பேட்டி, கலை, மொழிபெயர்ப்பு 10 நிமிட வாசிப்பு

நாவல் எழுதுவதற்கு முன்பாகவே நான் கதைசொல்லிதான்! - உம்பெர்த்தோ எகோ பேட்டி

டோனி வோர்ம்
29 Aug 2021, 12:00 am
0

இத்தாலிய நாவலாசிரியர் உம்பெர்த்தோ எகோவின் ஒரு நாவல்கூட தமிழுக்கு வந்திருக்கவில்லை என்றாலும் தமிழ் இலக்கியச் சூழலுக்குப் பரிச்சயமான முகம் இவருடையது. எகோ அவரது முதல் நாவலான ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ (1983) வழியாக சர்வதேசக் கவனம் பெற்றார். உலக அளவில் 5 கோடி பிரதிகளுக்கும் மேல் விற்பனையான நாவல் இது. ‘பூக்கோஸ் பென்டுலம்’ (1989), ‘தி ஐலேண்ட் ஆஃப் தி டே பிஃபோர்’ (1995), ‘பௌடாலினா’ (2001), ‘தி மிஸ்டீரியஸ் ஃப்ளேம் ஆஃப் குயின் லோனா’ (2005), ‘தி பிரேக் சிமெட்ரி’ (2010), ‘நம்பர் ஸீரோ’ (2015) என இவரது நாவல்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவை. அல்புனைவு, சிறுவர் இலக்கியம், கல்விப்புலப் பங்களிப்புகள் என இவருடைய எழுத்துலகம் பரந்துவிரிந்தது. உம்பெர்த்தோ எகோ இறந்துபோவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட பேட்டி இது.

கதைசொல்லல்:

என்னுடைய நெருக்கமான நண்பர்களுள் ஒருவர் ரோலாந்த் பார்த். தான் ஒரு நாவல் எழுதவில்லையே என்ற மனவுளைச்சல் அவரிடம் இருந்தது. ஆனால், அந்த எண்ணம் தவறானது. அவருடைய கட்டுரைகள் எல்லாமே அற்புதமான, அபாரமான கதைசொல்லலால் ஆனவை. அவருக்கு மாறாக, 48-வது வயதில் நான் நாவல் எழுதத் தொடங்குவதற்கு முன்பாகவே, நான் எப்போதும் கதைசொல்லிக்கொண்டுதான் இருந்தேன் என்பதை உணர்ந்திருந்தேன். என்னுடைய கல்விப்புலக் கட்டுரைகள் கதைசொல்லும் வடிவத்தைக் கொண்டிருந்தன. ஆக, என்னுடைய கதைசொல்லும் உந்துதலை நான் இரண்டு வழிகளில் பூர்த்திசெய்துகொண்டிருந்தேன்: என்னுடைய ஆராய்ச்சிகளுக்குக் கதைசொல்லும் வடிவத்தைக் கொடுப்பதன் வழியாகவும், என்னுடைய குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதன் வழியாகவும்.

நாவல் எழுதக் காரணம்:

இந்தக் கேள்விக்குப் பதிலே கிடையாது. இந்தக் கேள்வியால் நான் எப்போதும் தொந்தரவுக்கு உள்ளாகிறேன். ஆத்திரமூட்டக்கூடிய ஒரு பதிலைச் சொல்ல வேண்டுமென்றால், சிறுநீர் கழிக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் கழிப்பறைக்கு ஓடத்தான் வேண்டும். அப்படித்தான் நடந்தது. உண்மையான அத்தியாயம் இப்படித்தான் தொடங்கியது. என்னுடைய நண்பர், இளம் பெண், ஒரு சிறிய பதிப்பகத்துக்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒருமுறை என்னிடம் வந்து, “சிறிய துப்பறியும் தொடர் ஒன்றைத் தொடங்க விரும்புகிறோம். ஆனால், அது எழுத்தாளர்களால் எழுதப்பட்டதாக இல்லாமல் சமூகவியலர், அரசியலர் போன்றோர் எழுதுவதாக இருக்க விரும்புகிறோம். உங்களால் முடியுமா?” என்று கேட்டார். நான் சொன்னேன்: “முடியாது”. முதலாவதாக, என்னால் உரையாடல்களை எழுத முடியாது என்பதைச் சொன்னேன். ஏனெனில், நாவல்களில் சிறப்பான அம்சமாக உரையாடல்கள் பார்க்கப்படுகின்றன. இரண்டாவதாக, நான் ஒரு துப்பறியும் கதையை எழுத வேண்டுமென்றால் அது ஐந்நூறு பக்கங்களும், இடைக்கால மடாலயத்தைக் களமாகக் கொண்டிருப்பதாகவும் இருக்கும் என்றேன். அவர் சொன்னார்: “இல்லை, இல்லை. நாங்கள் எதிர்பார்ப்பது… ப்ளா, ப்ளா, ப்ளா…” பிறகு, வீட்டுக்குச் சென்றதும் துறவிகளின் பெயர்களை எழுத ஆரம்பித்தேன். அப்படியென்றால், என் வயிற்றுக்குள் ஏதோ சுற்ற ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். மேலும், பல்கலைக்கழகத்தில் போதுமான அளவுக்கு உட்கார்ந்தாயிற்று. 50 புத்தகங்களைப் பதிப்பித்துவிட்டேன், ஏற்கெனவே ஆங்கிலத்துக்கும் பிரெஞ்சுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டேன்… ஆக, நான் இந்த நிலைமையில் இருந்தேன்: ஆப்பிரிக்காவுக்குச் சென்று துப்பாக்கிகள் விற்கச் செல்ல வேண்டும், அல்லது குடும்பத்தைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோட வேண்டும், அல்லது ஒரு நாவல் எழுத வேண்டும்.

எழுதத் தொடங்கும் முன்பாக:

எழுதுவது என்பது பேனாவை எடுத்துக்கொண்டு எழுத்துகளைப் பிரதியெடுப்பது அல்ல என்பதில்தான் உண்மையான ஆச்சரியமும் உண்மையான மகிழ்ச்சியும் இருக்கிறது. எழுதுவது என்பது ஆய்வு செய்வதிலிருந்து தொடங்குகிறது. ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ நாவலுக்காக ஆய்வு செய்தது மிகவும் குறைவுதான். இரண்டு ஆண்டுகள். ஏனென்றால், அது இடைக்காலம் குறித்தது. நான் ஏற்கெனவே படித்திருந்ததாலும் எழுதியிருந்ததாலும் கோப்புகளைத் திறந்துபார்ப்பது மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால், ‘பூக்கோஸ் பென்டுலம்’ நாவலுக்கு எட்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மற்ற ஒவ்வொரு நாவலுக்கும் ஆறு ஆண்டுகள். ஒரு கதையைச் சொல்வதில் இருக்கும் கவர்ச்சியான விஷயம் இதுதான்: புதிய உலகத்தையும் வெளியையும் கதாபாத்திரங்களையும் உருவாக்குவது. ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ நாவல் தவிர மற்ற நாவல்கள் எழுதும்போதெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது எழுதாமல் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், என்னுடைய கதாபாத்திரங்கள் சுலபமாக உலவுவதற்கான உலகத்தை உருவாக்கிக்கொண்டிருப்பேன். ஒரு கதையைச் சொல்வதில் இருக்கும் கவர்ச்சியான விஷயம் இதுதான்: நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று யாரும் அறிந்திராத ஓர் உலகத்துக்குள் ஆறு ஆண்டுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதும், ஒரு காபி குடிப்பதுகூட உங்கள் கதைக்கான யோசனையைத் தரக்கூடும் என்பதும்தான்.

எழுதுவதற்கான மனத்தடை:

சில நேரங்களில் எழுத முடியாத சூழல் உருவாகும். இதைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது இயல்பானதுதான். அப்படியான சமயங்களில் பத்துப் பதினைந்து நாட்கள் சும்மாவே இருக்கலாம். அதனால் பாதகமில்லை. அந்த மாதிரியான நேரங்களில் நீச்சல் எனக்கு உதவிகரமாக இருந்திருக்கிறது. நீச்சல்குளத்திலோ கடலிலோ நீங்கள் நீந்திக்கொண்டிருப்பீர்கள், அதே நேரத்தில் யோசித்துக்கொண்டும் இருப்பீர்கள். உடல் தளர்வான நிலையில் நீந்திக்கொண்டிருக்கும்போது பல புதிய யோசனைகள் பிறக்கும்.

நாவல் உலகம்:

முதலாவதாக, ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும். ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ நாவலுக்காக நான் நிறைய வடிவமைக்கவும் வரையவும் செய்தேன். பெரிதும் பயன்படாது என்றாலும் எல்லாத் துறவிகளின் முகங்களையும் வடிவமைத்தேன். மாற்றி வரைந்துபார்த்தேன். நூலக வடிவமைப்புக்காக ஐம்பதறுபது புதிர்ப்பாதைகள் வரைந்தேன். ஏற்கெனவே உள்ள புதிர்ப்பாதைகள் குறித்துப் படித்தேன். ‘தி ஐலாண்ட் ஆஃப் தி டே பிஃபோர்’ நாவலுக்காகக் கப்பலின் உட்கட்டமைப்பு முழுக்கவும் வடிவமைத்தேன். சிக்கலான படிகள், ஏணிகள் கொண்டு வடிவமைத்தேன். ஏனென்றால், என்னுடைய கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் நகர முடியும் என்பது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வடிவமைப்புகளையெல்லாம் பிரசுரிக்கலாம் என்று ஜெர்மன் பதிப்பாளர் கேட்டபோது மறுத்துவிட்டேன். எனக்குத்தான் தெரிந்திருக்க வேண்டுமே தவிர வாசகர்களெல்லாம் கதாபாத்திரங்கள் குழப்பமடைவதைப் போலவே குழப்பமடைய வேண்டும்.

கவிதையும் உரைநடையும்:

கவிதைக்கும் உரைநடைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கவிதையில், வார்த்தைகள் முதலில் வந்துவிடும். பிறகு, நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அது தொடரும். மிகச் சிறந்த இத்தாலியக் கவிஞர் யூஜீனியோ மோன்டாலே பற்றி இன்னொரு கவிஞர் ஒரு விஷயம் சொன்னார். ஒரு பூவைப் பற்றி மோன்டாலே கவிதை எழுதியிருக்கிறார். அழகிய பெயர் கொண்ட ஒரு பூ. ஒருநாள், அவர்கள் இருவரும் நடந்துகொண்டிருக்கும்போது அந்தப் பூ அங்கே இருந்திருக்கிறது. மோன்டாலே கேட்டிருக்கிறார்: “எவ்வளவு அழகாக இருக்கிறது. என்ன பூ இது?” அவர் அதிர்ச்சியுடன், “நீங்கள் இதுகுறித்துக் கவிதை எழுதியிருக்கிறீர்களே” என்றிருக்கிறார். “ஆ! என் கவிதைகளெல்லாம் வார்த்தைகளைப் பற்றியவை. அவை வேறு எதுவொன்றையும் குறித்தவையல்ல.” அதற்கு என்ன அர்த்தம் என்றால், மோன்டாலே கவிதைகளில் பூக்கள் பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன. ஆனால், அவர் அந்தப் பூக்களைப் பார்த்ததே இல்லை. அவர் வார்த்தைகளுக்கு எதிர்வினையாற்றிக்கொண்டிருந்திருக்கிறார். வார்த்தைகள் தொடங்கி வைத்திருக்கின்றன. ஆனால், உரைநடை வேறானது. முதலில், அங்கே உலகம் உருவாகிறது. அந்த உலகத்தில் சில விஷயங்கள் நடக்கின்றன, உங்களுடைய மொழியோ கதையைப் பின்தொடரும். எனவே, ஒவ்வொரு கதையும் அதற்கான மொழியைக் கோரும். நான் ஒரு பச்சோந்தி.

மரபான வாசகரும் முன்மாதிரி வாசகரும்:

என்னுடைய ‘லெக்டர் இன் ஃபேபுலா’ புத்தகத்தில் மரபான வாசகர், முன்மாதிரி வாசகர் எனப் பிரித்திருக்கிறேன். மரபான வாசகர்கள் ஏற்கெனவே இருப்பவர்கள். பாலியல் கதைகள் எழுதுபவர்கள், சாதாரண துப்பறியும் கதைகள் எழுதுபவர்கள் இப்படியான வாசகர்களையே கவனத்தில் கொள்கிறார்கள். “நான் குடும்பப் பெண்களுக்காக எழுதுகிறேன், இளைஞர்களுக்காக எழுதுகிறேன்” என்பார்கள். இதற்கு மாறாகத் தீவிர எழுத்தாளர்களோ அவர்களுடைய வாசகர்களை உருவாக்குகிறார்கள். என்னுடைய முதல் இத்தாலியப் பதிப்பாளர், “வரலாற்று நிகழ்வுகளைப் பேசும் ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ நாவலின் ஆரம்ப வர்ணனைகள் நீளமாக இருக்கின்றன” என்றார். நான் சொன்னேன்: “இல்லை. கதைச் சூழலை எதிர்கொள்வதற்காக வாசகரைத் தயார்படுத்த விரும்புகிறேன். அவர் தவம் இருந்துதான் ஆக வேண்டும். முடியவில்லை என்றால், பரவாயில்லை. மூடிவைத்துவிட்டுப் போகட்டும்.”

பிரபல்யம்:

முதல் நாவலின் வெற்றியானது என்னுடைய வாழ்க்கையைப் பெரிதாகப் பாதித்துவிடவில்லை. ஏனென்றால், நாளிதழ்களில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சௌகர்யமாக வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒரு பாதகம் என்னவென்றால் அந்த வெற்றி என்னுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியது என்பதுதான். திரையரங்கம் போக முடியாது. மக்கள் சூழத் தொடங்கிவிடுவார்கள். எனவே, நண்பர்களுடன் அல்லது கிராமப்புறங்களில் எனத் தனிப்பட்ட வகையில் வாழ்க்கை நடத்த வேண்டியதாயிற்று. முதல் நாவலே வெற்றி பெறுவதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. என்னுடைய நண்பர் காப்ரியல் கார்சியா மார்க்குவெஸ் மகத்தான பல நாவல்களை எழுதியிருக்கிறார். ஆனால், அவரிடம் எப்போதும் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ பற்றியே கேட்பார்கள். சில எழுத்தாளர்களால்தான் இந்த சாபத்திலிருந்து மீள முடிகிறது. சிறந்த நாவலானது எழுத்தாளரின் இறுதியில் வந்துவிட்டால் நல்லது. தொடக்கத்திலேயே அது நடந்துவிட்டதென்றால் அவ்வளவுதான். உங்கள் வாழ்நாள் முழுக்கவும் அந்த ஒரு நாவலைப் பற்றிப் பேசவே கடமைப்பட்டவர்களாவீர்கள். இதிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. உங்களால் தப்பிக்க முடிந்தாலும் உங்கள் பதிப்பாளர் விட மாட்டார்.

‘நேம் ஆஃப் தி ரோஸ்’ நாவலுக்குப் பிறகு:

நாவல் மட்டுமல்ல, எந்த ஒரு புத்தகமுமே குழந்தை போன்றது. அது வளர இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். ஆக, ஒரு புத்தகத்தைப் பின்தொடர்ந்துகொண்டிருக்கும்போது இன்னொரு புத்தகம் பற்றி என்னால் யோசிக்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு நாவல் பற்றிய எண்ணம் வந்தபோது, ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ நாவலிலேயே நான் எல்லாவற்றையும் நிரூபித்துவிட்டேன், அதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை என்றுதான் முதலில் நினைத்தேன். திடீரென இரண்டு படிமங்கள் என்னைக் கவர்ந்தன. ஒன்று, பாரிஸ் நகரில் என்னுடைய 20-வது வயதில் நான் பார்த்த பென்டுலம். இரண்டாவது, கல்லறையில் ட்ரம்ப்பெட் வாசித்துக்கொண்டிருக்கும் சிறுவன். இப்படிச் சொல்லிக்கொண்டேன்: “ஆ! பென்டுலத்தில் தொடங்கி கல்லறையில் முடிக்கும் நாவல்.” இரண்டுக்கும் இடையில் என்ன போடுவது? அதைக் கண்டுபிடிக்க எனக்கு எட்டு ஆண்டுகள் ஆயின.

கணினி காலம்:

நிறைய மாற்றங்களைக் கணினி கொண்டுவந்திருக்கிறது. சில நேரங்களில் கணினியை ஓர் ஆன்மிக இயந்திரமாக நினைப்பதுண்டு. ஏனெனில், உங்கள் எண்ண ஓட்டத்தின் வேகத்தில் உங்களால் எழுதவும் முடியும். பிறகு, சரிசெய்தும் வெட்டியும் திருத்தியும் எழுத வேண்டியிருப்பதால் ரொம்பவே உதவியாக இருந்திருக்கிறது. கணினி நம்முடைய உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில், நீங்கள் நிறைய எழுத நிர்ப்பந்திக்கப்படுகிறீர்கள். பெரும்பாலும், ஒரே விஷயத்தைத்தான் மறுபடி மறுபடி எழுதுவதால் தொடக்கத்தையும் முடிவையும் மாற்றிக் கொடுத்துவிட வசதியாக இருக்கும். பிறகு, ஆய்வுக்கு உதவியாக இருக்கிறது. முசொலினியின் பிரேதப் பரிசோதனை விவரம் வேண்டுமென்றால் எளிதாகக் கிடைத்துவிடும். சில நேரங்களில் நூலகத்துக்கும் இடங்களுக்கும் போக வேண்டியிருக்கிறது.

பயணம்:

இடங்கள் என்னைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம். ‘தி ஐலேண்ட் ஆஃப் தி டே பிஃபோர்’ நாவல் எழுதும்போது ஒரு மாதம் தீவுகளில் கழித்தேன். இல்லையென்றால், நிறங்களை என்னால் விவரித்திருக்க முடியாது. நான் எப்போதும் சொல்வதுண்டு: நாவலில், ‘லியோன் ரயில் நிலையம் வந்துசேர்ந்ததும் நாளிதழ் வாங்குவதற்காக ரயிலிருந்து இறங்கினான்’ என்று எழுதுகிறேன் என்றால், அங்கே ரயிலுக்கு அருகே நாளிதழ் விற்கும் கடை இருக்கிறதா என்பது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது அந்த அத்தியாயத்துக்கு முக்கியமில்லை என்றாலும்கூட. ஆக, லியோன் ரயில் நிலையத்துக்குச் சென்றாக வேண்டும். எவ்வளவு படிகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய கதாபாத்திரம் ஏறிச்செல்ல வசதியாக இருக்கும்.

வாசிப்பதற்கான நேரம்:

இப்படியான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கும்: நான் வாசிப்பவன் அல்ல, எழுதுகிறவன்.

© லூஸியானா சேனல், தமிழில்: த.ராஜன்

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)


1


பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வரி நிர்வாகம்சாஸ்த்ரீய இசைபுதிய நாடாளுமன்றம்உபி தேர்தல் மட்டுமல்ல...தலிபான்கொலீஜியம்மனித குலம்சட்டப்பேரவைத் தேர்தல்மாநில பட்ஜெட் 2022அம்ரீந்தர் சிங்கிரண் ரிஜிஜுவயிற்றுவலி கெட்டதுமெட்ரோ டைரிஇந்திய வம்சாவளிமதிப்புரைநதிநீர் பங்கீடுவேலைக்குத் தயாராவது எப்படி?எம்.ஜி.ராமச்சந்திரன் அச்சத்துடனா?கென்யாதுணை மானியம்ஹரியாணாதர்மம்காட்டுமிராண்டித்தனம்LICஎல்லைப் பிரச்சினைஅதீதத் தலையீடுகள்அகில இந்தியப் படங்கள்ஓனிட்சுரா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!