வாழ்வியல், இரு உலகங்கள் 8 நிமிட வாசிப்பு

மியாவ் மியாவ்.. வள் வள்!

அராத்து
08 Jan 2022, 5:00 am
2

 

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.

 

ண் - பெண் உறவுச் சிக்கலில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை புரிந்துகொள்ளாவிட்டாலும் பெரிய சிக்கல் இல்லை. எப்படியாவது வண்டி ஓடிவிடுகிறது. ஏனென்றால், இந்த அடிப்படைப் புரிதல் சிக்கல்களால் தங்கள் இணை மீது யாருக்கும் ஜென்மப் பகையோ, நிரந்தர விரோதமோ வருவதில்லை. இன்னும் கேட்டால், சில மணி நேரங்களில் அல்லது சில நிமிடங்களில்கூட இதனால் ஏற்படும் எரிச்சலிலிருந்து மீண்டு, காதல் துளிர் விட்டுவிடும்.

கணவனுக்காக மனைவி ரசித்து, கவனம் செலுத்தி ஒரு காபி போட்டுக்கொண்டு வந்து கொடுக்கையில், அவள் கண்களைக்கூட கவனிக்காமல், இடது கையால் வாங்கி வைத்துக்கொண்டு, லேப்டாப்பை நோண்டிக்கொண்டு, எருமை மாடு ‘சுர் புர்’ என்பதுபோல அதைக் குடித்தால் மனைவிக்குக் கொலை வெறி வரத்தான் செய்யும்.

ஆனால், இதனால் உண்டாகும் சண்டையின் முடிவில், அடுத்த சில நிமிடங்களில் ஒரு கதகதப்பான கட்டிப்பிடித்தல் மூலமோ அல்லது மிருதுவான முத்தம் மூலமோ இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

ஒரு ஆண் சீரியஸாக அலுவலக மெயில் டைப் செய்துகொண்டிருக்கும்போது, “ஏங்க, எங்க சித்திப் பொண்ணு இருக்கு இல்ல; அதோட பாய்ஃபிரண்ட்டுக்கு வழுக்கை விழுதாம்; உங்களுக்குத் தெரிஞ்ச ஆயுர்வேத டாக்டர்கிட்ட சொல்லி...” என்று எதையாவது மனைவி வளர்த்திக்கொண்டு செல்லும்போதும், லேப்டாப்பைத் தூக்கி அடிக்கலாம் என்று கணவனுக்கும் தோன்றத்தான் செய்யும்.

அப்போதைக்கு ‘சுள் வள்’ என நாயவதாரம் எடுத்து எச்சில் தெறிக்கக் கத்தினால், அவள் முகத்தை ஆமை முகம்போல மாற்றிக்கொண்டு வெறுப்பில் சென்றுவிடுவாள். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் குளித்து முடித்து ஈரத்தலையுடன் இடையில் மின்னல் தெறிக்கும் படிக்கு அரக்கு வண்ண காட்டன் புடவை கட்டி கண்ணாடி முன்பு நின்று மையிட்டுக்கொண்டு இருக்கும்போது சற்று நேரத்துக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.

இன்னும் சொல்லப்போனால், இருவருக்குமிடையிலான இந்த அடிப்படை ‘கம்பேடபிளிட்டி பிரச்சினை’ ஒருகட்டத்தில் சுவாரஸ்யமான நக்கலாகவோ அல்லது அடுத்தவரால் ரசிக்கும்படியான விஷயமாகவோ போய்விடும். “என் குட்டியானுக்கு, கேம் ஆடிகிட்டு இருந்தா நான் எவ்ளோ செக்ஸியா டிரஸ் போட்டுட்டு வந்து நின்னாலும் கண்ணுக்குத் தெரியாது!” என்று செல்லம் கொஞ்சிக்கொண்டே பின்னங்கழுத்தில் அவள் முத்தமிட்டால், அவன் கேம் ஆடுவதைத் தூக்கிப்போட்டுவிட்டு, ஒரு வினாடியில் இந்த ‘கம்பேடபிலிட்டி பிரச்சினை’ முடிவுக்கு வருவது எங்கனம்?

யாரும் தங்களை அடுத்தவருக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்வதில்லை. அவரவர் அப்படியே தொடர்ந்தாலும், அது பெரிய சிக்கலாகாமல், தங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை செய்யும்போதுகூட கோபம் வராமல், எப்படி ரசிக்கக் கூடிய விஷயமாக, செல்லம் கொஞ்சக்கூடிய விஷயமாக எது மாற்றுகிறது?

காரணம் காதல். காதலில் ஒருவரை ஒருவர் ஏமாற்றவில்லை. அடுத்து காமம். இருவருக்கும் இடையில் நிறைவான காமம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இவை இரண்டு மட்டும் சரியாக செட்டாகிவிட்டால் மற்ற பிரச்சினைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் அல்லது ஒன்றுமே இல்லாததாகிவிடும். உச்சகட்டமாக அது கொண்டாடப்படக்கூடிய விஷயமாகக்கூட ஆகிவிடும். “அது ஒரு தத்தி. ஒழுங்கா போய் கத்திரிக்காகூட வாங்கிட்டு வரத் தெரியாது, எங்க போனாலும் ஏமாந்துட்டு வரும்” என்று காதல் பொங்க சில பெண்கள் சொல்வதை நீங்கள் கவனித்து இருக்கக்கூடும். இதே விஷயத்தில், காதல் மிஸ் ஆகிவிட்டால், வார்த்தைகள் எப்படி சுடுசுடுவென்று வரும் என்பது உங்களுக்கே தெரியும்.

நண்பர்கள் பர்த்டே பார்ட்டியில் ஒரு ஆசாமி இரவு 8 மணிக்கே கிளம்புவான். பெருமாள் கோயில் தீர்த்தம் அளவுக்குத்தான் உள்ளே இறக்கியிருப்பான். மீசை மட்டும் நனைந்திருக்கும் என்று வையுங்களேன். “ஏன்டா இவ்ளோ சீக்கிரம் கெளம்புற?” என்று பதறினால், “அய்யய்யோ… வீட்ல இருக்காளே ஒருத்தி, ராட்சஸி! யாரையும் புடிக்காது. நான் யார்கூடயும் பழகக் கூடாது. ராத்திரி 9 மணிக்கு மேல போனா ஹால்ல பேய் மாதிரி ஒக்காந்து இருப்பா. அப்புறம் விடிய விடிய டார்ச்சர்தான்!” என்று சொல்லிவிட்டு ஓடுவான். ஆனால், அவன் கண்கள் துளியும் வெறுப்பை உமிழாது. மாறாக, காதலைக் காண முடியும். முன் சொன்ன அதே காரணம்தான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான இந்தக் காதல், காமம் சார்ந்த பிரதானமான பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், அடிப்படைப் புரிதல் பிரச்சினைகள் மற்றும் ஆண் பெண் வேறுபாடு பற்றி மட்டுமே பேசி பஜனை செய்துகொண்டிருந்தால், வேலைக்காகாது! எந்த பஜனை முடிந்தாவது எம்பெருமான் தோன்றியிருக்கிறாரா? அதேபோலத்தான் இங்கும் நடக்கும்!

ஆண் பெண் வேறுபாடு, மன அமைப்புகள், இருவருக்கும் இடையில் இணக்கமற்றத்தன்மையை உருவாக்கும் காரணிகள் என்பதையெல்லாம் பெரும்பாலானவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். அறிந்து வைத்திருந்து என்ன புண்ணியம்? நடைமுறைப்படுத்தாமல் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொள்வதால் யாருக்குப் பயன்?

இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர்கள் எதிர்பார்ப்பது தீர்வு அல்ல; மாறாக என் பிரச்சினைகளைக் காது கொடுத்து கேள் போதும் என்பதைத்தான். ஆண்களிடம் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை முழுதாக கேட்டு முடிக்கும் முன்பே தீர்வைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இந்த அடிப்படையான குணாதிசய மாறுபாட்டையெல்லாம் உளவியலாளர்கள் எப்போதோ கண்டறிந்து சொல்லிவிட்டார்கள். பலரும் இதைப் படித்தும் கேட்டும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலானோர் நடைமுறைப்படுத்துவது இல்லை.

ஆக, இங்கு சிக்கலானது புரிதல் குறைபாட்டில் இல்லை. நாய் ஒரே மாதிரி குலைப்பதுபோல, பூனை எப்போதும் 'மியாவ் மியாவ்' என்பதுபோல, ஆறறிவு படைத்த மனித இனமும் என்னதான் புரிந்துகொண்டாலும் அதைச் செயல்படுத்தாமல், தங்களின் அடிப்படைத்தன்மையை மாற்றியேகொள்ளாமல்  'வள் வள்' என்றும் 'மியாவ் மியாவ்' என்றுமே கத்திக்கொண்டிருக்கிறது. சுயநலம்தான் காரணம். ஆண் பெண் இருவரும் அவ்வளவு சுயநலமிகள். குறிப்பாகப் பெண்கள் இதில் மாஸ்டர்கள்!  

பகுத்தறிவை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, தெரியாத விஷயத்தைத் தெரிந்துகொண்டு, அதைப் பகுத்தறிந்து தெளிவடைவது. இரண்டு, நன்கு அறிந்து புரிந்துகொண்டு தெளிவடைந்த விஷயத்தை நம் வாழ்விலும் நடைமுறைப்படுத்துவது. சோகம் என்னவென்றால், பெரும்பாலும் பகுத்தறிவு முதலாவது விஷயத்திற்குதான் பயன்படுகிறது. தான் அனைத்தும் கற்ற புத்திசாலி அல்லது சிந்தனையாளன் என ஜம்பமடித்துக்கொள்ளவே பெரும்பாலும் பகுத்தறிவு பயன்படுகிறது.

சில உதாரணங்களைப் பார்ப்போமா?

ஃபெமினிஸத்தை நன்கு அறிந்திருக்கும் பெண் தன் சக பெண்ணைப் போட்டு மிதிப்பது!

சிறப்பான பெரியாரிஸ்ட் தன் மனைவியை ஒரு காமன்மேனைவிடக் கீழ்த்தரமாக நடத்துவது!

கம்யூனிஸத்தைக் கரைத்துக் குடித்து தன்னை ஒரு கம்யூனிஸ்டாக காட்டிக்கொள்வதில் பெருமையடையும் ஒருவன், பிஸினஸ்மேன் ஆனதும் தன் நிறுவனத் தொழிலாளிகளை ஒடுக்குவது, சுரண்டுவது!

வேதங்கள், மத நூல்கள், இதிகாசங்களைக் கரைத்துக் குடித்து ஆன்மிகத்தை முழுதாக உணர்ந்ததாகப் பேசுவோர், ஆன்மிகம் வழிகாட்டும் அடிப்படை அன்புக்கு எதிராக மக்களைக் கொன்று குவிக்கும் வெறுப்புக்குத் தூதர்கள் ஆவது!

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் வருபவர்கள் பகுத்தறிந்து புரிந்துகொண்டவர்கள், ஆனால் வாழ்வில் நடைமுறைப்படுத்தாதவர்கள். இவர்கள் அனைவரும் சராசரிக்கும் மேலானவர்களாக சமூகத்தில் கருதப்படுபவர்கள். இவர்கள் லட்சணமே இதுவென்றால், சராசரி மனிதனை நினைத்துப்பாருங்கள்.

ஆண் - பெண் உறவுச் சிக்கல்களில் என்னதான் எல்லாமே நன்றாகப் புரிந்தாலும், விளங்கினாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. கூட்டணி ஆட்சி நடக்கும்போது, ‘காமன் மினிமம் ப்ரோக்ராம்’ என்ற எல்லைகள் வகுத்துக்கொண்டு, ஆட்சிசெய்வதுபோல வாழ்வில் யாரும் வாழத் தயாராக இல்லை.

ஆக, காதலும் காமமும் இணைந்த பாரம்பரியமான வழியையே இரு தரப்புகளும் நாட வேண்டியிருக்கிறது. ஆனால், அங்கேயும் வேறொரு சிக்கல் இருக்கிறது. என்ன சிக்கல்?

பல்வேறு விஷயங்களில் பெரும் வேறுபாடுகளுடன் திரியும் ஆணும் பெண்ணும் காதலிலும் காமத்திலும் மட்டும் ஒரே மாதிரி இருப்பார்களா என்ன? இங்கேயும் கன்னாபின்னாவென வேறுபாடுகள். குறிப்பாக, பெண்களிடம் ஏராளமான எதிர்பார்ப்புகள் இங்கேயும் கிளர்ந்தெழுந்து நிற்கின்றன.

எனக்குத் தெரிந்த நான்கு கதைளைத் தொகுத்து ஒன்றாகத் தருகிறேன்.

காதலை முதன்முதல் வெளிப்படுத்தும் காலகட்டத்தில் ஆண் நெருங்கி நெருங்கி வர பெண் விலகிக்கொண்டே இருக்கிறாள். ஒருகட்டத்தில் அவளும் நெருங்கி நெருங்கி வர காதல் கை கூடுகிறது. ஆண் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது. பெண் அவனுக்கு இணையாக நெருங்கி வர, காதல் உக்கிரம் ஆகிறது. 24 மணி நேரமும் ஒருவர் நினைப்பாக இன்னொருவர் இருப்பது, அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்வது, அனைத்து வேலைகளையும் ஒன்றாகவே பார்ப்பது என்று காமத்தில் முயங்கி முத்துக்குளித்து காதல் உச்சம் பெறுகையில் பெண் முதன்முதலாக ஆண் ஆரம்பத்தில் காட்டிய காதல் வேகத்தை அப்போதுதான் வந்தடைகிறாள். வந்தடைந்ததோடு அல்லாமல் அதன் பிறகு அவளின் தீவிரம் நாளுக்கு நாள்கூட ஆரம்பிக்கிறது. அவளுக்கு அவளுக்குத் தீவிரம்கூட ஆரம்பிக்கும் தருணத்தில், இவன் தீவிரம் குறைய ஆரம்பிக்கிறது. அதன் பிறகு அவள் எப்போதும் அவனுடன் இருக்க விரும்புகிறாள். அவனை மூச்சடைக்க வைக்கிறாள். இவனோ அவளில்லாமல் சற்று நேரம் ஆசுவாசமாக மூச்சுவிடலாம் என்று ஏங்குகிறான்.

ஏன் இப்படி திடீர் குழப்படி வருகிறது?

(அடுத்த சனிக்கிழமை பேசுவோம்)

அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1

21


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Moorthy   1 year ago

Excellent Analysis. This article should be psychiatric document. Please go ahead

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Balaganesh   1 year ago

ஆண் பெண் இருவரும் அவ்வளவு சுயநலமிகள். குறிப்பாகப் பெண்கள் இதில் மாஸ்டர்கள்! This is how misogynistic comments and stereotypes are perpetuated. The author could have refrained from propagating systemic differences that masquerade as everyday observations/cultural differences, or the society that is today. Authoritative statements like these will only have a negative impact on women. Already the internet space for women is lop sided and this boxing-in adds fodder to this.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கிளாம்பாக்கம் ஏன் கிந்தனார்களே?எடிட்டிங்மயிர்தான் பிரச்சனையா?புத்தக வெளியீட்டு விழாபோர்ஹேஸ்நாடாளுமன்றம்அந்தரங்க மிரட்டல்மகா விஹாஸ் கூட்டணிசாவர்க்கர் ராஜன் குறை பி.ஏ. கிருஷ்ணன்இந்திய சுதந்திரம்கேட் தேர்வுஐஏஎஸ் அதிகாரிகள்பாமகபத்திரிகையாளர்கள் சங்கம் பெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிபுதியன விரும்பஅமித் ஷா காஷ்மீர் பயணம்தெற்கிலிருந்து ஒரு சூரியன் சமஸ்ஊடக ஆசிரியர்கள்நாராயண குருவின் இன்னொரு முகம்கட்டிட விதிமுறைகளை விரிவாக்குவோம்!மெட்றாஸ்பத்திரிகையாளர் ரோஷன் கிஷோர்எஸ்.அப்துல் மஜீத் பேட்டிஅகில இந்தியப் படங்கள்வேலை வாய்ப்புமுன்விடுதலைமக்களாட்சிக்கு நன்மை உதயநிதிகளின் தலைமைதெலுங்கரா பெரியார்சாதனைச் சிற்பி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!