கட்டுரை 6 நிமிட வாசிப்பு

கிரிப்டோ கரன்சி: இந்தியா என்ன செய்ய வேண்டும்?

வ.ரங்காசாரி
30 Nov 2021, 5:00 am
0

இந்திய அரசு கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை வரைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் முதலீட்டு வடிவங்களில் ஒன்றாகவும் இது இன்று அணுகப்படுகிறது. இத்தகைய சூழலில், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்று அறிந்துகொள்வது அவசியம் ஆகிறது. மாணவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இதை அறிந்துகொள்ளும் வகையில், கிரிப்டோ கரன்சி தொடர்பான பலதரப்புப் பார்வைகளையும் ‘அருஞ்சொல்’ இந்த வாரத்தில் வெளியிடுகிறது. அதன் ஒரு பகுதியே இந்தக் கட்டுரை!  

ர்த்தக உலகில் இன்று அதிகம் அடிபடும் சொல் கிரிப்டோ கரன்சி. இதையே பிட் காயின் என்று பலர் அழைத்தாலும் பிட் காயின் என்பது கிரிப்டோ கரன்சியில் ஒன்று. இது மெய்நிகர் எண்ம செலாவணி. இதை எந்த அரசும் அமைப்பும் வெளியிடவும் இல்லை, இதன் மதிப்புக்கோ, லாப–நஷ்டத்துக்கோ யாரும் பொறுப்பேற்கும் தன்மையும் இல்லை. ஆனாலும் தொழில்-வர்த்தகத் துறையில் இதன் மீது அசாத்திய நம்பகத்தன்மை இருக்கிறது. எனவே இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தேவருகிறது. இது பணமும் அல்ல, பணம் செலுத்தப்படுவதற்கான டோக்கனும் அல்ல என்றாலும் இதில் ஏன் முதலீடு செய்கிறார்கள், இது எப்படி ஆதரவைப் பெற்று வளர்கிறது என்ற எண்ணம் வரலாம்.

இந்த எண்ம செலாவணியை பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் வரவு வைக்கிறார்கள். இது கைமாறிக்கொண்டே சென்றாலும் கணினி இதன் ஒவ்வொரு பரிமாற்றத்தையும் மதிப்புக் கூட்டலையும் துல்லியமாக கணக்கிட்டுக்கொண்டே வருகிறது. இதை ஏன் நாடுகிறார்கள் என்றால் இதன் மூலம் ஒரு நிறுவனம் அல்லது தனி நபர், இன்னொரு நிறுவனம் அல்லது தனி நபருக்குப் பணம் செலுத்த அதிகம் செலவாவதில்லை. விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவதில்லை. அமெரிக்க டாலர் அல்லது அது போன்ற பெருவாரியான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் செலாவணியைப் போலக்கூட இதன் மதிப்பை எந்த நாடும் மத்திய வங்கியும் தீர்மானிப்பதில்லை. இதன் மதிப்பு அதற்குக் கிடைக்கும் முதலீடு மற்றும் அது ஈட்டும் வருவாய் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மெய்நிகர் செலாவணியின் விலை உயர்ந்துகொண்டே போகும் என்பது நிச்சயமும் இல்லை. இதை செலாவணியாக இதன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தினாலும் இதுவே சொத்தாகவும் கருதப்படுகிறது.

உலக நாடுகளின் எதிர்கொள்ளல்

பெரும் பணக்காரர்கள் தங்களுடைய  வருவாயை ரொக்கமாகவும் தங்க- வெள்ளி நகைகளாகவோ கட்டிகளாகவோ, நிறுவனங்களின் பங்கு பத்திரங்களாகவோ, கடன் பத்திரங்களாகவோ முதலீடு செய்து வைத்துக்கொள்வார்கள். கிரிப்டோ கரன்சியையும் அப்படி பல நாட்டு அரசுகள் கருதுகின்றன. இதன் பரிமாற்றத்தின்போது முதலீட்டாளருக்குக் கிடைக்கும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கின்றனர். பரிமாற்றத்துக்கே வரி விதிக்கும் திட்டமும் பல நாடுகளுக்கு இருக்கிறது.

இந்த கிரிப்டோ கரன்சியின் மொத்த உலக மதிப்பு 2021 நவம்பரில் 2.4 லட்சம் கோடி டாலர்களுக்கும் மேல். அதில் ‘பிட்காயின்’ பங்களிப்பு மட்டும் சுமார் 42%, அதாவது 1.2 லட்சம் கோடி டாலர்கள். ‘பிட் காயின்’  போன்றே ‘லைட்காயின்’, ‘எதீரியம்’, ‘கார்டானோ’, ‘இஓஎஸ்’ போன்றவையும் புழங்கப்படுகின்றன. சடோஷி நகமோடோ என்ற புனை பெயரில் ஒரு தனி நபரோ அல்லது குழுவோ 2009-ல் வர்த்தகப் பரிமாற்றத்துக்குக் கொண்டுவந்தது ‘பிட்காயின்’. இப்போது 188 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘பிட்காயின்’கள் புழக்கத்தில் உள்ளன. இதன் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேவருகிறது.

கவர்ச்சிக்கு என்ன காரணம்?

டாலர், யென் அல்லது ரூபாய் போன்ற செலாவணிகள் விலைவாசி உயர்வால் மதிப்பில் மாறுதல்களை அடையும். கிரிப்டோ கரன்சிகளுக்கு அந்தப் பாதிப்பு இல்லை. ஆனால், இவற்றின் முதலீடு மற்றும் சுழற்சி காரணமாக இதன் மதிப்பு உயர்கிறது. எனவே இதை எந்த வணிகப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தாமல் அன்றைக்கு ஒரு பிட் காயின் என்ன விலை என்று பார்த்து முதலீடு செய்துவிட்டு சில நாள்களுக்கு அல்லது வாரங்களுக்குப் பிறகு அதன் மதிப்பு உயரும் போது விற்றுவிடுவோர்களும் உண்டு. கிரிப்டோ கரன்சி மீதான கவர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

பிளாக் செயின் தொழில்நுட்பம் என்பது எளிதில் மற்றவர்களால் உள்புக முடியாதது, எனவே, இந்த கரன்சிகளின் மதிப்பை யாராலும் செயற்கையாக கூட்டவோ, குறைக்கவோ முடியாது என்று இதன் சிறப்பைக் கூறுகிறார்கள். ஆனால், இதில் முதலீடு செய்கிறவர்கள் இதில் கிடைக்கும் வருவாயைத் தங்களுடைய கணக்கில் செலுத்துவதற்காக முகவரியைத் தருவார்கள். அதில் விஷமம் செய்ய வாய்ப்புகள் நிறைய. அது போக கிரிப்டோ கரன்சிகள் அனைத்துமே நேர்மையாகவும் சரியாகவும் கணக்கு வைக்கப்படுகிறதா என்பதும் சந்தேகம். எந்த ஒரு தொழிலிலும் எத்தர்கள் நுழைவது வழக்கம். சில கிரிப்டோ கரன்சிகள் இப்படி பல முதலீட்டாளர்களை இழப்புக்கு ஆளாக்கிவிட்டன. இந்த முதலீட்டாளர்கள் யாரிடமும் புகார் செய்யவும் முடியாது. திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான்.

இந்தக் காரணங்களாலேயே இந்திய அரசு கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்த சட்டத்தை உருவாக்குகிறது. டிஜிட்டல் செலாவணியைப் பயன்படுத்த ஆர்வம் பெருகிவருவதால் ரிசர்வ் வங்கி மூலம் புதிய செலாவணியைக் கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல், கள்ளத்தனமாக ஆயுத விற்பனை போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். எனவே அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.

ஏழைகளும் நடுத்தர மக்களும் அரசு வெளியிடும் செலாவணியை முழு விசுவாசத்தோடு பயன்படுத்தும்போது, பெரும் பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்துவது இரட்டைச் செலாவணி முறையைக் கடைப்பிடிப்பதற்கு ஒப்பாகிவிடும். இது அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயைத் தடுப்பதுடன், அரசின் திட்டங்களுக்கும் போதிய நிதி கிடைக்காமல் வற்றச் செய்துவிடும். இப்போதே அரசின் வருமான வரிச்சட்டங்களும் நிர்வாக அமைப்பும் வருவாயை மறைக்க முடியாத மாதச் சம்பளக்காரர்களை மட்டுமே கசக்கிப் பிழிகின்றன. கோடீஸ்வரர்கள்கூட, நிரந்தர வேலையில்லை என்று கூறிவிட்டு வீடு, வாகனம் என்று வாங்கிக் குவிக்கிறார்கள்.

சமீப காலமாக கிரிப்டோ கரன்சியில் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களும் ஆர்வம் காட்டுவது அதிகரித்ததாலும் அவர்களுடைய திடீர் பண வரவு மற்றவர்களுக்கு வியப்பை ஊட்டியதாலும், உலக அளவில் அரசுகளின் கண்காணிப்புக்குள் இருந்த பரிமாற்றங்களின் அளவு திடீரென குறைந்ததாலும், கண்ணுக்குத் தெரியாமல் எதுவோ எங்கோ போகிறதே என்ற அனுமானத்தின்பேரில் ஆராய்ந்ததில்தான் கிரிப்டோ கரன்சிகள் இணையான பொருளாதார சாம்ராஜ்யத்தை நடத்துவது தெரியவந்துள்ளது. இதை சீனா உள்பட சில நாடுகள் தடை செய்துள்ளன. பல நாடுகள் தடையே கிடையாது என்று அறிவித்துவிட்டன. ஏனைய நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகிவருகின்றன.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


1






நெறியாளர்பாமணியாறுஎழுத்தாளர்புஷ்பக விமானம்ஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிராஜஸ்தான் முன்னேறுகிறதுகோர்பசெவின் கல்லறை வாசகம்ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்2024 மக்களவைத் தேர்தல்அணு அச்சுறுத்தலுக்குத் தீர்வுராமச்சந்திர குஹா நரேந்திர மோடிசமூகப் பாதுகாப்புஆன்மிகம்வங்கித் துறைதமிழ் விக்கிமூன்று தரப்புகள்ராகுலின் பாதைஉடல் மொழிசோஷலிஸ அரசியல்சூரத் நகர்அண்ணாவின் மொழிக் கொள்கைகோட்பாடுகள்உயர்கல்வித் துறைதொல்லை தரும் தோள் வலி!sub nationalism in tamilபிரதிநிதித்துவம்மதுரை விமான நிலையம்மொழித் திறன்தாங்கினிக்காஎரிபொருள் வரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!