கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

இந்துத்துவமும் சாவர்க்கரும்

யோகேந்திர யாதவ்
17 Aug 2022, 5:00 am
0

ந்துத்துவம் என்றால் என்ன என்று சாவர்க்கர் தெளிவாகக் கூறவில்லை. இப்போது அவரைப் பற்றி வந்திருக்கும் ஒரு புதிய புத்தகம் இதை மீண்டும் வெளிப்படுத்துகிறது. 

இந்துத்துவம் என்ற அரசியல் திட்டம் எப்போதுமே அடிப்படையான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது: அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று பேசும் அதேசமயத்தில், சமூகத்தில் சில தரப்புகளை ஒதுக்கிவைக்கும் நடைமுறையைக் கடைப்பிடிக்கிறது.

தார்மிகரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் இந்துத்துவத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அது பரந்துபட்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்தியாவின் முழு நாகரிக பாரம்பரியத்துக்கும் அது சொந்தம் கொண்டாட முடியும். இருப்பினும் அதன் அரசியல் அதைக் குறுகிய கோட்பாட்டை நோக்கியே தள்ளுகிறது. 

அடிப்படையான முரண்பாடுகள்…

‘விநாயக் தாமோதர் சாவர்க்கர் – அரசியல் வரலாறு’ என்ற இந்த நூலை எழுதியிருப்பவர் விநாயக் சதுர்வேதி. நூலாசிரியருக்கும் அவர் எழுதப் புகுந்த கதாநாயகருக்கும் உள்ள பெயர் ஒற்றுமையைக் கவனித்தீர்களா?

சதுர்வேதி, ஆர்எஸ்எஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆனால் அவருக்கு அந்தப் பெயரைச் சூட்டியவர் குழந்தை நல மருத்துவரான டாக்டர் தத்தாத்ரேய சதாசிவ பராசுரே. காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் குற்றஞ்சாட்டபட்டு விசாரிக்கப்பட்ட ஒன்பது பேரில் ஒருவர். அற்பமானதொரு பொய்யைச் சொல்லி வழக்கிலிருந்து விடுபட்டவர்.

டாக்டர் பராசுர் இறந்த பிறகே தன்னுடைய பெயருக்கான காரணத்தைக் கண்டுபிடித்த ரசமான விஷயத்தை நூலாசிரியர் விவரிக்கிறார்.

இப்படிப்பட்ட பொருத்தம்தான் இந்த நூலின் குரலாக பின்னணியில் இருக்கிறது. இது நிச்சயம் ஆர்எஸ்எஸ் தொண்டரின் வரலாறு அல்ல. விக்ரம் சம்பத் எழுதிய இரண்டு பாகங்களைக் கொண்ட நூலுக்கு நேரெதிராக இருக்கிறது இந்நூல். விக்ரம் சம்பத்தின் புத்தகம் அதிகம் பேசப்பட்டது அதன் அறிவார்ந்த சொல்லாடலுக்காக அல்ல, வேறு புத்தகங்களிலிருந்து நிறையப் பகுதி திருடப்பட்டு சேர்க்கப்பட்டது என்பதற்காக. அதேவேளையில் இந்த நூலாசிரியரான விநாயக் தாமோதர் சதுர்வேதி, மதச்சார்பற்ற வரலாற்றாசிரியர்கள், விமர்சகர்கள் சாவர்க்கரை மறுத்தும் விமர்சிக்கும் விதத்திலும் எழுதியதைப் போலவும் எழுதவில்லை.

சாவர்க்கரை மதிப்பிட்டு எதையும் எழுதிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். யாரைப் பற்றி எழுதுகிறாரோ அவரைப் பற்றி மிகவும் தீவிரமான விசாரணையை மேற்கொள்ளவில்லை. சாவர்க்கரின் சிந்தனைகளில் இருந்த வெளிப்படையான முரண்பாடுகளைக்கூட குத்திக் கிழித்துவிடாமல் மிகக் கவனமாக சுற்றி வளைத்துச் செல்கிறார். இருப்பினும் அவருடைய ஆழ்ந்த கல்வித்திறனும் சாவர்க்கரின் நூல்களை அவர் ஆய்வு செய்துள்ள விதமும், சாவர்க்கருக்கு எதிரான வாதங்களைக் கட்டியமைக்க பல இழைகளைத் தருகிறது.

சாவர்க்கர் உண்மையிலேயே மாவீரரா - மன்னிப்பு கோரிய வீரரா? புனைபெயர்களில் தன்னைப் பற்றியே தொண்டர் வரலாறை எழுதிய சாவர்க்கர் தற்பெருமையாளரா? காந்தியின் கொலையில் அவருக்கு நேரடித் தொடர்பு உண்டா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நூலில் விடையில்லை. “இந்நாளைய அரசியல் கண்ணோட்டத்தில் சாவர்க்கரை எடை போடாதீர்கள், அவருடைய நிலைமை குறித்து அனுதாபத்துடன் பரிசீலியுங்கள்” என்கிறார். 480 பக்கங்களுக்கு எழுதியுள்ள நூலாசிரியர், சாவர்க்கரின் அரசியல் செயல்பாட்டைவிட அவருடைய அரசியல் சிந்தனை குறித்தே கவனம் செலுத்தியிருக்கிறார்.

நூல் வெளிப்படுத்தும் அடிப்படையான முரண்பாட்டை முதலில் பார்ப்போம். எல்லா தேசியவாத இயக்கங்களையும்போல ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கமும் (ஆர்எஸ்எஸ் – அதற்கும் முன்னதாக இந்து மகாசபை) காலனியாக்கப்படுவதற்கு முன் இந்தியா அடைந்திருந்த உன்னதமான நாகரிகத்துக்குச் சொந்தம் கொண்டாடுகிறது. அந்த நாகரிகக் காலமானது மிக மிகப் பழையானது. கிழக்கிந்திய கம்பெனி என்கிற பிரிட்டிஷ் வணிக நிறுவனம் இந்தியாவைக் கைப்பற்றியதற்கு முன் இருந்த இந்திய தேசத்தைக் குறிப்பதாக இருந்தால் அது பலதரப்பட்ட கலாச்சாரங்கள், சமூகங்கள், மத நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது.

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மட்டுமல்ல; முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் நாடு காலனியாவதற்கு முன்பிருந்தே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகின்றனர். 

ஆகவே, இந்திய நாகரிகங்களுக்குச் சொந்தம் கொண்டாட மிகவும் முற்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் அதில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சேர்க்க வேண்டும். அல்லது அதற்குப் பிறகு காலவரம்பு நிர்ணயித்தால் இந்துக்களையுமே வெளியே தள்ள வேண்டும்.

இப்படி எதைச் செய்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கம் தோல்வி கண்டுவிடும். இந்த இரண்டு கண்ணிகளுக்குள்ளும் சிக்காமல், இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமாக இந்திய தேசியத்தை எப்படிச் சொந்தமாக்குவது? 

கவிதை, நாடகம், வரலாறு, அரசியல் என்று எந்த வகை எழுத்திலும், மராத்தி - ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும், லண்டன் – அந்தமான் - மகாராஷ்டிரம் என்று வாழ்ந்த பகுதிகளிலும், காந்திக்கு முன்னால் - காந்தியின் காலத்தில் - காந்திக்குப் பிறகு என்று அனைத்துக் கட்டங்களிலும் இந்திய வரலாறு குறித்து எழுத தொடர்ச்சியாக முயற்சி செய்திருக்கிறார் சாவர்க்கர். இந்திய தேசம் குறித்தும் மராட்டியம் குறித்தும் தன்னைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார். அனைத்து வகை ஆக்கங்களிலும் அவருடைய ஒரே நோக்கம், இந்துத்துவம் என்ற அரசியல் கோட்பாட்டை ஆதரிப்பதுதான்.

இதுதான் அவர் ஆதரிக்கும் இந்துத்துவத்திலும் வன்செயல்களிலும் ஊடும் பாவுமாகத் தொடர்கிறது.

சாவர்க்கர் கண்டுபிடித்த தீர்வு!

சித்தாந்தத்தில் தனக்கேற்பட்ட முரண்பாட்டை சாவர்க்கர் எப்படித் தீர்த்துக்கொண்டார்? தன்னுடைய வாழ்நாளின் முதல் கட்டத்தில் அப்படி எதையும் அவர் செய்யவில்லை. சாவர்க்கரின் முதலாவது பெரிய ஆக்கம், 1857இல் நடந்த சிப்பாய் புரட்சி பற்றியதாகும். அதை இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கும் சாவர்க்கர் அனைத்துத் தரப்பையும் அரவணைத்து முழுமையான தேசியவாத கட்டமைப்பில்தான் எழுதியிருக்கிறார். “இனி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான விரோத உணர்வு கடந்த காலத்தைச் சேர்ந்தது என்று மறந்துவிட வேண்டும். இப்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டுள்ள உறவு ஆண்டான் – அடிமை, விதேசி – சுதேசி என்பதல்ல, ஒரே ரத்தம் கொண்ட சகோதரர்கள் என்பதுதான். மதம் வேறு என்பது மட்டுமே சிறு வேறுபாடு. இரு தரப்பாருக்கும் பெயர்கள் வேறு, ஆனால் இந்தியத் தாயின் புதல்வர்கள். இந்தியாதான் இருவருக்குமே பொதுவான தாய் என்பதால் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே ரத்த சகோதரர்கள்” என்று அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் சாவர்க்கர்.

முஸ்லிம்களுக்கு எதிராக இனியும் விரோதம் பாராட்டுவது நியாயமற்றது, முட்டாள்தனமானது என்றுகூட கடுமையாக சாடியிருக்கிறார். அந்தமானில் வெஞ்சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த பிறகு, சாவர்க்கரின் இந்த மனநிலை அடியோடு மாறிவிட்டது. ‘இந்துத்துவத்தின் முக்கியாம்சங்கள்’ என்று 1923இல் பதிப்பிக்கப்பட்ட அவருடைய புத்தகம் இந்து தேசியவாதத்தின் தனித்துவமான சிந்தனையை விளக்குகிறது. தனது வாழ்நாளின் கடைசிவரையில் அந்தச் சிந்தனைகளோடே அவர் வாழ்ந்தார்.

இந்துக்கள் என்றால் யார் என்பதற்கு அவர் கண்டுபிடித்த விளக்கமானது அவருடைய அரசியல் நோக்கத்துக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டும் இந்துக்கள்  அல்ல என்றார். அப்படி ஒப்புக்கொண்டால் மேற்கத்திய நோக்கில் மதம் என்பதற்கு கூறப்படும் விளக்கத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும். அது மட்டுமல்லாமல் சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரையும் விலக்கிவிடும். “இந்துஸ்தான் உங்களுடைய தாய் நாடாக இருந்தால், தந்தை நாடாக இருந்தால், புனித நாடாக இருந்தால் நீங்கள் இந்து” என்றார் சாவர்க்கர்.

தாய் நாடு என்று கூறும்போது இந்தியாவின் அனைத்து நிலப்பரப்பில் வாழ்கிறவர்களும் இந்துக்களே. அது அனைத்து இனத்தவரையும் மதத்தவரையும் சமூகத்தவரையும் உள்ளடக்கும். தந்தையர் நாடு என்று சொல்லும்போது சக இந்தியர்களுடன் ரத்த உறவு இருக்கிறது என்று யாரெல்லாம் கருதுகிறார்களோ அவர்கள் அனைவருமே இந்துக்கள். இந்துக்களாக இருந்து பிறகு இஸ்லாமியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் மதம் மாறியவர்களை அவர் விலக்கவில்லை. இந்தியாதான் என்னுடைய புண்ணிய பூமி (மெக்காவோ, ஜெருசலேமோ அல்ல) என்று கருதுகிறவர்கள் அனைவருமே இந்துக்கள் என்றும் ஒரு விளக்கம் அளிக்கிறார்.

ஆரியர்கள் இந்த மண்ணுக்கு வருவதற்கு முன்னாலிருந்தே இங்கு வாழும் பூர்வகுடிகள் நிலை என்ன? சாவர்க்கரைப் பொருத்தவரை இது மிகவும் தீவிரமான விஷயம். ஆரியர்கள் இந்த நாட்டில் குடியேறியவர்கள் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். அதேசமயம், அவர்கள் கொண்டுவந்த வேதங்களையும் நாகரிகத்தையும் போற்றுகிறார். இந்துக்கள் கருப்பு நிறத்தவர் அல்ல என்று நிரூபிக்கப் பெரிதும் முயற்சிகளை மேற்கொள்கிறார். இந்த விஷயத்தில் சாவர்க்கர் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுகிறார்.

ஆமாம், “ஆரியர்கள் இங்கே குடியேறி, அதற்கு முன்னால் வாழ்ந்தவர்களை போரில் வென்று கைப்பற்றினர், ஆனால் அவர்களையும் இந்து கலாச்சாரத்தில் சேர்த்துக்கொண்டனர்” என்கிறார். “அதற்குப் பிறகு ஆரியர்களை எதிர்த்து கலகம் நடக்கவில்லை, தீரா கசப்புணர்வும் தொடரவில்லை. அனைவருமே இப்போது இந்துக்களாகிவிட்டனர்” என்கிறார்.

இந்தியாவிலிருந்து வெளியே வந்து இந்துக்களின் கலாச்சாரத்தை ஏற்றவர்களும் இந்துக்களே என்கிறார். பிரிட்டிஷாருடைய காலனியாதிக்கத்தைச் சாவர்க்கர் கடுமையாக எதிர்க்கிறார். அவர்கள் இந்தியாவைக் காலனியாகப் பிடித்தனர் என்பதற்காக அல்ல, அவர்கள் ஐரோப்பியர்கள் என்பதற்காக! இந்து வல்லாதிக்கம் பரவுவதை ஆதரிக்கிறார் சாவர்க்கர்.

இந்துத்துவத்துக்குத் தெளிவான விளக்கத்தை சாவர்க்கரால் கொடுக்கவே முடியவில்லை என்பதையே இந்தப் புத்தகம் காட்டுகிறது. அப்படி விளக்கம் தர முடியாதபட்சத்தில் அவர் வரலாறுக்குத் தாவுகிறார்.

இந்துத்துவா குறித்து தான் எழுதுவதுதான் முழுமையான வரலாறு என்கிறார் சாவர்க்கர். அவர் சொல்லும் வரலாற்றிலாவது உண்மைகள் துல்லியமாக இருக்கின்றனவா? கால்போன போக்கில் பயணப்பட்ட யாத்ரிகனைப் போல - அவர் எழுதியதை வரலாறு என்று எவராலும் ஒப்புக்கொள்ள முடியாது. இந்துக்களின் வரலாறு என்று கட்டுக்கதைகளைக் கற்பிதம் செய்து எழுதியிருக்கிறார்.

ஆதிவாசிகளையும் திராவிடர்களின் வரலாறுகளையும் ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர்களால் சாவர்க்கரின் இந்துத்துவ வரலாற்று நூலை நிச்சயம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சரி, அவருடைய இந்துத்துவம் தார்மிக அடிப்படையில் உயர்வானது என்று கருதலாமா? நிச்சயம் இல்லை.

இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் பூர்வகுடிகளை வெட்டியும் சிறைப்பிடித்தும் வன்செயல்களால் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்க வைத்தது நியாயம் என்றால், அதே நியாயத்தை முஸ்லிம் படையெடுப்பாளர்களுக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருத்த வேண்டியதுதானே? வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பான இந்துத்துவ ஆதரவு அறைகூவல்கள், நுணுக்கங்களை நம்பிக்கொண்டிருக்கவில்லை.

இந்துத்துவ அரசியலின் அடிப்படை குறித்தே கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான, அறிவார்ந்த விளக்கத்தைத் தர அவரால் முடியவில்லை. அடிப்படையான முரண்பாடுகளை மூடி மறைக்கலாம், ஆனால் அதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை ஒரு சாராருக்கு மட்டும் உரியது என்று சூழ்ச்சியாலும் மோசடியாலும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது.

அப்படியானால் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கதைகளும் கருத்துகளும் மக்களில் சில பிரிவினர்களை ஒதுக்கி வைப்பதற்கான, எதிர்ப்பதற்கான, வெறுப்பதற்கான, மத விரோதம் பாராட்டுவதற்கான, வன்செயல்களைச் செய்வதற்கான மெல்லிய மூடுதிரை கொண்ட அரசியல் உத்தியா? விநாயக் சதுர்வேதி நேரடியாக அத்தகைய வாதத்தை நூலில் முன்வைக்கவில்லை. ஆனால், அவர் அளித்துள்ள அறிவார்ந்த வாழ்க்கை வரலாற்று நூல் நம்மை அந்த முடிவைத் தவிர வேறு எதற்கும் இட்டுச் செல்லவில்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






இந்திர விழாஅடையாளத் தலைவர்நரேந்திர மோடிமொழிப் பொறுப்புணர்வுயூட்யூபர்கள்டிசம்பர் மழைஉள்நாட்டுப் போர்மகாயுதிஅம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்கருக்கலைப்பு உரிமைமூடுமந்திரமான தேர்வு முறைமுரசொலி 80வது ஆண்டு விழாக் கட்டுரைஜாதி கடந்த ரசிக அபிமானம்புதிய சட்டம்முன்னோடிவேதியியல் வினைபீட்டர் அல்ஃபோன்ஸ் பேட்டிஇஸ்லாமியக் குடியரசுகல்கத்தா‘அந்தரங்க’த்தைப் பணமாக்கும் சமூக ஊடகம்!டிஸ்ட்டோப்பியாசாரதா சட்டம்இந்தியா வல்லரசா?பெரியாறு அணைமத்தியஸ்தர்அடித்தளக் கட்டமைப்புமண்டல் அரசியல்மோசடித் திருத்தம்மருத்துவக் கல்லூரிபயிற்சி மையங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!