கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு

தமிழக பட்ஜெட்: தொழில் துறை சவால்கள்

பாலசுப்ரமணியம் முத்துசாமி
23 Mar 2022, 5:00 am
1

மிழக நிதிநிலை அறிக்கை தொடர்பில் விரிவான விவாதங்களை 'அருஞ்சொல்' நடத்திவருகிறது. தொழில் துறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தக் கட்டுரை பேசுகிறது. 

மிழக நிதிநிலை அறிக்கையில் அனைவரும் உற்றுநோக்கிய துறை இது. 2022-23ஆம் ஆண்டின் தொழில் துறைக்கான நிதி ஒதுக்கீடானது ரூ.2,764 கோடியில் இருந்து ரூ.4,179 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 50% அதிகமாகும். நிதிநிலை அறிக்கையில் மொத்த செலவினங்கள் 11% உயர்ந்திருக்க, தொழில் துறைக்கான ஒதுக்கீடு 50% உயர்ந்திருப்பதிலிருந்து தமிழக அரசு தொழில் துறைக்கு அளிக்க விரும்பும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இயங்கும் தொழில்களில் மிக முக்கியமானவை, தோல் பதனிடுதலும், காலணி உற்பத்தியும் ஆகும். இந்தியாவில் பதனிடப்படும் தோல் பொருட்களில், 60% தமிழகத்தில் உற்பத்தி ஆகிறது. இந்திய ஏற்றுமதியில் 36% தமிழகத்தில் இருந்து செல்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 லட்சம் மக்களுக்கான வாழ்வாதாரமாக இது விளங்கிவருகிறது. 

உலகின் மிக முக்கியமான 10 தொழில் துறை பகுதிகளில் ஒன்றாக சென்னையில் உள்ள தோல் துறை நிறுவனங்கள் விளங்குகின்றன என ஐக்கிய நாடுகளின் தொழில் துறை முன்னேற்ற நிறுவனம் அடையாளப்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப் பெரும் தோல் துறை ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காலணி மற்றும் தோல் பதனிடும் தொழிலுக்காக, ஒரு தொழில் கொள்கையை உருவாக்கப்போவதான அறிவிப்பு, இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான அம்சம். இது மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும். மேலும் உலகத் தோல் துறை வணிகத்தில், தமிழகம் தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். 

தமிழகத்தில், தோல், ஆயத்த ஆடைகள் போன்ற தொழில்களின் ஏற்றுமதியில், பெரும்பாலும் நடுத்தர நிறுவனங்களே உள்ளன. அவர்கள் உலகின் பல பகுதிகளில் இருக்கும் ஏற்றுமதியாளர்களுடன் போட்டியிட பல கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு உதவும் வகையில், கட்டமைப்புகளை உருவாக்கிட, ரூ.100 கோடி செலவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு நிதி ஒன்றை அரசு உருவாக்குவதாக அறிவித்தது மிகவும் முக்கியமான முதலீடு. 

தாமதமான ’ஸ்டார்ட் அப்’

புத்தாக்கத் தொழில்கள் (Start ups) உருவாக்கம் உலகத் தொழில் துறையின் வளர்நுனியாகும். பல்வேறு துறைகளிலும் புத்தம் புதிய வழிகளில் தொழில்முறைகள் உருவாகிவருகின்றன. இந்த ட்ரெண்ட் தொடங்கும்போதே (2014) ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மஹராஷ்ட்ரா, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்கள் முன்யோசனையுடன் கொள்கைகளை உருவாக்கிவிட்டன. அதற்கான நிதி உதவி, முதலீடு போன்றவற்றை அளிக்கும் திட்டங்களை, நிறுவனங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்நாடு, இதை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்ளாமல் தாமதித்துவிட்டது.

தமிழகத்தில், 2019ஆம் ஆண்டுதான் இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டில், இதுபோன்ற நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அவற்றில் முதலீடு செய்யவும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தாக்க நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இதுபோன்ற துறைகளில், தாமதம் என்பது மிகப் பெரும் பின்னடைவை உண்டாக்கும். இந்த ஆண்டுதான் இந்நிறுவனத்துக்கான தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் மிக விரைவாகச் செயல்பட்டு, தாமதத்தினால் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சரிசெய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தலித் மற்றும் பழங்குடியின வகுப்பினர்களின் தொழில்களுக்கு உதவிட, அரசு ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது. எல்லாத் தளங்களிலும் சமூகநீதி அடிப்படையில், இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கை. இத்தளத்தில், தலித், பழங்குடியினர் நடத்தும் தொழில்களை அடையாளம் கண்டு உதவும் வகையில், தலித், பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள்கொண்ட வலுவான குழு ஒன்றை உருவாக்கி, இந்த நிதியைச் சரியான வகையில் செலவு செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.

செயல்திறன்

தொழில் துறையின் மிக முக்கியமான தேவைகளுள் ஒன்று, சரியான திறன் வாய்ந்த தொழில்நுட்பப் பணியாளர்கள். தமிழகத்தில் படித்து வெளியில் வரும் மாணவர்களின் வேலைக்குச் சேரும் தகுதி (employability) குறைவாக இருப்பதாகப் பல தொழில் துறைத் தலைவர்களும் புகார் சொல்லிவருகிறார்கள். இதைச் சரிசெய்யும் வகையில் 71 தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்தவும், மாணவர் திறன் மேம்பாட்டை வளர்க்கவும் ரூ.2,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பெரும் நிதி முதலீடு. 

இத்திட்டம் தொழில் துறையில் மதிப்பு வாய்ந்த தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்பது மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. இது தவிர, நுண்தொழில் குழுமங்கள் (மைக்ரோ க்ளஸ்டர்ஸ்) உருவாகிட, 20 இடங்களில் ரூ.50 கோடி செலவில் திட்டங்கள் உருவாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள். இவை பெருமளவில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் பயன்படக்கூடியவை.

பொதுவாக இதுபோன்ற முயற்சிகளில், அரசைவிடத் தன்னார்வல நிறுவனங்கள் செயல்திறன் வாய்ந்த வகையில் செயல்படக்கூடியவை. அரசின் மெத்தன நிர்வாகச் செயல்பாடுகளுக்கும், இதுபோன்ற நுண்தொழில்களுக்கும் ஏழாம் பொருத்தம். இது எப்படிச் செயல்பாட்டுக்குள் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தொழில் துறையில் மிக முக்கிய இடம் வகிப்பது தானியங்கி வாகன உற்பத்தி. 1996இல் தொடங்கிய ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை, தமிழகம், இந்தியாவில் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக உருவாவதில் முக்கியப் பங்கை வகித்தது. ஆனால், இன்று அத்தொழில் ஒரு அடிப்படை மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிகிறது. சென்னையில் ஃபோர்ட் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டது.

மின்சார வாகனம்

பெட்ரோல், டீசல் வாகனப் பயன்பாடுகள் குறைந்து வருங்காலத்தில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில், இந்தத் துறை எப்படி மாறப்போகிறது என்பதைத் தமிழக அரசு ஆராய்ந்து, அதற்கான முன்னேற்பாடுகளை, மாற்று வழிகளை, கொள்கைகளை, திட்டங்களை உருவாக்க வேண்டும். இந்தத் தொழில் நின்றுபோனால், அது தமிழகத்தின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புகளையும் பெருமளவு பாதிக்கும். வருமுன் காக்க!

ஆனால், இங்கு ஓர் நல்ல செய்தி என்னவெனில், போச்சம்பள்ளி சிட்கோ தொழிற்பேட்டையில், ரூ.2400 கோடி முதலீட்டில், ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டதாகும். ஒலா நிறுவனம் ஆறே மாதத்தில், தனது தொழிற்சாலையைக் கட்டியெழுப்பி, உற்பத்தியைத் தொடங்கிவிட்டது. தொடக்கத்தில் வருடம் 20 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்திசெய்யும் இத்தொழிற்சாலை 1 கோடி ஸ்கூட்டர் வரை உற்பத்திசெய்யும் திறன்கொண்டதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையை அமைத்ததற்கான பெருமை முந்தைய அதிமுக அரசைச் சாரும்.

ஆந்திராவும், தெலுங்கானாவும் பிரிந்த பின்னர், நம் அண்டை மாநிலமான ஆந்திரா, பல சலுகைகளைக் கொடுத்து, பல தொழிற்சாலைகளை,  ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிட்டி என்னும் தொழில் நகரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்பரி, கோல்கேட், கெல்லாக்ஸ், பெப்சி, அல்ஸ்டாம், இசுஸூ, என்.ஹெச்.கே, ஹண்டர் டக்லஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதில் அடக்கம். சென்னையில் இருந்தது 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொழில் நகரம், தமிழ்நாட்டுக்கு ஓசூர் போன்றது.

கர்நாடக மாநிலம், ஒரு மென்பொருள் பேரரசாக உருவாகிய பின்னர், அதன் சூழல் காரணமாக, தொடர்ந்து அறிவுசார் தொழில்களை ஈர்த்துவருகிறது. புத்தாக்கத் தொழில்களில் (start ups) அது தொடர்ந்து தென்னக மாநிலங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

தமிழகம், தொழில் துறை முதலீடுகளை ஈர்க்க, மிகவும் திறன் வாய்ந்த அண்டை மாநிலங்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது என்பது நிதர்சனம். இந்தச் சூழலில், எப்படி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை அடுத்த நிலைப் பொருளாதாரமான அறிவுசார் தொழில்களில் முன்னணியில் கொண்டுவரப்போகிறது என்பது, மில்லியன் டாலர் கேள்வி!

தமிழக அரசு, வரும் நிதி ஆண்டுக்கான தொழில் துறை நிதி ஒதுக்கீட்டை 50% அதிகரித்ததன் மூலம், தனது வருங்காலத் திட்டங்களில், தொழில் துறையின் முக்கியத்துவத்தை உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதை வெற்றிகரமாக செய்துமுடிப்பது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு குறுந்தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரின் பொறுப்பு. 2024 மார்ச் மாதம் இவர்களது பங்களிப்பின் வெளிப்பாடுகள், தமிழகத் தொழில் துறை அடுத்த 10 ஆண்டுகளில் எங்கே செல்லும் என்பதற்கான அடையாளமாக இருக்கும். 

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


2


அதிகம் வாசிக்கப்பட்டவை

கடற்கரைகம்யூனிஸ்ட்கள்இடதுசாரி இயக்கங்கள்நிலக்கரிசமஸ் பேட்டிகள்அரசியல் வரலாற்றின் உச்சம்ஆசாதிபுத்தாக்க முயற்சிராஜாஜி அண்ணாதிறமைக்கேற்ற வேலைஆர்.ப்ரியாபீமாகோரேகாவோன்ஊரடங்குக் கால கல்வி நிறுவனங்கள்தேசத் துரோகிபுதிய இந்தியாபஞ்சம்பொதுத்துறை பங்கு விற்பனைகாங்கிரஸ்காரர்நடப்புப் பொருளாதாரம்மக்கள் அமைப்பைக் கண்டு அஞ்சுவது ஏன்?பன்மைக் கலாச்சாரம்தேசப் பாதுகாப்புபுத்தக வெளியீட்டு விழாசிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிதென்னகம்பெகசஸ்வி.டி.சாவர்க்கர்மாநில அரசுகுஜராத் - பில்கிஸ் பானுஉரத்து குரல்கொடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!