கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு
தொல்லை தரும் தோள் வலி
மூட்டு வலிகளில் முக்கியமானது, தோள் வலி. எந்த அடியும் படாமலேயே, தோள் பகுதியில் வலி வருவதுதான் பலருக்கும் புரியாத புதிர். பொதுவாக, 40 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் கடுமையான அவதி இது. கையைத் தூக்கினால் வலிக்கும். ஒரு பக்கமாகப் படுத்தால் வலி அதிகரிக்கும். இரவில் கை முழுவதிலும் குடைச்சல் அதிகமாகும். கையை அசைக்காமல் இருந்துவிட்டு மறுபடியும் அசைத்தால் வலிக்கும். கையைக் கழற்றி வைத்துவிட்டால் நல்லது என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு வலி படுத்தும்.
என்ன காரணம்?
தோள் மூட்டில் வலி வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியக் காரணம் இது. தோள் மூட்டை இணைக்கும் தசைகள், முதுகு மற்றும் கழுத்துப் பகுதியிலிருந்து கிளம்பி, குகை போன்ற ஓர் அமைப்புக்குள் வந்து சேருகின்றன. அந்த இணைப்புப் பகுதியில் ரத்தம் குறையும்போது வலி உண்டாகிறது.
அதிக உடலுழைப்பு காரணமாகவோ அதிக எடை தூக்குவதாலோ தோள் மூட்டுத் தசைகள் பிசகிக்கொள்வது அடுத்ததொரு முக்கியக் காரணம். விபத்து, விளையாட்டு, அடிபடுதல் போன்றவற்றால் மூட்டில் காயங்கள் ஏற்படுவதும் தசைக்கொத்து நைந்துபோவதும் அங்குள்ள சவ்வு கிழிந்துவிடுவதும் அடுத்த காரணங்கள்.
ஏதேனும் தொற்று உண்டாகி மூட்டில் அழற்சி தோன்றினாலும் தோள் வலி ஏற்படும். நீண்ட நேரம் ஒரே நிலையில் கழுத்தை வைத்திருந்தாலும் – உதாரணம்: கணினி வேலை செய்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள் – கழுத்து வலியோடு தோளிலும் வலி ஏற்படும். கரடுமுரடான சாலைகளில் நெடுந்தூரம் வாகனம் ஓட்டுபவர்களுக்குத் தோள் மூட்டின் இணைப்புத் தசைநாண்கள் தொய்வடைவதால் தோளில் வலி ஏற்படுவது உண்டு. மூட்டழற்சி நோய்கள் காரணமாகவும் மூட்டு நழுவுதல் பிரச்சினை இருந்தாலும் தோளில் கடுமையாக வலிக்கும்.
அடுத்து, தோள்பட்டை மற்றும் புஜ எலும்பு முனைகள் தேய்ந்து கரடுமுரடாகலாம். அவை பிற பகுதிகளுடன் உராய்ந்து வலியை ஏற்படுத்தலாம். பொதுவாக, இந்த இணைப்புப் பகுதியில் ‘பர்ஸா’ (Bursa) என்னும் ஒரு குஷன் போன்ற குழிப்பை இருக்கிறது. அது இந்த உராய்வைத் தடுக்கிறது. ஆனால், அந்தக் குஷனிலேயே பாதிப்பு ஏற்பட்டால் வலி தாங்கமுடியாததாகிவிடும். தோள் மூட்டுத் தசைநாண்களில் கால்சிய படிவங்கள் சேருவதாலும் இப்படி வலி ஏற்படுகிறது. பித்தப்பைப் பிரச்சினைகள் இருந்தால் வலது தோளில் வலி தோன்றும்.
கழுத்து எலும்புகளில் பாதிப்பு உண்டாகும்போது அந்த வழியாகத் தோளுக்கு வந்துசேரும் நரம்புகள் அழுத்தப்படுமானால், தோளில் வலி வரும். மாரடைப்பின்போது இடது தோளில் வலி ஏற்படும். மூட்டு அசைவுக்குத் துணை செய்யும் நான்கு தசைநாண்களும் (Rotator cuff) பாதிப்படைந்தால், வலியால் தோளை அசைக்காமல் வைத்திருந்தால், நீரிழிவைக் கட்டுப்படுத்தாவிட்டால் தோள் மூட்டுத் தசைகள் இறுகிவிடும் (Frozen shoulder). அப்போது தோளைச் சிறிதுகூட அசைக்க முடியாத அளவுக்கு வலி கடுமையாகும்.
எது மாரடைப்பு, எது தோள் வலி?
சரி, இடது தோளில் வலி வந்தால் அது மாரடைப்பு வலியா, தோள் வலியா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
தோளைப் பல்வேறு திசைகளில் அசைத்துப் பாருங்கள். அந்த வலி அதிகமானாலோ, குறைந்தாலோ, தோளை இறுக்கிப் பிடித்த உணர்வு தளர்ந்தாலோ அது தோள் மூட்டு கொடுத்த வலியாகவே இருக்கும். தோளின் அசைவுக்கும் வலிக்கும் தொடர்பில்லை; அசைவு இல்லாத நேரத்திலும் வலிக்கிறது; வலி தொடர்ந்து இருக்கிறது என்பது உறுதியானால், அடுத்த அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். இடது பக்கத் தோளில் மட்டும் வலி அதிகம்; இடது கைக்கும் விரல்களுக்கும் வலி பரவுகிறது; உடல் வியர்க்கிறது; படபடப்பாக இருக்கிறது என்றால், அது மாரடைப்பு வலியாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
கழுத்துப் பிரச்சினைதான் தோள் வலிக்குக் காரணமா?
இருக்கலாம். கழுத்தில் தொடங்கும் வலி தோள் வழியாக கைக்கு இறங்கினால், மின்சாரம் பாய்வதுபோன்ற வலி தோன்றினால், விரல்களில் மறத்துப்போதல், எரிச்சல் இப்படியான அறிகுறிகள் காணப்பட்டால் கழுத்தில் உள்ள பிரச்சினையால் தோளில் வலி வருகிறது எனத் தெரிந்துகொள்ளலாம்.
தோள் வலிக்கு என்னென்ன பரிசோதனைகள்?
எக்ஸ்-ரேயில் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் தெரியும். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றில் மூட்டைச் சுற்றியுள்ள தசைநாண்கள், மெல்லிய சவ்வுகள் உள்ளிட்ட மற்ற பகுதி பிரச்சினைகளையும் அறியலாம். தோள் வலிக்கு நரம்பு பிரச்சினைதான் காரணமா என்பதை அறிய நரம்புக் கடத்தல் பரிசோதனை (Nerve conduction study) உதவும். இ.சி.ஜி. / 'ட்ரெட் மில்' பரிசோதனையும் தேவைப்படும்.
சிகிச்சை முறைகள் என்னென்ன?
தோள் வலி ஆரம்பநிலையில் இருந்தால், வலி நிவாரணிகளும் களிம்புகளும் பரிந்துரை செய்யப்படும். தசை இறுக்கத்தைத் தளர்த்தும் மருந்துகளும், தூக்கம் கொடுக்கும் மருந்துகளும் தேவைக்கேற்ப தரப்படும். இயன்முறை சிகிச்சை (Physiotherapy) நல்ல நிவாரணம் தரும். வலி அடுத்த கட்டத்துக்குச் செல்லும்போது, ஸ்டீராய்டு ஊசிகளை தோள் மூட்டுக்குள் செலுத்துவதும் உண்டு.
இவற்றுக்கெல்லாம் வலி குறையவில்லை என்றால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். தோளில் சில துளைகள் இட்டு ஆர்த்ராஸ்கோப் கருவி கொண்டு கரடுமுரடாகிப்போன குருத்தெலும்பைச் சீர்படுத்துகிறார்கள்; நைந்துபோன தசைக்கொத்தைச் சரிப்படுத்துகிறார்கள்; கிழிந்த சவ்வை இணைக்கிறார்கள்; கால்சியம் படிகங்களை அகற்றுகிறார்கள்; தோள் மூட்டைச் சுத்தப்படுத்துகிறார்கள். இவற்றில் தோள் வலி நிரந்தரமாகக் குணமாகிறது.
தோள் மூட்டு வலிக்கு வீட்டு சிகிச்சைகள் உண்டா?
உண்டு. பாதிப்பின் தொடக்கக் கட்டத்தில் வலி உள்ள பகுதியில் வெந்நீர் ஒத்தடம் ஒரு நிமிடம் ஐஸ் ஒத்தடம் ஒரு நிமிடம் என மாற்றி மாற்றிக் கொடுக்கலாம். இப்படிக் காலையிலும் இரவிலும் தலா 20 நிமிடங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து கொடுத்தால் தோள் வலி குறையும். தோளுக்கு ஓய்வு கொடுப்பதும் நல்லது. கையை மேலே தூக்கிச் செய்யும் வேலைகளையும், கைகளைப் பின்புறம் கொண்டு சென்று செய்யும் வேலைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். தோள் மூட்டைப் பின்னுக்குக் கொண்டு செல்லும் பயிற்சிகள், பெண்டுலம் போல் முன்னும் பின்னும் ஆட்டும் பயிற்சிகள், கைகளைப் பக்கவாட்டில் கொண்டு செல்லும் பயிற்சிகள் போன்ற எளிய பயிற்சிகளை அடிக்கடி செய்யலாம்.
தோள் வலியைத் தடுக்க முடியுமா?
முடியும். தோளுக்கு வலு கொடுக்கும் மிக எளிய பயிற்சிகளைத் தினமும் செய்தால் அல்லது யோகா செய்தால் தோள் வலி வருவது தவிர்க்கப்படும். அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்குதல், தாங்குதல், தள்ளுதல் போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது. கணினி போன்ற வேலைகளில் ஈடுபடும்போது தொடர்ந்து வேலை செய்வதைக் குறைத்துக்கொண்டு அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுத்தம் செய்வது, பந்து வீசி விளையாடுவது, தோளில் சுமை தூக்குவது… இப்படி அடிக்கடி செய்யும் வேலைகளை அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். சரியில்லாத பாதைகளிலும் சாலைகளிலும் இருசக்கர வாகனங்களில் அதிக தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
(தொடர்ந்து பேசுவோம்...)
(பேசுவோம்)
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.