இலக்கியத்துக்கான நோபல் பரிசு அன்னி எர்னோவுக்கு அறிவிக்கப்பட்டபோது தமிழக இலக்கிய வட்டாரத்தில் பலரும் ஆச்சரியத்துடன் அந்தப் பெயரைப் பார்த்தார்கள். இலக்கிய நோபல் பரிசு பெறும் முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளா் இவா். ‘‘அதிசயிக்கத்தக்க வகையிலும் நீடித்து நிற்கும் தன்மையிலும் அன்னி எர்னோ புத்தகங்களை எழுதியுள்ளார். மனித உணா்வுகளின் வோ்களை அவருடைய எழுத்து தொடுகிறது. அவருடைய மிகப் பெரிய சிறப்பம்சம் அவருடைய எழுத்து நடை” என்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அவரைத் தேர்ந்தெடுத்த குழுவினர் சொன்னார்கள்.
தமிழில் சிலருக்கு ஏற்கெனவே அன்னி எர்னோ அறிமுகம் ஆகியிருந்தார். சொல்லப்போனால், அவருடைய புகழ்பெற்ற நூலை மொழிபெயர்க்கும் பணி இங்கே பேசப்பட்டிருந்தது. அப்படி மொழிபெயர்க்கவிருந்த வெ.ஸ்ரீராம் இங்கே அன்னி எர்னோவின் படைப்புலகத்தை ‘அருஞ்சொல்’ வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
பிரெஞ்சு சமூகவியல் ஆய்வாளர் ரோலான் லார்தின்வா எனக்கும், மறைந்த பதிப்பாளர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்குமான பொது நண்பர்களில் ஒருவர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்திருந்தபோது ரோலான் லார்தின்வா எங்களைச் சந்தித்தார். அப்போது பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரின் மூன்று புத்தகங்களை எனக்கு அளித்தார்.
இலக்கியத்திற்கான இந்த வருட நோபல் பரிசைப் பெறும் அன்னி எர்னோ அன்றுதான் எனக்கு அறிமுகமானார். அவற்றில் ‘நிகழ்வு’ (L Evenement, 2000) என்ற புத்தகத்தை மொழிபெயர்க்கலாம் என்று நண்பர் பரிந்துரைத்தார் (பல காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது). பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைப்பதற்கு 12 ஆண்டுகளுக்கு முன் போலி மருத்துவர்களை நாட வேண்டியிருந்த தன்னுடைய அனுபவங்களின் கொடுமையை மிகைப்படுத்தாமலும், கோபப்படாமலும் அன்னி எர்னோவால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் சமூகத்திற்கு முன் ஒரு முக்கிய கண்ணாடியைக் காட்டியது.
இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருத்த, மிஷெல் லேரிஸ் (MICHEL LEIRIS) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் மேற்கோள் அதை நியாயப்படுதியது. “என்னுடைய இரட்டை ஆசைகள்: நிகழ்வு எழுத்தாக மாற வேண்டும்; எழுத்து ஒரு நிகழ்வாக வேண்டும்!”
¶
இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்னி எர்னோ எழுதியிருந்தாலும், 2008இல் வெளிவந்த ‘வருடங்கள்’ (LES ANNEES) என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். இலக்கிய விமர்சகர்கள் பலராலும் போற்றப்படும் படைப்பாக அது இருந்தது. புகைப்படங்கள், நிகழ்வுகள், சொற்கள், நினைவுகள் இவற்றின் வாயிலாக, சுயசரிதை போன்று தோன்றும் இதில் தன்னைப் பற்றி ‘நான்’ என்று குறிப்பிடாமல் ஒரு அறுபது ஆண்டு வாழ்க்கையை ஒரு சமூகத்தின் சுய வரலாறாகச் சித்தரிக்கிறார் அன்னி எர்னோ.
என்னுடைய நண்பர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணனும், நானும் அடுத்ததாக மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்திருந்த நூலாக அது அமைந்ததில் ஆச்சரியம் இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிவில் தொடங்கி, அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முடியும் நினைவுக்கொத்து: 1941 முதல் 2006 வரை வரலாறு - சுயசரிதம், புனைவு - கட்டுரை என்று பல கூறுகள் சந்திக்கும் புள்ளியில் தன்னை இருத்திக்கொண்டு, நூதமான ஒரு வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் பல தளங்களிலும் விவாதம் செய்ய வாய்ப்பளிக்கும் ஒன்று.
இந்தக் கொடுந்தொற்று காலத்தில் துரதிருஷ்டவசமாக நேர்ந்த ராமகிருஷ்ணனின் மறைவு ஏற்படுத்திய இழப்புகளில் ஒன்று அந்த மொழிபெயர்ப்பும் என்று சொல்ல வேண்டும். அப்படி ஓர் ஆசிரியர் கூட்டாளி இல்லாமல், இப்படி ஒரு படைப்பைக் கொண்டுவருவது சாத்தியம் இல்லை என்று கைவிட்டேன்.
¶
ஓர் எழுத்தாளரின் படைப்பை வர்ணிப்பதைக் காட்டிலும் அவருடைய எழுத்துகளிலிருந்து சிறு துண்டையேனும் அளிப்பது வாசகர்களுக்கு நல்ல அறிமுகமாக இருக்கக்கூடும்.
அன்னி எர்னோவின் ‘வருடங்கள்’ புத்தகத்தின் முதல் வரி ‘எல்லாக் காட்சிகளும் மறைந்து போகும்’ என்று தொடங்கும். தனி மனித வாழ்வில் காலத்தின் ஓட்டத்தை நினைவுறுத்தும் அந்த வரியிலிருந்து தொடங்கி பல நிகழ்வுகளையும், எண்ணங்களையும் துண்டு துண்டாக திரையில் சட்டென்று தோன்றி மறையும் பிம்பங்களைப் போல் அடுக்கிய பின் அவர் சொல்வார்:
“எல்லாம் ஒரு நொடியில் அழிந்துவிடும். தொட்டிலிலிருந்து வாழ்நாளின் இறுதிப் படுக்கை வரை சேகரித்து வைக்கப்பட்டிருந்த அகராதி இல்லாமல் போய்விடும். அமைதி மட்டுமே நிலவும்; அதைச் சொல்ல ஒரு வார்த்தைகூட இருக்காது. திறந்த வாயிலிருந்து எதுவும் வெளிப்படாது. ‘நான்’, ‘என்னுடைய’ எதுவுமே. புற உலகை விவரிக்கும் சொற்களை மொழி தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும். விருந்துண்ணும் மேஜையைச் சுற்றித் தொடரும் உரையாடல்களில், காலப்போக்கில் முகங்களை இழந்து, அவரவர் பெயர்கள் மட்டும் அழியாமல் இருக்கும் - அதுவும் தொலைந்துபோய் மிகத் தொலைவிலுள்ள தலைமுறையின் அநாமதேயக் கும்பலில் மறையும் வரை!”
7
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.