கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

சட்டபூர்வமானதா கிரிப்டோ கரன்சி?

சி.பி.கிருஷ்ணன்
25 Mar 2022, 5:00 am
0

சில வருடங்களாகவே கிரிப்டோ கரன்சியைப் பற்றி ஊடகங்களில் காரசாரமான விவாதம் நடைபெற்றுவருகிறது.  கிரிப்டோ கரன்சியை ஆதரிப்பவர்கள் "இதில் முதலீடுசெய்வது மிகவும் எளிதானது. குறைந்தபட்சம் நூறு ரூபாய்கூட நீங்கள் முதலீடுசெய்யலாம். இது பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயக்கப்படுகிறது. இது ஏராளமான கணினிகளில் பாதுகாப்பாக வைக்கப்படும் தொழில்நுட்பம். எனவே இதன்மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் மிகவும் பாதுகாப்பானவை. இதைப் பயன்படுத்தி பல சேவைகளைப் பெறலாம். இதற்கு நாடு என்ற எல்லையே கிடையாது" எனப் பல வாதங்களை முன்வைக்கிறார்கள். 

இரண்டு கோடி முதலீட்டாளர்கள்

கிரிப்டோ கரன்சியை முதன்முதலாக 2009இல் சடோஷி நகமோடோ என்ற புனைப்பெயரைக் கொண்டவர்தான் உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி நபர்கள் வரை கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அவர்களின் மொத்த முதலீடு சுமார் 40,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் இந்தத் தொழிலைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் இதில் எத்தனைப் பேர் முதலீடுசெய்துள்ளார்கள் என்றும், அவர்கள் எவ்வளவு தொகை முதலீடுசெய்திருக்கிறார்கள் என்றும் அதிகாரபூர்வமாக யாருக்கும் தெரியாது.

வெளிப்படைத்தன்மை கிடையாது

கிரிப்டோ கரன்சிக்கு எந்தவிதமான எழுத்துபூர்வமான விதிகளும் கிடையாது. இது சம்பந்தமான அனைத்தும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அவற்றில் துளியும் வெளிப்படைத்தன்மை கிடையாது. அவற்றின் பரிவர்த்தனைகளை எந்தத் தணிக்கைக்கும் உட்படுத்த முடியாது. காலம்காலமாக பயன்படுத்தப்படும் டாலர், யூரோ போன்று கிரிப்டோ கரன்சியை எந்த மத்திய வங்கியும் வெளியிடுவதும் இல்லை; கண்காணிப்பதும் இல்லை. இது எந்த அரசாலும், எந்த நிறுவனத்தாலும், எந்த வங்கியாலும் நிர்வகிக்கப்படுவதும் இல்லை. கிரிப்டோகரன்சியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிட்காயின் என்பது மிகவும் பிரபலமான ஒரு வடிவமாகும். இது உலகம் முழுக்க ஏராளமான நாடுகளில் இணையம் மூலமாக பயன்படுத்தப்படுகிறது.

ஜோசப் ஸ்டிக்லீஸ் என்ன கூறுகிறார்?

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லீஸ் "கிரிப்டோ கரன்ஸியின் உதவியுடன் கிரிமினல் பேர்வழிகள் மோசடியாக பணம் கடத்துவதை அனைத்து நாடுகளும் தடுக்க முற்பட்டால், பிட்காயின் தானாக விழுந்துவிடும். நாம் வெளிப்படைத் தன்மையுள்ள வங்கி அமைப்பை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கும்போது, ரகசியத்தன்மையுடன் இயங்கும் கொடுக்கல் வாங்கல் நடைமுறையை அனுமதிக்க முடியாது. நீங்கள் பிட்காயின் போன்ற ஓட்டையைத் திறந்துவிட்டீர்களானால் அனைத்து இழிவான நடவடிக்கைகளும் அந்த ஓட்டையின் வழியாக தப்பித்துக்கொள்ளும். இதை எந்த அரசாங்கமும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் கூறினார்.

உலகில் உள்ள பல பொருளாதார வல்லுனர்கள் இந்த மெய்நிகர் நாணயத்தின் (virtual currency) மோசமான விளைவுகளைப் பற்றி தெளிவாகக் கூறியுள்ளனர். பல நாடுகளின் அரசாங்கங்களும் இந்த மெய்நிகர் நாணயத்தால் உண்டாகும் தீய விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளன.  இந்த மெய்நிகர் நாணயத்தை ஹவாலா பரிவர்த்தனைக்கு, கருப்பு பணத்தை உருவாக்குவதற்கு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு, போதைப்பொருள் விற்பனைக்கு, மனித கடத்தலுக்கு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு, சட்டவிரோத ஆயுத விற்பனைக்கு என்று பல வகைகளில் பயன்படுத்த முடியும்.  இந்த மெய்நிகர் நாணயம் மூலமாக ஏராளமான மோசடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 'எர்ன்ஸ்ட் அண்ட் யங்க்' நிறுவனத்தின் ஆய்வின் படி 3.7 பில்லியன் டாலரில் 400 மில்லியன் டாலர் அளவிற்குத் திருடப்பட்டுவிட்டது.

ரிசர்வ் வங்கியின் தடை

ரிசர்வ் வங்கி, 2018 ஏப்ரல் 6 அன்று கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்குத் தடை விதித்தது. "2013 டிசம்பர் 24, 2017 பிப்ரவரி 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கான அறிவிப்பின் மூலமாக இந்த பிட்காயின் உட்பட மெய்நிகர் நாணயத்தைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உடனடியாக இந்த மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த நிறுவனமும் மேற்கொள்ளாது என ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது. மெய்நிகர் நாணயத்தின் கணக்கு பராமரிப்பது, பதிவுசெய்வது, வியாபாரம்செய்வது, பரிமாற்றம்செய்வது, அதற்கு எதிராக கடன் கொடுப்பது, அதனை அடமானச் சொத்தாக ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட எல்லாம் தடைசெய்யப்படுகின்றன" என்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கூறியது. சாராம்சத்தில் இதனுடைய விளைவு கிரிப்டோ கரன்சி தடைசெய்யப்படுகிறது என்பதுதான்.

ஒன்றிய அரசு 2018ஆம் ஆண்டு இந்த மெய்நிகர் நாணயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு மசோதாவை இயற்றியது. 2019ஆம் ஆண்டு இந்த மெய்நிகர் நாணயங்களை முழுவதுமாக தடைசெய்ய மற்றொரு மசோதாவை இயற்றியது. இரண்டுமே மசோதா அளவிலேயே நின்றுவிட்டன.

ரிசர்வ் வங்கித் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து

உச்ச நீதிமன்றம், 2020 மார்ச் 4ஆம் தேதி கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையைத் தடைசெய்யும் ரிசர்வ் வங்கியின் 2018 ஏப்ரல் 6ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையை ரத்துசெய்தது.  ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாட்டினை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.  ரிசர்வ் வங்கி ஒருபுறம் "கிரிப்டோ கரன்சி தொடர்புள்ள அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்படுகின்றன" என்கிறது; அதேநேரம் "கிரிப்டோ கரன்சியைத் தடைசெய்யவில்லை" என்று கூறுகிறது. "கடந்த ஐந்து வருடங்களிலோ அல்லது அதற்கு மேலாகவோ மெய்நிகர் நாணய பரிவர்த்தனை மையங்களின் நடவடிக்கைகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று ரிசர்வ் வங்கி இதுவரை கண்டுபிடிக்கவே இல்லை.  ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு வங்கிகள், அட்டவணை வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவை நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வாறு மெய்நிகர் நாணய பரிவர்த்தனை மையங்களுடன் நடவடிக்கைகள் மேற்கொள்வதால் பாதிக்கப்பட்டன அல்லது இழப்பைச் சந்தித்தன என்று இதுவரை எந்த விவரமும் அளிக்கவில்லை" என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

ஒன்றிய அரசு 2021 நவம்பர் மாதம் மற்றொரு மசோதாவை முன்வைத்தது.  அதற்கு "கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் நாணயம் ஒழுங்குமுறை மசோதா 2021" என்று பெயர். "ரிசர்வ் வங்கி மூலமாக அதிகாரபூர்வமான டிஜிட்டல் நாணயம் ஒன்றை உருவாக்குவதற்கான அடிப்படையை அமைப்பது; மேலும் இந்தியாவில் உள்ள எல்லா தனியார் கிரிப்டோ கரன்சி நடவடிக்கைகளையும் தடைசெய்வது; கிரிப்டோ கரன்சியின் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்களைப் பயன்படுத்தும் வகையில் சிலவற்றிற்கு மட்டும் விலக்கு அளிப்பது" என்பது இந்த மசோதாவின் நோக்கம். ஆனால் இந்த மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

நிதி அமைச்சரின் அறிவிப்பு

2022 பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை உரையில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார்:

  1. மெய்நிகர் டிஜிட்டல் சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகள் மிக அதிக அளவில் நடைபெற்றுவருகின்றன. எனவே மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் மூலமாக பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
  2. மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயம் ஒன்றை அறிமுகப்படுத்துவது என்பது டிஜிட்டல் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை உருவாக்கும். டிஜிட்டல் நாணயம் என்பது அதிக திறனுள்ள, குறைந்த செலவிலான நாணய நிர்வாகத்திற்கு வழிவகுக்கும். எனவே 2022-23ஆம் நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி மூலமாக டிஜிட்டல் ரூபாய் ஒன்றைப் பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அறிமுகப்படுத்தப்போகிறோம்.

சட்டப்பூர்வமானதா அல்லது சட்ட விரோதமானதா?

ஒன்றிய நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புகள் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதில் அடிப்படையான கேள்வி, கிரிப்டோ கரன்சி என்பது சட்டப்பூர்வமானதா? அல்லது சட்ட விரோதமானதா? ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, இன்றைய தேதி வரை ஒன்றிய அரசாங்கமோ அல்லது ரிசர்வ் வங்கியோ கிரிப்டோ கரன்சியை எப்படி அணுகுவது என்பதுபற்றி ஸ்தூலமான நிலைபாட்டை எடுக்கவில்லை. மெய்நிகர் நாணயங்களைப் பற்றிய ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நிலைபாடு மிகுந்த குழப்பங்களையும், முரண்பாடுகளையும் கொண்டதாக உள்ளது.

ஒருபுறம் கிரிப்டோ கரன்சி பரிமாற்றம்செய்யும் தனியார் பரிவர்த்தனை மையங்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இதுபற்றி ஒன்றிய அரசிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லை. அதேபோல் எவ்வளவு பேர் இந்த மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்துள்ளார்கள் என்ற விவரமும் ஒன்றிய அரசிடம் இல்லை. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ராஜ்ய சபாவில் 2021 ஜூலை 27ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் "எத்தனை பரிவர்த்தனை மையங்கள் இந்தியாவில் உள்ளன; எத்தனை பேர் இதில் முதலீடு செய்துள்ளார்கள் என்ற விவரத்தை ஒன்றிய அரசு சேகரிக்கவில்லை" என்று கூறியுள்ளார் (ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் 28 ஜூலை 2021).

இந்த பின்னணியில் மெய்நிகர் டிஜிட்டல் சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்திற்கு ஒன்றிய அரசு 30 சதவீதம் வரி விதிக்கப்போவதாக அறிவிக்கிறது. பரிவர்த்தனை மையங்கள் பற்றியோ, முதலீடுசெய்பவர்கள் பற்றியோ எந்த விவரமும் இல்லாத பின்னணியில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்பாகத்தானே இருக்கும்? மேலும் சமீபத்திய குளிர்கால கூட்டத்தொடர் வரை மெய்நிகர் நாணயத்தைத் தடைசெய்ய வேண்டும் என ஒன்றிய அரசு எடுத்த நிலைபாட்டை நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு தலைகீழாக மாற்றி அதனைச் சட்டபூர்வமாக்க வழிவகுக்காதா?

மேலும், தனியார் பயன்படுத்தும் அதே பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியால் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவிக்கிறது. தனியார் பயன்படுத்தும் பிளாக்செயின் தொழில்நுட்பம் மோசடியாக பணத்தைத் திருடுவதற்கு வழிவகுக்கிறது என்பது நிரூபணமாகி உள்ளது. அப்படி இருக்கும்போது அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் வெளியிடும் டிஜிட்டல் ரூபாய் மட்டும் எப்படி பாதுகாப்பான நாணயமாக இருக்க முடியும்?

சீன அரசின் தடை

சென்ற ஆண்டு சீன அரசாங்கம் கிரிப்டோ கரன்சியைத் தடைசெய்துவிட்டது. இதனைப் படிப்படியாகசெய்தது. முதலில் சென்ற ஆண்டு மே மாதம் கிரிப்டோ கரன்சியை எந்த நிதி நிறுவனமும் பரிவர்த்தனைசெய்யக் கூடாது என தடை விதித்தது. பின்னர் ஜூன் மாதம் உள் நாட்டில் இருக்கக்கூடிய கிரிப்டோ உருவாக்கலைத் தடைசெய்தது. இறுதியாக செப்டம்பர் மாதம் கிரிப்டோ கரன்சியை முழுமையாகத் தடைசெய்துவிட்டது. கிரிப்டோ கரன்சிக்கு மாற்றாக சீனாவின் பீப்பிள்ஸ் வங்கி 'டிஜிட்டல் யுவான்' என்ற பெயரில் ஒரு மெய்நிகர் நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவுடன் மேலும் 8 நாடுகளும் தனியார் மெய்நிகர் நாணயங்களைத் தடைசெய்துள்ளன. அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, ஈராக், மொரோக்கோ, நேபாளம், கட்டார் மற்றும் துனிசியா ஆகிய நாடுகள் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மையங்களையும் அதற்கான அனைத்து சேவைகளையும் தடைசெய்துள்ளன.

கிரிப்டோவைத் தடைசெய்ய வேண்டும் – ரிசர்வ் வங்கி உதவி கவர்னர்

"நமது நாட்டில் கிரிப்டோ கரன்சியை முழுமையாக தடைசெய்ய வேண்டும்" என ரிசர்வ் வங்கியின் உதவி கவர்னர் டி.ரபிசங்கர் கூறியுள்ளார். "கிரிப்டோ கரன்சியை நாணயம், சொத்து, பண்டம் என எந்த வரையறைக்குள்ளும் கொண்டுவர முடியாது. அதற்கென ஒரு மதிப்பும் இல்லை. அது வெளிப்படையாக முதலீட்டாளர்களை ஏமாற்றக்கூடிய பொன்சி திட்டத்தைப் போல உள்ளது அல்லது அதைவிட மோசமாக உள்ளது‌. இந்த வருடம் பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய வங்கிகள் சங்கம் ஏற்பாடுசெய்திருந்த ஒரு கருத்தரங்கில் பேசும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார். "அரசுகளின் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே கிரிப்டோ தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  எல்லா ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அமைப்புகளையும் புறந்தள்ளிவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கிரிப்டோ கரன்சி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஓர் நாட்டின் நாணய அமைப்பை, நிதி அதிகாரத்தை, வங்கி அமைப்பை மேலும் பொதுவாக ஓர் அரசின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் திறனை உடைக்கவல்லது" என குறிப்பிட்டார். மேலும், "2021இல் கிரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தி நடைபெற்ற குற்றத்தின் மூலமாக 14 பில்லியன் டாலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளது" என 2022 ஜனவரி 6 தேதி ‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகையை மேற்கோள் காட்டினார்.

தடைசெய்வதே தீர்வு

ஒன்றிய அரசாங்கத்திற்கு மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளன. ஆனால், மெய்நிகர் நாணயங்களை ஒன்றிய பாஜக அரசு கையாளும் விதம் மக்களிடையே எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. எனவே ஒன்றிய அரசு மெய்நிகர் நாணயங்கள் மூலமாக உருவாகும் சொத்துக்கு வரி விதிப்பதற்கு பதிலாக, எல்லா தனியார் மெய்நிகர் நாணயங்களையும் உடனடியாக தடைசெய்யவேண்டிய தருணம் இது. மேலும் தனியார் மெய்நிகர் நாணயங்களுக்கு மாற்றாக, ரிசர்வ் வங்கி மூலமாகப் பாதுகாப்பான மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாயை ஒன்றிய அரசு வெளியிடலாம்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சி.பி.கிருஷ்ணன்

சிபி கிருஷ்ணன், இணைச் செயலாளர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com



1





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

காதல்மோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்வரவேற்புதமிழிசை சௌந்தரராஜன்பாரசீக மொழிஹிப்னாடிஸம்கசாபைத் தூக்கிலிடக் கூடாதுகுறைந்தபட்ச உத்தரவாத வருமானச் சட்டம்நயன்தாரா சாகல்குஜராத்திமத நல்லிணக்கம்வாசிப்பு அனுபவம்பட்டாபிராமன் கட்டுரைமார்க்ஸ் ஜிகாத்நான்காவது படலம்குருத்தோலைஇளைஞர் திமுகஅபிராமி அம்மைப் பதிகம்திருக்குமரன் கணேசன் புத்தகம்ஊடகர்மத்திய மாநில உறவுமிஸோ தேசிய முன்னணிபனிப்பொழிவுராஷ்ட்ரீய ஜனதா தளம்உண்மையைப் பார்க்க விரும்பாத நிதியமைச்சகம்சுகாதாரம்தர்ம சாஸ்திரங்கள்எஸ். அப்துல் மஜீத்வெற்றியின் சூத்திரம்சமூகவியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!