கட்டுரை, சட்டம், கல்வி 10 நிமிட வாசிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு ஏன் கூடாது?

தங்க.ஜெயராமன்
19 Apr 2022, 5:00 am
1

கணப் பொழுதில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்குவதில் நம் ஒன்றிய அரசுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவே இல்லை! 2022-2023 முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கும் ஒரே நுழைவுத் தேர்வைப்  பல்கலைக்கழக மானியக் குழு சென்ற மாதம் கட்டாயமாக்கியது. இது ஒன்றிய அரசு வலிந்து உருவாக்கியிருக்கும் / உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை. மத்திய - மாநில அதிகாரப் பகிர்வுச் சிக்கலில் இன்னொரு முடிச்சாக விழுந்து இறுகும் சாத்தியம் இந்த நடவடிக்கைக்கு உண்டு. இதை எதிர்பார்த்தே செய்திருந்தால் இந்த நுழைவுத் தேர்வு அறிவிப்பு ஒன்றிய அரசின் வீம்புதான். 

வழக்கமான அரசியல் சூட்டில் பொது நுழைவுத் தேர்வை விலக்கிக்கொள்ளக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். பின்னர், நுழைவுத் தேர்வுத் திட்டத்தைக் கைவிடுமாறு ஒன்றிய அரசை வற்புறுத்தும் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதல்வரே ஏப்ரல் 11ஆம் நாள் முன்மொழிந்து அது ஒருமனதாக நிறைவேறியுள்ளது. மத்திய - மாநில அதிகாரப் பகிர்வைச் சட்டகமாக்கி அதற்குள் நிகழும் சொல்லாடலாகத் தன் சட்டப்பேரவை உரையை முதல்வர் அமைத்துக்கொண்டார்.   

அறிவிப்புக்கு என்ன விளைவு?

தன் சட்டப் பிரிவுகளின் கீழ் பல்கலைக்கழக மானியக் குழு வகுத்த விதி அல்லது நெறி என்பதாகக்கூட இந்த நுழைவுத் தேர்வுத் திட்டம் வரவில்லை. மானியக் குழுவின் ‘பொது அறிவிப்பு’ என்பதாக வந்துள்ளது. அரசமைப்புச் சட்டம், அதன் கீழ் உருவாக்கப்படும் சட்டங்கள், அவற்றின் கீழ் உருவாக்கப்படும் விதிகளும் நெறிகளும், இவற்றுக்கெல்லாம் அடுத்தகட்டமாக நிர்வாக அரசின் ஆணைகள், அதிகாரிகளின் அறிவிப்புகள் போன்றவற்றின் இறங்கு வரிசை படித்தரத்தை அரசு அலுவலர்கள் அறிவார்கள்.

ஒரு சட்டப்பேரவை தன்னுடைய மாநிலத்தின் அதிகார முடக்கமாகப் பார்க்கும் ஒன்றைப் பல்கலைக்கழக மானியக் குழு வெறும் அறிவிப்பின் மூலம் செய்துவிட முடியும் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. 

மத்திய - மாநில அதிகாரங்களின் மறுபகிர்மானமாகத் தோற்றுவதை இப்படி ஒரு அறிவிப்பின் வழியாகவே செய்துவிடலாமோ? அல்லது, அந்த அறிவிப்பையும், கடிதத்தையும் எழுதியவர்கள் தாங்கள் பயன்படுத்தும் வரைவு மொழியை இன்னும் கவனமாகக் கையாள வேண்டும் என்ற அளவிலான பிரச்சினைதானோ இது? அல்லது, மத்திய - மாநில அதிகார உறவு நுட்பங்களை மதிக்காத போக்கு ஒன்றிய அரசு அலுவலர்கள் வரை பரவிவிட்டதாகக் கருதலாமோ?  

இப்படியெல்லாம் அர்த்தப்படுத்திக்கொள்வதற்குத் தோதாக மானியக் குழு தன் அறிவிப்பை வரைந்துள்ளது. பொது நுழைவுத் தேர்வை மாநிலப் பல்கலைக்கழகங்களும், தனியார் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்களாகக் கருதப்படுபவையும் ஏற்கலாம் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. எல்லா மாநிலப் பல்கலைக்கழகங்களையும், கல்லூரி முதல்வர்களையும் 2022 - 2023 முதல் பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை ஏற்றுப் பயன்படுத்திக்கொள்ள மானியக் குழுவின் கடிதம் அழைக்கிறது.

என்னுடைய அனுபவம்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் 2009ஆம் ஆண்டு துவங்கியது. அப்போதிருந்து ஒன்பது ஆண்டுகள் அதன் மாணவர் சேர்க்கைப் பணியைப் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் நானும் பொறுப்பேற்றுச் செய்துள்ளேன். என் அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது பல்கலைக்கழக மானியக் குழு வேண்டுமென்றே ஒரு பிரச்சினையை வரவழைத்துக்கொண்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இதை நான் விளக்க வேண்டும். 

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வுத் திட்டத்தை மானியக் குழு தன் முன்னெடுப்பாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் எழுந்ததே இல்லை. ஆரம்பத்திலிருந்து இப்போது வரை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு உண்டு. ஆனால், இன்றைக்கு மானியக் குழு அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே தேர்வைக் கட்டாயமாக்கியுள்ள வழியில் அல்ல.

ஏழு அல்லது ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் தாங்களாகவே ஒன்றுசேர்ந்து தங்களுக்காக ஒரு பொது நுழைவுத் தேர்வை நடத்தின. அதைப் பெரும்பாலும் ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம் நடத்தியது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகமும் ஒருமுறை நடத்தியதாக நினைவு. ஆண்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் தேர்வு நடத்தட்டும் என்றுகூட எங்களுக்கு ஒரு திட்டம் இருந்தது.  

இப்படிச் சிறு குழுவாகச் சேர்ந்துகொண்ட மத்திய பல்கலைக்கழகங்களில் மூன்றை வரிசையாகத் தேர்வுசெய்து எதில் இடம் கிடைக்கிறதோ மாணவர்கள் அதில் சேர்ந்துகொள்ளலாம் என்பது விதி. ஆனால், நடைமுறையில் திருவாரூர் பல்கலைக்கழகத்தைத் தன் முதல் தேர்வாகக் குறிப்பிட்டவர்களோடு அங்கே சேர்க்கை முடிந்துவிடும்.

மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு பெரும் வசதி என்று பல்கலைக்கழக மானியக் குழு சொல்வது இந்த அளவுக்குத்தான்! அவர்களின் இரண்டாவது, மூன்றாவது தேர்வான பல்கலைக்கழகங்கள் பரிசீலிக்கப்படும் வாய்ப்பு மிகக் குறைவு. அவர்கள் குழுவில் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களுக்குமான தேர்வை எழுதினாலும் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது மூன்று, பரிசீலிக்கப்படுவது ஒன்று. 

புகலிடமாகிய நுழைவுத் தேர்வு 

முதல் ஐந்து ஆண்டுகள் வரை அந்தந்த மாநிலப் பள்ளி இறுதித் தேர்வு மதிபெண்களில் குறிப்பிட்ட விழுக்காட்டை நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு சேர்த்து மாணவர்களின் தரவரிசையைத் தயாரித்தோம். இதில் தீர்க்க இயலாத பலவகைப் பிரச்சினைகள் வந்தன. மாணவர்கள் பயின்ற கல்வித் திட்டங்கள் வேறுபட்டன. மதிப்பீட்டு முறைகளின் நம்பகத்தன்மை பற்றிய ஐயங்கள் நீங்கவில்லை. பாடங்களும் கணக்கற்ற வகையில் வேறுபட்டன. சிறிய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் தொடர்புடையனவாகத் தோன்றும் பாடங்களை ஒன்றுதான் என்று கருதிக்கொள்வது தவறாகப் பட்டது.

வெவ்வேறு பாடத்திட்ட பள்ளி மதிப்பெண்களையும் ஒரே நிலைக்குக் கொண்டுவர ஏதோ ஒரு தரப்படுத்தும் முறையை நாடுவதும் நியாயமாகப்படவில்லை. எனவே, பின்னர் வந்த ஆண்டுகளில் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் வைத்துக்கொண்டோம். நாங்கள் நடத்தியதும் பொது நுழைவுத் தேர்வுதான். ஆனால், தாங்களாகவே சேர்ந்துகொண்ட பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமேயான தேர்வு. மாணவர்கள் தாங்களாகவே தேர்ந்துகொண்ட தேர்வு. 

கற்பவர்களின் சுதந்திரம்

இப்போது பொது நுழைவுத் தேர்வில் வரும் பிரச்சினைகள் இரண்டு; அது எல்லா மத்திய பல்கலைக்கழகங்களுக்குமானது. அத்தோடு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் எல்லா மாணவர்களுக்குமானது. அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் இந்தத் தேர்வு மதிப்பெண்களை அனுசரித்துக்கொள்ள வேண்டும் என்பது மானியக் குழுவின் விருப்பம். இது முதல் பிரச்சினை. ‘மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விரும்புகிறேன்; ஆனால், குறிப்பிட்ட பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை எழுத நான் விரும்பவில்லை’ என்று சொல்லும் சுதந்திரம் மாணவர்களுக்கு இல்லை. அவர் எங்கே சேர விரும்பினாலும் இந்தப் பொதுத் தேர்வை எழுத வேண்டும். ஒரே தேர்வு என்பது பல தேர்வுகளை எழுத வேண்டிய மாணவர்களின் அல்லலைக் குறைக்கும் என்றுதான் மானியக் குழு இதன் அவசியத்தைக் காட்டுகிறது.

ஆனால், கல்விச் சிந்தனையானது நடைமுறை வசதியோடு செய்துகொள்ளும் சல்லிசான சமரசம் அது. அந்த மலினச் சமரசம் எனக்கு வேண்டாம் என்பவர்கள் நஷ்டப்படாமல் ஒதுங்கிக்கொள்ளும் சுதந்திரமும் மாணவர்களுக்கு வேண்டும். 

ஒரே தேர்வு முகமை    

அடுத்ததாக, பொதுத் தேர்வு நடத்தும் முகமையும் தேசியத் தேர்வு முகமை என்ற ஒன்றேதான். ஒவ்வொரு மாணவருக்கும் பொருத்தமான தேர்வு, பொருத்தமான மதிப்பீடு, அதற்கேற்ற மதிப்பீட்டாளர் என்பதை அதீத லட்சியவாதம் என்று சொல்வீர்கள். ஆனால், இதன் எதிர்ப்பக்கமான ‘இந்திய மாணவர்கள் எல்லாருக்கும் ஒரே தேர்வு’ என்பதும் நல்ல கல்விச் சிந்தனையல்ல.

பத்து கேள்விகளில் ஏதேனும் ஆறு கேள்விகளுக்கு விடை தாருங்கள் என்ற வழக்கமான கேள்வித் தாள் அமைப்பு நாம் மாணவர்களுக்குத் தரும் சலுகையல்ல. அது அவரவர்களின் தனித்தன்மையை ஓரளவுக்கு மதித்து அதற்கு இடம் வைக்கும் தேர்வுமுறை. இந்தச் சிந்தனையின் நீட்சியாகத்தான் ஒரே தேர்வு என்பது கல்விச் சிந்தனைக்கு ஏற்புடையதல்ல என்று நாம் சொல்கிறோம். 

பாடத்திட்டம் வகுப்பதோடும், பாடங்களைக் கற்பிப்பதோடும், மாணவர்கள் எதை, எப்படிக் கற்றார்கள் என்ற அனுபவத்தோடும் முற்றிலும் தொடர்பு இல்லாதது இந்தத் தேசியத் தேர்வு முகமை. இது நாடு முழுவதற்குமான தேர்வு நடத்துவது தேர்வு என்ற முக்கியமான கல்விச் செயல்பாட்டை தன் தொழில்ரீதியிலான வேலையாக மாற்றிக் கையாள்வதாகும். தன்னை நிரந்தரமாக்கிக்கொள்வதற்கு இந்தப் பொதுத் தேர்வு அதற்கு உதவும் என்பது தேர்வு ஏற்பாட்டின் முதல் பயனாக இருக்கும்.

மானியக் குழுவுக்கு ஏது மேலாதிக்கம்? 

பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரங்கள் எத்தனை என்றாலும் பொதுவாகவே அவை பல்கலைக்கழகங்களின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்குவதாக இருக்க முடியுமா? அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மீதும் மேலாதிக்கம் தரப்பட்ட அமைப்பாக அது இருக்க இயலாது. அப்படி மேலாதிக்கம் பெற்றதாக அது அமைக்கப்பட்டிருக்குமானால் அது பல்கலைக்கழகம் என்ற கருத்தாக்கத்துக்கே முரண். பல்கலைக்கழகங்களின் சட்டங்கள் அவற்றை சுதந்திரமான, தன்னாட்சியுள்ள அமைப்புகளாகத்தான் உருவாக்கின.

அவற்றுக்கும் மேலான, பல்கலைக்கழக மானியக் குழு இப்போது தன்னை நினைத்துக்கொள்வதுபோன்ற, ஒரு அதிகார அமைப்பு பல்கலைக்கழகம் என்ற கல்விச் சிந்தனைக்கு அந்நியமானது. ஒரு தன்னாட்சி அமைப்பு இன்னொரு தன்னாட்சி அமைப்பை நீர்த்துப்போகச் செய்யும் சட்டம் ஒன்று இருக்குமானால் அதன் தன்மையை என்னவென்று சொல்வது?  மானியக் குழுவின் செயல்பாடு பல்கலைக்கழகங்களைக் கலந்தாலோசித்து மேற்கொள்வதாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் சட்டம். இந்த ஏற்பாடு பல்கலைக்கழகங்களுக்கு உரிய சுதந்திரத்தை மதித்துச் செய்யப்பட்டதாக இருப்பதை மானியக் குழு கவனிக்க வேண்டும்.

கல்விமுறையின் பொதுவான போதாமைகள்

சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீதான முதல்வர் உரையில் பொதுத் தேர்வு வேண்டாம் என்பதற்கான காரணங்களாக வைக்கக்கப்பட்டவை இவை; பாடத்திட்டங்கள் வெவ்வேறானவை. மாநிலப் பாடத்திட்டங்கள் புறக்கணிக்கப்படும். ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில் வரும் கேள்விகள் மாணவர்களுக்கு சம வாய்ப்பை மறுக்கும். நிதானப் போக்கில் செல்லும் ஆழமான கற்றல் முறையை விடுத்து அவ்வப்போது போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மனப்போக்கை வளர்க்கும். பயிற்சி மையங்களைப் பெருக்கும் (பள்ளிகளே இப்போது பயிற்சி மையங்கள்தான் என்பது வேறு விஷயம்!) இந்தக் காரணங்கள் எல்லாம் அசலான, தீவிர கல்விச் சிந்தனையைச் சார்ந்தவை.

இவை இப்போதைய எந்தப் பொதுத் தேர்வுக்கும் பொருந்தும். இன்றைய பிரச்சினையாகிப்போன பொது நுழைவுத் தேர்வுக்கும் இவை பொருந்தும். பயிற்சி மையங்கள் பெருகும் என்பதை நம் பள்ளித் தேர்வு முதல் குடிமைப் பணிப் போட்டித் தேர்வு வரை அனைத்திற்கும் சொல்லலாம். இன்றைய கல்விச் சூழலின் பொதுவான போதாமைகள் பற்றிய சரியான விவரிப்பு இது. 

மாநிலங்களின் மாணவர்கள்

அகில இந்தியத்தன்மை உடைய எந்தக் கல்வி நிறுவனமும் நுழைவுத் தேர்வைத் தவிர்க்க இயலாது. அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஜம்மு, காஷ்மீர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் முதலிய எல்லா மாநில மாணவர்களும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பார்கள். நுழைவுத் தேர்வு இல்லையென்றால் இவர்களை வேறு எந்த அடிப்படையில் தரவரிசைப்படுத்த இயலும்? பள்ளித் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொள்ளலாம் என்பது ஒரு வழி.

பள்ளிக் கல்வித் திட்டங்கள் பல்வேறு வகை என்பதை நாம் பொது நுழைவுத் தேர்வு நியாயமல்ல என்பதற்கு ஒரு காரணமாகக் காட்டுகிறோம் என்பதை இங்கே மறக்கக் கூடாது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு வின்ணப்பித்த மாணவர்களில் சிபிஎஸ்இ திட்டத்தில் பயின்ற மாணவர்கள் மற்றவர்களைவிடச் சற்று குறைந்த மதிப்பெண்களோடு வருதையும் பார்த்திருக்கிறோம். கல்வித் திட்டம் மட்டுமல்ல, மாநிலத்துக்கு மாநிலம் தேர்வு முறைகளும், மதிப்பீட்டு வழிகளும் மாறுபடும். 

மற்ற மாநில மாணவர்களை ஏன்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு கல்விரீதியிலான விடை தர இயலும். இது அந்தக் கல்வி நிலையத்தின் அகில இந்தியத்தன்மைக்கு அப்பாற்பட்டது. பல மாநில மாணவர்கள் ஓரிடத்தில் சேர்ந்து ஒன்றாகத் தங்குவதும், பயில்வதும் தன்னளவிலேயே ஒரு சிறந்த கல்வி. அது வீட்டியிலேயே நம் மாணவர்களுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்பு. 

மத்திய பல்கலைக்கழகத் துவக்க விழாவில் பேசிய அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விழுக்காடு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று விழா மேடையில் இருந்த ஒன்றியக் கல்வி அமைச்சர் கபில் சிபலிடம் ஒரு கோரிக்கை வைத்தார். கருணாநிதியின் அச்சம் நமக்குப் புரிந்தது.

கபில் சிபல் பேசியபோது நவோதய வித்யாலயா பள்ளிகளைத் தமிழ்நாடு இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். கருணாநிதி கேட்டவாறு  இட ஒதுக்கீடு செய்திருந்தால் எத்தனை விழுக்காடு கிடைத்திருக்குமோ அந்த அளவுக்கு அல்லது அதற்கு மேலாகவே தமிழக மாணவர்கள் இப்போது மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்கிறார்கள்.

அவர்கள் இன்னும் அதிக அளவில் சேர வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழக ஆசிரியர்களில் சிலர் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி அளித்ததோடு மாவட்ட பள்ளிகளுக்கும் சென்று நம்மவர்கள் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தினார்கள். அதற்கெல்லாம் இப்போது அங்கே அவசியம் இல்லாமலாகிவிட்டது.

சமுதாயம் எப்போது தயாராகும்?    

ஏதோ ஒரு பாடத்திட்டம் நாடு முழுவதற்கும் பொதுவான பாடத்திட்டம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அப்போது இந்தப் பொது நுழைவுத் தேர்வுக்கு ஒப்புக்கொள்வோம் என்றாகிறது. ஒரே கல்வித் திட்டம் இருந்திருந்தால் ஒரே தேர்வு என்பது பிரச்சினையாக இருக்காது என்பதும், கல்வித் திட்டங்கள் பல்வேறாக இருப்பதைப் பிரச்சினையாகப் பார்ப்பதும் நல்ல கல்விச் சிந்தனை என்று சொல்ல இயலாது. வெவ்வேறு கல்வித்திட்டங்களும், பாடத்திட்டங்களும்தான் நல்ல கல்விமுறையும், நல்ல கல்விச் சிந்தனையும்.

இந்த வேறுபாடுகள் மாவட்ட அளவில் இருந்தால்கூட நல்லதுதான். இவையே பள்ளி அளவிலும், ஆசிரியர் அளவிலும் இருப்பதைக்கூட நான் வரவேற்பேன். இந்த அடிப்படையில்தான் பொது நுழைவுத் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று சொல்வேன். கல்விமுறை என்பது பல்கலைக்கழகம், பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சுதந்திரத்தை மதிப்பதாக இருக்க வேண்டும். அப்போது அது ஆகச் சிறந்த ஏற்பாடாக இருக்கும். அதற்கு நம் அரசும் சமுதாயமும் இனிமேல்தான் தயாராக வேண்டும். 

ஆசிரியரைத் தேர்ந்துகொண்ட மாணவர்கள்

முடிந்தவரை இந்தச் சுதந்திரத்தை மாணவர்கள் தாங்களாகவே காப்பாற்றிக்கொள்கிறார்கள் என்பது என் அனுபவம்.  நல்ல பள்ளிக்கூடம் ஒன்று கிராமத்திலிருந்தாலும் நகர மாணவர்கள் அங்கே சென்று படித்தது எனக்குத் தெரியும். மாணவர்களின் இந்த வேட்கைக்கு இன்னொரு எடுத்துக்காட்டும் தர இயலும். பொதுவாக கல்லூரிகளில் ஆங்கில வகுப்புகள் ஒரே நேரத்தில் நடக்கும். என் ஆசிரியர் தன சிங் பிரான்சிஸ் நடத்தும் ஆங்கில உரைநடை வகுப்புக்கு மற்ற வகுப்பு மாணவர்கள் தங்கள் வகுப்புகளை விட்டுவிட்டுக் கூட்டமாக வந்து அமர்ந்துகொள்வார்கள்.

எங்கள் பல்கலைக்கழகம் மாணவர்களின் வருகைப் பதிவை அதிகம் பொருட்படுத்தாது. இப்படி மாணவர்களே பள்ளிக்கூடங்களையும், தங்கள் ஆசிரியர்களையும் தேர்ந்துகொள்வது நடக்காமல் இல்லை. அவர்களின் வேட்கை எந்தத் திக்கை நோக்கிச் செல்கிறது என்பதற்கு இது அறிகுறி. ஆனால், தங்கள் முதன்மைப் பாடத்தோடு தாங்கள் விரும்பும் துணைப்பாடங்களைச் சேர்த்துக்கொள்வதற்கான அந்தச் சிறிய சுதந்திரத்தைக்கூட நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் நம் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அனுமதித்தன என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

தன்னாட்சி என்ற ஏற்பாட்டில் நம் கல்லூரிகளுக்குச் சுதந்திரம் கொடுத்தால் அவைகள் அதைத் தங்கள் பாடத்திட்டங்களை வடிவமைத்தற்குக்கூட முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். 

மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இப்போதும் நுழைவுத் தேர்வு உண்டு. கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மீட்டுவிட்டால் மட்டுமே பொது நுழைவுத் தேர்வுப் பிரச்சினை முற்றாகத் தீர்ந்துவிடாது. மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி. போன்ற இதர கல்வி நிறுவனங்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே பொது நுழைவுத் தேர்வு இருக்கிறது. இவ்வகை கல்வித் தொடர்பானவற்றை எல்லாம் ஒன்றியப் பட்டியலிலிருந்து நீக்கி அவற்றை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது எப்போது நடக்கக்கூடியது என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.   

பொது நுழைவுத் தேர்வு வந்தால் மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர் சேர்க்கை குறையும் என்பது சரி என்று வைத்துக்கொண்டால் அதற்கு இன்னொரு பொருள் உண்டு. பொது நுழைவுத் தேர்வால் மாணவர் சேர்க்கை அப்போதிருந்து மத்திய நிறுவனங்களில் குறைந்தே இருந்ததாகவும் பொருள்.

இது விவாதத்தின் துவக்கம்

பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் என்பதை ஒரு விவாதத்தின் துவக்கமாகக் கொள்ளவேண்டும். அதுவே விவாதத்தின் முடிவு என்றும் அதுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் வைத்துக்கொள்ள இயலாது. இதனை மத்திய - மாநில உறவுச்சிக்கலாக வைத்துப் பேசுவது அரசியலுக்குப் பொருத்தப்படும். பிரச்சினை அந்த அதிகாரப் பகிர்வுச் சட்டகத்தைத் தாண்டி கல்விச் சிந்தனையைத் தொட்டு நிற்பது.

விவாதத்தை அந்தச் சட்டகத்துக்குள்ளேயே முடக்கிவிடக் கூடாது. எப்போதுமே மாணவர்களும் பெற்றோர்களும் சிறந்த ஆசிரியர்களையும், சிறந்த கல்வி நிலையங்களையுமே தேடுவார்கள். சில பேராசிரியர்கள் கல்லூரியிலிருந்து விலகிவிட்டால் அங்கு மாணவர் சேர்க்கைக் குறையும் என்பது நாம் கண்டதுதானே!  

தமிழகக் கல்வி நிறுவனங்களை மத்திய பல்கலைக்கழகங்களுக்கு நிகரானவையாகத் தரப்படுத்துவதுதான் கல்விச் சிந்தனை வழியிலான நிரந்தரத் தீர்வு. நம் மாணவர்களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் இழப்பு அவர்களுக்கு எதுவுமில்லை என்ற நிலைமை வரவேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களுக்கு இணையாக நம் பல்கலைக்கழகங்களைத் தரப்படுத்திவிட்டோமா என்பதற்கு ஒரு சிறிய சோதனை உண்டு.

அந்தப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் எத்தனை பேர் நாம் அழைத்தால் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்குப் பணிசெய்ய வருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் இங்கே தாராளமாக பணியாற்ற வருவார்கள் என்றால் புது டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நம் மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதாலோ, அவர்களுக்கு இடம் குறையும் என்பதாலோ அவர்கள் இழக்கப்போவது என்ன? 

ஆனால், நிலைமை இவ்வாறு இல்லை என்பது நாம் அறிந்ததுதான். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் துவங்கியபோது அதன் துணைவேந்தர் எதிர்கொண்ட முதல் பிரச்சினை சிறந்த பேராசிரியர்கள் இங்கே பணியாற்ற விரும்பி வருவதில்லை என்பதுதான். அதனாலேயே சில துறைகளை விரைவாக அறிமுகம் செய்யவும், மற்றவற்றை வளர்க்கவும் இயலவில்லை. தமிழகத்தின் புகழ்பெற்ற சிறுபான்மையினர் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரைக்கூட அரசுப் பல்கலைக்கழகங்களுக்கோ, அரசுக் கல்லூரிகளுக்கோ கவர்ந்துகொள்ள இயலாது என்பது என் அனுமானம். 

எல்லோருக்கும் கல்வி என்ற லட்சிய நாணயத்தின் மறுபக்கம் எல்லா கல்வி நிலையங்களும் தரமுள்ளவை என்பதுதானே! சமச் சீர்மை என்பது கல்வி நிலையங்களின் தரத்தில் வந்துவிட்டால் அது விரைவில் தானாகவே பாடத்திட்டத்துக்கும் பரவிக்கொள்ளும்.   

பொதுத் தேர்வைத் தவிர்க்க இயலாது. ஆனால், நாடு முழுமைக்கும் ஒரே தேர்வு என்பதைத் தவிர்க்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் மட்டும் இணைந்து நடத்தும் தேர்வு போன்றவை இன்றுவரை நல்ல வழியாகத்தானே இருந்தது! அந்த வழியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகக் குழுவின் தேர்வைத் தேர்ந்துகொள்ள இயன்றது.

ஒரே தேர்வு மாணவர்களுக்கு நடைமுறை வசதி என்று எதிர்த் தரப்புக் காரணம் காட்டும். நடைமுறை வசதிக்கு ஏற்ப கல்விச் சிந்தனை தன்னைத் தகவமைத்துக்கொள்ளலாகுமா? இது நல்ல கல்விமுறையா, மாணவர்களுக்கு உரிய சுதந்திரம் உள்ளதா என்பதுதான் நாம் முதலில் சிந்திக்க வேண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்பதற்காக அல்ல, எந்தப் பல்கலைக்கழகத்தில் சேரவேண்டுமானாலும் அந்த ஒற்றைத் தேர்வை எழுத வேண்டும் என்பது கற்பவர்களுக்கான சுதந்திரத்தை மறுப்பதாகும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தங்க.ஜெயராமன்

தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர். மொழியியலாளர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ பணியில் பங்கேற்றவர். ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com


2

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

Haste makes waste. ஏற்கனவே 1008 குளறுபடிகள் உள்ளன. நுழைவுத்தேர்வு 1009வது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தமிழகத்தின் வரலாற்றைப் பேசும் ‘சோழர்கள் இன்று’பெரியதோர் துண்டுதிராவிடர் கழகம்தடாதெய்ஷிட்சுஇதுதான் சட்ட சீர்திருத்தமா?வாசகர்நோன்பு காலம்தகவல் தொழில்நுட்பத் துறைவாழ்வியல்வரலாற்றிலிருந்து எழுந்து வரும் ஆளுமைலாலு பிரசாத் யாதவ்நுகர்பொருள்தரவுகள்எண்டெப்பேகிறிஸ்துவம்இந்தியா டுடேஅரசே வழக்காடிஅ.முத்துலிங்கம் கட்டுரைசஞ்சய் மிஸ்ராஉமர் அப்துல்லா ‘முதிர்ந்த’ அரசியலர்தென்னைஇந்து கடவுளர்கள்370 இடங்கள்பழைய வழக்குகள்குடும்ப அரவணைப்புஓய்வூதியம்அழகியல்குலிகாஇஸ்ரேல்: வரலாற்றின் நெடும்பாதையில்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!