கட்டுரை, வாழ்வியல், இரு உலகங்கள் 11 நிமிட வாசிப்பு

ஆண்களைக் காக்க வைப்பதில் அப்படியென்னம்மா அல்ப சுகம்?

அராத்து
18 Dec 2021, 5:00 am
3

 

ரு உலகங்கள். இது ஆணும் பெண்ணும் மாறிமாறி தங்கள் அபிலாஷைகளை, புகார்களை, எதிர்பார்ப்புகளை, குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக அப்படியே முன்வைக்கும் தொடர். அரசியல் சரித்தன்மைக்கோ, சமநிலை உணர்வுக்கோ இதில் இடமில்லை. ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்ள ஏதுவாக அவரவரைச் சுற்றியுள்ள உலகத்தை அப்படியே பேசுகிறது. பின்னர், விவாதங்கள், உரையாடல்கள் நடக்கும். பெண்களின் சார்பில் அனுஷா எழுதினார். இப்போது ஆண்களின் சார்பில், அராத்து எழுதுகிறார். அடுத்து, பெண்கள் தரப்பு - ஆண்கள் தரப்பு என்று இந்த உரையாடலும் விவாதமும் தொடரும்.

 

ண் - பெண் உறவுச் சிக்கல் கிராமங்களைவிட நகரங்களில்தான் அதிகம் இருக்கிறது; கிராமங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்று பரவலாகச் சொல்லப்படுவதை கவனித்திருக்கிறேன். இதைப் படித்துக்கொண்டிருப்பவர்களில் சிலருக்கும் அப்படித் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது. 

கிராமத்துக்குப் புனிதப்பூச்சு பூசிப் பேசுவது இங்கே ஃபேஷன் ஆக இருந்துவந்த காலகட்டம் ஒன்று உண்டு. கால ஓட்டத்தில், பலரும் இதை உண்மை என நம்பத் தலைப்பட்டார்கள். கடந்த பத்தாண்டுகளில் இணையத்தின் புண்ணியத்தால், இப்போது அங்கிங்கெனதாபடி எங்கும் பிரச்சினைகள் வியாபித்திருப்பது வெளியே தெரியவருகிறது.

உண்மை என்னவென்றால், குடும்பம் என்கிற அமைப்பில் ‘நான் யார்?’ என்ற கேள்வியிலிருந்தே எல்லா முரண்களும் புறப்படுகின்றன. இந்த முரண்களின் முக்கியமான மையமாகவே ஆண் - பெண் உறவுச் சிக்கல் ஏற்படுகிறது. என்னைப் பொருத்த அளவில் இது நல்லது என்றே எண்ணுகிறேன்.

அதாவது, ஆண் - பெண் உறவுச் சிக்கல் மிகவும் முற்போக்கானது. இப்படி முட்டிக்கொண்டால்தான் இருவருக்கிடையில் அவரவர் சுயம் கெடாமல் ஒன்றாக வாழ வழி கிடைக்கும். தற்காலத்தில் முட்டிக்கொண்டு, மனம் வெதும்பி, ரத்த விளாறாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள் பெரும் தியாகிகள். இவர்கள்தான் எதிர்கால தம்பதியினருக்கு, ‘இருவரும் விட்டுக்கொடுக்காமல்... ஆனால், சுமுகமாக வாழ்வது எப்படி?’ என்பதற்கான ஒரு வரைவுத் திட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக தங்கள் தாம்பத்திய வாழ்வையே பலிபீடத்தில் இட்டு சோதனை முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

வீட்டில் சண்டை சச்சரவே இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழ்வதை சிலர் 'ரொமாண்டிசைஸ்' செய்வார்கள். அதை உச்சி முகர்ந்துகொள்ள ஏதும் இல்லை. ஆடு, மாடுகள்கூடத்தான் சண்டை சச்சரவில்லாமல் தொழுவத்தில் கிடக்கும். அவற்றை நாம் விதந்தோதுவோமா? 

சரி, பிரச்சினைக்குள்ளே போவோம்! ஆண் - பெண் உறவில் ஆண்கள் நோக்கி இன்றைய பெண்கள் முன்வைக்கும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது. "நாங்கதான் சமைக்கணும், நாங்கதான் பெருக்கணும்னு என்ன இருக்கு! நீங்க இனிமே இதெல்லாம் பாருங்க!" தாராளமாகப் பார்க்கலாம். ஆனால், ஆண்களுக்காக இங்கே நேந்துவிடப்பட்டிருக்கும் எத்தனை வேலைகளைப் பெண்கள் எடுத்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்? 

முதலில், தங்கள் வேலைகளையே எதுவாகினும் பெண்கள், தன் இணையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது என்பது இன்றைய பல ஆண்களின் வெளியே சொல்ல முடியாத மனக்குமுறலாகவும், கதறலாகவும் இருக்கிறது. தங்களுக்கு உடை எடுக்க ஆண் ஏன் உடன் வர வேண்டும் எனப் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றே புரிவதில்லை. நேரேதிராக தான் உடை எடுக்கப்போகும்போது தன் இணை உடன் வருவதை எந்த ஆண் பயலும் விரும்ப மாட்டான். அதிலும் காதல் செய்யும் காலகட்டத்தில், செருப்பு எடுக்க போக வேண்டும் என்று இவனைக் கூட்டிக்கொண்டுபோய் டார்ச்சர் செய்வது எல்லாம் பெரிய அட்ராசிட்டி இல்லையா? 

செருப்பு எடுக்கக் கூப்பிட்டு நம்மாள், தலைவலி அது இது என்று போக மறுத்துவிட்டால் முடிந்தது கதை! இங்கே  ஆரம்பிக்கும் ஊமைக்குத்துச் சண்டை, பிரேக் அப்பில்கூட போய் முடியும்! கடைசியில் பல ஆண்கள் அழுது அரற்றி மன்னிப்புக் கேட்டு, தங்கள் காதலைக் காப்பாற்றிக்கொள்வது சகஜம். இப்படி இருந்தால் அவன் அவளை மென்டல் என்று நினைக்க மாட்டானா? அப்புறம் சிக்கல் இல்லாமல், புரிந்துணர்வா பாய்ச்சிக்கொண்டு அடிக்கும்?

மிக மிக சீரியஸான உதாரணங்களுக்குள் போக வேண்டாம். அனைவருக்கும் தெரிந்த எளிய உதாரணம் தருகிறேன். ஒரு ஜோடி, கடற்கரை நகரத்திற்கு உல்லாச சுற்றுலா போகிறது. இவனுக்கு முடி வெட்ட வேண்டும். என்ன நடக்கும்? இவள் ரெஸார்ட் ரூம'ல் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்க, அவன் எங்காவது சலூனுக்கு போய் ஒரு தம் அடித்து மூன்றாம் பேருக்குத் தெரியாமல் முடி வெட்டிக்கொண்டு வந்துவிடுவான். 

இவளுக்கு முடி கர்லிங்காக இருந்தால் ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய வேண்டும் அல்லது ஸ்ட்ரெயிட்டாக இருந்தால் சுருட்டை முடியாக்க வேண்டும். இதுதான் உலகப் பெண்களின் வழக்கம். அதற்கு இவள் முடிவுசெய்ததும் முதல் நாள் இரவிலிருந்தே ஆரம்பித்துவிடுவாள். 

"ஏய் நாளைக்கு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்க் செய்யணும்டா"

அது தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். 

மறுநாள் காலை நிம்மதியாக டீ குடிக்க முடியாது, 'பிரேக் ஃபாஸ்ட்' சாப்பிட முடியாது. எந்தத் திட்டமிடலும் செய்ய முடியாது. எதைச் செய்தாலும் இடையில், 'மயிர் நேராக்குதல்' பிரச்சினையைக் கொண்டுவந்து சொருகிவிடுவாள். 

"ஏன்டி நீ பாட்டுக்கும் போய்... உன் மயிரை நேராக்கிட்டு வர வேண்டியதுதானே" இதுதான் அவனின், அவன் மட்டுமல்ல; ஏக ஆண்களின் 'மைண்ட் வாய்ஸ்'. எத்தனை ஆண்களால் அப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்? இவன் உடன் போய் அந்த 'ப்யூட்டி பார்ல'ரில் தேவுடு காத்துக் கிடந்து அவள் நன்றாக இருந்த முடியை சர்க்கஸ் கோமாளி மாதிரி மாற்றிக்கொண்டு வந்ததைப் பாராட்டி, 'செல்ஃபி' எடுக்க உதவி செய்து, அந்த நேராக்கப்பட்ட முடியைப் பற்றியே விடுதி வந்து சேரும்வரை பேசிக்கொண்டே வந்தால்தான் பெண்கள் மொழியில் உண்மையான காதல். இல்லையென்றால் வெறும் காமச் சுகத்துக்காக சுற்றுபவன். 

இந்த முடி நேராக்கும் வைபவத்துக்குப் போகவில்லை என்றாலோ, அந்த நேரான முடியைப் பற்றி சில நிமிடங்கள் ஆழமாகப் பேசவில்லை என்றாலோ, “எல்லாந் தெரியும் போ... இதான் உன் காதல் மயிரா?” என்று கேட்டுவிடுவார்கள். அதன் பின்பு நுட்பமான மனநலக்கேடு விளைவிக்கும் தாக்குதல்கள் ஆரம்பமாகும். 

அவர்கள் துணிக்கடையில், ப்யூட்டி பார்லரில் பிஸியாக இருக்கையில் தங்கள் கணவனோ காதலனோ வெளியே வெட்டியாகக் காத்துக்கொண்டுக் கிடப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது என்பது நன்கு தெரிகிறது. ஆனால், இந்தப் பைத்தியக்காரத்தனமான ஆசைக்கு எத்தனை முறைதான் பலிகடா ஆவது? இதைப்போல ஒன்றா ரெண்டா ஓராயிரம் பைத்தியங்குளித்தனமான ஆசைகள், எதிர்பார்ப்புகள்!

மூன்று மணி நேரப் பரீட்சை எழுதும் வரை வெளியே காத்திருக்கும் கணவர்கள், கடலுக்குள் 'வாட்டர் ஸ்போர்ட்ஸ்' விளையாடப்போன மனைவி வரும்வரை பொட்ட வெயிலில் 2 மணி நேரம் அமர்ந்திருந்த கணவன்மார்களை எல்லாம் பார்த்து மனம் வெதும்பி ஒரு கோப்பை பியர் வாங்கிக்கொடுக்கலாமா என்று பரிதாபப்பட்டிருக்கிறேன். காத்திருப்பது ஒரு சுகம் என பெரும்பாலான பெண்கள் சொல்வார்கள். காத்திருப்பது சுகம் அல்ல அவர்களுக்கு. காக்க வைப்பதில் ஓர் அல்ப சுகம்!

ரொமான்ஸ் செய்யும் நேரத்திற்காக இந்தச் சிக்கல்களையெல்லாம் தாங்கிக்கொண்டு காத்திருக்கும் நவீன ஆண்மகனுக்கு இப்போது மாபெரும் சாவால்கள் காத்திருக்கின்றன. 

வெளிப்படையாகப் பேசுகிறேன் பேர்விழி என்று பெண்கள் காதலையும் காமத்தையும் இப்போது ஏகத்துக்குக்  குழப்பிவைத்திருக்கிறார்கள். ஒரு 'விர்ஜின்' ஆண் கடுமையான தாழ்வு மனப்பான்மையிலும், அதிக பட்ச அழுத்தத்திலும் இருக்கிறான். 

ஆண் - பெண் கலவி என்பது மிக இயல்பான ஒன்று, ஒவ்வொரு இணைக்கும் அது தனித்துவமானது. சம்பந்தப்பட்டவர்கள் அதில் எந்த மனத்தடையும் இல்லாமல் ஈடுபட்டு கண்டடைய வேண்டியது. 

பெண்கள் என்னவோ 'ஏலியன்ஸ்' மாதிரி 'பில்ட் அப்' கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பெண் உடல் புதிரானது அது இது என்று! ஏற்கனவே பெண் மனம் புதிரானது, புரிந்துகொள்ள முடியாதது என்று தொடர்ந்து சொல்லி அதை நிலைநிறுத்திவிட்டவர்கள், இப்போது கொண்டாடப்பட வேண்டிய பெண் உடலின் மீது புதிர்த்தன்மையைப் பச்சை குத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். 

ஜனாதிபதி கையால் விருது வாங்கும்போது, சில ப்ரோட்டோகால்களைப் பின்பற்ற வேண்டும். அதற்குப் பயிற்சி கொடுப்பார்கள். அதைவிட குழப்பமாகவும், பயமுறுத்தும்படியும் ஆக்கி வைத்திருக்கிறார்கள் நவீன பெண்கள். 

“ஒரு பொண்ணுகிட்ட எப்படிப் பேசணும் தெரியுமா?” என்பதில் ஆரம்பித்து பெண்ணை அணுகுவதற்கு சிக்கலான 'மெஷின் லேர்னிங்க் அல்காரிதம்'போல என்னென்னவோ சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். 

அவளுக்கு முதலில் இடது கை சுண்டு விரலைப் பிடித்தால்தான் பிடிக்கும், பின்னங்கழுத்தில் மேலுதட்டால் முத்தமிட வேண்டும் (அந்த போஸை நினைத்துப் பாருங்கள், குரங்கு தேங்காய் கொரண்டுவது போலுள்ளதா :-) )  முதலில் நெற்றியில்தான் முத்தமிட வேண்டும், உள்ளங்காலை நக்க வேண்டும் என்று ஆரம்பித்து அரசாங்க டெண்டர் விண்ணப்பம்போல விதிமுறைகளும், அறிவுறுத்தல்களும் மண்டிக்கிடக்கின்றன. 

கண்ணாம்பா குரலில் பழங்காலப் படங்களில் இந்த வசனம் பிரபலம், “இந்த க்ஷண நேர இன்பத்திற்காக என் வாழ்வை நாசமாக்கிவிட்டாயே!இன்றைய நவீன வாழ்வில் இதை இளைஞர்கள் சொல்வது நல்ல முரண். “இந்த க்ஷண நேர இன்பத்திற்காக எவ்வளவுதான் குட்டிக்கரணம் அடித்து பைத்தியம் பிடித்துத் திரிவது?”

இதனால் பல கற்பிதங்களுடனும், ஆயிரத்தெட்டு மனஅழுத்தங்களுடன் முதல் முறை ஒரு பெண்ணுடன் உறவுக்குச் செல்பவன் அணுகுண்டு வெடிப்பதற்குச் செல்பவன்போலவே கை கால்கள் நடுங்கிக்கொண்டு செல்கிறான். 

அவர்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா? அவர்களை நம்மால் திருப்திப்படுத்த முடியுமா? பதற்றங்களுடன் செல்பவனுக்கு என்ன ஆகும்? 

இதைப் போல அவனை ஓவராக பயமுறுத்தி பயமுறுத்தி, 'ப்ரீ மெச்சூர் எஜாக்குலேஷன்', 'எரக்டைல் டிஸ்ஃபங்கஷன்' இரண்டையும் இன்று தேசிய வியாதிகளாகவே மாற்றிவிட்டார்கள். 

ஒரு பெண்ணைத் தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்பதுதான் இன்றைய நவீன இளைஞனின் முன் உள்ள பெரிய சவால். அதன் பிறகுதான் படிப்பு, வேலை, அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ளுதல், தங்கைக்குக் கல்யாணம் செய்துவைத்தல் எல்லாம்!  

அதென்னய்யா திருப்திப்படுத்துவது? இருவரும் சேர்ந்து இன்பம் துய்க்கையில், இருவருக்கும் இன்பம் வரும் ஒரே புள்ளியைக் கண்டடைதலில் இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆண்களுக்கு விந்து வெளியேறினாலே, ‘ஆர்கஸம்’ என்ற தவறான புரிதலில் பெண்கள் வீராப்பாகப் பேசி ஆண்களை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இவனும் தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறான். விந்து வெளியேறிவிட்டது, நான் இன்பம் துய்த்துவிட்டேன், ஆனால் அவளுக்கு இன்பம் கிடைக்கவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறான். விந்து வெளியேறினாலேயே ஆண்களுக்கு ஆர்கஸம் வந்துவிடாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். விந்து வெளியேறிவிட்டால் அவனால் தொடந்து கலவியில் ஈடுபட முடியாது என்பது அவனுக்கு இருக்கும் இயற்கைக் குறைபாடு. பெண்களுக்கு மாத விடாய் துன்பம்போல, ஆண்களுக்கு இருக்கும் துன்பம் இது. இந்த விஷயத்தில் ஆண்கள் ஒரு ‘செக்ஸுவல் ஹேண்டிகேப்ஸ்’. உடல் ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளி என்று அழைக்கும் நாம், இந்த விஷயத்தில் அவனை அசிங்கப்படுத்துவது மிகவும் பிற்போக்கானது. 

உடல்ரீதியான குறைபாட்டைக் குத்திக்காட்டக்கூடாது என்று வாய் கிழிய பேசும் நாம் தொடர்ந்து இந்த அசிங்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். இது உடல்ரீதியான குறைபாடு மட்டுமல்ல, மனரீதியான பிரச்சனையும்கூட. உலகிலேயே இதுதான் காம்ப்ளக்ஸ் பிரச்சினை. 

அதிலும் '2 செகன்ட் ஆசாமி', 'லீக் ஆசாமி' என்றெல்லாம் வெளிப்படையாக, எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் உளறுபவர்களும் இருக்கிறார்கள். ஓர் அந்தரங்கமான உடல் - மனக் குறைபாட்டை எப்படி நாகரீகம் அடைந்த சமுதாயம் பொதுவெளியில் இப்படிப் பகிரங்கமாகக் கிண்டல் செய்ய முடியும் என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது. இப்படியே போனால், இனிவரும் காலங்களில் பயத்தில் சிறுநீரை வெளியேற்றுபவனாக ஆண் மாறி நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! பெண்களுக்கு 'ஆர்கஸம்' வரவில்லை என்றால் அதற்கு ஆண் மட்டும் காரணமல்ல... பெண்களுக்கும் அதில் பங்கிருக்கிறது. என்னதான் அந்த அரிய ஆர்கஸம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்!

அராத்து

அராத்து, தமிழ் எழுத்தாளர். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுகிறார். 'பிரேக் அப் குறுங்கதைகள்', 'ஓப்பன் பண்ணா' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1

9


1

1

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

KMathavan   1 year ago

தீர்க்கமாக உள்ளது கட்டுரை. இந்த புரிதல் 50ஆண்டுகாலம் பிடிக்கும் நடைமுறைக்கு வர, பொது சிந்தனை அர்த்தமற்றதை தாங்கி பிடித்துக்கொண்டு விடாது, அவ்வளவு எளிதில் மீட்கவும் முடியாது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

KUMARAN D   1 year ago

ஒரு பெண்ணிடம் பிரேக் அப் ஆனால் அடுத்த பெண் என போகும் போது வரும் நடுக்கம் இருக்கிறதே அதை தாங்க முடியாது

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Saran   1 year ago

நவீனப் பெண்கள் , female chauvinist கள்

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

அராத்து கட்டுரைநிர்வாகிகள்பாமினி சுல்தான்உச்ச நீதிமன்றம்நீதிபதி துலியாஹாங்காங் மாடல்புகழ்ச்சிக்குரியவர் இயான் ஜேக்prerna singhதமிழ் உரிமைநிவேதிதா லூயிஸ் கட்டுரைசமஸ் பேட்டிகள்பயன்பாடு மொழிஹேமந்த் சோரன்பதில் - சமஸ்…தாதாஷமக்கான்யூட்யூபர்கள்பேராசிரியர். பிரேம் கட்டுரைபண வீக்கம்கே.வி.அழகிரிசாமிகாந்திய வழியில் அமுல்c.p.krishnanசந்நியாசமும் தீண்டாமையும்ஷனா ஸ்வானின் ‘கவுன்டவுன்’பிரச்சினைஇந்திய வேளாண்மைஎதிர்காலம் இருக்கிறதா?கோகலேஉபி தேர்தல் 2022ரத்தமும் சதையும்ப.சிதம்பரம் சமஸ் அருஞ்சொல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!