கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 15 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் திட்டம் எப்படியானது?

பாலசுப்ரமணியம் முத்துசாமி
05 Jul 2022, 5:00 am
3

ங்கிலேயர் நம் நாட்டை ஆக்கிரமிக்கும் முன்பு, இந்தியா உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்தியாக, உலக உற்பத்தியில் 24% பங்களிப்புடன் இருந்தது. 200 ஆண்டு கால ஆங்கிலேய ஆட்சியின் இறுதியில், உலகப் பொருளாதாரத்தில் 4% பங்காகச் சிறுத்து, தாழ்வுற்று வறுமை மிஞ்சிய நாடாக விடுதலை பெற்றது.

இந்தியா விடுதலை பெற்ற அதே காலகட்டத்தில், இரண்டாம் உலகப் போர் முடிந்து, உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அனைத்துமே, நவீன காலகட்டத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கின. கட்டமைப்புகளைத் தாண்டி, பெரும்பாலான அரசுகள் தொழில் துறைகளிலும் முதலீடு செய்தன. 

இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்தக் காலகட்டத்தில், இந்தியத் தனியார் துறையிடம் முதலீடும், தொழில்நுட்பமும் இல்லாமல் இருந்தது. எனவே, அரசே, அடிப்படைத் தொழில்களில் முதலீடுகளைச் செய்தது. சோவியத் ஒன்றியத்தின் தாக்கத்தில், ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கியது. 

இந்தியா விடுதலை பெற்ற 20 ஆண்டுகள் கழித்து, சோஷலிஸ கொள்கைகளின் தாக்கம் மங்கி, உலகெங்கும் சுதந்திரச் சந்தைக்கான குரல்கள் எழுந்தன. வணிகம் உலகமயமாகத் தொடங்கியது. 1980களில் தொடங்கி இந்தியாவும் மெல்ல மெல்ல சுதந்திரச் சந்தையை நோக்கிச் சிற்றடிகளை வைத்து நகரத் தொடங்கியது. 1990களின் தொடக்கத்தில், அந்நியச் செலாவணிச் சிக்கலை முன்வைத்து, இந்தியப் பொருளாதார நிர்வாகிகள், இந்தியப் பொருளாதாரக் கொள்கைகளைச் சுதந்திரச் சந்தையை நோக்கி மாற்றினார்கள்.

அடுத்த 30 ஆண்டுகள் இந்தியா சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது. இன்று இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து, வறுமை குறைந்துள்ளது. ஆனால், ஒழியவில்லை. அனைவருக்குமான தரமான அடிப்படைக் கல்வி இன்னும் கனவாகவே இருக்கிறது.

இந்த நிலையில்தான், எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து சரிவுகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சி, சென்ற மே மாதம் 13, 14, 15 தேதிகளில், தனது மேல்மட்டக் குழுவைக் கூட்டி, தாங்கள் அடுத்து முன்னெடுக்க வேண்டிய சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி ஆலோசித்தது.

அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் குழுவின் தலைவராகச் செயலாற்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்  காங்கிரஸ் முன்னெடுக்க முடிவெடுத்துள்ள பொருளாதாரச் செல்திசை பற்றிய குறிப்புகளைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர் ஜூன் 25ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 'காங்கிரஸின் பொருளாதார மாடல்' என்னும் தலைப்பில், அதுபற்றி மேலும் விரிவாக உரையாற்றினார். 

1991ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டுவந்த காங்கிரஸ் அரசின் வர்த்தக அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். பின்னர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பணியாற்றியவர். 1991 புதிய பொருளாதாரக் கொள்கைகளின் வீச்சையும், எல்லைகளையும் நன்கு உணர்ந்தவர் என்னும் வகையில், அவரது உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போதைய பொருளாதார நிலையைப் பற்றிய புள்ளிவிவரங்களை முன்வைத்து, அவற்றின் பின்னணியில், வருங்காலப் பொருளாதாரக் கொள்கைகளின் செல்திசையைக் கோடிட்டுக் காட்டினார். வழக்கமான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என அவற்றை ஒதுக்கிவிட முடியாது. அவர் முவைத்த சில முக்கியமான புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

 • 2021-22 ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துகொண்டே வருகிறது.  ஒவ்வொரு காலாண்டின் வளர்ச்சி வேகமும், முந்தைய காலாண்டைவிடக் குறைவு. (Q-1: 20.1%,  Q-2: 8.4%,  Q-3:5.4%  Q-4: 4.1%). 
 • 2021-22 ஆண்டு இறுதியில், இந்தியாவின் பொருளாதார அளவு ரூ.147 லட்சம் கோடி. 2019-20ஆம் ஆண்டு இறுதியில், இந்தியப் பொருளாதார அளவு ரூ.145 லட்சம் கோடி. இரண்டு ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் வளரவே இல்லை. 
 • மொத்த விலைப் பணவீக்கம் 14.55%. சில்லறை விலைப்பணவீக்கம் 7.9%.
 • பணவீக்கத்தின் முக்கியக் காரணிகள் பெட்ரோல், டீசல் மீதான அதீத வரிவிதிப்பு மற்றும் உயர் ஜி.எஸ்.டி வரிகள்.
 • வேலையின்மை 7.83% - இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அதீத வேலைவாய்ப்பின்மை சதவீதம்.
 • சமூகநலத் துறைக்கான ஒன்றிய அரசின் செலவுகள், முந்தய ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 9%ஆக இருந்தது. அது தற்போது, 5%ஆகக் குறைந்துவிட்டது.
 • 59% பெண்கள் ரத்தசோகை நோயால் அவதிப்படுகிறார்கள். 35% குழந்தைகள் வளர்ச்சியின்றியும், உயரத்துக்கேற்ப எடை குறைவாகவும் உள்ளார்கள்.
 • 49% இந்தியர்கள் பள்ளி இறுதி வரை பயில்வதில்லை.
 • கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன. 

இதில், பொருளாதார நிலை குறித்த தரவுகளும், சமூக நலத்துறைக்கான செலவுகள் பற்றிய தரவுகளும் சிதம்பரம், மோடியின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியின் மீது வைக்கும் விமர்சனங்கள். பெண்கள் உடல்நலம், பள்ளிக்கல்வியின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பன வரலாற்றுப் பிரச்சினைகள். கடந்த 75 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸே அவற்றுக்குப் பொறுப்பு.

1991ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், 20-25 ஆண்டுகள் வரை பொருளாதாரம் வளர உதவியிருந்தாலும், அதன் காலம் முடிந்துவிட்டது. அடுத்த 20-30 ஆண்டுகளுக்கான பொருளாதாரக் கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் சிதம்பரம்.

எனவே, காங்கிரஸ் வருங்காலத்தில் பதவிக்கு வந்தால், அவர்கள் முன்னெடுக்கவிருக்கும் கொள்கைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

 1. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். ‘உலகத் தொழிலாளர் நிறுவனம்’ (International Labour Organisation) வரையறுத்துள்ள, ஓரளவு பாதுகாப்பான, நிலையான வேலைவாய்ப்புகள் என்பதே சிதம்பரம் முன்வைக்கும் வரையறை.
 2. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பெருமளவு முதலீடு செய்தல். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல். சுகாதாரத் துறையிலும் திட்டங்களை மாநிலத்துக்கேற்ப வகுத்தல்
 3. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வகையில், புதிய பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குதல். 

இவையே காங்கிரஸின் வருங்காலப் பொருளாதார கொள்கைகளின் அடிப்படைகளாக இருக்கும் என அந்த உரையில் சிதம்பரம் குறிப்பிட்டார்.  

இதன் பொருள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகள், தொழில்நுட்பங்களை விட்டுவிடுவதல்ல. அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் அடிக்கோடிடுகிறார். 

மக்கள் நலனை முன்வைக்கும், இந்தக் கொள்கைகளை, கம்யூனிஸ பொன்னுலகை உருவாக்கும் கனவு என நினைத்துவிட வேண்டாம். மக்கள்நலப் பொருளாதாரக் கொள்கைகள் இன்று தவிர்க்க முடியாத ஒன்று என்கிறார் சிதம்பரம்.

சென்னையில் அவர் ஆற்றிய ஒரு மணிநேர உரையைக் கேட்டு முடித்தவுடன், 1969ஆம் ஆண்டு ‘ரேடிகல் ரிவ்யூ’ (Radical Review) பத்திரிக்கையை என்.ராம், மைதிலி சிவராமனுடன் தொடங்கி நடத்திய இளம் இடதுசாரி அரசியலரான அன்றைய ப.சிதம்பரம் நினைவுக்கு வந்தார்.

அவர் உரையின் முக்கியக் கருத்துக்களை விவாதிப்போம்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

இந்திய அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் இந்திய ராணுவம் முதலியவற்றில் பல ஆண்டுகளாகக் காலியிடங்கள் நிரப்பப்படாததைத் தரவுகளுடன் முன்வைத்து, காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால் அவை முதலில் நிரப்பப்படும் என சிதம்பரம் பேசியுள்ளார். ஆனால், அது மட்டுமே போதுமா?  அவர் சொல்லும் வேலைவாய்ப்புகள் சில லட்சங்கள்.

ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. கிட்டத்தட்ட 30 கோடி குடும்பங்கள். இப்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து 3-4 கோடிப் பேர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை அளித்துவருகின்றன. 

மீதமுள்ள எல்லா இந்தியர்களுக்கும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டாலும், கூடுதலாக 25 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்று. 

எனவே, அனைவருக்குமான வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என காங்கிரஸ் முன்வைக்கும் முழக்கத்துக்கு சிதம்பரம் முன்வைத்த தீர்வு முழுமையானதாகக் தோன்றவில்லை.

இந்தியாவில் 50% மக்களுக்கு, அதாவது 65 கோடிப் பேருக்கு வாழ்வாதாரமாக இருப்பது வேளாண்மை. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்களிப்பு 15% மட்டுமே. இந்தக் காரணத்தினால், வேளாண்மையில் தனிநபர் வருமானம் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவு. 

வேளாண்மைக்கு அடுத்தபடியாக மிக அதிக வேலைவாய்ப்புகளைத் தருவது, சிறு மற்றும் குறுந்தொழில்கள். கிட்டத்தட்ட 5 கோடி எண்ணிக்கையில் இருக்கும் சிறு/குறு தொழில் நிறுவனங்கள், 17 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தில், இதன் பங்களிப்பு 30% ஆகும். இந்திய ஏற்றுமதியில் 49% ஆகும். இந்த முக்கியமான துறை, கரோனா தொற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி, ஜி.எஸ்.டி. வரிமுறை விதிகள், இவற்றின் செயல்பாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளன.

பிராந்தியவாரியாக, இத்துறைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, மாநில அரசுகளுடன் இணைந்து, பொருளியல் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். இத்துறைக்குத் தேவையான நிதியாதாரங்கள், குறைந்த வட்டி விகிதம் போன்றவை அடிப்படைத் தேவை.

இந்திய வேளாண் துறையும் சரி, இந்திய சிறு / குறு தொழில் துறையும் சரி, சிறிய அலகிலானவை. இதன் முக்கிய காரணம், அதீத இந்திய மக்கள்தொகை ஒப்பீட்டில் சொல்ல வேண்டுமானால், அமெரிக்காவின் நிலப்பரப்பு 98 லட்சம் சதுர கி.மீ. மக்கள்தொகை 30 கோடி. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 40 பேர். வேளாண்மையில் ஈடுபட்டிருப்பவர்கள் 30 லட்சம் பேர். சராசரி வேளாண் அலகு 440 ஏக்கர்.

இந்தியாவின் நிலப்பரப்பு 32.8 லட்சம் சதுர கி.மீ. மக்கள்தொகை 134 கோடி. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 407 பேர். வேளாண்மையில் ஈடுபட்டிருப்பவர்கள் 65 கோடிப் பேர். சராசரி வேளாண் அலகு 2.5 ஏக்கர்.

உலகெங்கும் நாடுகள் உணவு இறையாண்மையை விட்டுக்கொடுப்பதில்லை. எனவே, பெருமளவில் நேரடி மற்றும் மறைமுக மானியங்கள் மூலம் வேளாண்மையை விட்டுவிடாமல் வைத்திருக்கின்றன. அதேபோல, சமூகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அனைத்து நாடுகளும் உணவு நுகர்வு மானியங்களையும் அளித்து வருகின்றன. உற்பத்தி, நுகர்வு என வேளாண் பொருளாதாரத்தின் இரு எல்லைகளிலும் மானியங்கள் உள்ளன. அதிக மானியங்கள் இருந்த போதிலும், முன்னேறிய நாடுகளின் பெரும் அலகு வேளாண் பண்ணைகள் லாபகரமாக இல்லை. அங்கேயே லாபம் இல்லையெனில், இந்தியாவின் சிறு அலகு வேளாண்மையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

இந்திய வேளாண் உற்பத்தி அலகு என்றுமே சிறு அலகாகத்தான் இருக்கும். அது அமெரிக்கா அளவுக்குப் பெரும் அலகாக மாற வேண்டுமெனில், கிட்டத்தட்ட 55 கோடிப் பேர் நிலங்களை விற்று வெளியேற வேண்டும். 55 கோடிப் பேருக்கு மாற்று வேலைவாய்ப்புகள், தொழில்களை உருவாக்குதல் சாத்தியமில்லாத ஒன்று.

இதுதான் நம் அரசின் கொள்கை வடிவமைப்பாளர்கள் முன் இருக்கும் பிரச்சினை. ஆங்கில வழக்கில் சொல்ல வேண்டுமானால், நம் வீட்டின் வரவேற்பறையில் கடந்த 75 ஆண்டுகளாக இருக்கும் யானை.  ஆனால், அரசின் கொள்கைகள் இந்தப் பிரச்சினையின் மனிதப் பரிமாணத்தையே கண்டுகொள்ளாமல். திரும்பத் திரும்ப அதிக உணவு தானிய உற்பத்தி என்னும் நோக்கில்தான் செயல்பட்டு வருகின்றதே தவிர, உற்பத்தியாளருக்கு லாபம் என்னும் நோக்கில் செயல்படுவதில்லை.

எனவேதான், இங்கே கொள்கையில் புத்தாக்கங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை இப்போது செய்யவில்லையெனில், இனி எப்போதுமே செய்ய முடியாது.

இந்திய வேளாண்மையில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என இரண்டு வெற்றிகரமான திட்டங்கள் நிக்ழந்துள்ளன. இவற்றுள் எது உற்பத்தியாளருக்கு அதிக நன்மையும், அரசுக்குக் குறைந்த மானிய பாரமும் கொண்டது என்பதை ஆராய்ந்தால், அரசு செல்ல வேண்டிய திசை தெரியும்.

இந்திய உழவர் என்பவர் நிலம் வைத்திருக்கும் தொழில்முனைவர். அவர் அந்நிலத்தில் பயிர் தவிர வேறு வகைகளிலும் வருமானம் ஈட்ட முடியும் என்பதற்கு, குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் உழவர் சூரிய ஒளி மின் உற்பத்திக் கூட்டுறவுத் திட்டம் ஒரு முக்கியமான உதாரணம். இத்திட்டத்தால், உழவரின் வருமானம் இரண்டு மடங்காகியிருக்கிறது என வேளாண் பொருளியல் பேராசிரியர் துஷார் ஷா நிறுவியிருக்கிறார். ஆனால், அதைப் பெருமளவில் முன்னெடுக்கத் தடையாக இருப்பது, சாதகமான மின்சார விநியோகக் கட்டமைப்பு இல்லாமையும், இப்போதிருக்கும் தொழில்மாதிரியில் கொழுத்த லாபம் பெரும் சில நூறு முதலாளித்துவ சக்திகளும். அவர்களைக் கடந்து, வருங்கால நோக்கில் யோசித்தால், வேளாண் துறைக்கு விடிவுகாலம் பிறக்கும் 

இவற்றைத் தாண்டி, ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றிகரமாக இயங்கும் பல நவீன முனைப்புகள் உள்ளன. அவற்றையும் ஆராய்ந்து, ஒவ்வொரு சூழலிலும் வெற்றிபெறும் நவீன முனைப்புகளுக்கு ஊக்கம் அளித்து, அவற்றை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல திட்டங்கள் தீட்ட வேண்டும். 

ஏற்கனவே சொன்னதுபோல, உற்பத்தி, நுகர்வு என இரு புறங்களிலும் மானியம் அளிக்கப்படுவதால், வேளாண்மையில் லாபம் குறைவு. எனவே, இங்கே உற்பத்தியாளர், நுகர்வோர் என இருவர் தவிர வேறு லாப நோக்கு கொண்ட பெரும் தனியார் முதலீட்டாளர்களுக்கு இடம் இல்லை. எனவே, வேளாண் தொழில் துறையில், பெரும் முதலாளித்துவ சக்திகள் நுழைவதை விலக்கி, உழவர்கள் தங்கள் உற்பத்தியை நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டுசெல்லும் தொழில் மாதிரிகளையே உருவாக்க வேண்டும். 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, 50% இந்தியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு துறையைப் பற்றி ப.சிதம்பரம்  தனது உரையில் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பது பெரும் ஏமாற்றம். 

கல்வி மற்றும் சுகாதாரம்

பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் அரசு முதலீடு செய்ய வேண்டும் என்பதும், அதில் கல்வி மாநில அரசுப் பட்டியலுக்குத் திருப்பப்பட வேண்டியது என்பதும் காங்கிரஸ் கொள்கைகளில் மிக முக்கியமான அம்சம் என்றே சொல்ல வேண்டும்.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்த கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு கஷ்மீர் போன்ற மாநிலங்கள் மக்கள் நலக் குறியீடுகளில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன.

2004 முதல் 2014 வரை இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், அது உயர்கல்விக்கான முதலீடாகவே இருந்தது. இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை, கல்விக்கான ஒன்றிய அரசின் முதலீடு என்பது பெருமளவு உயர்கல்விக்கே சென்றுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியின் இந்த மாற்றம், பள்ளிக் கல்விக் கட்டமைப்பில்லாத பின்தங்கிய மாநிலங்களுக்கு பெரும் நன்மை அளிக்கக் கூடியது.

மேலும் சுகாதாரத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அவை மாநிலங்களின் தேவைக்கேற்ப திட்டங்களாக  மாறும் என்னும் சிதம்பரத்தின் விளக்கம் வரவேற்புக்குரியது. ஏனெனில், மாநிலத்துக்கு மாநிலம், சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சேவைகளின் தரத்தில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. இங்கே ஒரு நாடு, ஒரு கொள்கை என்னும் அணுகுமுறையை முன்னெடுத்தால், அதில் முதலீடு செய்யப்படும் நிதி தேவையின்றி வீணடிக்கப்படும். அவ்வகையில் இந்தத் திட்டமும் வரவேற்புக்குரியதே.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்

இந்தியா தனது தொடக்கக் காலத்தில், செல்வக் குவிப்பை ஊக்குவிக்காத அதீத தனி மனித மற்றும் நிறுவன வரிவிதிப்பு முறைகளைக் கொண்டிருந்தது. ஆடம்பரப் பொருட்கள் மீதும் அதீத கலால் வரிகள் விதிக்கப்பட்டிருந்தன. தொழில் துறை உற்பத்தியின் மீது லைசென்ஸ் முறைக் கட்டுப்பாடுகள் இருந்தன.

1973-74ஆம் ஆண்டு, அதீதமாக தனிநபர் வருமான வரி 93.5% வரை இருந்தது. நிறுவன வருமான வரிகளும், கலால் வரிகளும் மிக அதிகமாக இருந்தன. இதனால், வரி ஏய்ப்பும், கள்ளச் சந்தைச் செயல்பாடுகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

உற்பத்திக் கொள்ளளவு மீதான செயற்கையான கட்டுப்பாடுகளால், உற்பத்தி குறைவாகவும், அதற்கான தேவை அதிகமாகவும் இருந்தது. ஒரு பஜாஜ் ஸ்கூட்டரை வாங்க நுகர்வோர் 7-8 வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது. தொலைபேசி இணைப்புக்கான காத்திருப்பு 5-6 வருடங்கள். இதனால், இது போன்ற பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பெரும் கள்ளச் சந்தை உருவாகியிருந்தது.

இது போன்ற செயற்கைக் கட்டுப்பாடுகளினால், பொருளாதார வளர்ச்சி குறைந்ததாகப் புகார்கள் எழுந்தன. ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இல்லை.  1980களுக்குப் பின்பு, அரசுகள், தொழில்துறையை ஓரளவு நேர்நிலை மனநிலையில் அணுகத் தொடங்கின. வரிகள் மெல்ல மெல்லக் குறைக்கப்பட்டன. உற்பத்திக்கான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன.

1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சந்தைப் பொருளியல் கொள்கைகளும், அதே காலத்தில் வேகமாக வளரத் தொடங்கிய வேளாண் பொருள் ஏற்றுமதி, புதிதாக உருவான மென்பொருள் துறை போன்றவை, இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க உதவின. 1980க்குப் பின்னர், 2004 வரை சராசரியாக 6%, 2004க்குப் பிறகு சராசரி 7.7% என பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்தது

இந்தப் பொருளாதார வளர்ச்சியினால், வறுமையின் சதவீதம் குறைந்தாலும், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் உணவுப்பாதுகாப்புச் சட்டம் போன்றவை, ஊரகப் பொருளாதார நிலைமை மேம்பட உதவின. 14 கோடிப் பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்தார்கள். 

கட்டுமானத் துறை, குறுந்தொழில் நிறுவனங்கள் பெருமளவு வேலைவாய்ப்பை அளிக்கத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில், விடுதலை பெற்ற காலத்திற்குப் பின்னர் முதன்முறையாக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்த மக்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம் இவையிரண்டுமே குறைந்தன.

ஆனாலும், இந்தியச் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கவே செய்தன. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பணமதிப்புநீக்க நடவடிக்கை, பணப் பொருளாதாரமான குறுந்தொழில்கள் மற்றும் கட்டுமானத் துறையை வெகுவாகப் பாதித்தன. அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையும் குறுந்தொழில்களைப் பாதித்தன. பொருளாதார வளர்ச்சி வேகம் குறையத் தொடங்கியது. பொருட்களுக்கான டிமாண்ட் குறையத் தொடங்கியது.

இந்தக் காலத்தில்தான், இந்திய நிதியமைச்சர், தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதத்தை 8% குறைத்தார். இதனால், தொழில் முனைவோரின் லாபம் அதிகரித்தது. இது அரசுக்கும் வருடம் ரூ.1.7 லட்சம் கோடி வரி வருவாய் நஷ்டத்தை ஏற்பத்தியது.

இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் பொருட்களின் மீதான வரிகளை அரசு அதிகரித்தது. பெட்ரொல் டீசல் பொருட்கள் ஏழை, பணக்காரர் என வேறுபாடு இல்லாமல் அனைவரும் உபயோகிக்கும் பொருட்கள். 

இந்த விலையேற்றம் ஏழை, நடுத்தர மக்களையே அதிகம் பாதித்தது. தங்கள் வருமானத்தில் அதிக சதவீதப் பணத்தைச் செலவிட நேர்ந்தது. இதனால், அரசுக்கு வரிவருவாய் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை அதிகரித்தது.

தொழில்முனைவோருக்கு ரூ.1.7 லட்சம் கோடி வரிச் சலுகையாகக் கொடுக்கப்பட்டதை ஈடுகட்டும் வகையில் ஏழை நடுத்தர மக்கள் சமூகத்திலிருந்து ரூ.3 லட்சம் கோடி வரை பெட்ரொல் டீசல் வரிகளாக அதிகம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் இப்படி ஒரு வரிக்கொள்கை செயல்படுத்தப்பட்டிருப்பது, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாகும்.

2020ஆம் ஆண்டு உலகை உலுக்கிய கரோனா தொற்று உருவாக்கிய பொருளாதாரப் பாதிப்புகள், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதித்துள்ளன. இதன் விளைவாக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்துள்ளன.

ஆகவே, இந்த ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படும் என சிதம்பரம் அவர்கள் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.

இந்த ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்பட்டு, தரமான பள்ளிக்கல்வி மற்றும் குழந்தைகள்/மகளிர் உடல்நல மேம்பாடு – இவற்றில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். இந்த முழுமையான அணுகுமுறை, மொத்தப் பொருளாதாரத்தையும் மீண்டும் வேக வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் செல்லும் திறன்கொண்டது.

மாவோவின் காலம் தொடங்கி, கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளில் செய்த முதலீடுகளே, பின்னாளில், சீனப் பொருளாதார வேக வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாக இருந்துள்ளன என்பதை அமர்த்தியா சென் உள்பட பல பொருளியல் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சி வழியே நிறுவியுள்ளார்கள்.

இறுதியாக…

இந்தியா விடுதலை பெற்ற முதல் 30 ஆண்டுகள், உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அடிப்படை தொழில், நிதிக்கட்டமைப்புகள், நிலச் சீர்திருத்தங்கள் என்னும் சோஷலிஸ கொள்கை அடிப்படையில் சென்றது. 1991ல் தொடங்கி அடுத்த 30 ஆண்டுகள், சுதந்திரச் சந்தை என்னும் திசையில் சென்றது.

இன்று உலகம், தொழிற் புரட்சி என்னும் நிலையைத் தாண்டி, அறிவார்ந்த பொருளாதாரம் (Knowledge Economy) என்னும் திசையில் சென்று கொண்டிருக்கிறது. 

இன்று இந்தியாவில் 50% மக்கள் 25 வயதுக்குக் குறைவானவர்கள். இன்று இந்தியாவின் இளைய சமூகம் என்பது நம் கையில் இருக்கும் பெரும் சொத்து. இதை ஆங்கிலத்தில் ‘டெமோகிராபிக் டிவிடெண்ட்’ (Demographic Dividend) எனச் சொல்வார்கள். இவர்கள் வெறும் உடல் உழைப்பாளிகளாக இல்லாமல், கல்வி கற்று செயல்திறன் மிக்க சமூகமாக மாற வேண்டும். இன்னும் 30 ஆண்டுகள் கழித்து, மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து, இந்திய சமூகத்தின் மக்கள்தொகையில் முதியவர்களின் விகிதம் அதிகமாகிவிடும். 

இந்தியா தன்னிடம் இருக்கும் செல்வமான இந்த இளம் சமுதாயத்துக்கு நல்ல கல்வியும், செல்வமும் தந்து, அறிவார்ந்த பொருளாதாரத்தை நோக்கிச் செலுத்தும் கொள்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நம் கையிலிருக்கும் இந்தச் செல்வத்தின் பலனை இந்தியப் பொருளாதாரம் பெற முடியும். 

அதேசமயத்தில், இந்தியச் சமூகத்தில் மிக அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் வேளாண்மை மற்றும் சிறு/குறு தொழில்கள் லாபகரமாக மாறும் வகையில் புத்தாக்க (innovative) கொள்கைகளை உருவாக்க வேண்டும். சிதம்பரம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய கொள்கைகளை, திட்டங்களாக வகுக்குகையில், இவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


1


பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   1 year ago

/உழவர்கள் தங்கள் உற்பத்தியை நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டுசெல்லும் தொழில் மாதிரிகளையே உருவாக்க வேண்டும். / Was this not what BJP tried to do all India? Was this not Karunanidhi's Uzhavar Chandai concept? Did not Congress and all Opposition parties were against this?

Reply 0 0

M. Balasubramaniam   1 year ago

The article refers to business model like Milk cooperatives which are farmer owned organisations. They procure, process and market the products directly to consumers without any intermediaries / private players. tks

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   1 year ago

கட்டுரையாளர் பா.ஜ.க அரசியல் கொள்கைகளுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டவர் என்பது அறியப்பட்ட ஒன்றே! அதே நேரத்தில் அதற்கு மாற்றாக முன்னிறுத்த காங்கிரஸ் இன்னும் தயாராகவில்லை என்பது பரிதாபத்திற்குரியது! என்றபோதிலும், அரசியல் சார்பற்ற வகையில், சரித்தன்மைக் கொண்ட தகவல்களுடன் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையை அனைவரும் வாசிக்க வேண்டும். திரு சிதம்பரம் அவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

இருண்ட காலம்அன்வர் ராஜா சமஸ் பேட்டிஅதானு பிஸ்வாஸ் கட்டுரைசர்வதேசம்உணவு விற்பனைஐயன் கார்த்திகேயன்கருப்புச் சட்டைஆசுதோஷ் பரத்வாஜ்கிரெகொரி நாள்காட்டிமீன்கள்உணவு முறைபாரதி நினைவு நூற்றாண்டுகோடை மழைலிமிடட் எடிசன்சிகை அலங்காரம்சுதந்திரச் சந்தைபழங்குடியினர்கேசவானந்த பாரதி தீர்ப்புகாலனியாதிக்கம்சினிமாசெலின் மேரிவரிவிதிப்புமூட்டு வலிஇயற்கை வளங்கள்நந்தினிதேர்தல் ஏற்ற இறக்கங்கள்கலைக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விஎதிர்வினைகள்லத்தீன் அமெரிக்க இலக்கியம்இயான் ஜேக்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!