டெல்லியில் இப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் பேசுபொருளாக மாறியிருப்பதுதான் சேதி!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜகவுக்கு அடுத்து பெரிய கட்சி அதிமுகதான். பாஜகவோடு நீண்ட காலமாகக் கூட்டணியில் இருந்த சிவசேனை, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. கூட்டணியில் உள்ளதாகச் சொல்லப்படும் மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் கட்சிகள் அல்லது தேர்தலில் போட்டியிடவே முடியாத கட்சிகள்தான்.
தேசிய அளவிலான சங்கடம்
2014 மக்களவைத் தேர்தலில் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019இல் 303 தொகுதிகளில் வென்றது. இந்தி பிரதேசம், மஹாராஷ்டிரம், குஜராத் போன்ற பாஜகவுக்கு வலுவான இடங்களைத் தாண்டி கர்நாடகம் (25), வங்கம் (18), தெலுங்கானாவில் (4) கிடைத்த எதிர்பாராத விளைச்சலுக்கும் இந்த வெற்றியில் முக்கியமான பங்கு உண்டு.
2024 தேர்தலில் 2014, 2019 போன்ற வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்று பாஜக தலைவர்கள் இடையிலேயே காணப்படவில்லை. இங்கே டெல்லியில் புலம்பல் சத்தம் கேட்க ஆரம்பித்து சில மாதங்கள் ஆகின்றன. ஏனென்றால், 2014, 2019 இரு தேர்தல்களிலும் கிட்டத்தட்ட 90%-100% தொகுதிகளை பாஜக வென்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இப்போது காங்கிரஸின் பலம் கூடியிருக்கிறது.
அடுத்த மாதங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று பாஜக தலைமை அலுவலகத்திலேயே பேசிக்கொள்கிறார்கள்; ராஜஸ்தானிலும் பேச்சு அப்படித்தான் அடிபடுகிறது. மத்திய பிரதேசத்தில் கடுமையான போட்டிச் சூழல் நிலவுகிறது. இங்கெல்லாம் அடுத்துவரும் மக்களவைத் தேர்தலில் எப்படியும் 100% வெற்றியை பாஜக எதிர்பார்க்க முடியாது என்பது வெளிப்படை.
எதிர்க்கட்சிகளின் வலுவான இந்தியா கூட்டணியால், உத்தர பிரதேசத்துக்கு அடுத்து அதிகமான தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரம் (48 தொகுதிகள்), பிஹார் (40 தொகுதிகள்) இரண்டிலும் பாஜகவுக்குப் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஆகையினால், தேசிய அளவில் பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சிக்குள் தீவிரமான குரல்கள் ஒலிக்கின்றன.
அண்ணாமலை கொடுத்துள்ள அடி
இந்தச் சூழலில் பார்த்தால் அதிமுக வெளியேறியது பாஜகவுக்கு பெரிய அடி என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணிக் கட்சிகள் கைகளை முறுக்குவது பாஜகவின் இயல்பு. அதிலும் அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைய தலையிட்டது பாஜக. இந்தப் ‘பெரியண்ணன் மனோபாவம்’ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் உருவாகிவிட்டது. நாட்டையே ஆண்டாலும் தமிழ்நாட்டில் இன்னும் பாஜக சின்ன கட்சிதான். 2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தனித்து நின்றே 37 இடங்களை வென்றது; பாஜக ஒரு இடத்தை மட்டுமே வென்றிருந்தது; 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து நின்ற அதிமுக ஒரு இடத்தை மட்டுமே வென்றது; பாஜகவால் அந்த ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது என்று அப்போது அதிமுகவுக்குள் பேச்சு அடிபட்டது. இதில் நியாயமும் உண்டு. ஏனென்றால், மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் அதிமுக வென்றிருந்தது.
பாஜகவுடனான கூட்டணியை வேண்டாத சுமையாகத்தான் சுமந்தார்கள் அதிமுகவினர். அப்படியும் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்ததைப் பேசி கூட்டணிக்கு உலை வைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் இந்த முறிவை பாஜக தலைவர்கள் யாரும் விரும்பவில்லை. அதனால்தான், அதிமுகவுடனான கூட்டணி முறிவு தொடர்பில் பாஜக தலைமை இதுவரை மவுனம் சாதித்துவருகிறது. அரசியலில் எப்போதுமே பேச வேண்டிய இடத்தில் காட்டப்படும் மௌனம் சொல்லும் செய்தி முக்கியமானது.
தமிழ்நாடு பாஜக தலைவர்கள் டெல்லி வந்தால் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்திக்க முயற்சிப்பார்கள். கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால், இவர்கள் இருவரையும் சந்திப்பதோடு, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்திப்பார் அண்ணாமலை. அதுவும் சந்தோஷ் உடன் இணைந்துதான்; மிக அரிதாகவே பிரதமர் மோடியை அவரால் சந்திக்க முடியும். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை விசேஷமாகக் கேட்டுப் பெற்றவர் அண்ணாமலை. அவருடைய நிலையே இதுதான் என்றால், அவருக்கு அடுத்த நிலைத் தலைவர்களைப் பற்றிக் கூறிட வேண்டியதில்லை. அதனால், பாஜகவின் தேசியத் தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் நடந்த பல விஷயங்கள் விரிவாகத் தெரியவில்லை. இப்போது அதிமுக முறிவைப் பலர் அதிர்ச்சியோடுதான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஏனைய பாஜக தலைவர்களிடம் இதுகுறித்துப் பேசுகிறார்கள். அதிமுகவுடனான மோசமான அணுகுமுறை நீங்கலாக, பாஜகவுக்குள்ளேயே மூத்த தலைவர்களிடம் அண்ணாமலை மோசமாகத்தான் நடந்துகொள்கிறார் எனும் விஷயத்தை இப்போது அவர்கள் விலாவரியாக எடுத்துச் சொல்கிறார்கள்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
கட்சிக்குள் கட்சி
திடீரென்று கட்சிக்குள் வந்து தலைமைப் பதவியிலும் அமர்ந்துவிட்டதால், அண்ணாமலைக்கு பாஜகவின் செயல்முறை எதுவும் தெரியவில்லை என்பதைப் பலரும் தேசியத் தலைமையிடம் கூறியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் பாஜகவுக்கென மாநிலத் தலைமை அலுவலகம் உள்ளது. முக்கியமாக இரண்டு அறக்கட்டளைகள் உள்ளன. கட்சிக்கென வார இதழ் உள்ளது. 50-க்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளன. மாநில நிர்வாகிகள் என ஒரு குழு உள்ளது. தலைவர் யாராக இருந்தாலும், கட்சியின் அமைப்புப் பொதுச் செயலர் பதவியில் இருப்பவரை மீறி இந்தக் கட்டுமானத்திற்குள் எவரும் நுழைய முடியாது. ஏனென்றால், அந்தப் பதவியில் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியே அமர்த்தப்பட்டிருப்பார். பாஜக இந்தியா முழுவதுமே இந்தக் கட்டமைப்பில்தான் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இப்போது மாநில அமைப்புப் பொதுச் செயலர் பதவியில் கேசவ விநாயகம் இருக்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பல்லாண்டு காலம், பல்வேறு நிலைகளிலும் பணியாற்றி இந்த இடத்துக்கு வந்தவர் அவர். சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகம் முழுவதுமே கேசவ விநாயகத்தின் கட்டுக்குள்தான் உள்ளது. கூட்டுச் செயல்பாட்டின்படிதான் கட்சித் தலைவர் செயல்பட முடியும். இதை உடைக்க எவ்வளவோ முயன்றிருக்கிறார் அண்ணாமலை. முடியவில்லை.
தன்னுடைய கட்டுக்குள் கட்சித் தலைமையகத்தையோ, அமைப்பையோ கொண்டுவர முடியாது என்று உணர்ந்துகொண்ட அண்ணாமலை, தனக்கெனத் தனியாக இரண்டு இடங்களில் அலுவலகம் அமைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, கட்சிக்கெனத் தகவல் தொழில்நுட்ப அணி இருக்கும்போது, தன் கட்டுப்பாட்டில் தனியாக அணியை உருவாக்கியிருக்கிறார். மாநிலப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் அணியைப் பயன்படுத்தாமல் தனக்கெனத் தனியாக ஒரு அணியை உருவாக்கிக்கொண்டு அவர்கள் வழியாகவே கட்சியை வழிநடத்துகிறார். அதாவது கட்சிக்குள் இருந்துகொண்டே தனக்கென்று ஒரு கட்சி நடத்துகிறார் என்கிறார்கள் தில்லிக்கு வந்த தமிழ்நாட்டு பாஜக நிர்வாகிகள். இதுவரை தமிழ்நாட்டுக்குள் பாஜக உருவாக்க முடியாத சலனத்தை அண்ணாமலை உருவாக்குகிறார் என்று நம்பிய பாஜக தேசிய தலைமை இந்த விஷயங்கள் எதற்குமே தீவிரக் கவனம் கொடுக்கவில்லை. ஏனென்றால், அண்ணாமலை அப்படி ஒரு கதையாடலை டெல்லியில் உருவாக்கி வைத்திருந்தார்.
இங்கே டெல்லியில் உள்ள பாஜக தலைமை நம்பிய கதை இதுதான். “1952 முதல் பொதுத் தேர்தல் முதல் தமிழ்நாட்டிலும் பாஜக போட்டியிட்டுவருகிறது. ஆனால், 3% வாக்கு வங்கியை அதனால் தாண்ட முடியவில்லை. ஆனால், அதிமுக முதல் தேர்தலிலேயே பெரும் வெற்றிகளைக் குவித்தது. சமீபத்திய உதாரணம் என்றால்கூட, நாம் தமிழர் கட்சி மூன்றாவது தேர்தலிலேயே 7% வாக்கு வங்கியைத் தொட்டுவிட்டது. எனவே, தமிழ்நாட்டு மக்கள் ஒரு கட்சியை, ஒரு சித்தாந்தத்தை நம்புவதைவிட, தனியொரு மனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பாஜகவுக்கும் அப்படி ஒரு தலைவர் வேண்டும். அந்தத் தலைவர் அண்ணாமலை.”
எல்லாவற்றுக்கும் தலையசைக்க டெல்லி தலைவர்கள் ஆரம்பித்தது இந்த வியூகத்தினால்தான். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தமட்டில் இங்கே இழப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. அண்ணாமலையால் மக்களிடம் பாஜக குறித்த ஒரு பேச்சை உருவாக்க முடிந்தது. திமுகவினர் பழனிசாமியையும் அதிமுகவையும் விட்டுவிட்டு அண்ணாமலையையும் பாஜகவையும் திட்ட ஆரம்பித்தபோது, ‘தமிழ்நாட்டில் இன்றைக்கு திமுக எதிர் பாஜக அரசியல்தான் நடக்கிறது’ என்றே பேச ஆரம்பித்தார் அண்ணாமலை; பல ஊடகங்களும் அப்படிப் பேசின.
இதையெல்லாம் பாஜக தேசிய தலைமை ரசித்தது. ஆனால், உச்சத்தில் யாரும் எதிர்பாராத நிலைக்கு இப்போது கட்சியைக் கொண்டுபோய்விட்டார். அதிமுக கூட்டணி முழுமையாக முறிந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் பந்து இப்போது பாஜகவிடமிருந்து அதிமுக பக்கம் போய்விட்டது என்பதை முழுமையாக பாஜக தலைவர்கள் உணருகிறார்கள். அதிமுக பல நிர்ப்பந்தங்களிலிருந்து தப்பிவிட்டது; இனி கூட்டணி மீண்டும் அமைந்தாலும், அதிமுக வைத்ததுதான் சட்டம். தேசிய அளவில் அதிமுகவுடனான முறிவு பாஜகவுக்கு உண்டாக்கியிருக்கிற சிக்கலும் இருக்கிறது; பல கட்சிகளும் இதை வியப்போடு பார்க்கின்றன. பாஜக கூட்டணிக்கு இனி பாஜகவின் கை இறங்கும். இது பாஜகவுக்குச் சங்கடம். அண்ணாமலை பெரிய நெருப்பு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. வெளியில் காட்டிலும் அவருடைய சொந்தக் கட்சியிலேயே பலர் அவருடைய வீழ்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பது அதனினும் உண்மை!
அரசியல் தலைவர்கள் தங்களுடைய கட்சிக்குள் மனங்களை வெல்வதன் வழியாகத்தான் மக்கள் மனதை வெல்ல முடியும். அண்ணாமலை மேலிருந்து வந்ததன் விளைவைக் கீழிருந்து எதிர்கொள்கிறார். பாஜக நடத்திய பரிசோதனை முயற்சிகளில் ஒன்று அண்ணாமலை. அந்தப் பரிசோதனை முயற்சியின் விளைவு என்னவென்பது வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வெளிப்படலாம் என்று அது நினைத்திருந்தது; ஆனால், தேர்தலுக்கு முன்பே அது வெளிப்பட ஆரம்பிக்கிறது!
6
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 1 year ago
2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தனித்து நின்றே 37 இடங்களை வென்றது; பாஜக ஒரு இடத்தை மட்டுமே வென்றிருந்தது; 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து நின்ற அதிமுக ஒரு இடத்தை மட்டுமே வென்றது; The writer failed to note that there was Jayalalitha, a huge phenomenon in Tamilnadu politics, in 2014 elections! In 2019, she was no more!.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.