கட்டுரை, சட்டம், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

ஃபாலி நாரிமன்: சட்ட விண்மீன்

டி.வி.பரத்வாஜ்
24 Feb 2024, 5:00 am
0

நீதித் துறையின் ‘பீஷ்ம பிதாமகர்’ என்று அழைக்கப்பட்ட ஃபாலி சாம் நாரிமன் (10.01.1929 – 21.02.2014) தனது 95வது வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு முன்னால் முன்வைக்கப்பட வேண்டிய வாதங்களைத் தயார்செய்துவிட்டு உறங்கச் சென்றவர் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். நீதித் துறையின் மாண்பையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற இறுதி மூச்சுவரை குரல் கொடுத்தார். நீதித் துறை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாடே புகழஞ்சலி செலுத்தும் விதத்தில் நல்ல நெறிகளோடும் கொள்கைகளுடனும் வாழ்ந்தவர்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக 1971 முதல் பணியாற்றிய நாரிமன், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக 1991 முதல் 2010 வரையில் பொறுப்பு வகித்திருக்கிறார். பன்னாட்டு அரங்கில் - நாடுகளுக்கு இடையிலான வழக்கில் - உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நீதி நிபுணர். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியமைக்காக அவருக்கு ‘லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது’ 2018இல் வழங்கப்பட்டது. பத்ம பூஷண் (1991), பத்ம விபூஷண் (2007) நீதிக்கான ‘குரூபர்’ விருது (2002) ஆகிய சிறப்புகள் அவரைத் தேடி வந்தன.

அரசமைப்புச் சட்டத்தில் சிறந்து விளங்கிய அவர், நீதித் துறை வரலாற்றில் நிரந்தர இடம்பெற்றுவிட்ட பல முக்கிய வழக்குகளில் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

தார்மிகச் செயல்பாடு

இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்த காலத்தில், இந்திய அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞராக (அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல்) 1972 மே முதல் 1975 ஜூன் வரையில் பணியாற்றினார் நாரிமன்.

நாட்டு மக்களின் குடியுரிமைகளைத் தாற்காலிகமாக நிறுத்திவைத்து ‘நெருக்கடிநிலை’ அறிவிக்கப்பட்டதை ஏற்க மனமில்லாமல், மிகுந்த துணிச்சலுடன் தனது பதவியை ராஜிநாமா செய்தார். நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவைக்கு, நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் (1999-2005). அதே பதவியை பிரதமர்கள் தேவ கௌடா, அடல் பிஹாரி வாஜ்பாய் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் வழங்க முன்வந்தபோது மறுத்துவிட்டார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிறந்தது ரங்கூன்

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த அன்றைய பர்மா நாட்டில் (மியான்மர்) சாம் பரியாம்ஜி நாரிமன் - பானூ இணையருடைய மகனாக ரங்கூனில், பார்சி குடும்பத்தில் பிறந்தார். பார்சிகள் தீயை வழிபடும் சோராஸ்ட்ரிய மதத்தவர். உலகின் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்று இது. உலகெங்கும் சுமார் 2 லட்சம் பேரைக் கொண்ட இச்சமூகத்தினர் இந்தியாவில் சுமார் 70,000 அளவுக்கு உள்ளனர். இரண்டாவது உலகப் போர் காரணமாக பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு குடும்பம் குடிபெயர்ந்தது.

சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் உறைவிடப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார் ஃபாலி நாரிமன். பிறகு மும்பை புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் - வரலாறு பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சிறப்பாக கற்றுத்தேறி 1950இல் வழக்கறிஞர் ஆனார். மகன் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று தந்தை விரும்பினார். நாரிமனோ தன்னுடைய ஆர்வம் சட்டப் படிப்பில்தான் என்று கூறி அதையே தேர்வுசெய்தார்.

மும்பையில் தொடக்கம்

மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக முதலில் பணிபுரிந்தார். தனக்குத் தொழிலில் மூத்தவராக இருந்து வழிகாட்டியவருக்கும் மூத்தவராக இருந்து தொழில் கற்றுக்கொடுத்த 93 வயது மூத்தவர், இறப்பதற்குச் சில நாள்களுக்கு முன்னதாகக்கூட, சட்டத்திலும் தொழிலிலும் தான் இன்னமும் மாணவன்தான் என்று அடக்கமாகக் கூறியதை அப்படியே மனதில் வாங்கிக்கொண்டார். அதன் காரணமாகவே தொடக்க காலத்தில் தன்னைவிட மூத்தவர்களிடம் பணிவுடன் பழகிய நாரிமன், நல்ல அனுபவம் கிடைத்த பிறகு இளைஞர்களிடம் பாசத்தைப் புகழ்ந்தார். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் நன்றாக வாதாடினால் நீதிமன்றத்திலேயே அதை வெளிப்படையாகப் பாராட்டும் பண்புடன் திகழ்ந்தார்.

இளையவர்கள் தனக்கு எதிராகவே காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தாலும் வழக்கில் தன்னுடைய நிலை என்ன என்பதை அவர்கள் உணரும் வகையில் பொறுமையாக எடுத்துச் சொல்லும் பக்குவமும் பெற்றிருந்தார். மிகப் பெரிய சட்ட நிபுணர் என்ற புகழை அடைந்த பிறகும்கூட கர்வமில்லாமலும் எளிமையாகவும் பழகுவார். தனது தரப்பை வாதங்களாக வைப்பதற்கு முன்னால் ஏழு அல்லது எட்டு முறைகூட வாக்கியங்களைத் திருத்தி அமைப்பார்.

எப்படிப்பட்ட வழக்காக இருந்தாலும் சட்டப்படி எடுக்க வேண்டிய வாதங்களை மிகத் திறமையாக அடுக்கிவிட்டு, வழக்கின் பொதுவான தன்மைக்கேற்ப அதில் அணுக வேண்டிய பிற அம்சங்களைப் பட்டியலிடுவார். எனவே, கட்சிக்காரருக்காக வாதாடுபவராகவும் சட்டத்தை விளக்குபவராகவும் செயல்படுவார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வளர்ச்சிக்கு அவருடைய கருத்துகள் பெரிதும் பயன்பட்டன. சட்டங்களைத் திரிக்கவோ தவறாக விளக்கமளிக்கவோ அனுமதிக்காமல் விழிப்புடன் செயல்படுவார், நீதித் துறையின் மாண்புக்குக் களங்கம் ஏற்படும் என்றால் அதைத் தீர்க்க செயலிலும் இறங்குவார்.

போபால் விஷ வாயு வழக்கில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு சார்பில் வாதிட்டார். பிறகு அது தவறு என்று மிகவும் வருந்தி அதை வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்டார். தவறைத் திருத்திக்கொள்ளும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு 47 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடு கிடைக்க அரசுக்கும் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டுக்கு முன் நின்றார். 

உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் முறை தொடர்பான வழக்கு, கோலக்நாத், எஸ்.பி.குப்தா, டி.எம்.ஏ.பை, மினர்வா மில், சங்கரி பிரசாத் சிங் தேவ், கேசவானந்த பாரதி, விசாகா என்று முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் மிகச் செறிவான வாதங்களை நுணுக்கமாக முன்வைத்தார். அந்த வழக்குகளில் கூறப்பட்ட தீர்ப்புகள் இன்றளவும் வெவ்வேறு வழக்குகளுக்காக நினைவுகூரப்படுகின்றன.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

உறுதியான மதச்சார்பின்மையர்

மதச்சார்பின்மைக் கொள்கையில் மிகவும் நம்பிக்கை வாய்ந்த நாரிமன், இந்தியாவில் சமீப காலமாக இந்துத்துவர்களின் செயல்கள் காரணமாக மத நல்லிணக்க சூழல் கெட்டுவருவது குறித்து வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். குஜராத்தில் நர்மதை அணை கட்டுமானத்துக்காக வெளியேற்றப்பட்டவர்கள் சார்பிலான வழக்கில், குஜராத் அரசுக்குச் சாதகமாக வாதாடிக்கொண்டிருந்த நாரிமன் அந்த மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் செய்தியாக வெளியான உடன், தார்மிக அடிப்படையில் அந்தப் பொறுப்பைவிட்டு விலகினார்.

2014 அக்டோபர் 17இல், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்காக வாதாடி அவருக்கு ஜாமீன் விடுதலை பெற்றுத்தந்தார். அதே வழக்கில் அதற்கும் முன்னதாக அவருடைய ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாரிமன் பாப்சியை மணந்தார். அவர்களுக்கு ரோஹிங்டன் என்ற மகனும் அனாஹிதா என்ற மகளும் உண்டு. 2011-13 காலத்தில் இந்தியாவின் தலைமை அரசு வழக்கறிஞராகப் பதவி வகித்த ரோஹிங்டன், பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தார். மகனுடைய திறமை, அர்ப்பணிப்பு, வளர்ச்சி குறித்து பாலி நாரிமன் பெருமிதம் கொண்டவராக இருந்தார்.

‘என்னுடைய நினைவுகள் மங்குவதற்கு முன்னால்…’ (Before memory Fades) என்ற தலைப்பில் தன்வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். அது சட்டம், வரலாறு, பொது நிர்வாக மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு. அறுபதாண்டுகளுக்கும் மேலாக நீதித் துறையில் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்த நாரிமன், அபூர்வமாகத் தோன்றக்கூடியவர்களில் ஒருவர். தன்னுடைய கல்வி, புகழ், பதவி அனைத்தையும் நாட்டின் நன்மைக்காகவே அர்ப்பணித்தவர். மனசாட்சியின்படி நடந்தவர். அதிகாரத்துக்குக் கட்டுப்படாலும் அஞ்சாமலும் சட்டத்தின் மாண்பை நிலைநாட்டியவர். பிற்கால சட்டத் துறையினருக்குக் கலங்கரை விளக்கம் போன்ற வழிகாட்டி.

மதச்சார்பற்ற இந்தியாவில்…

“சிறுபான்மைச் சமூகத்தவரும் பெரும்பான்மைச் சமூகத்தவரும் இணைந்து வாழும் ஒருங்கிணைந்த நாடே இந்தியா என்ற நினைவுடனும் உணர்வுடனும் வளர்க்கப்பட்டேன். மதச்சார்பற்ற இந்தியாவில்தான் செழித்து வளர்ந்தேன். கடவுளின் அருள் இருக்குமானால், மதச்சார்பற்ற இந்தியாவிலேயே இறக்க விரும்புகிறேன்” என்று தனது தன்வரலாற்று நூலில் உருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

சபரிமலையில் வழிபட பெண்களை அனுமதிக்கலாமா என்ற வழக்கை ஆராய 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வை நியமித்து, இஸ்லாத்திலும் சோராஸ்ட்ரிய மதத்திலும் எந்த வகையிலான வழிபாடுகள் அனுமதிக்கப்படுகின்றன என்று கண்டறிந்து இந்த வழக்கில் பயன்படுத்துமாறு பணித்தனர். இது நேரத்தை வீணடிக்கும், வேண்டாத வேலை என்று நாரிமன் கண்டித்தார். நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஒப்புக்கொண்டார்.

நீதிபதிகள் தங்களுடைய பணிக்காலம் முடிந்ததும் அரசு தரும் ஏதாவதொரு பொறுப்பிலும் நாடாளுமன்ற மேலவையிலும் இடம்பெறுவதை அவர் ஏற்கவில்லை. இதனால் நீதித் துறையின் நடுநிலைத்தன்மை – புனிதம் தொடர்பான மக்களுடைய நம்பிக்கை நாளடைவில் கரைந்துவிடும் என்று எச்சரித்தார்.

ஒரு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் 2018 ஜனவரியில் நிருபர்களைச் சந்தித்துப் பேசியபோது, ‘உச்ச நீதிமன்றத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். அதுவரையில் நடந்திராத அத்தகைய நிகழ்வை அவர் ஏற்கவே இல்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் தோழமையுணர்வு குறைந்துவருவது குறித்து மிகவும் வருந்தினார்.

நெருக்கடிநிலையைப் பிரகடனம் செய்த அரசு, பத்திரிகைகள் செய்திகளைத் தணிக்கை செய்த பிறகே பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் மிகவும் சீற்றமடைந்து தனது அரசுப் பதவியைவிட்டு விலகினார். ‘மக்களால் – மக்களுக்காக - மக்களே’ என்று அரசமைப்புச் சட்ட முகவுரையில் குறிப்பிடப்படும் மக்களுக்காக என்ற வார்த்தையை அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது, இல்லையென்றால் அரசின் முடிவை அது மக்களுக்கு முதலில் விளக்கியிருக்கும் என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

மக்களுடைய விருப்பத்தின்பேரில்தான் தேசிய நீதித் துறை நியமன ஆணையம் (சட்டம்) கொண்டுவரப்படுகிறது என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டபோது, “எந்த(வித) மக்கள் – வளமானவர்களா, வறியவர்களா?” என்று கேட்டார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களுடைய கருத்துகளையும் ஒரே சமயத்தில் அறிந்துகொள்ளும் வழிமுறையை இன்னும் யாரும் கண்டுபிடித்துவிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு காலம் தாழ்த்தியதைக் கண்டித்த நாரிமன், அரசு என்பது தன்னுடைய கருத்தை – முடிவை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டிய கடமையிலிருந்து தவறக் கூடாது என்றார்.

பிரிட்டனில் நீதி தேவதையின் கண்ணைத் துணியால் கண்ணைக் கட்டியிருப்பார்கள், இந்தியாவில் அப்படியில்லை. பிரிட்டனில் அவர்கள் அதற்குத் தரும் விளக்கம், வாதி – பிரதிவாதி யார் என்று பாராமல் நீதி தேவதை நியாயத்தின் பக்கம் நின்று தீர்ப்பளிக்கிறாள் என்பதாகும். தவறு செய்தவரைத் தண்டிக்க வேண்டிய சமயத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டிருந்தால் குற்றவாளிக்குப் பதில் கையிலிருக்கும் வாளால் அப்பாவியை வெட்டிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறதே என்று இந்திய நீதி தேவதையின் உருவத்துக்கு நியாயம் கற்பித்தார் நாரிமன்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


3






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?அசோகர் அருஞ்சொல் மருதன்how to write covering letter for job applicationவிழித்தெழுதலின் அவசியமா?ஏன் எதற்கு எப்படி?இந்துமத தேசியவாதம்அருஞ்சொல் ராஜாஜி கட்டுரைஇந்திய ஊடகங்கள்சமஸ் பெரியார்ரிஷி சுனக்போலியோஇந்து தமிழ் சமஸ்கரண் தாப்பர் பேட்டிஎழுத்து என்றொரு வைத்தியம்இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் நிழலில்இட்லி - தோசைடொடோமாஎம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியின் முகம்Jai bhimமு.க.ஸ்டாலின் - பழனிசாமிதமிழ் உரைநடையின் இரவல் கால்: ஆங்கிலம்நீதிமன்றமே நல்லதுபரக் அகர்வால் நியமனம்பெண் ஓட்டுநர்திருமாவளவன் பேட்டிபே டிஎம்கரண் பாஷின் கட்டுரைசர்தார் வல்லபபாய் படேல்இந்தியர் கல்விகலைஞர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!