தலையங்கம், அரசியல் 3 நிமிட வாசிப்பு

ஒன்றிய - மாநிலக் கூட்டுசக்திக்கு சாட்சியம் 100 கோடி தடுப்பூசி சாதனை

ஆசிரியர்
22 Oct 2021, 5:00 am
3

கரோனாவுக்கு எதிரான மானுடப் போராட்டத்தில், 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் எனும் இலக்கை இந்தியா கடந்திருப்பது முக்கியமான சாதனை. உலகில் சீனாவுக்கு அடுத்து, இந்த எண்ணிக்கையை இந்தியா கடந்திருக்கிறது. தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் இது நடந்திருக்கிறது. 

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி. முழுமையாக இரு தவணைத் தடுப்பூசிகளையும் இவர்களுக்குச் செலுத்திட ஏறத்தாழ 200 கோடி டோஸ்கள் இந்தியாவுக்கு வேண்டும். இதுவரை இந்தியாவில் 71.50 கோடிப் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 29.50 கோடிப் பேருக்கு இரண்டு தவணைகளும் செலுத்தப்பட்டிருக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டிய கெடுவைத் தவறவிட்டிருக்கின்றனர்; இன்னமும் பெரும் ஜனத்தொகையைத் தடுப்பூசி இயக்கம் சென்றடைய வேண்டியிருக்கிறது என்றபோதிலும், இதுவரை கடந்திருக்கும் பயணம் அரும்பெரும் பணி என்பதில் சந்தேகமே இல்லை.

அமெரிக்கா அல்லது ஐரோப்பாவுடன் ஒப்பிட்டால், இந்திய எண்ணிக்கையின் முக்கியத்துவம் புலப்படும். மொத்தமாக 33 கோடி மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்கா இதுவரை 41 கோடி டோஸ்களை மட்டுமே கொடுக்க முடிந்திருக்கிறது. மொத்த ஐரோப்பாவின் மக்கள்தொகை 75 கோடி. அங்கும் சுமார் 83 கோடி டோஸ்களே வழங்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவுடனும், ஐரோப்பாவுடனும் இப்படி ஒப்பிடுவதானது, தடுப்பூசி உற்பத்தி - அதற்கான உள்கட்டமைப்பு - விநியோகச் சங்கிலி இவை தொடர்பிலானது மட்டும் இல்லை. தடுப்பூசிக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகளாவிய பிரச்சாரம் கரோனா காலகட்டத்தில் பரவியிருக்கிறது. அதைக் கடந்தே வளர்ந்த நாடுகளைவிடவும் இந்தியா இந்த இடத்தை அடைந்திருக்கிறது.

இதற்கான பாராட்டில் பிரதமர் மோடி முதல் வரிசையில் இருக்கிறார். இந்த கரோனா காலகட்டத்தில் உலக அளவில் நவீன அறிவியலைப் புறந்தள்ளிப் பேசிய பிற்போக்கான அரசியல் கட்சியினரின் வரிசையில் அவர் சார்ந்த பாஜகவினரும் இருந்தபோதிலும், தடுப்பூசி விஷயத்தில் அவர் உறுதிபட விஞ்ஞானத்தின் பக்கம் நின்றார். கரோனாவைக் கையாள்வதில் மிக மோசமான பல தவறுகளை பாஜக அரசு செய்தது என்றாலும், தன்னுடைய தவறுகளிலேயே அது வீழ்ந்திருக்கவில்லை என்பது மிகுந்த ஆறுதலான விஷயம். தவறை நியாயப்படுத்துவதும், அதிலேயே ஆழ்வதுமான போக்கு எத்தகைய கேட்டை ஒரு நாட்டுக்குக் கொண்டுவரும் என்பதற்கு உதாரணமாக பிரேஸில் நம் கண் முன் நிற்கிறது.

இந்தியாவின் எதிர்க்கட்சிகளுக்கும், பாஜக அல்லாத மாநில முதல்வர்களும் இந்த விஷயத்தில் நன்றிக்குரியவர்கள் ஆகிறார்கள். தடுப்பூசி விஷயத்தில் மக்களுடைய நியாயமான சந்தேகங்களைப் பொதுவெளியில் விவாதம் ஆக்கியதில் தொடங்கி ஒருகட்டத்தில் தடுப்பூசி இயக்கம் சோர்ந்து முடக்கி நின்றபோது தன்னுடைய தொடர் குரலால் அரசுக்குப் பெரும் அழுத்தம் கொடுத்தவர் காங்கிரஸ் தலைவர் ராகுல். தேசிய அளவில் மம்தா, பினரயி, அம்ரீந்தர் வரிசையில் ஸ்டாலின் தொடர் அழுத்தம் கொடுத்தவர்களில் முக்கியமானவர். தடுப்பூசி எல்லா மக்களுக்குக்கும் கட்டணம் இல்லாமல், இந்திய அரசின் பொறுப்பில் வழங்கப்படும் சூழலை உருவாக்கியவர்கள் இவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

நூறு கோடித் தடுப்பூசி சாதனையைப் பேசும் இந்தத் தருணத்தில், இதற்குப் பரிபூரண அர்த்தப்பாடு ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்றால், ‘ஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டிணைவின் சக்திக்கான வெளிப்பாடு’ என்று இதை வர்ணிப்பது சரியாக இருக்கும். டெல்லியில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவானது, கடலோரக் குமரியில் தொடங்கி பனிப் படர்ந்த இமயமலை வரை வெற்றிகரமாக சாத்தியமாவதன் பின்னணி களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடு; மாநில அரசுகளின் உத்வேகமே அதைச் சாத்தியமாக்கிறது. 

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநிலங்களின் குரல் ஆரம்பத்திலேயே கலந்தாலோசிக்கப்பட்டிருந்தால், எவ்வளவோ உயிர்ப் பலிகளையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் அலைக்கழிப்பையும் நாம் தவிர்த்திருக்க முடியும். கரோனாவுக்கு மட்டும் இல்லை இது. இந்தியாவின் ஒவ்வொரு நகர்வுக்குமே இந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. தடுப்பூசி சாதனைத் தருணத்தில் இந்திய அரசு இதுபற்றியெல்லாம் யோசிக்க வேண்டும். ஒன்றிணைந்து செயலாற்றுதல் என்பது கூட்டுச்சிந்தனையில் ஆரம்பமாகிறது என்பதை அது உணர வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Laura   3 years ago

ஒருவேளை இந்தியா முதல் அலையை முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தும் கூட, தவிர்க்கவே இயலாமல் இரண்டாம் அலையினால் தாக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாகியிருந்திருப்பின் , நாமும் இந்த நூறு கோடி தடுப்பூசி சாதனையைக் கண்டு பெருமிதம் கொண்டிருக்கலாம். ஓராண்டிற்கும் மேலாகியிருப்பினும் நம் மனக்கண் முன்னே இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கும், முன்னேற்பாடுகளோ திட்டமிடுதலோவற்ற ஒன்றிய அரசின் திடீர் லாக் டவுன் அறிவிப்பும், அலங்க மலங்கடிக்கப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களும் அவர்கண்ட சொல்லொண்ணா இடர்பாடுகளும் இழப்புகளும் நேராமலே இருந்திருந்தால் நூறு கோடி தடுப்பூசி சாதனையாகக் கருதப்பட்டிருக்கலாம். நாம் மகிழச் செய்துமிருக்கலாம். மானுட நேயம் மிகுந்திருந்ததாலும், குடி மக்கள் நிலையின் பால் கருணை கொண்டிருந்தமையாலும், மக்கள் காப்பே தீவிர இலக்காய் கொண்டிருந்ததன் விளைவால் இந்த நற்செயல் நடைபெற்றிருப்பின் நாமும் உவகை மிகக் கொண்டிருக்கலாம். ஆசிரியர் சமஸ் அவர்கள் உரைத்திருப்பதைப் போல் எதிர் கட்சி மற்றும் மாநில அரசுகளின் தொடர் அழுத்தத்தோடு , உலகமே வியந்து, திரும்பிப் பார்க்கவும் பேசவும் வேண்டுமே என்னும் பெரும் விளம்பர மோகத்தினால், தடுப்பூசி அளித்தே தீர வேண்டிய, அடுத்தடுத்த அலைகளைத் தவிர்த்தேயாக வேண்டிய கட்டாயத்தினால், ஒரு நெருக்கடியால் நிகழ்ந்த ''நூறு கோடி தடுப்பூசி'' தாண்டிய சாதனை என்பதாலேயே இச்செயல் ஏனோ இதயத்தை தொடவும் ஒட்டவும் இயலாததுடன், புளகாங்கிதமோ பெருமிதமோ ஏற்படுதவுமில்லை.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

It is rightly said 100 crores Corona vaccine was made possible because of cooperation between the Union and State Governments, but the cooperation was not easily forthcoming because of autocratic attitude of the Prime Minister. Once the situation was going out of hands and Corona deaths were galloping, the Prime Minister came around and started consulting State Governments. In fact, at one stage he went to the background and left to the State Governments to manage the affairs. Then, it started giving results and Corona deaths came down. One more aspect to be discussed here is the undue publicity the Prime Minister is seeking for himself through Corona pandemic. It seemed that Corona was made more a political affair rather than a medical affair. Everywhere we could see the picture of him only including the Corona certificate. People had to go to the Judiciary with a demand to remove his photo from the Corona certificate.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

குணசேகரன்   3 years ago

நல்ல விசயங்களை பாராட்டுவதில் தவறில்லை ஆனால் மத்திய அரசு எந்த ஒரு விசயத்திலும் எதிர்க்கட்சிகளை நல்லுறவோடு ஆலோசிப்பதில்லை.....கண்டனக்குரல் எழும்பும்வரை நான் என்ற மமதையிலேயே தொடர்வது ஆபத்தான போக்குதானே சார்......இந்த விசயத்திலும் அதுதானே நடந்தது.....காங்கிரஸ் தலைவர் ஆரம்பத்தில் தடுப்பூசி குறித்து பேசியபோது கேலியாகவே பா.ஜ.க....அமைச்சர்கள் பதில் கூறியது உண்மைதானே

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

ஜனநாயக அமைப்புமுதல்வரை நீக்குவதுசென்னைக்குப் புதிய விமான நிலையம் தேவையா?யோசாதொழிற்சாலைகள்வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைஅருஞ்சொல் யோகேந்திர யாதவ்ஜனதா தளம் உப்புப் பருப்பும்டு டூ லிஸ்ட்பாடத் திட்டம்கூட்டுறவுஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூமத்தியதர வர்க்கம்மாபெரும் பொறுப்புதாழ்வுணர்வு கொண்டதா தமிழ்ச் சமூகம்?தாதாஷமக்கான் வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!அருஞ்சொல் வாசக அனுபவங்கள்தேசிய நிறுவனங்கள்தாய் தேவாலயம்இளைஞர் அணிசாரு நிவேதிதா சமஸ்ஐரோப்பிய சினிமாமகா கூட்டணிவெண்மைப் புரட்சிஅருஞ்சொல் நாராயண குருநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்சாப்பாட்டுப் புராணம் புரோட்டாமனனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!