கோணங்கள், ஏன் எதற்கு எப்படி? 3 நிமிட வாசிப்பு

யார் இந்த நிஹாங்குகள்?

டி.வி.பரத்வாஜ்
22 Oct 2021, 5:00 am
1

அண்மையில் சிங்கு எல்லைக்கு அருகில், பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் ஒற்றைக் கையும் காலும் வெட்டப்பட்டு இறந்ததும், ‘இந்தச் செயலைச் செய்தது நாங்கள்தான், சீக்கியர்களின் புனித நூலை அவர் அவமதித்தார் என்பதால், அவருக்குத் தண்டனை அளித்தோம்’ என்று ‘நிஹாங்குகள்’ அறிவித்ததும், நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. கூடவே பலருக்கும், ‘யார் இந்த நிஹாங்குகள்?’ என்ற கேள்வியும் எழுந்தது. யார் இவர்கள்? அறிவோம்!

நிஹாங் சீக்கியர்கள் யார்?

நிஹாங் என்பவர்கள் சீக்கியர்களில் ஒரு பிரிவினர். நீண்ட நீல நிற மேலுடையையும், போர் வீரர்களைப் போன்ற அலங்காரங்களுடனும், நீண்ட வாள்கள், ஈட்டிகளை எப்போதும் கைகளில் ஏந்தியபடி இருப்பவர்கள் நிஹாங்குகள். அவர்களுடைய தலைகளில் எடுப்பான நீண்ட தலைப்பாகை இருக்கும், உருக்கினாலான சில வளையங்கள் அதில் பொருத்தப்பட்டிருக்கும். ‘நிஹாங்’ என்றால் வலிகளையும் வசதிகளையும் சமமாகக் கருதுகிறவர்கள் என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். தியானம், தவம், தானம் ஆகியவற்றிலேயே தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கும் நிஹாங்குகள் சீக்கிய மதத்துக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்பவர்கள்.

நிஹாங்குகள் என்ற பிரிவு எப்போது ஏற்பட்டது?

குரு கோவிந்த் சிங் 1699-ல் கால்சா என்ற அமைப்பை உருவாக்கியபோதே ‘நிஹாங்’  பிரிவும் ஏற்பட்டுவிட்டது. நிஹாங் என்ற வார்த்தை சீக்கியர்களின் குரு என்ற போற்றப்படும் ‘கிரந்த சாஹிப்’ புனித நூலிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆயுதங்களைக் கையாள்வதிலும் உயிரைத் துச்சமாக மதித்துப் போர் செய்வதிலும் இவர்கள் வல்லவர்கள். நிஹாங்குகள், கால்சா விதிக்கும் கட்டுப்பாடுகளை அப்படியே பின்பற்றுவார்கள். தனிமனிதர் எவருக்கும் அடிபணிந்து போகமாட்டார்கள். அவர்களுடைய கோவில்களில் நீல நிறக் கொடிகளைத்தான் ஏற்றுவார்கள். ‘சார்டி காலா!’ என்ற கோஷத்தை முழக்குவார்கள். ‘எப்போதும் உற்சாகமாக இரு!’ என்பது இதற்குப் பொருள். ‘டியார் பார் டியார்’ என்றும் முழுங்குவார்கள். ‘எப்போதும் எந்தவித சவாலுக்கும் தயாராக இரு!’ என்பது இதற்குப் பொருள். கடந்த காலத்தில் சீக்கிய சமூகத்துக்கான போர்களை எதிர்கொண்டதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் இவர்களே.

யாரெல்லாம் நிஹாங் ஆக முடியும்?

ஒருவர் நிஹாங் ஆவதற்கு இன்ன சாதி, குலம், மதம் என்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘தலைமுடியை ஒருமுறைகூட சவரம் செய்துகொண்டிருக்கக் கூடாது, சீக்கியர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறவராக இருக்க வேண்டும், ஐந்து புனித நூல்களையும் அறிந்திருக்க வேண்டும். அதிகாலை 1 மணிக்கு எழுந்து காலை பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்; மாலையும் பூஜைகளையும் தவறாமல் செய்திட வேண்டும் இப்படியெல்லாம் சில வழிமுறைகள் இருக்கின்றன. நிஹாங் ஆக விரும்புகிறவருக்கு சீக்கிய மதப்படி சடங்குகள் நடத்துகிறார்கள். குரு கோவிந்த் சிங் வழியில் நடப்பேன் என்று உறுதியெடுத்துக்கொண்ட பிறகு, அவர் அணிந்ததைப் போன்ற ஆடைகளும் பாரம்பரிய ஆயுதங்களும் நீண்ட தலைப்பாகையும் வெள்ளியால் ஆன அடையாளச் சின்னங்களும் தரப்படும். சீக்கிய சமூகத்துக்கு எதிரான எவ்வகையிலான தாக்குதலிலும் முன்னரண்போலச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட குழு என்ற நல்லெண்ணம் சீக்கியர்கள் மத்தியில் இவர்கள் மீது உண்டு. அதுவே நிஹாங்குகள் நீடிப்பதற்கான உயிர் வளம்.

சமகாலத்தில் ‘நிஹாங்குகள்’ எப்படி இருக்கிறார்கள்?

நிஹாங்குகளின் எண்ணிக்கை இப்போது சுருங்கிவிட்டது. சுமார் பன்னிரண்டு குழுக்கள், தலா ஒரு ஜாதேதார் தலைமையில் பழைய பாணியில் தங்களுடைய பணிகளைச் செய்துவருகின்றன. இவற்றில் மிகவும் புகழ் பெற்றவை ‘புத்தா தள்’, ‘தருணா தள்’. ‘புத்தா தள்’ என்றால், மூத்தோர் பிரிவு; ‘தருணா தள்’ என்றால் இளையோர் பிரிவு. இவர்களுக்கென்று மையப்படுத்தப்பட்ட தலைமை அமைப்பு இல்லாததால் விரும்பியபடி செயல்படுகிறார்கள். ஆண்டின் பெரும்பாலான நாள்கள் தங்களுடைய டேராவில் (மையங்கள்) தங்கியிருப்பார்கள். வருடாந்திர ஆனந்த்பூர் சாஹிப் யாத்ராவுக்கு மட்டும் அந்தந்த இடங்களிலிருந்து புறப்பட்டுவிடுவார்கள். சீக்கியர்கள் தரும் காணிக்கைகளைப் பெறுவார்கள்.

சீக்கியர்கள் இப்போது எப்படி இவர்களைப் பார்க்கிறார்கள்?

இவர்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது சீக்கியர்களிடம் மெல்ல உருவாகிருகிறது. இந்தக் கொலை மட்டும் அல்லாமல் சமீபத்தில் வேறு சில வன்சம்பவங்களும் இவர்களால் ஏற்பட்டன. ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்துக்கும் களங்கத்தை உண்டாக்கிவிடக் கூடியவர்களாக ஒரு சிறு எண்ணிக்கையிலானவர்கள் ஆகிவிடக் கூடாது என்ற பேச்சு பஞ்சாபில் எழுந்திருக்கிறது.  

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

குணசேகரன்   4 years ago

சனநாயக தேசத்தில்....இப்படிப்பட்ட சம்பவங்களும் நடப்பது பேரதிர்ச்சிதான்......ஆனாலும் கட்டுரை அவர்களின் வாழ்வியலை அழகாக கண்முன்னே கொண்டுவந்துள்ளது......வாழ்த்துகள்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

உதய்ப்பூர் மாநாடுமசோதாக்கள்போக்குவரத்துக் கொள்கைவரிக் குறைப்பு தொழில் மற்றும் சுகாதாரம்ராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடைஅஞ்சலிகேரளாGST Needs to go!சமஸ் கட்டுரை ராஜாஜிநால்வரணிகுடும்ப அமைப்புஅருஞ்சொல் அசாஞ்சேசேதுராமன்எச்எம் நஸ்முல் ஆலம் கட்டுரைஅமெரிக்க ஆப்பிள் உற்பத்திரேவடிகளின் தொகுப்புநவீனம்புக்கர் பரிசுபிஎஸ்எல்விசம்ஸ்கிருதமயம்ஜாம்நகர் விமான நிலையம்திரிக்க முடியாதது வரலாறு!கர்ப்ப காலம்மணிக்கொடிபஸ் பாஸ்டாக்டர் விஜய் சகுஜாசிந்திக்கச் சொன்னவர் பெரியார்சாதி – மத அடையாளம்சிறப்புச் சட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!