வாழ்வியல், இரு உலகங்கள் 9 நிமிட வாசிப்பு

இரு விலங்குகள்

அராத்து
01 Jan 2022, 5:00 am
5

 

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.

ண் - பெண் உறவானது, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்றால், இரு தரப்புகளும் சில சுயபரிசீலனைகளுக்கு உட்படுத்திக்கொள்வது முக்கியம். மனித இனம் எப்போதும் சமூக விலங்கு குணத்தையே இயற்கையாகக் கொண்டது; கொஞ்சம்போல அது குடும்ப விலங்கு குணத்தையும் கொண்டிருக்கும். ஆனால், இன்று ஆண் - பெண் இடையே இந்த குணம் பெரும் மாறுபாட்டைக் கொண்டிருக்கிறது. இதுவும் ஆண் - பெண் உறவுச் சிக்கலில் பெரும் பஙகு வகிக்கிறது.

எப்படி? ஆண் பெரிய அளவில் சமூக விலங்காகவும்; பெண் பெரிய அளவில்  குடும்ப விலங்காகவும் நிற்கிறார்கள். பெண்ணுமே சமூக விலங்காக இருப்பவள்தான். திருமணமான உடனே குடும்ப விலங்காக மாறிவிடுகிறாள்.

அங்கீகாரத்திலிருந்து நாம் ஆரம்பிப்போம்.

ஆண் பெண் இருவருமே அங்கீகாரத்துக்கும், பாராட்டுகளுக்கும் ஏங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் கொஞ்சம் கொஞ்சமாக ஆண் அப்படியே சமூக அங்கீகாரம் சார்ந்து செல்ல, பெண்கள் மட்டும் தங்களுக்கான சமூக அங்கீகாரம், பரந்துபட்ட அங்கீகாரம் போன்ற ஆசைகளை விட்டு, குடும்பத்திற்குள் அங்கீகாரம் கிடைத்தால் போதும் என்று தங்களைக் குறுக்கிக்கொள்கிறார்கள்.

உங்கள் அக்கம்பக்கத்தில் கவனித்துப் பார்த்தால் இதை நன்கு உணர முடியும். திருமணமான ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பரந்துபட்டு கிடைக்கும் அங்கீகாரம் தரும் மகிழ்ச்சியைவிட, குடும்ப அளவில் குடும்ப உறுப்பினர்கள் மூலம் கிடைக்கும் பாராட்டு தரும் மகிழ்ச்சியில் அவள் நிறைவடைவதைக் காண முடியும். சமூக உறவுத் தளங்களில் இருந்து தன்னை உதறிக்கொண்டு குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மும்முரமாகிறாள்.

இதனால்தான் பெண்ணுக்கு ஊரில் சில மனிதர்கள் பாராட்டுவதைவிட, மாமியார் அல்லது நாத்தனார் பாராட்டுவது பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. குடும்ப உறவுகளுக்குள் தன்னுடைய பிடியையும் அதிகாரத்தையும் இறுக்கமாக்கிக்கொள்வதே அவளுடைய முதன்மையான தேவையாகிறது.

அதேநேரத்தில், ஆணை எடுத்துக்கொண்டால் அவனுக்குக் குடும்பமும் குடும்ப உறவுகளும் மெல்ல மெல்ல சிறுத்துப்போகின்றன.  அவனுக்குக் குடும்பத்திற்குள் கிடைக்கும் அதிகாரமும் குடும்ப உறவுகளுக்குள் கிடைக்கும் அதிகாரமும் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரிகிறது. அதற்கு அவன் பெரிதாக ஆசைப்படுவதும் இல்லை.

குடும்ப உறவுகளுக்குள் நவீன ஆணின் நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கொஞ்சம் அவதானித்துப்பாருங்களேன். அவன் குடும்ப உறவினர்களையே நண்பர்களாகப் பாவித்துதான் பழகுவான். அதேசமயம், நவீன பெண்களையும்கூட எடுத்துக்கொண்டால் நட்பு வட்டாரத்தையே அவர்கள் உறவு வட்டமாகப் பாவித்துக்கொண்டு பழகிவருவது புரியும்.

பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். மாமனாரும் மருமகனும் நண்பர்கள் போலத்தான் பழகுவார்கள். இருவருக்குள்ளும் ஒத்துவரவில்லை எனில் பெரிதாகப் பழகவே மாட்டார்கள். இரு வேறு துறைகளைச் சார்ந்த உயரதிகாரிகள் பழகிக்கொள்வதுபோல மேம்போக்காக பழகிக்கொள்வார்கள்.

அதேதான் மாமன் மச்சான் உறவிலும். இறங்கினால் அடிடா புடிடா என்று நெருங்கிய நண்பர்களைப் போல உறவாடி கொள்வதையும், ஒத்துவரவில்லை என்றால் வெளிநாட்டு தூதுவர்களைப் போல மேம்போக்காக பழகிக்கொள்வதையும் பார்க்க முடியும்.

திருமணத்திற்குப் பின் நவீன கணவன் தன் மனைவியை அவள் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அவள் உலகில் வாழ அனுமதித்துவிடுகிறான். பரந்துபட்ட சமூக அரங்கிற்குள் அவளை வரச்சொல்லி வற்புறுத்துவது இல்லை. ஆனால், நவீன மனைவி அவனுக்கு ஒத்துவராத - முற்றிலும் பிடிக்காத குடும்ப உறவுகள் என்ற சுழலுக்குள் கொண்டுவர துடியாக துடித்துக்கொண்டே இருக்கிறாள்.

இதில் ஒரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. இந்த விஷயம் பெரிய ரகசியம் எல்லாம் இல்லை. பெண்களுக்கும் இது தெரிந்தே இருக்கிறது. ஒரே பெண் ஒரு தாயாக நடந்துகொள்ளும்போது, 'ஆண் இப்படித்தான்' என்று தன் மகனிடம் புரிந்து நடக்கிறாள்;  இதைப் போன்ற குடும்ப உறவு விடயங்களில் அவனைத் தொந்தரவுசெய்து ஈடுபடுத்த முற்படுவதில்லை. ஆனால்,  மனைவி என்ற பாத்திரத்தில் இருக்கும்போது அவளே  அவனுக்குப் பிடிக்காத, ஒத்துவராத இந்த விஷயத்தில் தொடர்ந்து அவனைத் தொந்தரவுப்படுத்திக்கொண்டே இருக்கிறாள்.

அவளுடைய விருப்பத்திற்காக குடும்ப உறவுகளைப் பேணும் வேலையில் அவன் இறங்கினாலும் அதிலும் எக்கச்சக்கக் குறைகளைக் கண்டுபிடித்து எரிச்சலையும், வெறியையும் உண்டாகிக்கொண்டிருப்பவளாகவே இருக்கிறாள்.

அதிலும் அவளுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் என்னமோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள்போலவும் அல்லது ஸ்பெஷலாக க்ளோனிங்கில் உருவாக்கியவர்கள்போலவும் இருக்கும் அவளுடைய செயல்பாடு.

அவளுடைய பெரியப்பாவிடம் எப்படி பேச வேண்டும்? அவளுடைய மாமாவிடம் ஒருவிதமாகப் பேச வேண்டும், அவளுடைய தந்தையிடம் ஒரு விசித்திரமான ப்ரோட்டாகால்படியே பேச வேண்டும் என ஆரம்பித்து அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் அவள் மிகப் பெரிய விதிமுறைக் கையேடுகளைத் தயாரிக்க மட்டுமல்லாமல் தொடர் பயிற்சி வகுப்பு எடுக்கவும் ஆரம்பித்துவிடுகிறாள்.

பெண்ணின் உறவினர்களில் ஒருவன் மடமாக்கான் இருப்பான். அவன் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொட்டிக்கொண்டு நம்மை டார்ச்சர் செய்துகொண்டிருப்பான். நாம் இவளுக்காக அவனுடைய சாட்டை அடிகளைப் பொறுத்துக்கொண்டு அவனுக்கு ஒரு உயர்ரக ஜென்டில்மேன்போல பதிலளித்துக்கொண்டிருப்போம்; அவனுடைய அராஜக அட்ராசிட்டி எல்லாம் விட்டுவிட்டு இவள் நாம் அந்த மகானிடம் முழுமையாகப் பேசிக்கொண்டு இருப்பதில் மிகப் பெரிய குறையைக் கண்டுபிடித்து அந்த நாளையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடுவாள்.

இதை வைத்துப் பெண்களைப் பிறந்த வீட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்லது பிறந்த வீட்டு உறவினர்கள் மேல் மிகப் பெரும் மரியாதை வைத்திருப்பவர்கள் என்றும் எடுத்துக்கொள்ள முடியாது.

சில உறவுகளில் கவனித்திருப்பீர்கள்... மாமனார் மருமகன் அல்லது மாமன் மச்சான் போன்ற இருவருக்கிடையே இயற்கையாகவே நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும். இப்படி இருவரும் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தால், இவளுக்குப் பேரானந்தமாகத் தானே இருக்கவேண்டும்? ஆனால் அதுதான் இல்லை.

இவளுக்குப் படபடவென ஆகிவிடும். நன்றாக இருக்கும் இருவர் உறவுகுள்ளும் வெட்டியாக தலையை நுழைத்து ஏதேனும் குழப்பம் விளைவிக்கப் பார்ப்பாள். "என்னமோடா, அப்படித்தான் செய்யத் தோணுது!" என்று சொல்லும் தோழிகள் எனக்கு உண்டு.

குடும்ப உறவுகளுக்குள் அரசியல்செய்வது அவளுக்குத் தேவைப்படுகிறது; இந்தத் தேவை எந்த ஒரு விளைவையும் முடிவையும் எதிர்பார்த்து அல்ல; குடும்ப உறவுக்குள் அரசியல்செய்வது அவளுடைய அன்றாடச் செயல்களில் ஒன்றாக இருக்கிறது.

குடும்பத்திற்கு உள்ளான உறவுகளை ஒன்றுபடுத்துவதில் எப்படி அவள் தேர்ந்தவளாக இருக்கிறாளோ அப்படியே குலைப்பதிலும் அவள் கை தேர்ந்தவளாக இருக்கிறாள். இதற்கான காரணம் என்ன? தெளிவான விடை எனக்குத் தெரியவில்லை. ஓரளவு யோசித்துப்பார்த்தால் குடும்ப உறவுகள் அனைத்தையும் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவளது ஆசையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. யாரும் தன்னை மீறிப் போய்விடக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வும் காரணமாக இருக்கலாம்.

முன்பெல்லாம் சிறுவயதில் திருமணங்கள் நடந்தேறின. அப்போது உருவான ஆண் பெண் உறவுச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் குடும்பங்கள் ஒரு முக்கியப் பங்காற்றிவந்தன.

இப்போது ஓரளவு விவரமான வயதுக்குப் பிறகு நடக்கும் திருமணங்களில் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் ஏற்படுவதற்குக் குடும்பத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் ஒரு முக்கிய காரணியாக மாற்றி வைத்திருப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதல் என்ற உணவிற்கே பெண்கள் எதிரிகளோ; இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்போல் எந்தச் சண்டை சச்சரவும் இல்லாமல் காதல் வாழ்வு சென்றுகொண்டிருந்தால், பெண்களுக்கு ஏதோ குறைவதுபோல தோன்றிவிடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்குப் பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். பைசா பெறாத உப்புச் சப்பில்லாத ஏதோ ஒரு பிரச்சினையை உருவாக்கி அதை மிகப் பெரிய சண்டையாக வளர்த்தெடுத்து ஒன்றுதான் துன்பப்படுவது அல்லது அடுத்தவரை துன்பத்தில் தள்ளுவது என்று இறங்கிவிடுகிறார்கள். இதற்குக் குடும்பம் சார்ந்து தங்கள் வரையறைகளைச் சுருக்கிக்கொள்வது அல்லது அப்படி தாம் சுருக்கப்படுவதை அனுமதிப்பதே முக்கியமான காரணம் என்பதை அவர்கள் உணருவதில்லை. எந்த அளவுக்குக் குடும்பம் எனும் அமைப்பிலிருந்து வெளியே ஒரு பெண் சிந்திக்கிறாளோ அந்த அளவிற்கு அவர்கள் மகிழ்ச்சியானவளாக மாறுகிறாள். ஆணும் அப்படித்தான்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பிரச்சினைகள் வரலாம் - வரத்தான் செய்யும். அது என்ன விதமான பிரச்சினை என்பதில்தான் இருவருக்குள்ளும் பெருத்த வேறுபாடுகள் நிலவுகின்றன.

தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், தன்னிடம் ஒழுங்காக நடந்துகொள்ளாதது, தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு உறவுக்குள் செல்வது போன்ற பிரச்சினைகளால் ஆண் பெண்ணுக்கு இடையே சண்டையோ சிக்கல்கள் வந்தால் அது புரிந்துகொள்ளக் கூடியது; அதுதான் இயல்பானது. ஆனால், அதை எப்படி அணுகுகிறோம் என்பது முக்கியமானது.

எனக்குப் பல சமயங்களில் நண்பர்கள் மத்தியில் ஏற்படும் சண்டைகள் தலையைச் சுற்றி அடிக்கும். அவன் உண்மையில் இவள் மேல் அதிகபட்ச காதலோடு இருந்துகொண்டிருப்பான். அதைத் தவிர அவனுக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஆனாலும், இவள் அவன் மேல் அடுக்கும் புகார்களை அடுக்குவாள். " வரவர பெண்கள் காதலுக்கு முற்றிலும் எதிரானவர்களாக மாறிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு சில நாட்கள் அல்லது ஒரு சில காலம் வரைதான் உங்களால் காதலில் அனுபவித்து, திளைத்திருக்க முடிகிறது. காதலனும் காதலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் அப்படியே நீடித்தால் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மூச்சு முட்டுகிறது. ஏதேனும் சிக்கல்கள், பிரச்சினைகளை மெனக்கெட்டு உருவாக்கிக்கொண்டு ஒரு ரத்தக்களரியான வாழ்க்கைக்கு உள்ளேயே இருக்க உங்களை அறியாமலேயே விருப்பப்படுகிறீர்கள்" என்றுகூட நான் சில தோழிகளிடம் சொல்வது உண்டு.

யாரையாவது, கைக்குள் அடக்க வேண்டும் என்று எப்போது நினைக்கிறோமோ அப்போது எதிர்த்தரப்பின் சுதந்திரத்தை மட்டும் நாம் முடக்குவது இல்லை, நம்முடைய சுதந்திரத்தையும் முடக்கிக்கொள்கிறோம். முந்தைய காலத்தில் ஆண் இப்படி தன் மகிழ்ச்சியை அதிகாரத்தால் இழந்து நின்றான். இப்போது பெண் நிற்கிறாள். தேவை இல்லை. சுதந்திரமாக இருக்கலாம். சமூக விலங்குகள் ஆகவே பறக்கலாம். இரு தரப்புக்கும் அது மகிழ்ச்சி தரும்.

(பேசுவோம்...)

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


3

2

1


1


பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   9 months ago

அற்புதம்! அற்புதம்!! பெண் உள்ளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் இது! கடைசி வரி, மொத்தத் தமிழ்ப் பெண் சமுகத்துக்குமான எச்சரிக்கை மணி!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Latha   3 years ago

//அவளுடைய பெரியப்பா விடம் எப்படி பேச வேண்டும்...// இந்தப் பத்தி யில் மாறுபடுகிறேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Raja   3 years ago

"யாரையாவது, கைக்குள் அடக்க வேண்டும் என்று எப்போது நினைக்கிறோமோ அப்போது எதிர்த்தரப்பின் சுதந்திரத்தை மட்டும் நாம் முடக்குவது இல்லை, நம்முடைய சுதந்திரத்தையும் முடக்கிக்கொள்கிறோம்" - மிகவும் அருமை!

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   3 years ago

அருஞ்சொல்லில் இந்தத் தொடர் மிகுந்த சலிப்பை ஏற்படுத்துகிறது. இதைப்படிக்கும் எவ்வளவு பேரை இத்தொடர் தவறாக வழிநடத்தப் போகிறதோ தெரியவில்லை.

Reply 0 4

Raja   3 years ago

அவர் தனது கருத்துக்களை பதிவு செய்கிறார். சலிப்பு எல்லாம் ஏற்படுத்த வில்லை; சொல்ல போனால் நான் பலருக்கும் அனுப்பி அவர்கள் இவர் சொல்வதில் நிதர்சனம் இருப்பதாகத்தான் கருதுகின்றனர். எப்போதும் அரசியலையே கட்டிக்கொண்டு மாரடிப்பது சலிப்பை ஏற்படுத்தலாம் அல்லவா! சொல்ல போனால் இன்றைய பொருளாதார வளர்ச்சி பெற்ற நடுத்தர வர்க்கத்திற்கு இது போன்ற பதிவுகள் அல்லது ஆரோக்கியமான விவாதங்கள் மிகவும் அவசியமே!

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

திருமா - சமஸ் பேட்டிஉயிரியல் பூங்காஎரிகிறது மணிப்பூர்; வேடிக்கை பார்க்கிறது அரசுமிஸோதமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்கடின உழைப்புகடுமையான தலைவர்முரசொலி செல்வம்சில்க்யாரா சுரங்கம்அன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்கலைஞர் சமஸ்மெதுவடைபால் வளம்தேர்தல் முடிவுகருத்து வேறுபாடுகள்தமிழ்ப் பௌத்தம்கும்பகோணம்ஒழுக்கம்தொழில்நுட்பத் துறைபூஸான்370 இடங்கள்அடையாளங்கள்வேளாண் சட்டங்கள்பார்வை இழத்தல்இயான் ஜேக்காங்கிரஸின் புதிய பாதை!பத்ம விருதுகளின் வரலாறு என்னமறைமுகமான செய்திபணச் சுழலேற்றம்தீண்டப்படாதோர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!