மின் வாரியத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதற்கு முன்னதாக, பிரத்யேகமான ஒரு மின் கொள்கையைத் தமிழ்நாடு அரசு திட்டமிட வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. ‘அதிகரித்துவரும் கடன் சுமையைத் தடுத்து நிறுத்த வேண்டும்; அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் முக்கியமானதாக மின் வாரியத்தைச் சீரமைக்க வேண்டும்’ என்ற குரல்கள் முக்கியமானவை. இந்தச் சீரமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான் பார்வை மாறுபாடுகள் வருகின்றன.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகளைக் கொடுக்கிறோம் என்பதால், தமிழ்நாடு மின் வாரியம் செழிப்பாக இருக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம்; அது சீரழிந்து கிடக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புக்காக 4.52 லட்சம் பேர் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள். விவசாயத்துக்காக கட்டணமில்லா மின்சாரம் பெறும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் எவருக்கும், கடந்த 2003, மார்ச் 31-க்குப் பிறகு இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதே திட்டத்தில் தட்கல் முறை உண்டு. அங்கே ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என்று பல பிரிவுகள் உண்டு. அவை தனி வரிசை. அங்கும் காத்திருப்போர் இருக்கின்றனர்.
சென்ற 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. இப்போது முதல்வர் அறிவித்திருக்கிறபடி அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு வேலையை அரசு ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம். அதேசமயம், முதல்வருடைய பேச்சில் வெளிப்படும் வார்த்தைகளிலேயே அரசு செல்லவிருக்கும் திசை புலப்படுகிறது. “ரூ.1.59 லட்சம் கோடி அளவுக்குக் கடனில் உள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்… தமிழகத்தில் முதல் சூரியசக்தி பூங்கா திருவாரூரில் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் மின்சாரத்தை தேவைக்கேற்ற வகையிலும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும்” என்ற வாக்கியங்கள் இவற்றில் கவனம் கோருகின்றன.
மின் துறை சீர்திருத்தம் தொடர்பில் கடுமையான அழுத்தத்தைச் சந்தித்துவருகிறது தமிழக அரசு. இந்தியாவில் மின் சீர்திருத்தம் தொடர்பில் பேசப்படும்போதெல்லாம் விவசாயிகளுக்கான மின்சாரமும் பேசப்படுகிறது. மின் துறை சார்ந்த கொள்கைகள் மாநில அரசின் அளவில் மட்டுமே தீர்மானிக்கப்படுவது இல்லை என்பதால், ஒன்றிய அரசின் பார்வையுடனும், ஏனைய மாநில அரசுகளின் அணுகுமுறைகளுடனும் ஒப்பிட்டு இந்த நடவடிக்கைகள் முன்மொழியப்படுவது சகஜம் என்பதாலும், தமிழ்நாட்டில் இப்போது விவசாயிகளுக்கான மின்சாரம் தொடர்பில் கவனம் குவிகிறது. முதல்வரின் பேச்சு இதையே வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் நாம் ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அடிப்படையிலேயே நீர்ப் பற்றாக்குறை மாநிலம் இது என்பதையும், உத்தரவாதமற்ற நதிநீர்ப் பகிர்வுச் சூழலில், பெரும்பான்மை விவசாயம் இன்றைக்கு நிலத்தடிநீரை நம்பியே நடக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆக, விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுப்பது அரசின் கடமை. இப்போது விவசாயிகளுக்கான மின்சாரத்தை சூரிய சக்தி வழியே பூர்த்திசெய்யலாம்; இதற்காக அவரவர் நிலத்திலேயே சூரிய மின் உற்பத்திக் கலங்களை உருவாக்கிக் கொடுக்கலாம் என்ற முடிவு நோக்கி தமிழக அரசு நகர்வதாகத் தெரிகிறது.
அப்படி நடந்தால் அது நல்ல முயற்சி. இதற்கு ‘துஷார் ஷா திட்டம்’ நல்ல முன்னுதாரணமாக இருக்க முடியும் (நம்முடைய ‘அருஞ்சொல்’ இதழ் வெளியான முதல் நாளிலேயே இது தொடர்பிலான கட்டுரையை வெளியிட்டதும், இதே யோசனையை பாலசுப்பிரமணியம் முத்துசாமி முன்மொழிந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்). அதாவது, விவசாயிகள் தத்தமது நிலங்களுக்கான மின்சாரத்தை உற்பத்திசெய்துகொள்வதோடு, கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை அரசு அவர்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். இது விவசாயிகளுக்குக் கூடுதலான ஒரு வருமானத்தைத் தருவதோடு, சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும். தமிழக அரசு ‘துஷார் ஷா திட்டம்’ தொடர்பில் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கான மின்சாரம் என்பது மின் சீர்திருத்தத்தின் ஒரு பகுதிதான். மின் வாரியத்தின் நஷ்டத்துக்குப் பல காரணங்கள். நிர்வாகச் சீர்கேட்டுக்கும், முறைகேடான கொள்கைகளுக்கும் இவற்றில் முக்கியமான பங்கு உண்டு. தமிழ்நாட்டுக்கு அன்றாடம் தேவைப்படும் 12,000 மெகாவாட் மின்சாரத்தில் 6,000 மெகாவாட் அளவுக்கே அரசால் உற்பத்திசெய்ய முடிகிறது; சுமார் 7,000 மெகாவாட் தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் 2013-2018 காலகட்டத்தில் மட்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டதால், மின் வாரியத்திற்கு ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது பொது கணக்காய்வு தணிக்கை (சிஏஜி) அறிக்கை மூலம் தெரியவந்ததை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆக, விவசாயிகளுக்கான மின்சாரத்தை மின் வாரியத்தின் நஷ்டத்துக்கான மையக் காரணமாகக் கருதும் பார்வையை நாம் கைவிட வேண்டும்.
மின்சாரத்தை ஒரு நுகர்வுப் பண்டமாகவும், மின் வாரியங்களை சந்தைப் பார்வையிலிருந்தும் அணுகுவது மேட்டுக்குடி பார்வை. அரசின் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இது பொருந்தும். இவற்றை ஓர் அரசு லாபத்துக்காக நடத்த முடியாது. ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்கான உத்வேகத்துக்கான பங்குதாரர்களாகவே இவற்றைப் பார்க்க வேண்டும். இந்தப் பார்வைக்கு உட்பட்டு தன் சீர்திருத்தத்தை அரசு முன்னெடுக்க வேண்டும்.
பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
V.AGORAM 3 years ago
அருமைய
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Nazrul 3 years ago
அருமை வாழ்த்துகள்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
kALIDAS 3 years ago
திருவாரூர் மாவட்டத்தில் சூரியசக்தி பூங்கா அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்தான் மின்உற்பத்தி திட்டம் ஏதுமே இல்லை. சூரியசக்தி பூங்கா என்பது மாவட்டம் முழுவதும் செயல்படுத்த முனைப்பு காட்டினால் விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக ஒரு பகுதியை கூட ஏற்கிற சூழல் ஏற்படும். குறிப்பாக விவசாய கிராமங்களில் சமுதாய சூரியசக்தி பூங்கா தொடங்க அரசு முனைப்பு காட்டினால் பெரும் பகுதி விவசாய மின்தேவை பூர்த்தியாக வாய்ப்புண்டு. பெரும் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பின் மூலம் கிராமங்களில் சமுதாய சூரியசக்தி பூங்கா அமைக்க அரசு முயற்சித்தால் பெரும் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. திருவாரூர் மாவட்டத்தில்தான் முதன் முதலாக அரசு நிர்வாக பணிகளில் கணிணி மயமாக்கப்பட்டது. அதை தொடர்ந்த அதன் வளர்ச்சி இன்று ஏனைய மாநிலங்களை பற்றியுள்ளது எனவே திருவாரூர் மாவட்டத்தில் தொடங்குகிற திட்டத்தை சிறந்த செயல் ஊக்கமிக்கதாக செய்தால் மிகப்பெரிய வாய்ப்பை விவசாயிகள் பெறுவர். அரசின் அறிவிப்பை தொடர்ந்து அதன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விவசாய பெருமக்கள் ஆர்வத்துடன் கவனிக்க தொடங்கி உள்ளார்கள். சூரியசக்தி பூங்கா உருவாகட்டும்! உதயசூரியனால் மிளிரட்டும்!!! நீலனூர் கே கே தாஸ் ஆரூர்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Kalaiselvan j 3 years ago
மின்வாரிய இழப்பை நாம் எப்படி பார்ப்பது என்ற முறையில் எழுதப்பட்டுள்ளது.தீர்வுகளைப் பற்றிய வழிமுறைகளை சொல்வது தான் மின்வாரிய இழப்பை எப்படி அணுகுவது என்ற தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும்.இலவசமின்சாரமும் தடையில்லா மின்சாரமும் கிடைக்கப்பெற்ற பல விவசாயிகள் தண்ணீர் மேலாண்மை குறித்து அக்கறையோடு இல்லை என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
udhaya kumar 3 years ago
தமிழகத்தின் மேற்கு மண்டலங்களிலும் வட மாவட்டங்களிலும் விசைத்தறி நடத்துகவர்களில் பணக்கார்ர்களும் உண்டு. அவர்களுக்கு ஏன் அரசு இலவச மின்சாரம் தர வேண்டும்? உண்மையான பயனாளிகளை கண்டறிந்து மின்திருட்டை தடுத்தாலே பெருமளவு நஷ்டத்தை தவிர்க்கலாம். பிழைப்பை என்பதை தாண்டி அதிக லாபம் பார்க்கும் தொழிலான விசைத்தறிக்கு ஏன் இலவச மின்சாரம்???
Reply 3 1
Login / Create an account to add a comment / reply.
RAJA RAJAMANI 3 years ago
தீர்வுகளை பற்றி பேசுங்கள். எதையெல்லாம் செய்ய கூடாது என்று சொன்னால் மட்டும் போதுமா? எதை எல்லாம் செய்து நிதி நிலைமையை மேம்படுத்தலாம் ?
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.