கட்டுரை, ஆளுமைகள் 6 நிமிட வாசிப்பு

வன தேவதை துளசி

வ.ரங்காசாரி
07 Jan 2022, 5:00 am
3

சில மனிதர்கள் இப்படித்தான்! அசாதாரண காரியங்களைச் செய்கிறவர்கள்; ஆனால், சமூகத்தின் கவனத்தில் அவர்களுடைய வாழ்க்கை பெரிதாகப் பதிவாவதே இல்லை. துளசி கௌடாவின் வாழ்க்கையும் அப்படித்தான். பத்மஸ்ரீ விருதை வாங்கிய தருணத்தில் பிரதமர் மோடி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்பட இந்திய ஊடகங்கள் அனைத்திலும் வெளியானது. துளசி கௌடாவின் கதையும்கூட சில பத்திகளில் வெளியானது. அதோடு சரி. அதற்குப் பின் அவரைச் சீந்துவார் இல்லை.

துளசி கௌடாவை நாம் அப்படி விட்டுவிட முடியாது. ஏன்? அது ஒரு சாமானியரின் பெரும் சாதனை. ஒரு தனிநபர் முனைந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான உத்வேகம். துளசி கௌடாவைப் பற்றி எழுதுவதும், நாம் தெரிந்துகொள்வதும் அவருக்குப் பெருமை சேர்ப்பதற்காக இல்லை; வாழ்வில் நாம் நமக்கான உத்வேகத்தைப் பெற அவருடைய கதை உதவுகிறது.  

வறுமை சூழ் வாழ்க்கை

உத்தர கன்னடா மாவட்டத்தின், ஹொன்னல்லி வன கிராமத்தின் தேவதையாக இன்று பார்க்கப்படும் துளசி 1944-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த மூன்றாவது ஆண்டிலேயே தந்தையை இழந்தார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக துளசியின் தாய் உத்தர கன்னட மாவட்டத்தின் மஸ்திகட்டா சரகத்தில் உள்ள அகசூர் தோட்டத்தில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். அது தினக்கூலி அடிப்படையிலான வேலை. வளரும்போதே தாய் வேலைக்குச் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே சென்றார் துளசி.

குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக பள்ளிக்கூடத்துக்கே செல்லவில்லை. எனவே அவருக்கு எழுத, படிக்கத் தெரியாது. ஆனால், வேறு ஒரு விஷயத்தில் அவரது கற்றல் நிகழ்ந்தது. காட்டில் மரங்கள், செடிகளோடு புழங்கிய துளசிக்கு அவற்றைப் பற்றி அறிந்துகொள்வது சுவாரஸ்யமான பழக்கமாக இருந்தது. இது தாவரங்கள் தொடர்பாக ஓர் ஆழமான அறிவை அவருக்கு உருவாக்கியதோடு, அவற்றின் மீது பெரும் அன்பையும் உருவாக்கியது.

இளவயது மணம்

துளசிக்கு 10 அல்லது 12 வயது இருக்கும்போது, குல வழக்கப்படி அவரைவிட மிகவும் மூத்தவருடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அதன் பிறகும் அதே காட்டிலேயே தன் தாயைப் போலவே தினக் கூலி அடிப்படையில் வேலை செய்தார். வழக்கமான ஒரு வாழ்க்கைக்கு வெளியே அவருக்கு ஓர் ஆர்வமும் செயல்பாடும் இருந்தது என்றால் அது, மர வளர்ப்பு. இல்வாழ்க்கை, அன்றாட வாழ்வின் நெருக்கடிகள் எல்லாவற்றுக்கும் அப்பால் இது மட்டும் தொடர்ந்துவந்தது.  

தன்னுடைய ஐம்பதுகளைத் தொட்டபோது கணவரை இழந்தார் துளசி. பிள்ளைகளும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். இதற்குப் பின் மர வளர்ப்பு அவருக்கு உயிர்ப்பணி ஆனது. இதனூடாகத்தான் வனத் துறை அதிகாரியாக அங்கே பணிக்கு வருகிறார் ஏ.என்.எல்லா. மரங்கள், செடிகள், மூலிகைகள் குறித்து துளசிக்கு அபாரமான ஞானம் இருப்பதைக் கண்டு வியந்தார். தினக்கூலிப் பணியாளரான அவருக்குக் கல்வித் தகுதிகள் இல்லாவிட்டாலும் அனுபவ அறிவையே அடிப்படையாக வைத்து நிரந்தர ஊழியராக நியமிக்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

காடுகளில் உள்ள அரிய மரங்களைப் பற்றி பாடப்புத்தகங்களில் படித்தும், அறிவியலாளர்களின்  வழிமுறைகளை அறிந்தும்கூட அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்க முடியாமல்போவது தொடர்பில் வருந்தினார் எல்லா ரெட்டி. துளசியின் அனுபவ அறிவு அவருக்கு உதவியது. “எல்லா மரங்களிலிருந்தும் எடுக்கும் விதைகள் அவ்வளவு விரைவாக மரமாகிவிடாது; முதிர்மரத்தின் விதைகளே காட்டைப் பெருக்கும்” என்றார் துளசி. முதிர் மரங்களுக்கு என்று ‘தாய் மரம்’ என்று பெயரிட்ட அவர், எப்படி அவற்றை அடையாளம் காண்பது என்றும் அறிந்திருந்தார். இப்படியே செடிகளையும் அவர் அறிந்திருந்தார்.

பழங்குடிகள் நோய் வந்து சிகிச்சை பெறுவதைவிட நோய் வராமலேயே தடுப்பதற்கு முன்னுரிமை தருகிறவர்கள். எனவே, அவர்களுடைய சாப்பாட்டிலேயே மூலிகைகளின் பயன்பாடு இருக்கிறது. இந்த அறிவை அடுத்தகட்டத்துக்கு துளசி வளர்த்துக்கொண்டிருந்தார்.

துளசி சுட்டிய மரங்களின் விதைகளை எடுத்து நட்டால் கன்று வாடாமல் நன்கு வளர்வதைக் கண்டார் எல்லா ரெட்டி. எல்லா மரத்துக்கும் புஷ்பிக்கும் காலம், காய் விடும் காலம், கனியும் காலம் உண்டென்பதையும் அது எப்போது என்பதையும் அறிந்திருந்த துளசியின் நினைவாற்றல் வனத்துறையின் அகசூர் நர்சரிக்குப் பெரிய பக்கபலமாயிற்று. அங்கே நட்ட கன்றுகள் நன்கு வளர்ந்தன. ஒவ்வொரு வகை மரத்துக்கும் ஒவ்வொரு வகையில் விதைகளைப் பக்குவம் செய்து, உரிய காலத்தில் மட்டுமே நட வேண்டும் என்பதையும் துளசியிடமிருந்து வனத் துறையினர் தெரிந்துகொண்டனர்.

சாதனையின் முக்கியத்துவம்

படிக்காதவர் என்பதாலும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பேசவே கூச்சப்படுவார் துளசி. அன்னியர்கள் எதிரில் சட்டென்று பேசிவிட மாட்டார். தனக்குத் தெரிந்ததை, நம்பிக்கைக்குரிய மிகச் சிலரிடம் மட்டுமே பகிர்ந்துகொள்வார். மூலிகைச்செடிகளில் மட்டும் முன்னூறுக்கும் மேற்பட்டவற்றை அவரால் சடுதியில் அடையாளம் காட்ட முடியும்; அவற்றின் பலன்களைக் கூற முடியும் என்கிறார்கள். 

குறைந்தது ஒரு லட்சம் மரக்கன்றுகளைத் தன் கையால் நட்டிருக்கிறார் துளசி. இதைத் தாண்டி அவருடைய சாதனையின் முக்கியத்துவத்தை எல்லா ரெட்டி நமக்குச் சொல்கிறார். “வெறும் மரம் வளர்ப்பு என்று சுருக்கிட முடியாது; ஏனென்றால், பெரும்பான்மை அரிய வகை மரங்கள் இன்று அடுத்த தலைமுறைக்குச் செல்வதில் சிக்கலை எதிர்கொள்கின்றன. புதிதாக வனத் துறைக்கு வருவோருக்கு, மரங்கள் தொடர்பான இயல்பறிவு இருப்பது இல்லை; இந்த இடத்தில்தான் துளசியின் அறிவு பேருதவியாக எங்களுக்கு இருந்தது. அவருடைய முக்கியமான பங்களிப்பு, எவர் கண்களிலும் படாமல் இருந்த பல நூறு அரிய வகை தாவரங்களை உரிய பராமரிப்பின் வளையத்துக்குள் கொண்டுவந்ததில் இருக்கிறது. இந்த வனத்தின் தேவதை என்று அவரைச் சொல்லலாம்!”

இப்போது எண்பது வயதைக் கடந்துவிட்டார் துளசி. என்றாலும் பணியைத் தொடருகிறார்.

தனக்கான வயது வந்தபோது ஓய்வுபெற்றார் துளசி. ஆனாலும், அவருடைய பணி தொடர்ந்தது. அரிய வகை விதைகளையோ கன்றுகளையோ பார்த்துவிட்டால் உடனே ஓடோடி சென்று, வனத்துறையின் நர்சரியில் பாதுகாப்பாக நட்டு அவற்றை வளர்ப்பதற்குத் தேவையானவற்றைச் செய்துவிட்டே திரும்புவார். தொடர்ந்து அந்தக் கன்று நன்கு வளர்வதையும் உறுதிசெய்வார் என்கிறார்கள்.

ஒன்றிய, மாநில அரசுகளின் விருதுகள் உள்பட பனிரெண்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள துளசி, காடுகளின் முக்கியத்துவம் குறித்து கூறுவது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது. “காட்டில்தான் நாம் குடிக்கும் தண்ணீர் உருவாகிறது. மரங்கள்தான் நமக்குத் தண்ணீரைத் தருகின்றன. மரங்களை வளர்ப்பதன் மூலம், நாம் ஏதும் சேவை செய்திடவில்லை; நாம் நம்முடைய உயிரைப் பாதுகாத்துக்கொள்கிறோம்!”

அரசுக்கும் இதில் முக்கியமான ஒரு பாடம் உண்டு. துளசியினுடையது ஒரு பெரும் சமூகப் பங்களிப்பு என்ற பார்வை வேண்டும். துளசியைக் கௌரவிப்பதோடு முடிந்துவிடுவதில்லை கடமை. இப்படியான தொல்லறிவை - உள்ளூர் வளங்களை எப்படி அமைப்புரீதியாக முழுமையாக நம்முடைய அரசுத் துறைகள் முழுமையாக உள்வாங்கப்போகின்றன என்ற கேள்விக்கு அரசு விடை காண வேண்டும். 

வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


2

3

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Latha   1 year ago

50 வயதுக்கு பிறகு தான் நாம் நமக்காக வாழ முடியும்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Renganathan   1 year ago

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு காட்டின் வளர்ச்சியும் அவசியம். காட்டை நேசிக்கும் சிறந்த மனிதரைப் பற்றி வாசிக்க வழங்கிய கட்டுரை ஆசிரியருக்கு நன்றி ... அட்சயன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

பழ.மோகன்   1 year ago

இயற்கையின்மேல் பேரன்புகொண்ட ஒரு பெண்மணியைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அருமையான கட்டுரையைப் படிக்கக் கொடுத்ததற்காக அருஞ்சொல்லுக்கும், எழுத்தாளர்க்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி. "காட்டில்தான் நாம் குடிக்கும் தண்ணீர் உருவாகிறது, மரங்கள்தான் நமக்குத் தண்ணீரைத் தருகின்றன; மரங்களை வளர்ப்பதால் நாம் ஏதும் சேவை செய்துவிடவில்லை; நாம் நம்முடைய உயிரைக் காத்துக்கொள்கிறோம்" மேற்கண்டவை எத்துணை மெய்யான சொற்கள்; அந்தக் காட்டின் தாயைக் கைகூப்பித் தொழுதுகொள்கிறேன். அகவை மூப்பின் பொருட்டு ஓய்விலிருக்கும் அந்த அம்மா நல்ல நினைவுடன் இருக்கும்பொழுதே மரம், செடி,கொடிகள் பற்றிய அவரின் நுண்ணறிவைக் கேட்டறிந்து நூலாக எழுதி வைத்துவிட யாரேனும் முன்வரவேண்டும். அவ்வாறு செய்வது வருங்காலத் தலைமுறையினர்க்குப் பயனுள்ளதாக அமையும். நன்றியுடன் பழ.மோகன்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஹியரிங் எய்டுஇந்தியர்களின் ஆங்கிலம்உண்மைக்கு அப்பாற்பட்டதுகாதல் திருமணங்கள்மறைந்தது சமத்துவம்துளசிதாசன்பிடிஆர் முழுப் பேட்டிநடைமுறையே இங்கு தண்டனை!பிடிஆர் வாதங்களின் முக்கியத்துவம்!தமிழ்யதேச்சாதிகாரம்இந்துத்துவத்தின் இத்தாலியத் தொடர்புஹரித்துவார் வெறுப்புப் பேச்சுவலதுசாரிபத்திரிகையாளர் சமஸ்வேளாண் துறைதுஷார் ஷா திட்டம்போட்டித் தேர்வு அரசியல்நிர்வாகத் துறைமக்களவைசரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புInter State Councilகழுத்து வலியால் கவலையா?புத்தாக்கத் திட்டம்மோடி மேக்கர்அண்ணாமனிதவளச் செயல்திறன் மேம்பாட்டில் முதலீடு செய்யும் மருத்துவர் கணேசன்மசூதிகள்விவசாயிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!