வாழ்வியல், இரு உலகங்கள் 10 நிமிட வாசிப்பு

ஆண்கள் ஏன் 'அலைஞ்சான்'களாகவே இருக்கிறார்கள்?

அராத்து
05 Feb 2022, 5:00 am
2

 

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.

காதலில் ஆண் பெண் இருவருமே செய்யும் தவறு என்னவென்றால், ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே காதலிப்பதில்லை. தங்கள் கற்பனையில் உருவான ஒரு 'ஐடியல் இமேஜ்'-ஐ அவர்கள் மேல் போர்த்தி அந்த இமேஜைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதலிக்கும் நேரத்தில் மட்டும் தங்கள் மனதில் உள்ள கற்பனைப் பாத்திரம்போலவே காதலிப்பவர்களும் செயல்படுவதாகத் தோன்றும். இதை ஒரு 'லவ் இல்லுஷன்' என்று சொல்லலாமா என யோசிக்கிறேன். உலகில் இதைத் தாண்டிய 'மேஜிக்கல் ரியலிஸம்' வேறெதுவும் கிடையாது. அடுத்தவர்களுக்குச் சப்பையாகத் தெரியும் ஒரு பெண்ணும் ஆணும், காதலனுக்கு தேவதையாகவும் காதலிக்கு தேவகுமாரனாகவும் தெரிவது இதனால்தான்!

ஆணின் காதல்... பெண்ணின் காதல்...

இதுவரை ஒரே மாதிரி மென்டலாக இருக்கும் ஆணும் பெண்ணும் இதற்கடுத்த கட்டத்தில்தான் வேறுபட ஆரம்பிக்கிறார்கள். ஆண் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறான். பெண் தன்னுடைய காதலைக் காதலிக்கிறாள். பெண்ணுக்கு அது 'தன் காதல்'. அந்தத் தன்னுடைய காதல் உயிர்ப்புடன் இருக்க ஒரு பங்கேற்பாளர் தேவை. அந்தப் பங்கேற்பாளராகப் பாத்திரம் வகிப்பது மட்டுமே காதலனின் வேலை. அதனால்தான் ஒரு காதல் தோல்வியிலிருந்து பெண்களால் விரைவில் மீள முடிகிறது. பழைய காதலனை அவளுடைய காதலிலிருந்து தூக்கி விட்டு இன்னொரு இணையை வெகு விரைவில், 'அவளுடைய காதலில்' அவளால் 'ரீ ப்ளேஸ்'  செய்ய  முடிகிறது.

இந்த விஷயத்தில் ஆண்கள் 'தியரட்டிக்கல்' ஆசாமிகள். அவளையே நினைத்துக்கொண்டு இருக்கிறேன் என 'சீன்' போடுவார்கள். வெகு விரைவில் இவர்களால் 'அவளை' மறக்க முடியாது. பலர் கல்யாணம் செய்து புள்ளகுட்டி பெற்ற பின்பும்கூட அவ்வப்போது, 'அவளை' நினைத்து 'ஃபீல்' செய்துகொண்டும், 'சீன்' போட்டுக்கொண்டும் இருப்பது இந்த வியாதியின் தொடர்ச்சிதான். ஆண்கள் கேனத்தனமாக இன்னொன்றையும் செய்வார்கள். தங்கள் 'எக்ஸ்' திருமணத்திற்குச் செல்வார்கள். அவளின் தேனிலவுப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தேடித் தேடிப் பார்ப்பார்கள். அவள் பெற்றெடுத்த குழந்தையின் புகைப்படங்களைப் பார்த்து ரசிப்பார்கள். இதையெல்லாம் தாண்டி திருமணத்திற்குப் பிறகும் அவளுடன் தொடர்புகொண்டபடியே இருப்பார்கள். அது அவளுக்கு மாபெரும் தொந்தரவு என்பதையோ, அவள் இன்னும் இன்னும் வெறுப்பாள் என்பதையோ உணராத மக்கட்டைகள் இந்த ஆண்கள். அதற்காக ஆண்களைக் காவியக் காதலர்கள் என்று சொல்லவில்லை. இந்த உணர்வெல்லாம் அவள் பிரிந்துபோனால்தான். உடன் காதலியாக இருக்கையில் அல்ல. காதலித்துக்கொண்டு இருக்கும்போதே, அடுத்த பெண்ணுக்கு 'ரூட்' போடுவது எல்லாம் நடக்கும். அதையும் மறைமுகமாகச் செய்யத் தெரியாது. அசட்டுத்தனமாக செய்து மாட்டிக்கொள்வார்கள்.

பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களை ஒப்பிட மேம்பட்டவர்கள். ஒருவனைப் பிரிந்ததும் அவனையே நினைத்து ஏங்கிக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் வலி இருக்கும். அந்த வலி காதலனைப் பிரிந்த வலி அல்ல. காதல் புட்டுக்கொண்ட வலி. சங்க இலக்கியத்தில்கூட காதலனுடன் உறவில் இருக்கையில் அவனைப் பிரிந்த வலிதான் பெருமளவு சொல்லப்பட்டு இருக்கும். காதல் என்ற உறவில் இருந்து மொத்தமாக வெளிவந்த பின் காதலனை நினைத்து மூக்கு சிந்துவது பெரும்பாலும் இருக்காது.

தேவதாஸ் போன்ற பாத்திரங்களுக்கு இணையான பெண் பாத்திரங்களை நாம் காண முடியாது. “அவ என்ன வுட்டுட்டு போய்ட்டாடா மச்சி” என்று இரவு முழுக்க தன்  நண்பர்களை ஆண்கள் 'டார்ச்சர்' செய்வதுபோல பெண்கள் செய்வதில்லை. பிரிந்தவனை நினைத்து ஏங்கிக்கொண்டு இருப்பதில்லை. 

இதை நான் தவறாகப் பார்க்கவில்லை. பெண்கள்  'ப்ராக்டிக்கல்' என்று எடுத்துக்கொள்கிறேன். இயற்கையே அவர்களை அப்படித்தான் படைத்திருக்கிறது.

கமல் - கிரண் காதல்

சமீபத்திய ஓர் உதாரணத்தைத் தருகிறேன். காதலன் - காதலி  இருவரும் என் நண்பர்கள். பத்து வருடக் காதல். அதில் 'லிவ் இன்' ஆகவே  5 வருடங்களாக இருந்தார்கள். பெண் வீட்டில் அவளை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி ஏக வற்புறுத்தல். காதலன் தனிப்பட்ட காரணங்களால் திருமணத்தைத் தள்ளிப்போட்டபடி இருந்ததால், இவளும் ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி, வந்த வரன்களை எல்லாம் தட்டிக்கழித்தபடி இருந்தாள். இருவரும் ஈருடல் ஓருயிர் என்பதற்கு உண்மையான உதாரணமாகத் திகழ்வார்கள். நான் அவர்கள் வாழும் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். பார்ட்டி செய்திருக்கிறோம். அவள் அவன் மேல் வைத்திருந்த அதீத காதலை நான் அறிவேன். எது ஒன்றென்றாலும் அவன் பக்கம் நிற்பாள். நாம் கற்பனையே செய்துபார்க்க முடியாதபடிக்கு அவனைத் தாங்குவாள்.

போன வருடம் அவனைப் பிரிந்தாள். அந்தக் காரணம் இங்கே வேண்டாம். வீட்டில் காட்டிய மாப்பிள்ளையைப் பேசிப்பார்த்து பழகிப்பார்த்து திருமணம் செய்துகொண்டாள். இவனுடன் பிரிந்ததற்கும் திருமணம் செய்ததற்கும் இடையே 4 மாதம்தான் இடைவெளி. திருமணத்திற்கு முன்பே எதிர்காலக் கணவனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பொதுவெளியில் பகிர ஆரம்பித்தாள். எதிர்காலக் கணவனுடன் அதே தீவிர காதலில் குறுகிய காலத்திற்குள் அவளால் ஈடுபட முடிந்தது. வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டு இருப்பது அவளின் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் தெரியவந்தது. உடனடியாக கர்ப்பம் ஆனாள். தாய்மையைக் கொண்டாட ஆரம்பித்தாள். குழந்தை பிறந்ததும் அதைக் கொண்டாட ஆரம்பித்தாள்.

இவன் கதையை நான் சொல்ல விரும்பவில்லை. அந்த நண்பனும் இந்தத் தொடரை விடாமல் வாசித்துவருபவன்தான். என்னால் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். அவளுடைய புது கணவனை அவள் அதே தீவிரத்தோடு காதலித்துக்கொண்டு இருக்கிறாள். அவளுடனான தொலைபேசி உரையாடலில் இதை என்னால் நேரடியாகக் கேட்க முடியாது. ஆனால், அவள் குதூகலமாகப் பேசிய பல தருணங்களைத் தொகுத்துப் பார்த்து இந்த முடிவுக்கு வருகிறேன்.

'அன்பே சிவம்' படத்தில் கமல் நுட்பமாக ஒரு காட்சி வைத்திருப்பார். அந்தக் காட்சியைக் குறிப்பிட்டு எவரும் எழுதி நான் பார்த்ததில்லை. நேரடியாக எந்த விமர்சனமும் இல்லாமல் இயல்பான காட்சியாக வைத்திருப்பார் கமல். நாம்தான் இரண்டு காட்சிகளையும் கோர்த்துப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் வரும் கமல் - கிரண் காதல் காட்சிகள் கவித்துவமாக இருக்கும். 'லார்ஜர் தன் லைஃப்' போன்ற காதல்தான். கிரண் கமல் மேல் பித்துப்பிடித்துப்போய் இருப்பார். அப்படி உயிருக்குயிராகக் காதலிப்பார். கிரண் இந்தப் படத்தில் மிக நன்றாக நடித்திருப்பார்.  கமலுடனான காட்சிகளில் கண்கள் மட்டுமல்லாமல் உடலில் ஒவ்வொரு செல்லிலிருந்தும் காதல் சொட்டிக்கொண்டு இருக்கும் கிரணுக்கு. கமல் ஒரு விபத்தில் மாட்டிக்கொள்வார். அவர் என்ன ஆனார் என்று கிரணுக்குத் தெரியாது. மாதவன் அறிமுகக் காட்சியில் அவருக்கு ஒரு போன் வரும். அப்போது அவர் கட்டிக்கொள்ளப்போகும் பெண் அவ்வளவு காதலுடன் பேசுவார். அதீத அக்கறையோடும், அளவற்ற அன்பு மற்றும் காதலைக் குழைத்து அவ்வளவு உரிமையோடு பேசுவார். பிறகுதான் தெரிய வரும் அப்படிப் பேசிய பெண் அதே கிரண்தான் என்று. என்ன இருந்தாலும் கமல் அனுபவஸ்தர் அல்லவா? இதில் பெண்களை விமர்சிக்க ஏதுமில்லை. கிரணின் கமல் மீதான காதலும் உண்மைதான். மாதவன் மீதான காதலும் உண்மைதான். அதே தீவிரம்தான். அதனால்தான் பெண்களுடைய காதலில் காதலனைவிட அவர்களுடைய காதலுக்கு 'பவர்' ஜாஸ்தி என்கிறேன்.

குழந்தை என்ற ஒன்றே பெண்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு மாபெரும் 'டூல்' என நினைக்கிறேன். என்னதான் தந்தைப் பாசம், தந்தைப் பொறுப்பு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிந்தாலும் அவையெல்லாம் சமீபமாக சில ஆயிரம் ஆண்டுகளில் உருவான கற்பிதங்கள். மனிதன் நாகரிகம் அடைந்ததும் சமூகம் சொல்லிக்கொடுத்து ஆண்கள் பின்பற்றுபவை. ஆனால், தாய்ப்பாசம் என்பது இயற்கையானது. ஓர் உயிர் தன்னுடலிலிருந்து உருவாகி உலகுக்கு வருகிறது என்ற உணர்வுக்கு மாற்று எதுவும் கிடையாது. அது தன்னில் ஒன்று, தன்னில் தன்னில் இருந்து வந்தது என்பது அவளுக்கு உறுதியாகத் தெரியும். இந்த விஷயத்தில் ஆண்களைப் பொறுத்தவரை ஒரு  நம்பிக்கையில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

அலைஞ்சான் ஆண்கள்...

பெண்களைப் பொறுத்தவரை காதல், காமம் எல்லாம் கடைசியாக  அவர்கள் ஒரு குழந்தை பெற்றெடுப்பதற்கான ஒரு 'ப்ராஸஸ்'. இது அவர்களின் ஆழ்மன விழைவாக இருக்கலாம். இயற்கை அப்படி ஒரு மன அமைப்பையும், உந்துதலையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். தங்களின் காதலின் விளைவாக, பெரும் மகிழ்வாக அவர்கள் குழந்தை பெற்றெடுத்தலைப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் நிறைவடைகிறார்கள். ஆண்களுக்கு இந்தக் காதல், காமம் மூலம் நிறைவடைதல் என்ற ஒன்று இல்லை. அதனால்தான் ஆண்கள் கடைசி வரை 'அலைஞ்சான்'களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட 'அப்ஸர்வேஷன்'.  என் தனிப்பட்ட கருத்து.

என் தோழிகள் என்னிடம் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள். பெண்கள் எல்லோரும் வெளிப்படையாகப் பேசுவதை விரும்புபவர்கள்தான். என்ன ஒன்று, அவர்கள் பேசுவதை வைத்து அவர்களை ஜட்ஜ்செய்யக் கூடாது. அவர்கள் பேசுவதை சேமித்து வைத்துக்கொண்டு, அதைப் பயன்படுத்தக் கூடாது. பேசுவது வெறும் உரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் மட்டுமே என்கிற ரீதியில் நீங்கள் பழக ஆரம்பித்தால், உங்கள் தோழிகளும் உங்களிடம் வெளிப்படையாகப் பேசுவார்கள். அவர்கள் பேசுவதை உங்கள் லௌகீக வாழ்க்கைக்குப் பயன்படுத்தப் பார்க்கக்கூடாது, அவ்வளவுதான்.

உதாரணமாக ஒரு தோழி, “நல்ல ப்ளஸண்டான செக்ஸே ரீஸன்ட் டைம்ல இல்லடா” என்று சொன்னால், உடனே, “ஹி... ஹி... நான் வரட்டுமா...” எனக் கேட்டுக் கடுப்பேற்றக் கூடாது. சும்மா இருந்தாலே மலமாடுபோல ஆண்கள் அவர்கள்  மேலேறிக்கொண்டு இருக்கையில் பெண்கள் எப்படி வெளிப்படையாகப் பேசுவார்கள்?

எதுவோ சொல்ல வந்து என்னமோ எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள். கொஞ்சம் பொறுங்கள்,  இதை எப்படியாவது தொடர்புபடுத்திவிடலாம். என்னிடம் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? என் தோழிகள், என்னிடம் பேசும் அளவுக்கு அவர்கள் கணவர்களிடம் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். அதுபோல என் மனைவி என்னிடம் அவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் பேச மாட்டாள். ஏன்? அப்படி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தால் இங்கே எந்த உறவும் உருவாக முடியாது. அப்படியே உருவானாலும் நிலைத்திருக்க முடியாது.

இப்படி அடிப்படையிலேயே வெளிப்படைத்தன்மையற்ற அடித்தளத்தில்தான் பெரும்பாலான ஆண் - பெண் உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன. அந்த போலியான அடித்தளத்தின் மீது போலியான செங்கற்கள், போலியான சிமெண்ட், போலி இரும்புக்கம்பிகள் கொண்டு கட்டி எழுப்பப்படுகின்றன. பின் அதன் மேல், போலி பெயின்ட், போலி மார்பிள்ஸ் என அடுக்கிக்கொண்டே போகிறோம். இருவரும் பெரும்பாலும் நடித்துக்கொண்டும், அனுசரித்துக்கொண்டும், விட்டுக்கொடுத்துக்கொண்டும் வாழ்க்கை முழுவதும் கழிகிறது. விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என பலர் சொல்லியிருக்கிறார்கள். நான் இதில் மாறுபடுகிறேன். சமூகத்தில் விட்டுக்கொடுத்துதான் வாழ்ந்தாக வேண்டும். அலுவலகத்தில், பொது இடத்தில், கடைகளில், அரசு சம்மந்தப்பட்ட வேலைகளில் என எங்கும் எதிலும் விட்டுக்கொடுத்தே வாழ வேண்டியிருக்கிறது. காதலும் காமமும் கலந்து காலம் முழுக்க ஒன்றாக வாழும் இருவருக்குள்ளும் ஏன் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்? விட்டுக்கொடுத்து வாழ்வது என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஆனால், அது அதிக அழுத்தம் தரக் கூடியது. காலம் முழுக்க ஒருவருக்கு விட்டுக்கொடுத்தே வாழ்ந்துகொண்டிருந்தால் அவர் மேல் அன்பு வருமா?  கொலை வெறி வருமா?

விட்டுக்கொடுக்காமலேயே, அதேசமயத்தில் அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிடாமல் இருவரும் சேர்ந்து வாழும் புள்ளியை அடைய முடியும். அதற்கு முதலில் கற்பனாவாதக் காதலில் இருந்து மனதை வெளியேற்ற வேண்டும். ஈருடல் ஓருயிர் என்றெல்லாம் கம்பளிப்பூச்சிபோல ஒருவர் மீது இன்னொருவர் ஏறக்கூடாது. இதையெல்லாம் இப்போது படிக்கையில் சிறப்பாகத் தோன்றி, இப்படியே செய்யலாம் என முடிவெடுத்தாலும், காதலில் மாட்டியதும் இதெல்லாம் காற்றில் பறந்துவிடும். இப்படி எல்லாம் முயற்சியே செய்துபார்க்க முடியாதபடிக்குத் தடையாக இருப்பவள் காதலிதான்.

பைத்தியக்காரத்தனங்கள்

காதல் பூத்து அவளிடம் அதைத் தெரிவிக்கும்போது இயல்பான மானிடன் இயல்பாக காதல் வந்து இயல்பாகத் தெரிவிப்பதைப் போல சொன்னால் ஒன்றுமே நடக்காது. எல்லையில்லா பெருங்காதல், பிரபஞ்சத்திலேயே இதுவரை இல்லாத அரிய காதல், உன்னைக் காதலிக்கவே இந்தப் பிறவி, ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் உன்னையே காதலிக்க வேண்டும், யாருமில்லா உலகில் நீயும் நானும் மட்டுமே வாழ வேண்டும் - இப்படியான  1,000 டெம்ப்ளேட் வசனங்கள் உள்ளன. இவற்றில் ஏழெட்டையாவது சொல்லி, அப் நார்மலாகக் காதலை வெளிப்படுத்த, கரடி குட்டிக்கரணம் அடித்து தன் முடியை எல்லாம் கொத்துக் கொத்தாக பிய்த்துப் போடுவதைப் போல எதையாவது செய்தால்தான் அவள் காதலைப்  பரிசீலிக்கவாவது செய்வாள். ஆக ஆரம்பத்திலேயே இந்தப் பைத்தியக்கார உலகுக்குள் நுழைவதற்கு விதிகளை உருவாக்கி காதல் வாழ்க்கையில் அவன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என 'டிக்டேட்' செய்தபடி இருக்கிறாள் காதலி.

வித்தியாசமாக 'ப்ரொபோஸ்' செய்ய வேண்டும். அடிக்கடி 'சர்ப்ரைஸ்' கொடுக்க வேண்டும். இது என்ன காதலா அல்லது சர்க்கஸா அல்லது திகில் மர்மம் நிறைந்த திரைப்படமா? யாரும் செய்யாததைச் செய்ய வேண்டும், வித்தியாசமாகச் செய்ய வேண்டும், விசித்திரமாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் அழுத்தத்தைக் கொடுப்பவர்கள் இந்தக் காதலிகள். இதிலெல்லாம் வித்தியாசம், யூனிக்நெஸ் எதிர்பார்ப்பவர்கள், கடைசியாகக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியும் இருட்டில் செய்த அதையேத்தானே செய்யப்போகிறார்கள்? நானும் வித்தியாசத்துக்கு எதிரானவன் இல்லை, அது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும், விரும்பிச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு பைத்தியக்காரத்தனமாக இருக்கலாகாது.

பேருந்தை நிறுத்தி சர்ப்ரைஸாக பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, ஏழெட்டு பேரைக் கூலிக்குக் கூட்டி வந்து ஆட வைத்து பொக்கே கொடுப்பது, நிறையப் பள்ளிச் சிறுமிகளைக் கூட்டி வந்து பாடவிட்டு ஆடவிட்டு பூக்கள் கொடுப்பது, திடீரென்று சாப்பிடும் ஓட்டலில் நான்கைந்து பேரர்கள் டேன்ஸ் போட்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது… இதையெல்லாம் நீங்கள் விடியோவாக சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கக் கூடும். நான் மேலே சொன்னதெல்லாம் மிக எளிமையான பைத்தியக்காரத்தனங்கள். இதையெல்லாம் தூக்கி அடிக்கும் பைத்தியக்காரத்தனங்கள், வெளியே சொல்ல முடியாத கீலாத்தனங்கள் நிறைய உள்ளன.

இதையெல்லாம் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் பெண்கள். ஒரு காதலனுக்கு இப்படியான பைத்தியக்காரத்தனங்களைக் காதலிகள் செய்வதில்லை என்பதைக் கவனித்து இருப்பீர்கள்.

காதலில் இப்படி 'அப் நார்மல்' ஆக  இருக்கும் அவள் இந்தக் காதல் வாழ்க்கையைத் தவிர ஏனைய சமூக, அலுவலக வாழ்வில் 'நார்மல்' ஆக இருப்பாள். காதல் வாழ்வில் மட்டுமே 'அப் நார்மல்'. ஏனென்றால் அவளுடைய காதலை அவள் சாதாரண காதலாக எடுத்துக்கொள்வதில்லை. அவளுடைய காதல் எப்போதும் 'லார்ஜர் தன் எ லைஃப்'தான்.

(பேசுவோம்...)

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


3

7


1

2


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Tokiana   3 years ago

பொம்பள மனசு ஆழமே இல்ல போல..அராத்துக்கு தெள்ளத் தெளிவாகப் புரியுதே

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

ராஜேஷ் ஆறுமுகம்   3 years ago

இத்தொடரில் அட்டகாசமான கட்டுரை இது. எந்த ஒரு உறவு இழப்பும் 3 மாசத்துக்கு மேல துக்க பட்ற அளவுக்கு worth ஏ இல்ல. அதுவும் காதல் தோல்வி சுத்தமா இல்லை. ஆனா எனக்கு இதை புரிஞ்சுக்க 10 வருஷம் ஆச்சு

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

திசுப் பரிசோதனைஅக்னிவீர்பரிபாடல்இந்தியத்தன்மை என்பது குடியுரிமை - சாதி அல்லகாவிரிஎதிர்க்கட்சிகள் ஒற்றுமைகீழக்கரைகிண்டர் கார்டன் சேனையதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்Goods and Services Taxஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுபிமாருஅறுவடைடிஜிட்டல்பின்தங்கிய பிராந்தியங்கள்தமிழி எழுத்து வடிவம்பொதுத் தேர்தலுக்கு காங்கிரஸ் எப்படித் தயாராகிறது?விவசாயக் குடும்பங்கள்சுவீடன் அரசுப் பள்ளியில் தமிழ் மொழிக் கல்விஷோஹாடாஸ்மாக்புதையல்பின்லாந்துபடைப்புச் சுதந்திரம்தண்ணீர்க்குன்னம் பண்ணைசமூக நலப் பாதுகாப்புமனித இன வரலாறுசெய்திமுரசொலி செல்வம்சிறுநீர்க் கடுப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!