இரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.
தன் காதல், ‘லார்ஜர் தென் எ லைஃப்’ என்று ஒரு பெண் நினைத்துக்கொள்ளலாம்; தப்பே இல்லை; அதை அனுபவித்து வாழலாம்; இதற்கு ஒத்துவராதவனைத் தூக்கி எறியலாம்; ஒரு பிரச்சினையும் இல்லை. எங்கு சிக்கல் வருகிறது எனில்... இப்படி அணுகும் பெண்களில் பலருக்கு ஒரு காதலன் மட்டும் போதவில்லை.
இதை அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, வெறும் பத்துப் பதினைந்து பேரிடம் மட்டும் பேசிவிட்டோ நான் எழுதவில்லை. இதற்கெற்றே என் தோழிகள், நண்பர்கள் என்று பலரிடமும் பேசினேன். இவர்களில், ‘இதை நீ அவசியம் எழுது!’ என்று உற்சாகமூட்டியவர்கள் என் தோழிகள் என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆகையால், நான் எழுதுவதை ஒரு தரப்பு ஆண்களின் புகார்களாக மட்டுமல்லாமல், ஒரு தரப்புப் பெண்களின் அபிலாஷையாகவும் படிக்க வேண்டும்.
¶
'என் காதல் காவியக் காதல்' எனக் கடல் மண்ணில் பிரம்மாண்ட சிற்பம் கட்டிக்கொண்டிருக்கும் பெண்கள், அதேசமயத்தில் இன்னொரு பையனிடமும் பேசுவதில் ஒரு நுட்பம் இருக்கிறது. ஆணைப் பொறுத்த அளவில் ஒரு பெண்ணைத் தாண்டி இன்னொரு பெண்ணிடம் பேசுவதே சீட்டிங்தான். ஏனென்றால், அவனுடைய கடைசி டார்கெட் செக்ஸ். அதனால், இன்னொரு பெண்ணிடம் பேசுவதிலேயே ஆண் குற்றவுணர்வு அடைகிறான். ஆனால், பெண்ணைப் பொறுத்த அளவில் இன்னொரு பையன் தன்னை அணுக வேண்டும் என்பதே இலக்கு என்பதால், அவளுக்கு எந்தக் குற்றவுணர்வும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறாள்.
ஆண்களுக்குப் பொதுவாகத் தோழிகள் கிடைப்பது சிரமம். இது கண்கூடாகப் பார்க்கக் கிடைக்கும் விஷயம். ஆனால், பெண்களுக்கு அப்படி அல்ல. ‘பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, ஆண்கள்போல வெளியே சுற்ற முடிவதில்லை’ என்பன போன்ற பல பிராதுகள் இருந்தாலும், அவர்களுக்குத் தோழர்கள் கிடைப்பதிலும், காதலர்கள் கிடைப்பதிலும், எந்தச் சிரமமும் இல்லை. இதைத் தாண்டி என்ன உறவு என்றே தெரியாவண்ணம் சில ஆண்கள் கிடைப்பார்கள். ‘இவன் சகோதரனா அல்லது காதலனா!’ என்ற பெருங்குழப்பத்தை உண்டாக்கும் வகையில், சிலர் புழங்குவதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
எனக்குத் தெரிந்த, நன்கு அறிந்த தோழிகளை வைத்தும், அவர்களின் கடுப்பான கணவன்மார்களை வைத்தும், என்னிடம் அவர்கள் பகிர்ந்துகொண்டவற்றை வைத்தும் சொல்கிறேன். இன்றைய சிக்கல்கள் இப்படியெல்லாமும் இருக்கின்றன.
1) ஒரு காதலன் வேண்டும்; அவன் கணவன் மெட்டீரியல் அல்ல.
2) தீவிரக் காதலில் இருக்கையிலும், அவள் இன்னொருவனுக்கு நம்பிக்கை தருகிறாள்.
3) ரயில் முன்பதிவு சீட்போல, அவள் வெயிட்டிங் லிஸ்ட் மெயின்டெயின் பண்ணுகிறாள்.
4) பாய் பெஸ்டி எல்லாம் இப்போது வந்தது எனினும், ரகசியமாக அவளுக்கு எப்போதும் அந்தத் தேவை இருந்துகொண்டே இருக்கிறது.
5) சாஃப்ட் போர்ன் அல்லாமலேயே, அதற்கு வாய்ப்பிருக்கும் பலருடன் பழகுவதில் ஆர்வம் உள்ளவளாக இருக்கிறாள். அவளே அதைப் பற்றி எல்லாம் பெரிதாக யோசித்துப் பார்ப்பதில்லை.
இப்படி எல்லாம் ஆண்கள் மீதும் பிராதுகள் உண்டு. ஆனால், திருட்டுத்தனம் செய்கிறோம் என்று தெரிந்தே செய்கிறான்; மாட்டிக்கொண்டால் செருப்படி வாங்கிக்கொள்கிறான்; மேலும் குற்றவுணர்வில் உழல்கிறான். பெரும்பான்மை பெண்களுக்குத் தாங்கள் செய்வது என்னவென்றே தெரியாத பாவனையில் செய்துகொண்டேயிருக்கிறார்கள். அதாவது, திருட்டுத்தனம் செய்துகொண்டே போலீஸ்காரர் ரோலையும் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஓர் உதாரணம் சொன்னால் புரியும். 'ஒண்ணுமே தெரியாத பொண்ணு' என்று பெயரெடுத்த பெண் அவள். ஒரேசமயத்தில் இரண்டு பேருடன் ஓடிக்கொண்டிருந்தாள். ஒருநாள் மாட்டிக்கொண்டாள். யாரிடம் என்று கேட்கிறீர்களா? கணவனிடம் என்றே வையுங்கள். கையும் களவுமாக மாட்டிக்கொண்டாலும், எந்தப் பதற்றமும் அவள் அடையவில்லை. மிக மிக சாதாரணமாக பிஹேவ் செய்தாள். அவளுடைய விஸ்வரூபத்தையே அன்றுதான் அந்தக் கணவன் பார்த்தான்.
இன்னொன்றும் இதில் இருக்கிறது. இறுதியில், ஏதோ அவன் தவறு செய்துவிட்டதான ஒரு நாடகியச் சூழலை உருவாக்கினாள். கணவன் குழம்பி மென்டலாகிப்போனான். இது ஏன் என்று நான் யோசித்துப்பார்த்ததில் எனக்குத் தெரியவந்தது - அவர்கள் அவர்களுக்குத் தெரிந்து எந்தத் தவறும் செய்யவில்லை. இந்த லோகத்தின் விதிமுறைகள் எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. இந்த உலகின் விதிமுறைகள் எல்லாம் தாங்கள் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் மட்டுமே என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
¶
பெண்களுக்கான உலகம் சிறியது என்று முன்னமே இந்தத் தொடரில் எழுதியிருக்கிறேன். ஆனால், அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் தங்கள் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவையும் சந்தர்ப்பமும் குறைவு. இவ்வகை எக்ஸ்டெர்னல் பிரஷர் இல்லாத வாழ்க்கை வாழ்வதால் ஒரு விதத்தில் அவர்களுக்கு இது மிகச் சுலபமாக இருக்கிறது. ஒருவிதத்தில் அவர்களுக்கு இந்த வாழ்க்கை சிலாக்கியமாக இருக்கிறது. அவர்கள் அதிகம் பேசக்கூடியது எப்போதும், அப்போது காதலிக்கும் ஆணுடன்தான். எப்போதும் அவர்களுடன் பேசுவதற்கும், அவர்களின் வாழ்க்கையை பிஸியாக வைத்துக்கொள்வதற்கும் ஆண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. ஒரு புது ஆண் ஒருத்தியுடைய வாழ்க்கையில் முதன்முறையாக வருகையில், அவன் செய்த முதல் வேலை அவளது கடந்த காலத்தை எல்லாம் கழுவிவிட்டு, அவளுக்கு ஞான ஸ்நானம் கொடுப்பதுதான். சாத்தான்களுக்கும்கூட இப்படி தேவதை மேக்கப் போட்டுவிடும் வேலையை நன்கு செய்பவர்கள் ஆண்கள்.
¶
பெண்கள் மீது நான் பகிரங்கமாக வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு இது!
எவ்வளவுதான் உயரத்துக்குப் போனாலும், தன்னைவிட எவ்வகையிலாவது உயரமான ஆண் மகனையே தன் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுப்பது. ஒரு காதலில் இருக்கும்போது பிரேக் அப் வருவது சகஜமானது - அது பல பைத்தியக்காரக் காரணங்களுக்காக வரும் - பைசா பெறாத காரணங்களுக்காக வரும் பிரேக் அப்களை நான் வரவேற்கிறேன். அதன் தன்மையே அதுதான். அதைக் கொண்டாட வேண்டும். ஆனால், கணக்குப் போட்டு வரும் பிரேக் அப்களை நான் வெறுக்கிறேன்.
ஒருவனுடன் தீவிரக் காதலில் இருக்கும் பெண், அவனுடன்தான் தன் திருமணம் என்ற முடிவில் இருக்கும் பெண், அவனைவிட பெட்டர் ஆப்ஷன் கிடைத்ததும் - பெட்டர் ஆப்ஷன் என்பது சமூகத்தில் ஒப்பீட்டளவில் அவனுக்கு இருக்கும் உயரிய இடம் - இவனைக் காரணமே சொல்லாமல் வெட்டிவிடுகிறாள். ஆணுமே பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைத்ததும் மாறலாம். ஆனால் காரணம் சொல்லி, கேவலப்பட்டு மாறுவான். அது வெளிப்படையாகத் தெரியும். இவள் மாறுவது, அவளைத் தவிர யாருக்கும் தெரியாது என்பதுதான் முக்கியமான விஷயம்.
ஒன்று காரணமே சொல்லாமல் பிரிந்துவிடுவாள். அல்லது காதலித்துக்கொண்டிருக்கும் ஆசாமி அளவுக்கதிகமான கேனையனாக இருந்தால் - “உனக்கு நல்ல வாழ்க்க அமையறதுதான் முக்கியம்” எனச் சொல்லி முத்தமிட்டு அனுப்புபவனாக இருந்தால், ஓர் இரவு தங்கிவிட்டு பிரியும் அளவுக்குத் தேர்ந்த காதல் கார்ப்பரேட்டாக இருக்கிறாள்.
சில கேள்விகளை நாம் கேட்டுக்கொள்வோம். எல்லோருக்கும் தெரிந்த சினிமா நடிகர் நடிகைகளை எடுத்துக்கொள்வோம். நடிகர்கள் சாதாரண பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதைப் பார்த்திருப்போம். ஏன், பெரும்பாலும் நடிகைகள் அப்படி ஒரு சராசரி ஆணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதைப் பார்க்க முடியவில்லை?
நடிகை என்றாலே நடிகர், இயக்குநருடன்தான் காதல். சரி, தொழில்ரீதியாகப் பழக, இவர்களுடன்தான் வாய்ப்பு என்று வைத்துக்கொண்டாலும், தொழில் அதிபர் எங்கிருந்து வருகிறார்?
இப்படி எந்த நடிகராவது, பெண் தொழிலதிபரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கால்குலேஷன்? ஒரு மோசமான, டுபாக்கூர் தொழிலதிபரையாவது காதலித்து ஏமாறுவார்களே தவிர, தன்னை உண்மையாகக் காதலிக்கும் சாதாரண ஆசாமியைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்றால், அங்கே எங்கே காதல் இருக்கிறது?
சமந்தாவையே எடுத்துக்கொள்ளுங்கள். அழகிதான். திறமைசாலிதான். நாளெடுத்துச் சிரமப்பட்டுதான் முன்னேறினார். இப்போது அவர் விவகாரத்து செய்து, “ஓ சொல்றியா மாமா...!” என குத்துப்பாட்டுக்கு ஆடியதும், அவரை என்னமோ பெண்ணியப் போராளி போலச் சித்திரிக்கிறார்கள். ஆனால், அவர் காதலித்தது நாக சைதன்யாவையா அல்லது அக்கினேனி பரம்பரை எனும் செல்வாக்கு, அதிகாரத்தையா என்ற கேள்வி எனக்கு உண்டு.
முதலிரவு முடிந்ததும் படுக்கையறையில் இருந்து, ‘அக்கினேனி’ என்ற வாசகம் பதித்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டு பெருமையுடன் போஸ் கொடுத்தாரே சமந்தா, அதன் மூலம் அவர் சொல்ல விரும்பிய செய்தி என்ன? அக்கினேனி என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா? அல்லது திறமைக்குக் கிடைத்த விருதா?
நான் பேசிக்கொண்டிருக்கும் வகைப்பட்ட பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே சமந்தாவைப் பார்க்கிறேன். நான் அக்கினேனி என்பதை ஒரு பெருமை மிகு அடையாளமாகப் பார்க்கவில்லை. சமந்தா அப்படிப் பார்த்ததாலேயே, அதைடு நோக்கி அவர் நடுவிரலைக் காட்டுவதான தொணியில், ‘ஓ சொல்றியா மாமா!’ பாடல் அர்த்தப்படுத்தப்படுவதாக அனுமானிக்கிறேன்.
இந்த விஷயத்தில் நாக சைதன்யா கண்ணியமாக நடந்துகொள்வதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.
சமந்தா அக்கினேனியைக் காதலித்தாராம். இப்போது அக்கினேனிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறாராம். அதுவும் முற்போக்குப் பெண்ணிய முகமூடியில்... கஷ்ட காலம்!
அடுத்த வாரம், ஆண்களின் சில பல காமப் பிராதுகளைப் பேசிவிட்டு, அடுத்து இனி பெண்கள் தரப்பு வாதத்துக்குத் தொடரை விட்டுவிடுகிறேன்.
(பேசுவோம்...)
2
3
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Latha 3 years ago
Sir உங்க திறமையே திறமை. செம்ம அழகா எழுதுறீங்க. ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு இப்பிடி எழுதினது (சமந்தா வை குற்றம் சொல்லி ). அப்புறம் கட்டுரை தானே ன்னு சும்மா புகுந்து விளையாடி இருக்கீங்க ன்னு தோணுது. எந்த ஆணாவது /தொழில் அதிபராவது அசிங்கமான பெண்ணை / அல்லது ஒரு சினிமா படத்தில் நகைச்சவையாக காட்டப் படும் அங்கவை சங்கவை போன்ற பெண்களை கல்யாணம் செய்வார்களா? ஒருவகையில் ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றலாம் என்றே கணக்கு போடுகிறார்கள்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Balaganesh Janakiraman 3 years ago
1. "மாட்டிக்கொண்டால் செருப்படி வாங்கிக்கொள்கிறான்; மேலும் குற்றவுணர்வில் உழல்கிறான்". இந்த குற்றஉணர்வுக்கும் செருப்படிக்கும் அந்த பெண் மட்டும்தான் காரணம் அப்டின்னு உங்களால விரல் நீட்டி சொல்ல முடியுமா. இதுல சமூக மரபு பண்பாடு அப்படினு சொல்லிக்கிட்டு தமிழ் மரபு குடும்பம் அப்டினு பேசும் சமூகத்தினரின் பங்களிப்பு என்ன அப்டின்னு பிரிச்சி பார்க்காம வெறும் பெண்களை மட்டும் தப்பு சொல்லி என்ன பிரயோஜனம்? 2. கடைசியா அவரே சொல்லிட்டாருங்க. "இந்த உலகின் விதிமுறைகள் எல்லாம் தாங்கள் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மட்டுமே என அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்". இதுதான் பெண்களின் கடமை என்றும் அவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென நிர்பந்திக்கும் ஆண்களின் கையிலிருக்கும் சாட்டையும் கூட. பெரும்பான்மை பெண்களின் புரிதல் இப்படித்தான் என அராத்து சொல்லுவார் எனில் அதற்கான காரணம் பெரும்பான்மை ஆண்கள் பெண்களை நடத்தும் விதத்தில் இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். 3. "ஏன், பெரும்பாலும் நடிகைகள் அப்படி ஒரு சராசரி ஆணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதைப் பார்க்க முடியவில்லை?" பெண்கள் தான் குடும்ப குத்துவிளக்கு. அவங்க யாரை கல்யாணம் பண்ணிக்கணும் அப்டின்றது அவங்களுடைய சொந்த விருப்பு வெறுப்பின்பால் நடப்பது அல்ல. அவங்க யாரா இருந்தாலும் பிரபலமான நடிகையாகவே இருந்தாலும் அவர்களுடைய முடிவு அவர்களின் சமூக குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்போடு நடக்கிறதேயன்றி தனித்த முடிவுகள் அல்ல. இங்கு நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் விஷயங்களை எப்படி எந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். எல்லாரும் நயன்தாராவாக இருக்க முடிவதில்லை. அப்படி இருக்கவும் இந்த சமூகம் அனுமதிப்பதும் கிடையாது. 4. அராத்துக்கு தோழிகள் உற்சாகமூட்டி எழுத சொன்னார்களாம் இந்த விஷயத்தை. "The Great Indian Kitchen" திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு. நாயகி மாதவிடாய் சமயத்தில் வீட்டிலிருக்கையில் அவரை முன்வாசலுக்கு வரவேண்டாம் தரையில் தான் படுக்கவேண்டும் என்றும் ஆண்கள் கண்ணில் படாமல் அறைக்குள்ளேயே தங்கி இருக்கவேண்டும் எனவும் நிர்பந்திப்பவள் ஒரு பெண். பெண் தோழிகள் நிர்பந்தித்ததாலேயே தன் தனிப்பட்ட புலம்பல்கள் மற்றும் கற்பனைகளுக்கு அராத்து அங்கீகாரம் கோருவது வேடிக்கை. பெண்களில் பிற்போக்குத்தனமான பெண்களும் உண்டு. நினைவில் கொள்க.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Murale 3 years ago
சிறப்பான அவதானிப்பு. விஷயம் மிக எளிது. ஆண் ”தான் தான் ஆள்கிரோம்” என்கிற நினைப்புடனே அவனை இருக்க விட்டு, அவனுக்கே தெரியாமல் அவனை ஆள்வது பெண்ணின் ஆதி இயல்பு. காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாவண்னம் இருக்கிறது. எழுத்தாளர் “கார்ல் மாக்ஸ்” எழுதிய “லட்டு” சிறுகதையின் சரடும் இதுவே.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 3 years ago
ஆ, தொடர் முடியப்போகிறதா? பெதும்பை, மங்கை, மடந்தை என்று பருவந்தோறும் மாறுபடும் குண இயல்புகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.