கட்டுரை, வாழ்வியல், இரு உலகங்கள் 10 நிமிட வாசிப்பு

வெர்சுவல் லவ்தான் பெண்களுக்குப் பிடிக்கிறதா?

அராத்து
29 Jan 2022, 5:00 am
1

 

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.

ணும் பெண்ணும் ஈர்க்கப்பட்டு, கசிந்துருகி இந்தக் கேடு கெட்ட உலகில் இருந்து விலகி, தனியான ஒரு சொர்க்கலோகத்தில் மிதக்கும் நிலைதான் காதல். வாழ்வில் எப்பாலருக்கும் மிகமிக அற்புதமான தருணம் காதலில் இருக்கும் தருணம்தான். இவ்வளவு சிறப்பான ஒரு நிலை நீடிக்க வேண்டும் என்றுதானே அனைவரும் விரும்புவார்கள்? ஆனால், ஏன் பெரும்பாலானோர்க்கு நீடிப்பதில்லை? இந்த அற்புத நிலையைக் கெடுத்துக்கொள்வதில் ஆண் - பெண் இருவருக்கும் பங்கிருக்கிறது என்றாலும், பெண்களின் கைங்கர்யத்தைப் பார்ப்போம்; ஆயிரம் இருந்தாலும் நான் ஆண்தானே; எங்கள் தரப்பிலிருந்துதானே பேசுகிறேன்!

நாம் அனைவரும் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் காட்டுவோம் என்றாலும், மொத்தமாக வேறு மனிதராக மாறுவதில்லை. ஆனால், பெண்கள் காதலில் நுழைந்ததும் ஒரு புத்தம்புது மனுஷியாகப் புது அவதாரம் எடுக்கிறார்கள். இந்த அவதாரம் அவர்களுடைய காதலர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இவர்களும் வெளிப்படுத்த மாட்டார்கள். 

இப்படி ஒவ்வொரு பெண்ணும் புது அவதாரம் எடுப்பது மட்டுமல்லாமல் அவளுடைய காதலுக்கென ஒரு புது ‘விர்ச்சுவல் உலகு’ ஒன்றையும் படைக்கிறாள். அந்த உலகுக்கான சட்டத்திட்டங்களை அவளே எழுதுகிறாள். முதலில் அன்புடனும் காதலுடனும் அந்தச் சட்டங்களை அவனுக்குப் பயிற்றுவிக்கிறாள். காதல் மயக்கத்தில் கள்ளுண்டவன்போல மயங்கிக்கிடக்கும் இவன் அப்போதைக்கு அவள் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு, பிறகு அந்த அபத்தமான சட்டங்களை மீறும்போது அவள் ‘தேவதை’ அவதாரத்திலிருந்து ‘ராட்சஷி’ அவதாரத்திற்கு நகர்கிறாள்! 

தெல்லாம் காலங்காலமாக நடக்கும் கதைதானே! இப்போது ஏன் இவ்வளவு மோசமாக ஆண் – பெண் உறவு சிக்கலாகியிருக்கிறது என்றுதானே கேட்கவருகிறீர்கள்!

மொபைல், ஆன்லைன் வருவதற்கு முன்பும் இதேபோல, பல அபத்த விதிமுறைகளைப் பெண் வகுத்து, செயல்படுத்திவந்தாலும், அவை ஓரளவு கட்டுக்குள் இருந்தன. இந்த நவீன கண்டுபிடிப்புகள் இன்றைய யுவதிகள் மென்மேலும் படு அபத்தமான விதிமுறைகளை காதலில் வகுத்துக்கொள்ள உதவுவதோடு, தங்களது அபத்தமான ‘வெர்சுவல் உலகு’க்குள் அவர்களை மேலும் வசதியாக வாழ வகுக்கின்றன என்பதும், உறவு சிக்கலாக இவையும் முக்கியமான காரணம் என்பதுமே இன்றைய பிரச்சினை!

எனக்குத் தெரிந்த என்னுடன் பழகிய சில காதலர்கள் அடிக்கும் கூத்துகளை உதாரணமாகத் தருகிறேன். 

1) தினமும் காலையில் எழுந்த அடுத்த கணம் இருவரும் செல்ஃபி எடுத்து ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்ள வேண்டும். 133-வது செல்ஃபிக்கு மேல் இருவரும் அனுப்பிக்கொள்ளத் தேவையில்லாமல் ஆனது.

2) இருவரும் விடியோ கால் செய்து பேசி முடித்துவிட்டு, அதை துண்டிக்காமல் வைத்துக்கொண்டே தூங்க வேண்டும். 

3) தினமும் அவளுக்கு ஒரு செல்லப்பெயர் வைத்து அனுப்ப வேண்டும். அன்று முழுக்க அவளை அப்படியே கூப்பிட வேண்டும். 

4) போன் பேசி முடித்துவிட்டு வேறு வேலை பார்த்தால் போச்சு. அடுத்த கணம் தாக்கீது வந்துவிடும். இரண்டு மணி நேரம் போன் பேசி முடித்தாலும், அடுத்து தொடர்ந்து வாட்ஸப்பில் ஒரு மணி நேரம் டெக்ஸ்டிங்க் செய்துவிட்டு, பிறகு மெசேஞ்சரில் ஏதேனும் லிங்க் - புகைப்படம் பகிர்ந்துவிட்டு, கடைசியாக வேறு ஏதேனும் செயலி மூலம் வேறு ஏதேனும் பூவோ, வாழ்த்து அட்டையோ அனுப்பிவிட்டு, கடைசியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பி, இப்படியே ஓட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையெனில் பிரச்சினை வேறு விதங்களில் பூதாகரமாக உருவெடுக்கும். 

5) எல்லாவற்றையும்விட ஆபத்து இது, ஆம்… ஈமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் கடவுச் சொற்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். 

இதைப் போல ஆன்லைன் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்களால், இப்படியான பிணைப்பிறுக்கத்தை நிஜ வாழ்வில் கொண்டுவர முடியாததால், தடுமாறுகிறார்கள்.

டெக்ஸ்டிங்கில் முழுவதுமாகவே இதுதான் மொழியாக இருக்க வேண்டும்: “செல்லக்குட்டி”, “என் தங்கமே”, “அழகுக்குட்டி”, “என் தேவதை”.

இப்படியெல்லாம் செல்பேசியில் சகஜமாகத் தட்டிவிடும் ஆண்களுக்கு நேரிலும், எல்லா நேரத்திலும் பெண் இதையே எதிர்பார்க்கும்போது நாக்கு தாவாங்கட்டை தட்டிவிடும்.

ஆண்களைவிடத் தற்காலப் பெண்களுக்கு மொபைல் காதல் மற்றும் மொபைல் காமம் மிகவும் பிடித்திருக்கிறது என்பது என் அனுமானம். செல்பேசியில் அவர்களால் தங்கள் அழகைக் கூட்டிக்காட்ட முடிகிறது, மொபைலில் அவர்கள் உருவத்தை அவர்கள் விரும்பும் வகையில் வடிவமைத்துக்கொள்ள முடிகிறது. அப்படியே காதலையும் தன் விருப்பம்போல ஓர் உலகுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

 

ப்படி விர்ச்சுவலாக காதலை வளர்த்துக்கொண்டிருந்துவிட்டு, நேரில் சந்திக்கும்போது நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையில் ஏற்படும் இடைவெளியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், விர்ச்சுவல் சண்டையில் தொடங்கும் யுத்தம் நிஜ உலகுக்கு இடம் மாறும்போது எல்லாக் கணக்குகளும் மாறுகின்றன.

காதலில் இருக்கும் ஜோடிகள் நேரில் சந்திக்கையில் சந்திக்கும்போது ஏற்படும் முக்கியமான பிரச்சினை என்னவெனில், கவனிப்பது! 

காதலன் பேசுகையில், உம் கொட்டிக்கொண்டே, மொபைலை நோண்டுவது, அவன் பேசுவதற்கு ஒரு சிறு பதில்கூட சொல்லாமல் இருப்பது, அதற்கு ஒரு முகவசைவின் மூலம் ஒரு சின்ன அக்னாலேஜ்மென்ட்கூட கொடுக்காமல், அடுத்து ஏதோ ஒரு மேட்டருக்குத் தாவும் பெண்கள், தாங்கள் பேசும்போது மட்டும், ஆணுடைய முழுமையான கவனத்தைக் கோருகிறார்கள். 

அப்புறம் இன்னொன்று, ஆண்களின் பார்வையில் நாளுக்கு நாள் பெண்களின் உலகம் சுவாரசியமற்றதாகிப்போகிறது. அதாவது காதலனுக்கு அந்தக் காதலி மட்டுமே கவர்ச்சிகரமானவள். அவள் சார்ந்த மற்ற விஷயங்கள் – அது பெரும்பாலும் செக்குமாடுபோல ஒரே விஷயத்தைச் சுற்றுவதால் - சுவாரசியமற்றவை. ஆனால், அவளோ தன்னைப் போலவே தான் சார்ந்த அனைத்து விஷயங்களுமே சுவாரசியமானவை என்று நம்புகிறாள். தான் சார்ந்த அனைத்து விஷயங்களையுமே காதலன் சுவாரசியமாக கவனம் கொடுத்துக் கேட்க வேண்டும்; அவன் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். 

அவள் தன் உறவினர்கள், அலுவலகத்தில் நடந்த உப்பு பொறாத விஷயம் என எதுவாக இருந்தாலும் தேவதை நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எக்ஸைட்டிங்காக விவரிக்கும்போது நம் ஆளுக்குத் தூக்கம் வருகிறது. சுவாரசியமற்ற விஷயங்களைக்  கவனிக்காத இந்த ஆண்களின் தன்மையைத்தான் பெண்கள் ‘கேரிங் இல்லை’ என அடையாளப்படுத்துகிறார்கள். 

ஆண் - பெண் வேறுபாட்டில் முக்கியமான ஒரு விஷயத்தைக்  குறிப்பிட்டுக் காட்ட வேண்டியிருக்கிறது. காதலில் இருவர் இருக்கையில் ஏற்படும் மோதலில் இது ஒரு பிரதான காரணம் வகிக்கிறது. 

ஆண் காதலில் இருக்கும்போது இன்னொரு பெண்ணை, “நீ அழகாக இருக்கிறாய்!” என்று சொல்வது காதலிக்குக் கொலை வெறியை உண்டாக்கும். அவள் நான் எந்த அடுத்த ஆடவனையாவது “ஹேண்ட்சம்மாக இருக்கிறாய் என்று சொல்லியிருக்கிறேனா!” என்று நியாயம் கேட்பாள். ஆனால் அவள், அவளை அழகாக இருக்கிறாய் என்று சொன்ன பல ஆடவர்களுக்கு “தேங்க்யூ” என்று பதிலுரைத்திருப்பாள். 

இரண்டும் ஒன்றுதான் என்று அவளுக்குப் புரிவதே இல்லை. ஆண்களால் இதை எடுத்துச் சொல்லவே முடிவதில்லை.

அதேபோல, தன்னுடைய கடந்த கால வாழ்வை ஆண்கள் சொல்லும்போது தங்களை ‘அக்யூஸ்ட்’ போலவே சித்திரித்துக்கொள்வதில் வல்லவர்கள். அவர்கள் அப்படிச் சொல்லவில்லையெனினும் அவர்கள் அதைச் சொல்லுகையில் ஒரு கிரிமினலிடம் ஸ்டேட்மென்ட் வாங்கிக்கொள்வதைப் போலவே வாங்கிக்கொள்வதில் பெண்கள் வல்லவர்கள். 

இதற்கு நேர் மாறாக, பெண்கள் எப்போதும் தங்கள் கடந்த கால வாழ்க்கையைச் சொல்லுகையில் ஓர் அபலைபோலவோ, அப்பாவிபோலவோ சொல்வதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதிலும் ஒன்றுமே தெரியாதவர்கள்போலவும், தங்களுக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதது போலவும் சொல்லுவார்கள். இதை நம்பத் தலைப்படும் நிலையில்தான் பெரும்பாலான ஆண்கள் இருப்பார்கள். ஆனால் காதலின் தேன்நிலவு முடியும்போது இந்தப் பழங்கதைகள் பூதாகரமாக உருவெடுக்கும். அப்போது கையாள முடியாத அளவுக்கு எல்லாம் கைமீறி போயிருக்கும். 

காதல் என்பது இருவருக்கும் பொதுவானது என்பதையும் பெண்கள் உணருவதில்லை. தங்களின் நகைபோல, தாங்கள் வளர்க்கும் நாய்போல, தங்களின் காதலையும் கருதிக்கொள்கிறார்கள். அந்தக் காதலில் காதலன் என்ற கதாபாத்திரம் தேவை என்பதால் அங்கு காதலன் இடம்பெறுகிறான், அவ்வளவுதான். அது அவர்களின் காதல். இருவரின் காதல் அல்ல.

காதல் நன்றாக இருக்கும்போது பெண்களிடம் பெரிய பிரச்சனை இல்லை. அதில் ஒரு சிறு கீறல் விழும்போது பெண்கள் ஒட்டுமொத்தமாக ஆண்களை நிராகரித்தும், மொத்த வாழ்வை நிராகரித்தும் பேசும் இடத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். அதுவரையிலான வாழ்வுக்கு சிறு நியாயத்தைக்கூட அவர்கள் வழங்குவதில்லை. பல பிரேக் அப்கள் கதை இதுதான். “அவள் ஏன் பிரேக் அப் செய்தாள் என்ற காரணம்கூட எனக்குத் தெரியாது” என்பார்கள் பல ஆண்கள். 

பெண்கள் துண்டித்துவிடுவதில் வல்லவர்கள். இதில் அவர்கள் தேர்ந்த சைக்கியாட்ரிஸ்ட்போல செயலப்டுவார்கள். நுட்பமாக செயல்பட்டு கத்தரித்துவிடுவார்கள். தவறான துணையைத்  தவறாக தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதை கத்தரித்துவிடுவதில் தவறே இல்லை. ஆனால் நேர்மையாக, இன்ன காரணம் என்று சொல்லி துண்டித்துவிடுவதில் என்ன சிக்கல்? இந்தக் கேள்வி பல ஆண்களுக்கு உண்டு.

ஈருடல் ஓருயிர் என்றெல்லாம் அளவுக்கதிகமாக காதல் வயப்படும் அதே பெண்தான் இப்படியும் இருக்கிறாள். இதில் ஆண்களை நான் புனிதப்படுத்தவில்லை. ஆனால்,  பெண்களைப் போல காதலை முறிக்கும்போது இப்படி புதிர்த்தன்மையுடன் ஆண்கள் செயல்படுவதில்லை.

இந்தப் புதிர்த்தன்மைக்கு இந்தத் தொழில்நுட்ப யுகம் மேலும் வலு சேர்த்திருக்கிறது. அதாவது, பெண்கள் தாங்களாக வடிமைத்துக்கொள்ள விரும்பும் கற்பனை உலகத்தை உண்மையான உலகம் என்று அவர்களே முழுமையாக நம்புவதற்கேற்ற சாத்தியங்களை இது கூடுதல் ஆக்கியிருக்கிறது. விளைவாக, உயிருள்ள இணையைவிட உயிரற்ற இடத்தில் உள்ள இணை முக்கியத்துவம் பெறுகிறது. இது பெரிய சந்தோஷத்தைக்கூடத் தரலாம். ஆனால், அந்த சந்தோஷம் எவ்வளவு நாட்கள் இடம் என்பதுதான் கேள்வி. ஏன் சகல பல-பலவீனங்களோடு ஓர் உயிரை நம்மால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் கேள்வி.  அப்படியென்றால், இந்தக் காதல் உண்மையாகவே காதல்தானா என்பதே கேள்வி!

(பேசுவோம்)

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


7

21


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Kumaresan Krishnasamy   3 years ago

அருமை. அராத்துவின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு உளவியல் மருத்துவரின் நேர்காணல் போலிருக்கிறது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

samas aruncholதேசிய அரசியல்பேட்ஸ்மன்மாநில மொழிவழிக் கல்விகடல்பரப்புப் பாதுகாப்பு ஆய்வுஉடல் எடையைக் குறைப்பது எப்படி அருஞ்சொல்ஜிஎஸ்டி தொடர்பான தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?பயிர்வினோத் கே.ஜோஸ் பேட்டிசஞ்சய் மிஸ்ராஇஞ்சி(ரா) இடுப்பழகா!பொதுச் சமையல்பூனா ஒப்பந்தம்: சில உண்மைகள்தொண்டர்களுக்கு ஆறுதல்ஃபின்லாந்துக் கல்வித் துறை 21ஆம் நூற்றாண்டுமோடி - அமித் ஷாவுக்குப் பிறகு பாஜகவில் யார்?இரட்டைத் தலைமைதிருத்தம்திராவிட இயக்க இதழ்கள் புறக்கணிக்கப்பட்டனவா?இசை மேதைகள்அருஞ்சொல் டி.எம்.கிருஷ்ணாமருத்துவ மாணவர்கள்என்னதான்மா உங்க பிரச்சினை?ஐந்து மாநிலங்கள்ஜெயின்கள்உலக வர்த்தகம்தமிழ்நாடு கேடர்ஆவணம்சமஸ் - நர்த்தகி நடராஜ்ஏழாவது கட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!