கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

காது கேளாமை ஏன்?

கு.கணேசன்
24 Jul 2022, 5:00 am
0

சென்ற வாரம் காது தொடர்பான சில பிரச்சினைகளை அலசினோம். இந்த வாரம் இன்னும் சிலவற்றைப் பார்ப்போம். முக்கியமாக, காது கேளாமை ஏன்?

அதீத சத்தம்தான் காது கேளாமைக்கு முக்கியக் காரணம். பொதுவாக 80 டெசிபல் சத்தம் வரை கேட்பது ஆபத்தில்லை. 90 டெசிபல் சத்தத்தைத் தினமும் எட்டு மணிநேரத்துக்குக் கேட்கிறோம் என்றால், அது காதைக் கட்டாயம் பாதிக்கும். வெடிச் சத்தம் போன்ற 140 டெசிபல் சத்தத்தை சில விநாடிகள் கேட்டாலே காது பாதிக்கப்படுவது நிச்சயம். ஆகவே, விமான நிலையம், ஜெனரேட்டர் ஓடுகின்ற தொழிற்சாலைகள் போன்ற சத்தம் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம்.

இதனைத் தடுக்க காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம் அல்லது 'இயர் பிளக்' (Ear Plug) பொருத்திக்கொள்ளலாம். 'இயர் மஃப்' (Ear Muff) அணிந்து கொள்ளலாம். சிலருக்கு நடுக்காதிலுள்ள அங்கவடி எலும்பு பாதிக்கப்படும்போது (Otosclerosis) காது கேட்காது. இதனைக் குணப்படுத்த ‘ஸ்டெபிடெக்டமி’ (Stapedectomy) எனும் அறுவைச் சிகிச்சை உள்ளது. பழுதடைந்த எலும்பை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக உலோகத்தாலான எலும்பைப் பதித்துவிடுவார்கள். இதன் பலனால் காது கேட்கும். 

பிறவியிலேயே காது கேளாமை ஏன்?

பரம்பரைக் கோளாறு, நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்துகொள்வது, கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிடும் சில மாத்திரைகள், கர்ப்பிணிக்குத் தட்டமை வருவது போன்றவை குழந்தைக்குப் பிறவியிலேயே காது கேளாமையை ஏற்படுத்துகின்றன, கணவருக்கு ஆர்.ஹைச் பாசிட்டிவ் ரத்தமாகவும், மனைவிக்கு ஆர்.ஹைச் நெகட்டிவ் ரத்தமாகவும், குழந்தைக்கு ஆர்.ஹைச் பாசிட்டிவ் ரத்தமாகவும் இருந்தால் அந்தக் குழந்தைக்குப் பிறவிச் செவிடு உண்டாகலாம். அடுத்து, குழந்தைக்கு ஏற்படுகின்ற மூளைக்காய்ச்சல் இந்தப் பிரச்னையை உண்டுபண்ணும்.

என்ன பரிசோதனைகள்?

காது கேளாமையின் விகிதத்தை மதிப்பீடு செய்ய ‘ஆடியோகிராம்’ மற்றும் ‘இம்பெடன்ஸ் ஆடியோமெட்ரி’ (Impedance audiometry) ஆகிய அடிப்படை பரிசோதனைகள் உள்ளன. காது கேளாமையை இவற்றில் முழுமையாக மதிப்பீடு செய்ய முடியாதபோது, மின் அதிர்வுகளை ஏற்படுத்தி கண்டுபிடிக்கும் ‘பெரா’ (பிரெய்ன் ஸ்டெம் எவோக்டு ரெஸ்பான்ஸ் - Brain stem evoked response audiometry – BERA) என்று ஒரு பரிசோதனை செய்யப்படும். பாதிக்கப்பட்டவரை உறங்க வைத்து செய்யப்படும் இந்த நவீன பரிசோதனை மூலம் காது கேளாமையை மிகத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சைமுறைகளைத் தேர்வு செய்யமுடியும்.

ஹியரிங் எய்டு எப்போது அவசியம்?

காது கேளாமைக்கு அடிப்படை காரணங்கள் இரண்டு. ஒன்று, ஒலி அலைகள் காதுக்குள் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுவது. அடுத்து, ஒலி மின்னலைகள் மூளைக்குள் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுவது. முதலில் சொல்லப்பட்டது பெரும்பாலும் வெளிக்காது கோளாறால் வருகிறது. ஆகவே, இதை 'ஹியரிங் எய்டு' மூலம் சரிபடுத்திக்கொள்ளலாம். 'ஹியரிங் எய்டு' என்பது வெளி உலகச் சத்தங்களைப் பன்மடங்குப் பெரிதாக்கிக் காதுக்குள் அனுப்பும் ஒரு ஆம்ப்ளிஃபயர். கேட்கும் திறனை சற்றுக் கூடுதலாக்க இது உதவும்.

இரண்டாவதாக சொல்லப்பட்டது காக்ளியா அல்லது செவி நரம்பு செயல்படுவதில் ஏற்படும் சிக்கலால் வருவது. இதன் காரணமாக சிலருக்கு ஓரளவு காது கேட்காமல் போகலாம் அல்லது முழுவதும் காது கேட்காமல் போகலாம். பிறவியிலிருந்தே குழந்தைகளுக்கு ஓரளவு காது கேட்பதாக இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 'ஹியரிங் எய்டு'  கருவியைப் பொருத்திவிட வேண்டும். அப்படியும் காது கேட்கவில்லை என்றால், 'காக்ளியர் இம்பிளான்ட்' டைப் (Cochlear implant) பொருத்திக்கொள்ள வேண்டும்.

இலவசம் - காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை

பிறவிச் செவிடாக இருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு உள்காதில் உள்ள காக்ளியாவில்தான் குறைபாடு இருக்கும். இதை ஒரு வயதுக்குள் கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இவர்களுக்கு  'காக்ளியர் இம்பிளான்ட்' எனும் கருவியைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை மூலமும் அதைத் தொடர்ந்து பேச்சுப் பயிற்சி கொடுப்பதன் மூலமும் இதைச் சரி செய்துவிடலாம். தமிழக அரசு இதை இலவசமாகவே செய்துகொள்ள உதவுகிறது. முதுமை மற்றும் மூளைக்காய்ச்சல் காரணமாக செவி நரம்பு பாதிக்கப்பட்டு காது கேட்காது. இதைக் குணப்படுத்துவது சிறிது சிரமம்தான்.

காது இரைச்சல்

முன்பெல்லாம் முதியவர்களுக்கு ஏற்பட்ட காது இரைச்சல் (Tinnitus) கோளாறு இப்போது 30 வயது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. காரணம், ஒலி மாசு. இன்று பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்த இரைச்சல் காது இரைச்சலுக்கு வழிவிடுகிறது. தவிர, காதுக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைவதால், செவி நரம்பு பாதிப்பதால், செவிப்பறை மீது அழுக்குப்படிந்து அழுத்துவதால், காதில் அடிக்கடி சீழ்வடிவதால், தடுமம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை… இப்படி பல காரணங்களால் காதில் இரைச்சல் உண்டாகலாம். காரணம் தெரிந்து அதற்கான சிகிச்சை தரப்படும்போது இது குணமாகும்.

இதனால் சரியாகாதபோது ‘ஒலி மருத்துவம்’ (Sound Therapy) மூலம் சிகிச்சை தரப்படும், வாக்மேனின் இயர்போன்மாதிரி ‘மாஸ்கர்’ (Masker) எனும் கருவியைக் காதில் பொருத்திவிடுவார்கள். காது இரைச்சலுக்குச் சவால் விடுகிற மாதிரி அதைவிட அதிக டெசிபல் உள்ள ஒலியை இது உருவாக்கும். இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் இந்த ஒலி தடுத்துவிடும்.

தலைச்சுற்றல்

‘வெர்டிகோ’ (Vertigo) எனும் தலைச்சுற்றல், மயக்கம் வருவதற்கு காது ஒரு காரணமாகலாம். உள்காதில் உள்ள அரைவட்டக்குழல்களில் பிரச்னை ஏற்படும்போது தலைச்சுற்றல் ஏற்படும். முக்கியமாக, காதில் வைரஸ் தாக்குதல், ‘அக்வஸ்டிக் அரோமா’ (Acoustic aroma) எனும் கட்டிகள் போன்றவை தலைச்சுற்றலை ஏற்படுத்தும். இதற்கென உள்ள மருந்து, மாத்திரை மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். கண் பயிற்சிகள் மற்றும் கழுத்து எலும்புத் தசைகளுக்குப் பயிற்சி எடுத்துக்கொள்வதன் மூலம் இதை மீண்டும் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

மினியர் நோய்

காது இரைச்சல், காது கேளாமை, தலைச்சுற்றல் இந்த மூன்றும் சேர்ந்துகொண்டால் அது மினியர் நோய் (Meniere disease). தலைச்சுற்றலும் நடை தள்ளாட்டமும் நாள்கணக்கில் நீடிக்கலாம். உள்காதில் எண்டோலிம்ப் அதிகமாகச் சுரப்பதுதான் இதற்கு அடிப்படைக் காரணம். அந்த அதிகபட்சத் திரவத்தை வெளியில் எடுப்பது இதற்குரிய அறுவைச் சிகிச்சைமுறை. இதற்குக் கட்டுப்படவில்லை என்றால், செவி நரம்பை உணர்வு இழக்கச் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.

காது நலன் காக்க....

  1. அடிக்கடி சளி, ஜலதோஜம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
  2. பென்சில், பேனா, பட்ஸ், குச்சி என்று கண்ட கண்ட பொருள்களைவைத்துக் காதைக் குடையக் கூடாது. 
  3. குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் காதின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது. 
  4. காதுக்கும் மூக்கிற்கும் தொடர்பு உள்ளது. அடிக்கடி மூக்கைப் பலமாகச் சிந்தினால் காது கேட்பது குறையும். எனவே, மூக்கைப் பலமாகச் சிந்தக் கூடாது. 
  5. காதுக்குள் காய்ச்சிய எண்ணெயை ஊற்றக் கூடாது. 
  6. சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 
  7. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும். 
  8. சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துகொள்ள வேண்டும். 
  9. தொடர்ந்து செல்போனில் பேச நேரம்போது ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது 
  10. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். 
  11. தினமும் தியானம் செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும். 
  12. மதுவும் புகைபிடிப்பதும் காதின் நலனைப் பாதிக்கும். எனவே, இந்த இரண்டுக்கும் விடைகொடுங்கள்.

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1






உக்ரைன் ராணுவம்தூக்கமின்மைகாங்கிரஸ் செயற்குழுவிஹாங் ஜும்லெபவாரியாஉயர்நிலைக் குழுமோடி அரசுமண்டல் ஆணையம்எக்கியார்குப்பம்ஒளிவீசும் அறிவுப் பாரம்பரியம்லால்தன்வாலாமரிவாலாபெரிய கும்பல் தலைவன்அருஞ்சொல் டி.எம்.கிருஷ்ணாசம்ஸ்கிருத மந்திரம்பிரபலம்தண்டிக்கப்படாத செயல்கள்சீக்கியர்கள் படுகொலைஅரசியல்வாதிசாதி அழிந்துவிடுமா?எதிர்க் குரல்கள்அஸ்வின் சொல்ல விரும்புவது என்ன?மருத்துவர்கள்லெபனான்டி.ஆர்.நாகராஜ்ரத்த அழுத்தம்ஜன தர்ஷன்விலைவாசி அதிகம்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிமானம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!