கட்டுரை 4 நிமிட வாசிப்பு

கிரிப்டோ கரன்சி: உலக நாடுகள் எப்படி அணுகுகின்றன?

டி.வி.பரத்வாஜ்
02 Dec 2021, 5:00 am
0

ந்திய அரசு கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. டிஜிட்டல் செலாவணியைப் பயன்படுத்த ஆர்வம் பெருகிவருவதால் ரிசர்வ் வங்கி மூலம் புதிய செலாவணியைக் கொண்டுவரவும், ஏனைய கிரிப்டோ கரன்சிகளைத் தடைசெய்யவும் அரசு முயல்கிறது. சரி, உலகின் முக்கியமான நாடுகள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுகின்றன?

அமெரிக்காவும் சீனாவும்

அமெரிக்காவில் வழக்கம்போலவே வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு கோணங்களில் கிரிப்டோ கரன்சியை அணுகுகின்றன. கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமான செலாவணி அல்ல என்று அமெரிக்க அரசு (ஃபெடரல் அரசு) கருதுகிறது. ஆனால், சில மாநிலங்கள் இதை மெய்நிகர் செலாவணியாகக் கருதுகின்றன.

தடை செய்திருக்கிறது சீனா

இஸ்ரேல் இதை நிதிச் சொத்தாகக் கருதுகிறது. கிரிப்டோ கரன்சியில் ஒருவர் முதலீடு செய்த தொகையைச் சிறிது காலத்துக்குப் பிறகு திரும்பப் பெறும்போது அதன் மதிப்பு கூடியிருந்தால் அதில் 25% மூலதன ஆதாய வரியாகச் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறது.

ஜெர்மனியில் இதை மெய்நிகர் செலாவணியாகக் கருதி, கணக்கில் சேர்க்கப்பட வேண்டிய அலகாக ஏற்றுள்ளனர். எனவே இது நிதி சார்ந்த செலாவணிக் கருவியாகக் கருதப்படுகிறது. பிட் காயின் என்பது கிரிப்டோ டோக்கன் மட்டுமே அதுவே செலாவணியாகிவிடாது என்கிறது ஜெர்மனி. பிரிட்டன் இதை செலாவணி மதிப்புள்ள சொத்தாகவோ, பணமாகவோ கருதவில்லை. தனித்துவமான அடையாளம் கொண்டது கிரிப்டோ; முதலீட்டுச் செயல்களுக்கான வடிவமாகவோ, பணம் செலுத்தும் நடைமுறையாகவோ இதை நேரடியாக ஒப்பிட்டுவிட முடியாது என்கிறது பிரிட்டன்.

எல் சால்வடார் நாடு இதை வரவேற்று, சட்டப்பூர்வமாக அனுமதிக்கத்தக்க செலாவணியாக அங்கீகரித்துள்ளது. சீனமோ இதைத் தடுத்ததுடன் அல்லாமல் இந்த சேவையை அளிப்பவர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கனடா இதை, வர்த்தக நடவடிக்கைகளின்போது பணம்செலுத்துவதற்குப் பயன்படுத்தலாம்; ஆனால் இது செலாவணி அல்ல என்று கட்டுப்பாட்டில் கூறியிருக்கிறது. இதை ஒரு பண்டமாகவே அது ஏற்றுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் அதிகார வரம்பிலும் இதைச் சேர்த்திருக்கிறது.

தாய்லாந்தில் டிஜிட்டல் சொத்துகளைக் கையாளும் நிறுவனங்கள் அரசிடம் உரிமத்துக்கு விண்ணப்பித்துவிட்டு பிறகு இவற்றைக் கையாள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கிரிப்டோ கரன்சி மூலம் முறையற்ற செயல் எதிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அரசும் அவற்றின் பரிமாற்றத்தைக் கண்காணிக்கும். அன்னியச் செலாவணி மோசடி, பணமாற்று நடவடிக்கை ஆகியவற்றுக்கு கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்திவிடாமலிருக்க தொடர் கண்காணிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிரிப்டோ கரன்சிகளைக் கையாளும் பரிவர்த்தனை அமைப்பில் 51% பங்குகளை அரசின் வங்கி வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடுகள் கிரிப்டோ கரன்சியை சட்டபூர்வமான செலாவணியாக ஏற்காவிட்டாலும், வணிகப் பயன்பாட்டில் இதற்குள்ள முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றன. இந்தியாவைப் போல வேறு சில நாடுகளும் தங்களுடைய மத்திய வங்கி மூலம் புதிதாக டிஜிட்டல் கரன்சியையும் அறிமுகப்படுத்த முடிவுசெய்துள்ளன. பல நாடுகள், கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கின்றன.

இன்னும் சில நாடுகளிலோ கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.  இதைச் செலாவணியாகக் கருதுவதா, உடைமையாளர்களின் சொத்தாகக் கருதுவதா என்கிற சந்தேகமும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கிறது. அடுத்து, இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதும் புரியவில்லை. அனைத்து நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து இதைப் பற்றி இதுவரை விவாதிக்கவில்லை. எனவே எதிர் நடவடிக்கைகள், அந்தந்த நாடுகளின் நிலைமைக்கேற்ப இருக்கின்றன. இதுதான் இந்த விவகாரத்தை அணுகுவதில் நிலவும் பெரும் பிரச்சினை.

இந்தியாவின் திட்டம் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் (எண்ம) வடிவில் புதிய செலாவணியை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அரசே வெளியிடுவதால் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் பக்கபலமும் இருக்கும். இதுவும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலமாகவே செயல்படும். உரியவர்களுக்கு அவரவர் வேலட்டுகளுக்கே (வங்கிக் கணக்கு முகவரிக்கு) தொகை செலுத்தப்படும். இதன் பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்கும்.

கிரிப்டோ கரன்சிகளைப் போல இல்லாமல் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இருந்தாலும், சந்தையில் இதை அதிகம் பயன்படுத்துவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும். கிரிப்டோ கரன்சி விரும்பப்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அதன் ரகசியத்தன்மை. முதலீடு அதிகமானால் உயரும் அதன் மதிப்பு, அதனால் கிடைக்கும் லாபம் போன்றவற்றுக்காகவும் அது விரும்பப்படுகிறது.

இந்தியா அறிமுகப்படுத்தவுள்ள ‘சிபிடிசி’-யில் அது சாத்தியமாகுமா என்று பார்க்க வேண்டும்.  அதேவேளையில், ‘சிபிடிசி’ மூலம் உள்நாட்டில் உள்ள கணக்குக்கு மட்டுமல்ல; வெளிநாட்டில் உள்ள கணக்குக்கும் நேரடியாகப் பணம் செலுத்திவிட முடியும். பல நாடுகள் இதை முன்னோட்டத் திட்டமாக அறிமுகம் செய்து சோதித்துப்பார்க்கின்றன!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பள்ளிக்கல்வித் துறைமகுடேசுவரன் கட்டுரைஇந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத சிபிஎஸ்இகுஜராத்தி வணிகர்கள்சாதிப் பெயர்ஒருங்கிணைப்பாளர்கள்அராத்து கட்டுரைகாவிஇண்டியா கூட்டணிஊடக அதிபர்கள்வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைஇந்தித் திணிப்புசாதி அரசியல்திருநாவுக்கரசர் சமஸ் பேட்டிவிருந்துவிவேகானந்தர்வால் நட்சத்திரம்தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைவரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!ரவிக்குமார் பேட்டிவேலை மாற்றம்தி வயர்கறுப்பர்–வெள்ளையர்படைப்புச் சுதந்திரம்விவேகானந்தரின் சிந்தனைகளில் வர்ணமும்சா.விஜயகுமார் கட்டுரை விஜயும் ஒன்றா?பொதுப் பட்டியல்ஹெப்பாடிக் என்கெபலோபதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!