கட்டுரை, இரு உலகங்கள் 5 நிமிட வாசிப்பு

பேசிப் பழகலாம் வாங்க பாஸ்!

அராத்து
26 Feb 2022, 5:00 am
1

இரு உலகம் தொடரில் ஆண்களுக்கான என் தரப்பு வாதங்களை முடித்துக்கொள்கிறேன் என்று சென்ற வாரத்தில் அறிவித்ததுமே, வாசகர்களிடமிருந்து ஏகப்பட்ட வருத்தப் பகிர்வுகள். வாசகர்கள் என்றதுமே ஆண்கள் என்று முடிவெடுத்துவிடாதீர்கள்; பெண்கள்தான் அதிகமானவர்கள்.

ஆண் - பெண் உறவைப் பேசுவதற்காக ‘அருஞ்சொல்’ ஆரம்பித்திருக்கும் இந்த ‘இரு உலகங்கள்’ தொடர் ஒரு வித்தியாசமான முயற்சி. பொதுவாக, உளவியலாளர்கள் போன்ற நிபுணர்களைக் கொண்டு இந்த மாதிரி தொடர்களை எழுதவைப்பார்கள். அரசியல் சரித்தன்மையோடு அவர்கள் பேசுவார்கள். ‘இந்தா பாருப்பா’ என்று பேசும் ஒரு அறிவுரைத் தொனி அவர்களிடம் இருக்கும். ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழுவினர் என்ன செய்தார்கள் என்றால், உங்களுக்கு ஆண் – பெண் உறவு சார்ந்து என்ன அபிலாஷைகள், குற்றச்சாட்டுகள், எதிர்பார்ப்புகள், புகார்கள் இருக்கின்றனவோ அவற்றை உங்கள் தரப்பிலிருந்து உள்ளது உள்ளபடி மட்டும் எழுதுங்கள் என்று சொன்னார்கள். 

பெண் பார்வையில் முதலில் அனுஷா எழுதினார். அதன் தொடர்ச்சியாக அடுத்து ஆண் பார்வையில் நான். அடுத்து ஒரு பெண்; அடுத்து ஒரு ஆண் என்று இந்தத் தொடர் நகரும் என்று நினைக்கிறேன்.

ஆக, நான் எழுதியவற்றுக்குப் பதில் அளித்து அல்லது மறுத்து அல்லது அடுத்து எழுதுபவர் பெண்கள் தரப்பு வாதங்களை வைக்கக்கூடும். இந்த ஃபார்முலாவை தொடர் ஆரம்பிக்கும் முன்பே எனக்குச் சொல்லிவிட்டார்கள். நானும் அதை ஒட்டியே எழுதிவந்தேன். இப்படி நான் எழுதிய விஷயங்கள் முழுக்க நான் பார்த்த, கேட்ட, நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் என்பது இங்கே முக்கியம்.

இதற்கு முன்பே சுமார் பத்தாண்டு காலம் நான் ஃபேஸ்புக்கில், வார, மாத இதழ்களில் பல கட்டுரைகள் எழுதிவந்திருக்கிறேன். அவற்றில் ஆண் - பெண் சார்ந்த பேசுபொருள் வரும்போதெல்லாம், பெரும்பாலும் நான் பெண்களின் பக்கம் நின்று பேசியிருக்கிறேன். இன்னும் கேட்டால் ஆண்களை கடுமையாக, சொல்லத் தகாத வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறேன். என்னுடைய ‘பொண்டாட்டி’ நாவலைப் படித்த பலரும், “அராத்து ஆண்களைத் தோலுரித்துவிட்டார்!” என்றே விமர்சனங்களில் தெரிவித்திருக்கிறார்கள்.  

ஆனால், இது முழுக்கவும் ஆண் பார்வையில் எழுதும் தொடர்; அதில் மென்மையாக விமர்சனங்களைக் குறிப்பிட்டதற்கே பெண்கள் தரப்பிலிருந்து சிலரிடமிருந்து ஒரே கூச்சல். இதற்காக எல்லாப் பெண்களையும் நான் குற்றஞ்சாட்ட மாட்டேன். இந்தத் தொடரை வாராவாரம் தொடர்ந்து வாசித்துவந்த, உடனடியாக எனக்கு எதிர்வினையாற்றிய பல நூறு பெண்கள் உண்டு. ‘சிலர்’ கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். “எங்களுக்குப் புனிதப் பூச்செல்லாம் வேண்டாம், சக மனுஷியாகப் பாருங்கள் என அறைகூவல் விடும் அதே பெண்களுக்கு, சக மனுஷியாகப் பாவித்து ஆண்களின் மன ஓட்டங்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் மூடி மறைக்காமல் வெளிப்படையாகச் சொன்னால் எரிச்சல் வருவது ஆச்சரியம் தருகிறது.

இந்தத் தொடருக்கு வெளியே ‘ஹனி… நீ மட்டுமே என் உலகம் இல்லை!’ புத்தகத்துக்காக நான் எழுதிய ஒரு சிறுபகுதியை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதற்கு சாமியாட்டம் ஆடிவிட்டனர் அந்தச் சிலர். பத்திரிகையில் வரும் கட்டுரைகளைப் பின்னர் தன்னுடைய வசதிக்கேற்ப சேர்த்தும், வெட்டியும், விரித்தெழுதியும் மேம்படுத்தி புத்தகம் ஆக்குவதற்கான உரிமை எழுத்தாளருக்கு உண்டு. அப்படித்தான் ‘அருஞ்சொல்’ இதழில் எழுதிய விஷயங்களை விஸ்தரித்து, புத்தகம் ஆக்கியிருக்கிறேன். இந்தப் புத்தகத்துக்கு என்று நான் தனியாக எழுதிய விஷயங்களை ஃபேஸ்புக்கில் படித்துவிட்டுதான் இப்படி ஒரு ஆட்டம். அது என்னுடைய புத்தகத்திற்கு நல்ல ‘அன்பெய்ட் ப்ரோமோ’ ஆக இருந்தது வேறு விஷயம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால், ‘நான் எழுதியது ஒப்புக்கொள்ளத்தக்கது அல்ல என்றால் அதை விமர்சிக்கலாம், எதிர்த்து எழுதலாம், மேடை போட்டு திட்டக்கூட செய்யலாம். அது அவரவர் பண்பாடு சார்ந்த விஷயம். ஆனால், நான் எழுதவே கூடாது என்றும் இதை எப்படி அருஞ்சொல் பதிப்பிக்கலாம் என்றும் பேசினார்கள். அவர்களில் சில பெண்கள் என் மனைவி, தாயை எல்லாம் இழுத்துக் கொண்டுவந்து திட்டினார்கள். ஆண்கள் மனைவியையும் தாயையும் இழுத்துத் திட்டுகையில் பொங்கும் அதே பெண்கள் என் விஷயத்தில் அதே விதமான அணுகுமுறையைக் கையாண்டது ஆச்சரியமாகவே இருக்கிறது!

விஷயம் இதோடு முடியவில்லை. ப்ரீமெச்சூர் எஜாக்குலேஷன், எரக்டைல் டிஸ்ஃபங்க்‌ஷன் போன்ற ஆண்களின் உடல்ரீதியிலான குறைபாடுகளை விமர்சித்து பொரிந்து தள்ளினார்கள். இன்னும் எனக்குத் தனிப்பட்ட வகையில் அனுப்பட்ட செய்திகளில் அவ்வளவு வசவுகள், என்னைக் கடுமையாக தாக்கும் வசைகள்!   

எனக்கு இதெல்லாம் புதிது இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பேச நினைக்கிறேன். ஆண் – பெண் உறவு இவ்வளவு சிக்கலாக இருப்பதற்கு, அதை அவ்வளவு பூடகமாக நாம் அணுகுவதுதான் காரணம். சரி, ஒரு உரையாடலை வெளிப்படையாக ஆரம்பிக்கலாம் என்றால், அவரவர் தரப்பிலிருந்து வரும் விஷயங்கள் எல்லாமே கரடாக – ராவாகத்தான் வரும்.

நான் கற்றுக்கொண்ட மதிப்பீடுகளுக்கு வெளியே ஓர் எழுத்தாளனாக என்னைச் சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களும், சமூகத்தின் போக்கும் என்னவாக இருக்கிறது என்பதை அப்படியே எழுதினால் எப்படி இருக்கும் என்பதே இந்த முயற்சி. எனக்கே புதிய அனுபவம் என்னவென்றால், இப்படி ராவாக எழுதியது சிலருக்கு சங்கடத்தைத் தந்தாலும், பலருக்கு இன்னொரு உலகத்தைப் பார்க்க திறந்துவிட்டதுபோலவே அமைந்தது.

நான் அனுஷா கட்டுரைகளை வாசித்தேன். என்னுடைய கட்டுரைகளில் எல்லாக் கருத்துகளையும் எப்படி எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாதோ அப்படி அவருடைய கட்டுரைகளிலும் பல கருத்துகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், பெண்கள் எப்படியெல்லாம் எதிர்பார்க்கிறார்கள், என்ன மாதிரியான புகார்களை எல்லாம் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள எனக்கு அது ஒரு கூடுதல் வாய்ப்பாகவே அமைந்தது. என்னுடைய கட்டுரைகளும் அந்த வேலையையே செய்தன என்று நினைக்கிறேன்.

இந்தத் தொடர் வெளிவந்துகொண்டிருக்கையில், நிறைய பெண்கள் படித்தார்கள். பலர் என்னுடன் விவாதித்தார்கள். நாகரிகமாக விமர்சித்தார்கள். சிலர் பாராட்டியதும் உண்டு. “ஓஹ்.. என் கணவருக்கும் இப்படி ஒரு பக்கம் இருக்கும் அல்லவா… அவருக்கென்று சில ஆசைகள், உலகம் இருக்கும். இனி புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்” என்று ஒரு பெண் கமென்ட் எழுதியிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தத் தொடரை வாசித்துவந்த அனைத்துப் பெண்களுக்கும் என் நன்றி. அடுத்து நீங்கள் பேசுங்கள். தொடர்ந்து உரையாடுவோம்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


4

4





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

சிந்திக்க வைக்கும் தொடர், வாசிக்கவும் சுவாரசியமாக இருந்தது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அம்பேத்கர் ரவிக்குமார் கட்டுரைஇலக்கணம்சித்த மருந்துசைவம் - அசைவம்நூல் சேகரிப்பாளர்ந.முத்துசாமி4 கொள்கைக் கோளாறுகள்தாழ்ச் சர்க்கரை மயக்கம்தேசிய குடும்ப நலம்: நல்லதுமணி சங்கர் ஐயர் ஜாதியும்அமெரிக்க அதிபர் தேர்தல்சுற்றுச்சூழலியல்தேசிய பால் துறைஆன்டான் ஜெய்லிங்கர்நிதி வருவாய்ரஃபியா ஜக்கரியா கட்டுரைமாமன்னன்: நாற்காலிக் குறியீடுகாங்கிரஸ்: பாஜகவின் பி அணியா?கூட்டுப் பாலியல் வன்புணர்வுதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்விவாதம்ஆக்ஸ்போர்ட் அகராதிநரேந்திர மோடி விளையாட்டரங்கம்எம்.ஜி.ராமச்சந்திரன்ஜன தர்ஷன்M.S.Swaminathan Committeeரேவடிகளின் தொகுப்புபிரியங்கா காந்தி அரசியல்விழித்தெழுதலின் அவசியமா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!