குடும்பத்தில் திடீரென ஏற்படும் அதிர்ச்சிகள், இழப்புகள், விபத்துகள், சோக நிகழ்வுகள் இந்த வலியைத் தூண்டுகின்றன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு பரம்பரை நோயாகவும் வருகிறது. புகைபிடிப்போர், உடல் பருமன் உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், வேறு ஏதேனும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. சரியான துக்கமின்மையும் அதீத குளிரும் இந்த வலியை அதிகப்படுத்தும்.

வலி வரும் இடங்கள்

இந்த வலியானது உடலில் குறிப்பிட்ட இடங்களில் ஆரம்பித்து, சிறிது சிறிதாக வலி அதிகரித்து, பிறகு பிற இடங்களுக்குப் பரவும். இந்த இடங்களை அழுத்தினால் வலியை உணர முடியும். அந்த இடங்கள் இவை:

 • தலையின் பின்பகுதி
 • கழுத்தின் மேற்பகுதி
 • தோள்பட்டை
 • நடு நெஞ்சின் மேற்பகுதி
 • முழங்கை
 • இடுப்பு உட்காரும் இடம்
 • முழங்காலின் பின்பகுதி

  மேற்கண்ட இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு, தசை இறுக்கமாக இருப்பதையும் உணரமுடியும்.

கவலை தரும் களைப்பு

இந்த நோய் உள்ளவர்கள் எளிதில் களைப்படைந்துவிடுவார்கள். முக்கியமாக காலையில் கண் விழிப்பது சிரமமாக இருக்கும் இன்னும் உறங்க வேண்டும்போல் இருக்கும். உடலில் சக்தி இல்லாததுபோல் உணர்வார்கள்.

பரிசோதனை என்ன?

இந்த நோய்க்கென தனியாக எந்தப் பரிசோதனையும் இல்லை. நோயின் தன்மையைப் பொறுத்து மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். ஒருவருக்கு ஃபைப்ரோமயால்ஜியா இருக்கிறது என்று உறுதி செய்வதற்கு முன்பு உடலின் பொது ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள பொதுவான ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும். அடுத்து, எலும்பு மூட்டு சார்ந்த நோய்கள் இல்லை என்பதை சில ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். தைராய்டு பரிசோதனைகளும் ஓரளவுக்கு நோயைக் கணிக்க உதவும்.

சிகிச்சை என்ன?

இந்த நோய்க்கு முதலில் குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவரது ஆலோசனைப்படி நரம்பு நோய் நிபுணர், மனநல நிபுணர், எலும்பு நோய் நிபுணர் ஆகியோரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வலியைக் குறைக்க மருந்து, மாத்திரை மட்டும் போதாது. மன அழுத்தம், உறக்கமின்மை, போன்றவற்றுக்கு மாத்திரைகளோடு மனநலத்துக்கு ஆலோசனைகள் (Cognitive behavioural therapy - CBT) தேவைப்படும்.

செரட்டோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க மாத்திரைகள் தரப்படும். இப்போது பெருநகரங்களில் வலி மருத்துவத்துக்கெனத் தனிப் பிரிவுகள் (Pain management clinics) தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிலும் ஆலோசனை பெறலாம். இவற்றோடு சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் வரும். தியானம், யோகா போன்றவையும் உதவும். அக்குபங்க்சர் மற்றும் ஆயுர்வேத மசாஜ் நல்ல பலனைத் தருகிறது.

தடுப்பது எப்படி?

 • மன அழுத்தம் குறைக்கின்ற வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடியுங்கள்.
 • வாரம் ஒருநாளாவது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழியுங்கள்.
 • பகலில் உறங்குவதைத் தவிர்த்து, இரவில் சீக்கிரமே உறங்கப் பழகுங்கள்.
 • இரவில் தொலைக்காட்சி, கைப்பேசி போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
 • நடைப்பயிற்சி மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதையும் தினசரி வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
 • உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.
 • காபி அதிகமாகக் குடிக்க வேண்டாம்.
 • மது, புகை ஆகவே ஆகாது.
 • பழச்சாறுகள் அருந்துவதை அதிகப்படுத்துங்கள்.
 • காய்கறி, பழங்கள் போன்ற நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு உடலின் பொது ஆரோக்கியத்தைக் காத்துகொள்ளுங்கள்.
 • ஓய்வு நேரங்களில் புத்தகப் படிப்பது, இசை கேட்பது, தோட்ட வேலை பார்ப்பது என உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்து வாழும் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

தசைப்பிடிப்புக்கு என்ன செய்வது?

தசை வலி, தசை இறுக்கம் இந்த இரு அறிகுறிகளும் ஃபைப்ரோமயால்ஜியாவிலும் காணப்படும்; தசைப்பிடிப்பிலும் (Muscle Cramps) காணப்படும். எனவே, ஒரு சிலர் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் காண இயலாமல் குழப்பிக்கொள்வார்கள். இரண்டுமே வெவ்வேறு நோய்கள்.

தசைப்பிடிப்பு என்பது ஒரு தசையின் இயல்பான இயக்கத்துக்குத் தடை போடும் தன்மை. இது பெரும்பாலும் கெண்டைக்கால் தசையில் ஏற்படுகிறது. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம். வலி மிகவும் கடுமையாக இருக்கும். ஒரே இடத்தில்தான் இந்த வலி இருக்கும் மற்ற பகுதிகளுக்கு இது பரவாது. ஆண்களில் விளையாட்டு வீரர்களுக்கு இது ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டால், சில நாட்களில் இது குணமாகிவிடும்.

தீர்வுகள் என்ன?

 • தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாதாரண நாட்களில் தினமும் 2 லிட்டருக்குக் குறையாமலும், கோடையில் 3 லிட்டருக்குக் குறையாமலும் தண்ணீர் பருக வேண்டும்.
 • தசைப்பிடிப்பு உள்ளபோது எலுமிச்சை, ஆரஞ்சு, நன்னாரி பழச்சாறு போன்றவற்றைக் குடிக்க வேண்டும்.
 • நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, தர்ப்பூசணி போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
 • முளைகட்டிய பயறுகள் சாப்பிடுவது தசைப்பிடிப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.
 • கால்சியம் மிகுந்த பால் மற்றும் பால் பொருட்கள், கேழ்வரகு, பாசிப்பயறு, வெந்தயக்கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
 • அதிக வெயிலில் அலையக் கூடாது.
 • எந்த ஒரு உடற்பயிற்சிக்கும் ‘வார்ம் அப்’ பயிற்சி மிகவும் அவசியம்.
 • வெயிலில் உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்கவும்.
 • தசைப்பிடிப்பு உள்ள தசைகளில் இளஞ்சூடான வெந்நீர் கொண்டு ஒத்தடம் தரலாம்.
 • வலியைப் போக்கும் களிம்புகளைத் தடவலாம்.
 • தசைக்கு இளக்கம் தருகின்ற களிம்புகளையும் தடவலாம்.
 • மருத்துவரின் யோசனைப்படி வலியைக் குறைக்க ஊசிகள் போட்டுக்கொள்ளலாம். வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தசை இளக்க மாத்திரைகள் சாப்பிடலாம்.
 • தசைப்பிடிப்புள்ள இடத்தில் மென்மையான மசாஜ் செய்யலாம்.
 • பாத நுனி விரல்களிலும் பின்னங்கால்களிலும் மாறி மாறி நிற்கும் பயிற்சிகளைச் செய்யலாம். இதைத் தினமும் 10 முறை செய்யலாம்.

தொடர்ந்து பேசுவோம்...

கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


2


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பத்திரிகையாளர் சுவாமிநாத ஐயர்துஷார் ஷா திட்டம்தலைவலிஅலர்ஜிடு டூ லிஸ்ட்ராகுல் பஜாஜ் அருஞ்சொல்பைஜுஸ்வெறுப்பைத் தூண்டும் பேச்சு செழிக்கிறதுதமிழ்ப் புத்தாண்டுகல்லூரிகள்சமஸ் வீரமணி பேட்டிஎதிர்காலம் இருக்கிறதா?நவீன எலக்ட்ரிக் வாகனங்கள்முறைக்கேடுகள்சமஸ் அருஞ்சொல்அறிவுசார் செயல்பாடுபதிப்பாளர்பண வீக்கம்நெட்பிளிக்ஸ் தொடர்சித்ரா பாலசுப்பிரமணியன்நேரு-காந்தி குடும்பம்கட்டுரை எழுதுவது எப்படி?எல்.ஆர்.சங்கர் கட்டுரைகார்போவுக்கு குட்பைகாந்தியின் உடை அரசியல்எம்.ஐ.டி.எஸ். வரலாறுமேலாளர் ஊழியர் பிரச்சினைகல்விமுறைசாவர்க்கர் அருஞ்சொல்என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!