கட்டுரை, அரசியல் 6 நிமிட வாசிப்பு

ஆர்எஸ்எஸ் சதியின் ஒரு பகுதியா அண்ணா ஹசாரே இயக்கம்?

யோகேந்திர யாதவ்
04 Oct 2021, 5:00 am
4

மிகவும் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி. மிகவும் மோசமான சித்தரிப்புகள். உண்மைகளிலும் திரிப்பு. இருப்பினும் கேள்வி நியாயமானது: ‘அண்ணா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஆம் ஆத்மி கட்சியை என்னைப் போன்றவர்கள் ஆதரித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முட்டாள்தனமானதா? அதாவது, இந்தியா மீது பாஜகவைக்  கட்டவிழ்த்துவிட்டதற்காக என்னைப் போன்றவர்கள் - ‘எங்களுக்கும் அதில் பொறுப்பு இருக்கிறது’ என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா?

விவசாயிகள் நடத்திய ‘பாரத் பந்த்’ தொடர்பிலான விவாதத்தின்போது, ஊடகர் ராஜ்தீப் சர்தேசாய் திடீரென என்னை நோக்கி இப்படி ஒரு கேள்வியை வீசினார். விவசாயிகள் நடத்திய ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக் கிளர்ச்சியை காங்கிரஸ்தான் தூண்டிவிட்டு நடத்துகிறது என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்கு இணையாக, ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடர்பாக என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. சற்றே குத்தலாக இதற்கு நான் பதில் அளித்தேன், “காங்கிரஸால் இப்படி 10 மாதங்களாகப் பாடுபட்டு லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்ட முடியும் என்றால், இந்த நாட்டின் வரலாறே வேறாக இருக்கும்!”

பவன் கேராவின் தாக்குதல்

தொலைக்காட்சி விவாதத்தில், காங்கிரஸ் சார்பில் இரு மொழி வல்லவரும், சிறந்த பேச்சாளர், சிந்தனையாளருமான பவன் கேரா பங்கேற்றிருந்தார். என்னுடைய பதில் அவருக்கு ஆத்திரத்தை ஊட்டியது வெளிப்படை. அவர் உடனே ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிப் பேசலானார். அந்தப் போராட்டத்துக்கு ஆர்எஸ்எஸ்ஸின் ஆதரவைப் பெறுவதில் நான் பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டினார். கூடவே, “இப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் ஆதரவை உங்களால் பெற முடியுமா; பெற்றுக்காட்டுங்களேன்” என்று சவால் விட்டார்.

எனக்கு சிரிப்புதான் வந்தது. பவன் கேரா குற்றச்சாட்டில் பல சிக்கல்கள் உண்டு. விசித்திரமாகத் தோன்றி வளர்ந்த ஹசாரே இயக்கத்துக்கும், ஆர்எஸ்எஸ்ஸுக்கும் அப்படியொரு நெருக்கம் இருந்ததே இல்லை. ஐஏசி (ஊழலுக்கு எதிராக இந்தியா) இயக்கத்தில் அந்தக் காலகட்டத்தில்  முடிவெடுக்கும் அளவுக்கு முக்கியமான இடத்திலோ, செல்வாக்கிலோ நான் இல்லை. அந்த இயக்கத்தை ஆதரித்தேன், அது வெற்றிபெற செயலாற்றினேன் என்றாலும், அந்த அமைப்பில் நான் உறுப்பினராகக்கூட இல்லை. ஜந்தர் மந்தர் சம்பவம், ராம்லீலா மைதான எதிர்ப்புக் கூட்டம் ஆகியவற்றுக்கெல்லாம் பல மாதங்களுக்குப் பிறகு 2012-ல்தான் ஹசாரேவுடன் நான் உரையாடினேன். எனவே, ஐஏசி இயக்கத்துக்கு நான் ஆர்எஸ்எஸ் ஆதரவைப் பெற்றுத் தந்தேன் என்பதெல்லாம் கேலிக்கூத்துக்கும் அப்பாற்பட்ட அபத்தம். 

பாஜகவுக்கு உதவியதா ஹசாரே இயக்கம்?

இந்த விவகாரம் அத்துடன் முடியவில்லை. சமூக ஊடகங்களில் நான் இலக்கானேன். எந்த அளவுக்கு அலங்காரமான வார்த்தைகளால் அர்ச்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு காங்கிரஸார் அர்ச்சித்தார்கள். நான் பொய் சொல்வதாக பவன் கேரா மீண்டும் குற்றஞ்சாட்டினார். ஆனாலும், அதற்கு ஆதாரமாக அவரால் வேறு எதையும் முன்வைக்க முடியவில்லை. இவ்விதம் கசப்பான, தவிர்த்திருக்க வேண்டிய - ஒரு மோதல் முடிவுக்கு வந்தது. 

திசைதிருப்பல், அவதூறு, வசைமாரி ஆகியவற்றையும் மீறி, இந்த விவாதத்தின்போது எழுந்த நியாயமான கேள்விக்குப் பதில் தேடுவது அவசியம் என்று நினைக்கிறேன். ஐஏசி இயக்கத்துக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் உள்ள நுட்பமான வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிடுங்கள். ஊழலுக்கு எதிராக நடந்த அந்த இயக்கத்தின் பங்கு குறித்தும், அத்துடன் தொடர்புள்ளவர்களையும் நாம் எப்படி மதிப்பிடுவது? பாஜகவை மத்தியில் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக ஆர்எஸ்எஸ் தீட்டிய பெரிய சதிதான் அந்த இயக்கமா? ஊழல் எதிர்ப்பு என்ற பெயரில் இந்த நாட்டின் மீது திணிக்கப்பட்ட மோசடியான இயக்கமா அது? 

இந்த இயக்கமும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸின் புகழுக்கு மாசு கற்பித்து, மோடியைப் பிரதமர் பதவியில் அமர்த்தியதற்குப் பொறுப்பாளிகள் இல்லையா?

நிதானமாக ஆராய்வோம் 

இவற்றையெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் ஆராய்வோம். ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கமும், ஆம்ஆத்மி கட்சியின் தோற்றமும் மோடிக்கு உதவுவதற்காக நடந்த சதிகள் அல்ல. ஆனால் இவை இரண்டும் பாஜகவின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவின. சரி, அப்படியென்றால், இந்த இயக்கத்தை ஆதரித்தவர்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா?

இப்படிப் பகுத்துப் பார்ப்பதில் நியாயமிருக்கிறது. மக்கள் இடையே நாளுக்கு நாள் மதிப்பிழந்துவந்தது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அது ஆட்சியில் இருக்க தகுதியற்றது என்ற வகையில் அதன் தார்மிக வலுவைக் குலைத்து மக்களுக்கு அதன் மீது கோபத்தை அதிகப்படுத்தியது ஹசாரே இயக்கம். அப்போது மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் ஏதும் நடத்த முடியாத நிலையில் இருந்த பாஜக இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டது.

ஆம்ஆத்மி கட்சி இந்த நேரத்தில் உருவெடுத்தது, காங்கிரஸ் ஆதரவு வாக்குகளைப் பிரிக்க பாஜகவுக்குப் பெரிதும் உதவியது. இப்படியாக உருவான ஆஆக, பெரிய போட்டியாளராகப் பாஜகவுக்கு எதிராக உருவாகவில்லை. இறுதியாக, மோடியின் படையால், ஆஆகவின் தேர்தல் வெற்றியையும் வெகுவாகக் கட்டுப்படுத்த முடிந்தது.

கேஜ்ரிவாலின் பெரும் பிரச்சினை

எனவே, மோடியின் வளர்ச்சிக்கு ஹசாரே இயக்கத் தலைவர்களும் அதை ஆதரித்தவர்களும் பொறுப்பேற்க வேண்டுமா? ஆம், அரசியலில் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களோடு உங்களுடைய பொறுப்பு முடிந்துவிடாது. நீங்கள் விரும்பாத விளைவுகளுக்கும், நீங்கள் ஊகித்திராத முடிவுகளுக்கும், காக்கத் தவறியவற்றுக்கும்கூட நீங்கள் பொறுப்பு. இந்த வகையில் என்னைப் போன்றவர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள்தான்.

எங்களுடைய தவறெல்லாம் ஊழலில் திளைத்த ஐமுக அரசின் செயல்பாடுகளைத் தாக்கியது இல்லை. அதனால் மக்களிடம் ஏற்படும் கோபத்தை - பாஜகவுக்கு சாதகமாக அல்ல - மாற்று வழியில் திருப்பிவிட்டிருக்க வேண்டும். ஆஆக எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியது எங்களுடைய தவறல்ல; அப்படித் தொடங்காமல் இருந்திருந்தால் பாஜகவுக்கு இன்னும் சாதகமாகியிருக்கும்; ஆனால், அப்படித் தொடங்கிய ஆஆக, தார்மிகப் பாதையிலிருந்து வழுவியதைத் தடுக்க முடியாமல்போனது எங்களுடைய தவறு.

குறிப்பாக நானும், பிரசாந்த் பூஷண் போன்றவர்களும், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆபத்தான தனிப்பட்ட குணங்களைக் கணிக்கத் தவறிவிட்டோம். தேர்தல் வெற்றிக்காக எதையும் பலிகொடுக்கத் தயாராக இருக்கும் அவருடைய இயல்பைப் புரிந்துகொள்ளாமல் போனோம். சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றில் அவரால் உறுதியான முடிவை எடுக்க முடியாமல் ஊசலாடிக்கொண்டே இருந்தார். அதேசமயம், அவர் ஆர்எஸ்எஸ் சிந்தனையில் ஊறியவர் அல்ல; முஸ்லிம்களுக்கு அவர் எதிரி அல்ல என்றே இப்போதும் நம்புகிறேன்; ஆனால், தேர்தல் வெற்றிக்காக அவர் எதையும் செய்வார் என்பதுதான் அவருடைய பெரும் பிரச்சினை. எங்களுடைய கணிப்பில் ஏற்பட்ட மிக மோசமான தவறு இது; அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது.

எல்லோர்க்கும் பொறுப்புண்டு

ஐஏசி, ஆஆக ஆகியவற்றைப் பார்த்து இப்படிக் கேட்கப்படும் கேள்விகள் பிற கட்சிகளிடமும் கேட்கப்பட வேண்டும். வங்கத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக பாஜக பக்கம் சாய்ந்ததற்கு, இடதுசாரிகள் பொறுப்பேற்க வேண்டும். கேரளத்தில் நீண்ட காலமாகவே கிறிஸ்தவ, முஸ்லிம் மதவியக் கட்சிகளோடு கூடிக் குலாவுவதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் கைகோத்து ஆட்சியமைத்திருக்கும் காங்கிரஸ் - தேசியவிய காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்று நாம் ஆவலுடன் எதிர்பார்க்கலாமா?

ஹசாரேவின் இயக்கம் தோன்றியிருக்காவிட்டால் 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்குமா? அப்படி  எண்ணுவது மிகவும் மந்தமான மூளைகளின் கற்பனை. இரண்டாவது முறையாக அமைந்த ஐமுகூ ஆட்சியில் ஒருங்கிணைப்பும், அரசியல் எதிர்பார்ப்புகளும், மக்களுடனான குறைந்தபட்சத் தொடர்பும்கூட இல்லை. ஹசாரே இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது மோசமான அரசாகவே மக்களால் பார்க்கப்பட்டது. வலுவான ஒரு தலைவருக்காக நாடு ஏங்கியது. மதச்சார்பற்றவர்களின் அரசியல் மக்களுடைய தொடர்பை இழந்து வெகுநாட்களாகிவிட்டிருந்தது. இவையெல்லாமும் சேர்ந்துதான் அரசியலில் மோடி உச்சம் பெற வழிவகுத்தது.

இன்று பாஜகவின் தாக்குதலைக் கூட்டாக எதிர்கொள்ள முடியாமல் அரசியல் பலியாடுகளைத் தேடுவது, நம்முடைய அரசியல் தோல்வியை நாமே ஒப்புக்கொள்வதாகும். நம்முடைய காலத்தில் எழுந்துள்ள உண்மையான அரசியல் சவால்களுக்கு முகம் கொடுக்காமல் முதுகைக் காட்டுவதுதான் இப்படிப்பட்ட கேள்விகளும் ஆராய்ச்சிகளும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: சாரி







பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

இந்தக் கட்டுரை முயலும் அரசியல் பகுப்பாய்வைப் பற்றிய பின்னூட்டம் அல்ல இது. யோகேந்திர யாதவ் அவர்களின் மூலக்கட்டுரையை சாரி இன்னும் எளிமையாக மொழிபெயர்த்திருக்கலாம் என்பதை தெரியப்படுத்துவதற்காக இதை எழுத வேண்டியுள்ளது. முதலிலேயே சொல்லிவிட வேண்டும். சாரி சிறந்த மொழிபெயர்ப்பாளர். சந்தேகமேயில்லை. அவரின் மொழிபெயர்ப்புகளில் பல சிறந்த கட்டுரைகள் தமிழ் திசை இந்துவில் அண்மை வருடங்களில் வெளிவந்துள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான இதழியல் அனுபவம் கொண்டவர். இருக்கட்டும். இந்தக் கட்டுரையில் தமிழ் மொழிக்கேயுரிய பிரத்தியேக இயல்பு, சில இடங்களில், குறைந்துள்ளது. நான் (syntax) வாக்கிய அமைப்பு பற்றி பேசுகிறேன். மொழிபெயர்ப்பில் இது பல தருணங்களில் தவிர்க்க முடியாதுதான். ஆனாலும், சாரி போன்ற மூத்த மொழிபெயர்ப்பாளர்கள் இதைத் தவிர்த்திருக்க முடியும். Verbatim translation என்பது வாசிப்பு எளிமையை (readability) குந்தகப்படுத்தும். உதாரணமாக, சாரி கடைசியிலிருந்து இரண்டாவது பத்தியில் எழுதுகிறார்: "அப்படி எண்ணுவது மிகவும் மந்தமான மூளைகளின் கற்பனை." இதை சாதாரணமாக சொல்ல முடியும். "அப்படி முட்டாள்கள்தான் நினைப்பார்கள்." வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியத்துக்கு வாக்கியம் என்று மொழிபெயர்ப்பு இருக்க வேண்டுமா என்ன? கொஞ்சமாக சுதந்திரம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. இந்த சுதந்திரமானது் transcreation என்ற இடத்திற்கு கொண்டு போகக்கூடும். ஆனால், அல்புனைவு பெயர்ப்புகளில் பெரிய அளவில் ஏதும் மூலக்கருத்து சேதமடையாது. புனைவில் அப்படியான ஆபத்து உண்டு. இது சாரி அவர்களை சீர்தூக்குவதாக இருந்துவிட கூடாது. மொழிபெயர்ப்பில் நிறைய அனுபவம் கொண்டவர். கட்டுரையின் வாசிப்பு நிமிடங்களில் இந்தக் கருத்து தோன்றியது; எழுதிவிட்டேன். பிழையிருப்பின் மன்னிக்கவும்.

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

Gandhi Karthikeyan   3 years ago

அரசியல் அறிவு என்பது எவ்வளவு தூரம் அரசியல் நிகழ்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? நமது ஜனநாயகம் ஒரு மிகவும் இக்கட்டான மற்றும் மிகவும் குழப்பமான நிலையில் உள்ளது. காங்கிரஸ் இன்னும் பகுப்பாய்வு செய்து கொண்டே இருக்கிறது. எந்த ஒரு கட்சியும் தொலைநோக்கு இல்லாமல் தயார்படுத்திக்கொள்ள முடியாது.. இக்கட்டுரை ஆசிரியர் வழக்கம்போல அர்விந்த் கேஜ்ரிவாலை குற்றம் சொல்லி இருக்கிறார். அன்னா ஹசாரே இயக்கத்தில் ஊழல் எதிர்ப்பு மட்டுமே பிரமாணத்துவம் பெற்றிருந்தது. 2014 இல் நடந்த தேர்தல் முடிவுகள் மோடி என்ற தனி மனிதரின் வெற்றியே தவிர வேறு எந்த காரணிகளும் பொருந்தாது. மக்களுக்கு காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட காங்கிரஸின் செயல்பாடுகள் மட்டுமே காரணம். அந்த அதிருப்தி அலை மோடியின் வெற்றியை மேலும் இலகுவாக்கியதே தவிர வேறொன்றும் காரணமில்லை. கட்டுரையின் தலைப்பிற்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை என்பதே, வாசிக்கும் போது தோன்றியது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

V B Ganesan   3 years ago

மேற்கு வங்கத்தில் 2006ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாக மக்களிடமிருந்து விலகிக் கொண்டிருந்த இடதுசாரிகளை தோற்கடிக்க அவர்களின் நீண்டநாள் எதிரணியாக இருந்த காங்கிரஸ், மாவோயிஸ்டுகள் ஆகியோரின் உதவியுடன் தான் 2011ஆம் ஆண்டில் மம்தா வெற்றி பெற முடிந்தது. அதையடுத்த ஆண்டுகளில் மீண்டும் மக்களிடையே தங்கள் தொடர்பை நீட்டித்துக் கொள்ள இடதுசாரிகளுக்கு அவகாசமே தராமல் அவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் தொடுத்ததும் மம்தாவே. அப்போதும் மிஞ்சியிருந்த இடதுசாரி ஆதரவு வாக்குகள் 2016 தேர்தலில் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் கணிசமான இடங்களை பெற்றுத் தந்தன. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த மம்தாவின் அதிரடி நடவடிக்கைகள்தான் 2019இல் அவருக்கு எதிரான வாக்குகளை அணிதிரட்ட பாஜகவிற்கு இடம் அமைத்துத் தந்தது. இந்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரஸின் அகில இந்திய அளவிலான நலிவு, இடதுசாரிகளின் தொடர்ச்சியான சரிவு ஆகியவற்றையும் மம்தாவிற்கு எதிரான வாக்குகளை பாஜக தனது சகல ஆயுதங்களையும் பயன்படுத்தி கவர்ந்து கொள்ள மம்தா ஒரு முக்கிய காரணியாக இருந்தாரே தவிர இடதுசாரிகள் அல்ல.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Suresh kumar   3 years ago

வணக்கம். தங்களின் கருத்து ஆஆக செயல்பாட்டில் ஒத்து போகலாம். ஆனால் அன்னா ஹசாரே தீடிர் என தோன்றிய பதின்ப்ருவ குழந்தை அல்ல. தங்களை போன்ற படித்தவர்கள் அடுத்தவர்களுக்கு கொடி பிடிக்கும் போது அவர்களின் பின்புலம் என்ன என்று ஆராயாமல், அன்றைய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாக, ஓர் உடனடி தலைவரை கொண்டாடியதன் விளைவு தான் இன்றைய அரசியல் விளைவுகள். அன்னா ஹசாரேவும் , ஆஆக இல்லையெனில் திரும்ப மாநிலகட்சிகள் மைய படுத்திய ஒர் மத்திய அரசோ, அத்வான் தலைமையிலான குறைந்த பட்ச செயல் திட்டமுடைய கூட்டாச்சியோ அமைந்து இருக்கலாம்.

Reply 10 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரபஞ்ச உடல்மூடுமந்திரமான தேர்வு முறைநேரடி வரிதமிழ்கா.ராஜன்மாடுமுக மான்சிபாப்கோணங்கள்ஊர்வலம்இந்திரா நூயி அருஞ்சொல்திருநங்கைகள்மனோஜ் ஜோஷிஜெய்பீம் திரைக்கதை நூல்குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வறிக்கைவடிகால்சித்தராமய்யாகருத்து வேறுபாடுகள்காசிஆயிரமாவது ஆண்டுமார்க்ஸிஸ்ட் கட்சிJai bhimதியாகு நூலகம்சமஸ் அதிமுகஇது ‘அவர்கள்’ குழந்தைகளுக்கான நியாயம்கழுத்து வலியால் கவலையா?கூடுதுறைஸ்பைவேர் எனும் டிஜிட்டல் ஆயுதம்ஸ்டாலின்கவிஞர்‘க்ரியா’ ராமகிருஷ்ணன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!