கட்டுரை, வரலாறு, ஆளுமைகள் 15 நிமிட வாசிப்பு

பன்முக ஆளுமை ஆதிசேசய்யா

ஆ.அறிவழகன்
23 Nov 2021, 5:00 am
1

தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களைப் பட்டியலிட்டால், அதில் மால்கம் ஆதிசேசய்யாவைத் தவிர்க்கவே முடியாது. தொலைநோக்கர். யுனெஸ்கோ உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றியவர் அப்படி ஒரு சர்வதேச தரத்தில் நம்முடைய நிறுவனங்களும் நடத்தப்பட வேண்டும் என்று எண்ணியவர். சென்னை பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று எண்ணியபோது அன்றைய முதல்வர் கருணாநிதி துணைவேந்தராகப் பொறுப்பேற்க ஆதிசேசய்யாவுக்குத்தான் அழைப்பு விடுத்தார். பின்னாளில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அப்படி ஓர் ஆளுமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணியபோது அனந்தகிருஷ்ணனை அவர் தேர்ந்தெடுத்தார்; இதுவும் ஆதிசேசய்யாவிடம் கலந்தாலோசித்து, அவருடைய பரிந்துரையை ஏற்று கருணாநிதி எடுத்த முடிவுதான். தமிழ்நாட்டின் முக்கியமான ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான ‘எம்ஐடிஎஸ்’, மால்கம் ஆதிசேசய்யாவின் குழந்தை. அந்நிறுவனம் தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகள் ஆகும் தருணத்தில் ஆதிசேசய்யா நினைவைப் போற்றும் விதமாக இந்தக் கட்டுரையை ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது. 

 

மால்கம் சத்யநாதன் ஆதிசேசய்யா 1910 ஏப்ரல் 18 அன்று வேலூரில் பிறந்தார். ஊரிஸ் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பால் ஆதிசேசய்யா - நேசம்மா ஆதிசேசய்யா ஆகியோர் பெற்றோர். தந்தை தத்துவப் பேராசிரியர். தாய் நேசம்மா வேலூர் நகராட்சியின் முதல் பெண் கவுன்சிலர் என்பதோடு, தம் தோழிகளுடன் ஆரம்பித்த ‘லேடீஸ் கிளப்’ மூலம் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்தவர். தந்தையின் தத்துவ அறிவும் தாயின் ஆளுமைத் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவராக விளங்கினார் மால்கம் ஆதிசேசய்யா.

வேலூர் ஊரிஸ் பள்ளியிலும், சென்னை லயோலா கல்லூரியிலும் பயின்ற ஆதிசேசய்யா, முதுகலைப் பட்டத்தை கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் பெற்றார். கொல்கத்தாவில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் 1931-36-ல்  பொருளாதார விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கிய அவர், முனைவர் பட்டத்தை ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’ நிறுவனத்தில் பெற்றுத் திரும்பிய பின், சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார் (1940-46).

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, அதாவது 1946ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள உலகப் பல்கலைக்கழகச் சேவை மைய உதவிப் பொதுச் செயலாளராகச் சேர்ந்தார் ஆதிசேசய்யா.  1948இல் இங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இவரைத் தேடி யுனெஸ்கோ பணி வந்தது. யுனெஸ்கோவின் முதல் பொதுச்செயலாளரான ஜூலியன் ஹக்ஸ்லி, தூதுவராக இருந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனிடம் இந்தியப் பிரதிநிதி ஒருவரை யுனெஸ்கோவுக்குப் பரிந்துரைக்கும்படி வேண்டினார்.  அவர் மால்கம் ஆதிசேசய்யாவைப் பரிந்துரைத்தார் (வேலூர் ஊரிஸ் கல்லூரியில் ஆதிசேசய்யாவின் தந்தையிடம் மாணவராகப் பயின்றவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.)

மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாமல் 1944-ல் தொடங்கப்பட்ட  யுனெஸ்கோவுக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது இந்தத் தமிழரின் வருகை.  இரண்டாம் உலகப் போர் (1939-45) நடைபெற்று உலகமே போரின் பின்விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆதிசேசய்யா தமது செயல்திட்டங்களால் 23 ஆண்டுகள் யுனெஸ்கோ மூலம் இடைவிடாது அதன் உறுப்பு நாடுகளின் கல்வி, பொருளாதார, கலாச்சாரங்களை மீள்கட்டமைத்தார்.  இந்த மீள்கட்டமைப்புக்கு உதவியாக இருந்தது தாம் பணியாற்றிய கல்கத்தா செயின்ட் பால்ஸ் கல்லூரி மற்றும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அனுபவங்களே என்று அவர் குறித்துள்ளார்.

1949இல் யுனெஸ்கோ தொழில்நுட்ப உதவித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட ஆதிசேசய்யா, தம்முடைய உழைப்பாலும் அறிவாற்றலாலும் யுனெஸ்கோவின் துணை இயக்குநர் நாயகமாக (1963-70) உயர்ந்தார். 1970ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் தமது பதவியைத் தாமாக ராஜிநாமாசெய்து தாய்நாட்டிற்காகப் பணியாற்ற இந்தியா வந்தார்.

சென்னை அடையாறு காந்தி நகரில் ஆராய்ச்சிக் கல்விக்காக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை (எம்ஐடிஎஸ்) 1971இல் தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் தமிழக-இந்திய கிராம வளர்ச்சி, சமூகப் பொருளாதார மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தார்.

தாய்நாட்டிற்குத் திரும்பினாலும் இவரது அறிவாற்றலையும் உழைப்பையும் உலக அமைப்புகள் பல பயன்படுத்திக்கொண்டன.  கனடாவிலுள்ள பன்னாட்டு வயதுவந்தோர் கல்வி மையத் தலைவர் (1972-78), பாரீஸிலுள்ள பன்னாட்டுக் கல்வி மற்றும் திட்டமிடல் நிறுவனத் தலைவர் (1981-91), எழுத்தறிவுக்காகப் பாடுபடும் தனிநபர்களை கௌரவிக்கும் யுனெஸ்கோ உலக எழுத்தறிவு விருதுத் தேர்வுக்குழுத் தலைவர் (1991-94) போன்ற பல்வேறு பொறுப்புகளும் அவரைத் தேடி வந்தன.

இந்திய அளவிலும், வயதுவந்தோர் கல்விச் சங்கத் தலைவர் (1975-79), சமூக அறிவியல் ஆய்வுச் சங்கத் தலைவர் (1975-79), சமூக வளர்ச்சிக்கான சபையின் தலைவர் (1980) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1971-1975இல் தமிழகத் திட்டக்குழு உறுப்பினராகவும், 1975-1978இல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், 1978-1984இல் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆதிசேசய்யா விளங்கினார்.

ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் மனித சமுதாயத்தின் கல்வி, பொருளாதார, கலாசாரத் தொண்டுக்காகப் பணியாற்றிய ஆதிசேசய்யா 1994 நவம்பர் 21இல் மறைந்தார். இதில் முதல் 25 ஆண்டுகள் சர்வதேச சமுதாயத்திற்கும் அடுத்த 25 ஆண்டுகள் தாய்நாட்டிற்கும் தொண்டு செய்யும் வாய்ப்பு ஆதிசேசய்யாவுக்கு அமைந்தது.

உலக வங்கி - யுனெஸ்கோ ஒப்பந்தம்

ஒரு கல்வியாளராக, பொருளாதார வல்லுநராக மட்டுமே ஆதிசேசய்யாவின் பங்களிப்பு குறித்து சர்வதேச அளவிலும் இந்திய- அளவிலும் குறிப்புகள் உள்ளன.  ஆனால் அவரின் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைபற்றி இன்னும் விரிவாக ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

கல்வி பற்றிய ஆதிசேசய்யாவின் சிந்தனை, செயல்பாடு ஆகியவை அதற்கு முன் வந்த பல்வேறு தலைமுறைச் சிந்தனையாளர்கள் சிந்திக்காத ஒன்றாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் எரிக் பிரபாகர். 

இரண்டாம் உலகப் போரின் விளைவால் உலக அளவில் 1944ஆம் ஆண்டு தோன்றிய பல நிறுவனங்களில் உலக வங்கி, பன்னாட்டு அறிவுசார் கூட்டு நிறுவனம் ஆகியவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தப் பன்னாட்டு அறிவுசார் கூட்டு நிறுவனமே 1946இல் யுனெஸ்கோவாக மாறியது.  போரினால் பாதிக்கப்பட்ட நாடுகள் மீள்வதற்கு கடன் அளிப்பது உலக வங்கியின் முக்கியப் பணி; இந்நாடுகளின் கல்வி, அறிவியல், கலாசார மீள்கட்டமைப்பு செய்வதே யுனெஸ்கோவின் பணி.  யுனெஸ்கோ தொடங்கப்பட்டபோது உலக அளவில் 27 நாடுகள் மட்டுமே உறுப்பு நாடுகளாக இருந்தன. அதிலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் கல்வி, தொழில், கலாச்சார மீட்டெடுப்பை குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி செய்வதற்காக யுனெஸ்கோ 1949இல் தொழில்நுட்ப உதவித் துறையை உருவாக்கியது. இந்தத் துறையின் முதல் இயக்குநர் பதவியில் அமர்ந்தார் ஆதிசேசய்யா. 

அப்போது யுனெஸ்கோ உறுப்பு நாடுகளுக்கு கல்விக் கடன் அளிக்குமாறும் உலக வங்கியை வேண்டினார் ஆதிசேசய்யா. ஆனால்,  உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குக் கடனுதவி அளித்து வந்த அவ்வங்கி, கல்விக்காகக் கடன் அளிப்பது என்பது தனது பணியில்லை என்று இதற்குச் சம்மதிக்கவில்லை.

“வறுமை ஒழியவும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் மக்களுக்கு கல்வி அவசியம்; அதற்கு உலக வங்கி உதவி செய்ய வேண்டும்” என்பதை மீண்டும் வலியுறுத்தி, யுனெஸ்கோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவைத்தார்.  முதன்முதலாக 1964இல் பிலிப்பைன்ஸ் நாட்டில் வேளாண் கல்லூரி அமைக்க உலக வங்கி கடன் அளித்தது. அதே வருடத்தில் ஆஃப்கன் கல்வி வளர்ச்சித் திட்டத்துக்கும் உலக வங்கி உதவி செய்தது.

உலக வங்கி கடனுதவியுடன் வளர்ந்துவரும் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் கல்வி வளர்ச்சிக்காக முறையே ‘கராச்சி திட்டம்’, ‘அடிஸ் அபாபா திட்டம்’, ‘சாண்டியாகோ-டி-சிலி திட்டம்’ ஆகியவற்றைச் செயல்படுத்தி அம்மக்கள் கல்வியில் முன்னேற்றமடையப் பெரும் பங்காற்றினார் ஆதிசேசய்யா.  

இத்திட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து யுனெஸ்கோவின் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இதுபோன்ற கல்வி வளர்ச்சித் திட்டங்கள் உலக வங்கி நிதி உதவியுடன் பின்னர் செயல்படுத்தப்பட்டன.

வளரும் நாடுகளின் கல்வி வளர்ச்சிக்காகக் கடன் அளித்தல் மட்டுமே போதாது; அவற்றைச் செயல்படுத்த அங்குள்ள ஆசிரியர்களுக்கும் வல்லுநர்களுக்கும் பயிற்சி அளிப்பதும் அவசியம் என்பதை உணர்ந்த ஆதிசேசய்யா அதற்கென ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கும்படி உலக வங்கிக்கு ஆலோசனை அளித்தார். ஆனால், உலக வங்கியோ அத்தகைய ஒரு நிறுவனத்தை யுனெஸ்கோ தொடங்குவதே சரியாக இருக்கும் என்றது.  இதனடிப்படையில் பாரீஸ் நகரில் 1981இல் பன்னாட்டுக் கல்வித் திட்ட நிறுவனம் (ஐஐஇபி) தொடங்கப்பட்டது.  இதன் தலைவராக முதல் பத்தாண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றினார் ஆதிசேசய்யா.

கல்வி வளர்ச்சிக்குக் கடன் அளிப்பதற்குத் தயங்கிய உலக வங்கி, இன்றைக்குத் தொழில்நுட்ப கல்விக் கூடத்தின் கட்டிடம் கட்டுவதற்கு நிதி கொடுப்பதிலிருந்து தொடக்கக் கல்வி பாடத் திட்டம் தயாரிப்பதுவரை அனைத்திற்கும் உதவி செய்யத் தயாராக இருக்கிறது என்றால் அதற்கு ஆதிசேசய்யா போட்ட அடித்தளமே முக்கியக் காரணம் எனலாம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ராஜ்ஜியம்

1975 ஆகஸ்ட் முதல் நாளன்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆதிசேசய்யா பொறுப்பேற்றுக கொண்டார். இப்பொறுப்பு அப்போதைய முதல்வர் கருணாநிதியின் நேரடி அழைப்பாகவே அவரை வந்தடைந்தது.

ஆதிசேசய்யா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் இருந்த மூன்றாண்டுக் காலம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொற்காலங்களில் ஒன்று. இப்பணியின்போது பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களின் அன்பையும் பெற்ற துணைவேந்தராக அவர் தனித்து நின்றார். ஆம்! 1976இல் சென்னையில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தின்போது பொதுமக்களுக்கு உதவிய அவரின் மனிதாபிமானமும் எளிமையும் வடசென்னை மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறது. 

ஆதிசேசய்யா ஆற்றிய பல்கலைக்கழகப் பணியைப் பற்றி தனிப் புத்தகம் எழுதுகிற அளவுக்குச் சாதனைகள் இருந்தாலும் இங்கு இரண்டு முக்கியமான தொலைநோக்குத் திட்டங்களை மட்டும் பார்ப்போம்.

அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்திருந்தால் அங்கு ஊழல் மலிந்துவிடும் என்பதாலும், சமச்சீரான வளர்ச்சி வேண்டுமானால் கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்பதாலும் அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர் கல்வி மையங்களைக் கோயம்புத்தூரிலும் திருச்சியிலும் ஆரம்பித்தார். இவைதான் பின்னர் முறையே பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களாக உருமாறின. (1967ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமே தமிழகத்தில் இருந்த ஒரே அரசுப் பல்கலைக்கழகமாகும். டாக்டர் லட்சுமணசாமி முதலியாரின் முயற்சியால் தென் தமிழக மக்களுக்காக மதுரையில் 1957ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று உயர்கல்வி மையம் தொடங்கப்பட்டது. 1966இல் இதனை மதுரைப் பல்கலைக்கழகமாக தமிழக அரசு அறிவித்தது.)

இதேபோல் கல்லூரிகளையும் அனைத்து மாவட்ட மக்களுக்காக விரிவுபடுத்த எண்ணி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளைத் தன்னாட்சி அதிகாரத்துடன் சுயநிதிக் கல்லூரிகளாக அமைக்க வழிவகை செய்தார். இக்கல்லூரிகளுக்கு மானியத்தொகையாகப் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து (UGC) ரூ. 5,00,000 நிதி உதவி பெற்றுத் தந்தார். 

ஆதிசேசய்யாவின் மற்றொரு தொலைநோக்குத் திட்டமாகப் பள்ளிக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, பல்கலைக் கல்வி ஆகியவற்றைத் தனித்தனியாக இயங்க அவர் வழிவகை செய்ததைச் சொல்லலாம். ‘இவை மூன்றும் ஒன்றல்ல; தனித்தனியாக இயங்கினால்தான் சமச்சீரான வளர்ச்சி ஏற்படும்’ என்று கருதினார் அவர். இதேபோல் பல்கலைக் கல்வி என்பது கலை அறிவியல் சார்ந்தது, தொழில்நுட்பக் கல்வி அல்ல என்பதால் தொழில்நுட்பக் கல்விப் பாடத்திட்டங்கள் கொண்ட துறைகளை (தோல் மேலாண்மை, பின்னலாடைத் தொழில்நுட்பம், கட்டிடக்கலை, நகரத் திட்டமிடல்) அழகப்பா செட்டியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியோடு இணைத்தார்.

அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டதாக ஆங்கிலவழிக் (கட்டண) கல்வி போதிக்கும் பள்ளிகள் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 29 மெட்ரிகுலேஷன் பள்ளிகள்) இயங்கிவந்தன.  ‘பல்கலைக்கழகம் உயர் கல்வியிலும் ஆராய்ச்சிக் கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக் கல்வி வேறு; பல்கலைக் கல்வி வேறு; அதனால் இப்பள்ளிகளை பல்கலைக்கழகத்திலிருந்து விடுவித்து பள்ளிக் கல்விக்குக் கீழ் கொண்டுவர வேண்டும்’ என்று அரசுக்குப் பரிந்துரைத்தார். 

இப்படிப் பரிந்துரைத்ததோடு நில்லாமல் இது தொடர்பாக அந்தந்தப்  பள்ளி முதல்வர்கள்/தாளாளர்களுக்கும் முறையாகக் கடிதம் எழுதி அவர்களை அழைத்துப் பேசினார். அவர்களில் சிலர் ‘பல்கலைக்கழகத்திலிருந்து விடுபடுவது வருத்தமளிக்கிறது’ என்றனர்; சிலர் ‘மத்திய கல்வி வாரியத்தோடு இணைந்துகொள்கிறோம்; அதற்கு நீங்கள் உதவ வேண்டும்’ என்றனர்; சிலர் ‘இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறோம்’ என்றனர். இந்தப் பரிந்துரையை அரசும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் துணைவேந்தரை மறுபரிசீலிக்கச் சொன்னது. ஆதிசேசய்யா அசைந்து கொடுக்கவில்லை. பல மாதங்களுக்குப் பிறகு ஒருவழியாக அரசு இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பித்தது.

தமிழும் ஆதிசேசய்யாவும்

கால் நூற்றாண்டாக யுனெஸ்கோவில் பணியாற்றினாலும் ஆதிசேசய்யாவுக்குத் தமிழ்மொழி மீதும் தமிழ்ப் பண்பாடு மீதும் அங்குப் பணியாற்றும்போதே மிகுந்த பற்று இருந்ததென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

யுனெஸ்கோவில் அலுவல் மொழியாக இருந்தவற்றில் (பிரெஞ்சு, சீனம், ஸ்பானீஷ், ரஷ்யம், அரபு, ஆங்கிலம் )மட்டுமே வெளியாகிக்கொண்டிருந்த ‘கூரியர்’ மாத இதழை 1967ஆம் ஆண்டிலிருந்து தமிழிலும் கொண்டுவர ஏற்பாடு செய்தது;

மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்துவதற்கு உதவி புரிந்தது; அம்மாநாட்டின் தொடக்கவுரையை பிரெஞ்சு, ஆங்கிலத்தோடு தமிழிலும் ஆற்றியது;

திருக்குறளை யுனெஸ்கோ மூலம் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், ஜெர்மன், அரபு மொழிகளில் வெளியிட்டது;

கட்டிடக் கலைக்குப் பேர்போன தமிழகக் கோயில்களைப் புனரமைக்கவும் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கவும் உதவியது;

1970இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்க யுனெஸ்கோ மூலம் உதவியது; தமிழ் அறியாத அயலகத்தார் தமிழ் கற்றுக்கொள்ள வசதியாக ஒலி&ஒளிக் கருவிகளை நன்கொடையாக அளித்தது; இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாகத் தேவாரத்தை வெளியிட நிதி அளித்தது.

எல்லாவற்றுக்கும் மேல் ஆதிசேசய்யாவின் புழங்குமொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சுமே இருந்தாலும், தனக்கு தமிழில் வருகிற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவது என்கிற அளவுக்குத் தமிழ் மீது பற்றுகொண்டிருந்தார் அவர் என்பதை பேராசிரியர் எஸ்.நீலகண்டன் எழுதியிருக்கிறார். பொள்ளாச்சி மகாலிங்கம் நடத்திவந்த ‘சக்தி’ இதழுக்காக அவரிடம் கட்டுரை கேட்கப்பட்டபோதெல்லாம் சிரமம் பொருட்படுத்தாமல் தமிழில் கட்டுரைகளை எழுதியனுப்பினார் ஆதிசேசய்யா.

கல்வித் திட்டங்களின் தந்தை

‘இந்தியாவில் திட்ட நடவடிக்கையின் தந்தை: ஸ்ரீ எம். விஸ்வேஸ்வரய்யா’ என்று மைசூர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவைச் சொல்வதுபோல, ‘உலகக் கல்வித் திட்டங்களின் தந்தை’ என்று மால்கம் ஆதிசேசய்யாவை  அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கல்வியைச் சமூகப் பொருளாதார மாற்றத்துக்கான கருவியாகவே அவர் பார்த்தார். இதே மனநிலையில் நேருவும் இருந்ததை ஆதிசேசய்யா தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியக் குடியரசின் ஆரம்ப காலங்களில் அனைத்து மாநிலங்களும் சமச்சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன.  1951 முதல் 1979 வரை 5 ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இடையில் இந்திய-சீனப் போர் காரணமாக மூன்றாண்டுகள் (1967-1969) ஓராண்டுத் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டன.

முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் மூன்று ஓராண்டுத் திட்ட காலத்தில் ஆதிசேசய்யா யுனெஸ்கோவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். 1970இல் அவர் இந்தியா திரும்பியபோது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியமைந்தது மட்டுமல்லாமல், அது அமைந்த இரண்டாண்டுகளில் அதன் நிறுவனர் சி.என்.அண்ணாதுரை மறைந்து, மு.கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அண்ணாவின் நண்பரான மால்கம் ஆதிசேசய்யாவின் சுறுசுறுப்பையும் அறிவாற்றலையும் அவர் யுனெஸ்கோவில் பணியாற்றும்போது பாரீஸில் நடத்திய மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டின்போதே அவர் அறிந்திருந்தார்.

இந்தியக் குடியரசு நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1969-1974) செயல்படுத்துகிற நேரத்தில், முதன்முதலாகத் தமிழகத்தில் மாநிலத் திட்டக் குழுவைத் தொடங்கினார் முதல்வர் மு.கருணாநிதி. இத்திட்டக் குழுவில் ஆதிசேசய்யா கல்வி, அறிவியல், தொழில்நுட்பத் திட்டங்களை தயாரிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார்.  இதுபற்றி அவர் குறிப்பிடுவதாவது: “25 ஆண்டுகள் யுனெஸ்கோ சேவைக்குப் பின்னர் 1970-ஆம் ஆண்டில் தாயகம் திரும்பினேன். உடனே கலைஞர் என்னைத் தமிழ்நாட்டின் திட்டக்குழுவிற்கு உறுப்பினராக்கிப் பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார்.  அப்போது மாநில திட்டக்குழு 12 ஆண்டு கால முன்னோக்குத் திட்ட நகலைத் (1972-1984) தயாரிக்கும் பணியில் இருந்தது.  நான் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய திட்ட ஆய்வுகளுக்கு பொறுப்பு வகித்தேன்.”

மேற்கண்ட ஆதிசேசய்யாவின் கூற்றிலிருந்து தமிழகத் திட்டக்குழு, இந்திய திட்டக்குழுவிலிருந்து சற்று வேறுபட்டுத் தொலைநோக்கோடு திட்டங்களைச் செயல்படுத்த அமைக்கப்பட்டதாகக் கருதலாம். ஏனெனில் இந்திய திட்டக் குழு ஐந்தாண்டுகளுக்கு போடப்பட்டு வந்தது, ஆனால் தமிழகத் திட்டக்குழுவோ அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசனை வழங்கப் பணிக்கப்பட்டது. காங்கிரஸுக்கு மாற்று அரசாக திராவிட ஆட்சி செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி பன்னிரெண்டு ஆண்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட்டிருக்கலாம்.

1975ஆம் ஆண்டு ஆதிசேசய்யா சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1977இல் இந்தியக் குடியரசில் மாற்றம் ஏற்பட்டது. மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரதமரானார். யுனெஸ்கோவில் பணியாற்றும்போதே ஆதிசேசய்யாவின் திறமையையும் அறிவாற்றலையும் இந்திரா காந்தி நன்கு அறிவார். ஆனாலும் 1978ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் காலத்தில்தான் ஆதிசேசய்யா இந்திய மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டார்.

இந்தக் காலத்தில் (1970-1978) ஆதிசேசய்யா தமிழகத் திட்டக்குழு உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகிய பணிகளோடு தாம் உருவாக்கிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு சமூகப் பொருளாதார ஆய்வுகளையும் முன்னெடுத்தார். யுனெஸ்கோவிலிருந்து திரும்பிய எட்டாண்டுக் காலமும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பாடுபட்டார்.

1978இல் மாநிலங்களவை உறுப்பினரான பின்பு இந்தியக் குடியரசின் பல்வேறு திட்டங்கள் - குறிப்பாக தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, தொலைதூரக் கல்வி, வயது வந்தோர்க்கான கல்வி மற்றும் சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் - இவரின் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்பட்டன.

மீண்டும் 1980 இந்திரா காந்தி இந்தியக் குடியரசின் பிரதமரானார் (அப்போது தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய முதல்வராக எம்.ஜி.இராமச்சந்திரன் பொறுப்பேற்றிருந்தார்). 1980-1985ஆம் ஆண்டு ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார்.  இவர் காலத்தில் (1985-1989) ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1990இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதும், 1991இல் சந்திரசேகர் பிரதமராக இருந்தபோதும் ஓராண்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 1992இல்தான் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் பிரதமர் நரசிம்மராவ் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இக்காலகட்டங்களில் எல்லாம் வறுமை ஒழிப்பு, அனைவருக்குமான கல்வி, ஏழைகளின் முன்னேற்றம் ஆகியவற்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு ஆதிசேசய்யா பணியாற்றியதை நாம் அறிந்துகொள்ள அவரது கட்டுரைகள் உதவுகின்றன.

கல்வியாளராக, பொருளாதார வல்லுநராக மட்டுமே அதிகம் பேசப்பட்ட ஆதிசேசய்யா, சிறந்த நிர்வாகியாக, பன்முக ஆளுமையாளராக, தொலைநோக்குத் திட்டங்களின் நாயகராக, அரசியல் வேறுபாடில்லாத நடுநிலைமையான ஆய்வாளராக இன்னும் முறையாக ஆய்வுசெய்யப்பட வேண்டும்.

தன்னுடைய ‘மக்கள்தொகையியலும் முன்னேற்றமும்: சில பரிமாணங்கள்’ என்ற ஆதிசேசய்யாவின் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள வாசகம் அவர் வாழ்க்கையோடு மிகவும் நெருக்கமானதாகத் தோன்றுகிறது. 

 “சுதந்திரமாகத் தீர்மானியுங்கள்; 
அதே சமயத்தில் பொறுப்புணர்வுடன் தீர்மானியுங்கள்; 
பிற தேவைகளையும் கருத்தில் கொண்டு தீர்மானியுங்கள்!”

 

கட்டுரையாளர் ஆ.அறிவழகன் தொகுப்பில் மால்கம் ஆதிசேசய்யாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘இந்தியப் பொருளாதாராம்: வரலாறு காட்டும் வழிகள்’ என்ற தலைப்பில், எம்ஐடிஎஸ் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மேலே கட்டுரையாகத் தரப்பட்டிருக்கிறது. 250 பக்கங்களில் ரூ.250 விலையில் வந்திருக்கும் இந்நூல் ஆதிசேசய்யாவின் சிந்தனைகளை அறிந்துகொள்ள நல்ல அறிமுகம் என்று சொல்லலாம்.

புத்தகத்தைப் பெற தொடர்புக்கு: மின்னஞ்சல்: pub@mids.ac.in தொலைபேசி: 044-24411589, 24419771, 24411574 

 

ஆ.அறிவழகன்

ஆ.அறிவழகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிப்புத் துறையில் பணியாற்றுகிறார். ‘வெள்ளந்தி மனிதர்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   8 months ago

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செய்திகளையுமே இப்பொழுதான் தெரிந்துகொண்டுள்ளேன். நன்றி அருஞ்சொல்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பெண்கள்எண்ணிக்கை குறைவுபாலியல் வண்புணர்வுஜாட்டுகள்தென்னிந்தியர்கள்எலும்புகள்கே.சந்துருஆகார் படேல்கடவுள் மறுப்புஆசிஷ் ஜா: பிஹாரின் சமீபத்திய கௌரவம்நவீன் குமார் ஜிண்டால்பன்மொழி அதிகாரம்ஜப்பான்சிந்தனைபி.எஸ்.மூஞ்சிநான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா?காங்கிரஸ் தோல்விஇந்திரா நூயி அருஞ்சொல்குடிமக்கள் ‘எதிர்’ அரசு ‘எதிர்’ தனியுரிமைபெருமாள்முருகன் அருஞ்சொல்மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்ஸ்ரீதர் சுப்ரமணியம்சமஸ் கி.ரா.தமிழ் தாத்தாபுதிய வேலைபட்டினி குறியீட்டு எண்சோஸியலிஸம்ramachandra guha articles in tamilஜொமெட்டோலத்தீன் அமெரிக்க இலக்கியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!