வாழ்வியல், வேலையும் வாழ்வும் 4 நிமிட வாசிப்பு

கொஞ்ச நேரம் வேலையில்லாமல்தான் இருங்களேன்!

ஸ்ரீதர் சுப்ரமணியம்
02 Oct 2021, 5:00 am
13

பிரிட்டனில் இருக்கும் வாடிக்கையாளருடன் இணைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன். சந்திப்பு மாலை 7:30 மணி இந்திய நேரம்; அங்கே பிரிட்டனில் மதியம் 3 மணி. ஏதோ நினைவில் பிரிட்டன் நேரம் 7:30 மணி என்று சந்திப்பு அழைப்பு அனுப்பிவிட்டேன். உடனே அவர்களுடைய மனிதவளக் குழுவினரிடமிருந்து  ஒரு மின்னஞ்சல்  வந்தது: ‘எங்கள் ஊழியர்கள் ஐந்து மணிக்கு மேல் வேலை செய்ய மாட்டார்கள். உங்கள் சந்திப்பை எங்கள் அலுவலக நேரத்துக்கு மாற்றி வைத்துக்கொள்ள இயலுமா?’

இது ஒரு தனித்துவமான சம்பவம் இல்லை. பிரிட்டனில் பணிபுரிந்த ஆண்டுகளில் நான் அவர்களிடம் இந்த உணர்வை அன்றாடம் பார்த்திருக்கிறேன். யாருமே தாமதமாக வருவதில்லை. காலையில் 8.45 மணிக்கு ஏறக்குறைய எல்லாரும் அலுவலகத்தை வந்து சேர்ந்துவிடுவார்கள். சரியாக 5 மணிக்குக் கிளம்பிவிடுவார்கள். 5:01-க்கு பெரும்பாலான அலுவலகம்  காலியாகிவிடும். போலவே, சனி, ஞாயிறு அலுவலக ஊழியர்கள் இருக்கும் இடமே தெரியாது. வாட்ஸ்அப் சேதிகூட அனுப்ப முடியாது. இதெல்லாம் போதாதென்று ஒவ்வொரு ஊழியரும் ஆண்டுதோறும் இரண்டு வாரங்கள் கண்டிப்பாக விடுமுறை எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். 

இதனை ‘வேலை-வாழ்வு சமநிலை’ (Work-Life Balance) என்று குறிப்பிடுகிறார்கள். ‘வேலை செய்வது என்பது வாழ்வதற்குத்தான். வாழ்வதே வேலை செய்ய அல்ல’ என்பதைக் குறிப்பிடும் சொற்றொடர் இது!

வாழ்வது எனில் என்ன? அது உங்கள் விருப்பத்துடன், ஆர்வத்துடன் நடக்கும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கேர்ள் ஃப்ரெண்ட்டுடன் ஊர் சுற்றுவது. குடும்பத்துடன் இருப்பது, மனைவியுடன் பீச், சினிமா போவது, உங்கள் பிள்ளைகளுடன் விளையாடுவது. சோஃபாவில் உட்கார்ந்து டிவி அல்லது நெட்பிளிக்ஸ் பார்ப்பது அல்லது எதுவுமே இன்றி சும்மா படுத்துத் தூங்குவது. 

சிலர் அப்படிப்பட்ட வழக்கமான வாழ்வு நிலை ஒத்துவராதவர்களாக இருப்பார்கள். ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இவர்கள். இவர்கள் தங்களுக்கென்று ஒரு விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுத்து அதில் மேற்படிப்பு படிக்கலாம்; எழுதலாம்; இசை கற்றுக்கொள்ளலாம். சுருக்கமாக சொல்வதெனில் தங்களது ‘வாழ்வு நேர’த்தில் என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்டவரின் சுய விருப்பத்தைப் பொருத்த விஷயம். அது அவரின் சுய தேர்வாக இருக்க வேண்டும். 

இந்தியா போன்ற நாடுகளில் இந்த சமநிலை பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக ஐடி, பிபிஓ போன்ற நவீனத் துறைகள் தங்கள் ஊழியர்களை கம்பெனிக்காக நேர்ந்துவிட்டவர்கள்போல நடத்துகிறார்கள். ஊதியங்கள் மற்றும் வேலை நேரம் தொடர்பில் பன்னாட்டு தொழிலாளி நிறுவனம் (International Labour Organisation - ILO) சென்ற ஆண்டு ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. இதில் உலகிலேயே அதிக மணி நேரங்கள் வேலை செய்வதில் இந்திய ஊழியர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். சீனாகூட நமக்குக் கீழேதான் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்.

ந்த 150 ஆண்டுகளில் பிரிட்டன் போன்ற நாடுகளில் சராசரி பணி நேரம் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்திருக்கிறது. அதாவது, ஊழியர்கள் இந்த நாடுகளில் மிகவும் குறைவான நேரங்கள் பணிபுரிகிறார்கள். எனில், வாழ்வுக்காக அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது. 

இந்த நிலைமை நாளுக்கு நாள் இன்னமும் மேம்பட்டுவருகிறது. சில காலம் முன்பு ஐஸ்லாந்து நாட்டில் வாரம் ஐந்து நாட்களுக்கு பதில் வாரம் நான்கு நாட்கள்தான் வேலை நாட்கள் என்று பரிசோதித்துப் பார்த்தார்கள். இது அங்கே மக்களிடையே மகிழ்ச்சியைக் கூட்டி இருக்கிறது. பொருளாதாரத்தில் எந்தக் குறைபாட்டையும் அது உருவாக்கவில்லை என்பதுதான் முக்கிய ஆச்சரியம். 

இதன் அடுத்த அதிரடியாக பிரான்ஸில் வேலை நேரம் தாண்டி ஒரு ஊழியர் தனது அலுவலக மின்னஞ்சலைப்  பார்க்கத் தேவையில்லை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவிவருகிறது. அதாவது வேலை நேரம் தாண்டி நீங்கள் உங்கள் மின்னஞ்சலை ஏன் பார்க்கவில்லை அல்லது பதில் அளிக்கவில்லை என்று எந்த நிறுவனமும் சம்பந்தப்பட்ட ஊழியரைக் கேள்வி கேட்க முடியாது. 

இப்படி முன்னேறிய நாடுகள் தங்கள் குடிமக்களின் பணி நேரம், பணிச்சுமை போன்றவற்றைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அதே நேரம், இந்தியாவில் நிலைமை என்ன?

பிரிட்டனில் தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து சலித்த காலகட்டத்தை ஏங்கெல்ஸ் குறிப்பிட்டது போன்ற அவலமான பணியிடங்கள், தொழிற்சாலைப் புகை, இயந்திரங்களின் விபத்துகள் போன்ற ஆபத்துகள் இல்லை. இவையெல்லாம் நிறைய மத்திய தரத் தொழிற்சாலைகளில் காணப்படுகின்றன. ஆனால், விதிவிலக்கின்றி இந்தியர்கள் பெரும்பாலானோருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் வருகின்றன. 

இந்திய நிறுவனங்களின் ஊழியர்கள் டயபடீஸ், ஸ்ட்ரோக், இதய நோய் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகும் ஆபத்துகள் அதிகமாக இருக்கின்றன என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட வாழ்வியல் தொடர்பான நோய்கள் மூலம் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 முதல் 10 பில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது. அதாவது அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சுமார் 7.5 லட்சம் கோடி இழப்புகளை சந்திக்க இருக்கிறது. காரணம்: வேலை-வாழ்வு சமநிலை இன்மை!

இந்தியப் பொருளாதாரம் எக்கேடு கெட்டால் போகட்டும். ஆனால் தனி மனிதனாக உங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வை எப்படி வாழுகிறீர்கள்? வாழ்க்கை என்பது படிப்பு, காதல், திருமணம், பிள்ளைகள், ரிடயர்மென்ட் போன்ற முக்கிய மைல்கற்கள் மட்டுமல்ல. உண்மையில் வாழ்க்கை என்பது இன்று காலை எழுந்தது முதல் தூங்கப்போகும் வரை இருக்கும் நேரங்கள்தான். அதனை எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதைத்தான் உங்கள் வாழ்வை எப்படி வாழ்கிறீர்கள் என்பதும் முடிவுசெய்கிறது. 

காலையில் எழுந்ததும் டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் ஃபோனில் அலுவலக மெயிலை செக் பண்ணுகிறீர்களா? குளிக்கும்பொழுது மதியம்  நடக்கப்போகும் ஒரு முக்கிய கிளையண்ட் மீட்டிங் தொடர்பில் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? டிபன் சாப்பிடும்பொழுது பக்கத்தில் லேப்டாப் வைத்துக் கொண்டு உங்கள் மேலாளருக்கு கொடுக்க வேண்டிய மாத அறிக்கையை தயார் செய்துகொண்டே சாப்பிடுகிறீர்களா? சிக்கல்தான்!

நமது வாழ்வு என்பது 70-80 ஆண்டு கால நிகழ்வுகள் அல்ல. நமது இன்றைய தினம்; நமது இந்த வாரம்; இந்த சனிக்கிழமை, இந்த ஞாயிற்றுக்கிழமை. அதனை எப்படி கழிக்கிறோம் என்பதில்தான் நமது வாழ்வை எப்படி நடத்திப்போகிறோம் என்பது இருக்கிறது. வாழ்வு என்பது வேலை அல்ல. வேலை என்பது நமது வாழ்வை செலுத்த உதவும் பெட்ரோல். அவ்வளவுதான். 

இன்று ஒரு நாள், அல்லது இந்த வாரம் அலுவலகத்தில் வேலையை நேரத்துக்கு முடித்து விட்டு ஆறு மணிக்கு வீடு திரும்ப முனையுங்கள். அல்லது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமை, 'இந்த நாள் எனது' என்று சொல்லிக் கொள்ளுங்கள். 'எனது வாழ்வை நான் வாழப் போகிறேன்,' என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். தனியாகவோ, உங்கள் மனைவி அல்லது நண்பருடனோ அமைதியாக ஓர் உணவகம் போய் சாப்பிடலாம். நல்ல புத்தகத்தையோ, பத்திரிகைகளையோ, இணையத்திலோ வாசிக்கலாம். வீட்டில் டிவியில் அல்லது நெட்பிளிக்ஸ்சில் ஏதாவது படத்தைப் போட்டு கை கோத்துக்கொண்டு உட்கார்ந்து பார்க்கலாம். அல்லது வெறுமனே சோஃபாவில் அமர்ந்து எதையாவதுபற்றி சிந்தித்துக்கொண்டிருக்கலாம்.  

இதைப் பற்றி நாம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. வேலை முக்கியம்தான். ஆனால், வாழ்வு என்ற ஒன்று இல்லையேல் வேலை இருப்பதற்கு அர்த்தமே இல்லை. ஓடாத வண்டிக்கு எதற்கு பெட்ரோல்? 

(வேலையும் வாழ்வும் - சனிக்கிழமைதோறும் பேசுவோம்)

ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.


2


பின்னூட்டம் (13)

Login / Create an account to add a comment / reply.

சூ.ம.ஜெயசீலன்   1 month ago

அருமை! இங்கே பிலிப்பைன்ஸில்., சனி ஞாயிறுகளில் அழைக்காதீர்கள், அனுப்பாதீர்கள் என பேராசிரியர்கள் சொல்கிறார்கள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

I.Philips ponnudurai   1 year ago

நிகழ்கால வாழ்க்கை முறைக்கு மிக தேவையான கட்டுரை.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

Rajaguru P   1 year ago

Mika thevayana Katturai. Parattukal... Nan ithai mika munbe kadai pidikka aarambithu vitean..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Nethaji   1 year ago

Very good article

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Kajamydeen   1 year ago

மிகையான ஒரு அருஞ்சொல்லை ஆசிரியர் தமக்கே உரிய பாணியில் மிக ஆழமாக எடுத்துரைத்து யிருக்கிறார்.வாழ்வதற்கே வேலை..

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

S.Sivakumar   1 year ago

The article is quite good bringing an analysis on, whether to work for making a living as a life balancing act or timeless working forgoing life needs and pleasure. It is a fact that Indians work long hours irrespective of their functioning as IT official, BPO official or in government job, production industry or in civil engineering construction work, etc., All most 60 to 70 % of Indians work with interest in executing their work to the best possible manner. For them, work is also life balancing act, for such people.This is the reason for the progress that we, Indians achived till date.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

naan raam   1 year ago

very good . i am working in banking industry since 2012. i joined as a clerk and till now i continue as a clerk. my batch mates are moved towards as a manager and executives i am working as same because of your quote " work life balance " . for the decade i moved by 5 to 5;30 pm from my office ( but it is not so easy , we have to work hard for talling huge cash with outmost care also today heavy workload due to staff shortage .. whether i dont know how long i can manage to do so because of govt policies regarding labour laws )... for this i face lot of economic loss but life is more precious than money.... thank you so much for comrades sridhar subramanian and samas......

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

V Hari   1 year ago

அட்டகாசம்... வாரம்தோறும்.. படிக்க காதாதிருக்கேன்...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Sridharan Ramamoorthy   1 year ago

நல்ல கட்டுரை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அய்யாபுரத்தான்   1 year ago

இந்தியர்கள் தமக்காக உழைப்பதில்லை. தமது வருங்கால தலைமுறையினருக்காக உழைக்கிறார்கள். அதனால் தேவை எவ்வளவு என்பது அவர்களுக்கு புலப்படுவதில்லை. பணியில் பாதுகாப்பின்மை, பணியிட அடக்குமுறை போன்றவை இந்தியர்களை ஓய்வின்றி உழைக்கத் தூண்டுகிறது. சிங்கப்பூர் சென்ற புதிதில் வெளிநாட்டவர் முதுகில் கனமான சுமைகளுடன் மேப்பை கையில் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி வருவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களிடம் விசாரித்தபோது பதினோரு மாதங்கள் வேலை செய்யும் போது ஒரு மாதம் சுற்றுலா செல்வதற்காக சேமிப்போம் என்றார்கள். நாம் அதை ஐந்தாம் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சேமித்து வைப்போம். இப்படியாக இந்தியர்கள் வாழ்வது மிகவும் குறைந்த காலமே.

Reply 17 0

Login / Create an account to add a comment / reply.

Kalyanakumar   1 year ago

நல்லது!!இந்தியாவின் மக்கள்தொகையோடும்.அவர்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதும்..முக்கியமாக எல்லோருக்கும் வேலை தருவதும் முக்கியம்..எதிர்காலத்தில் இதெல்லாம் நடக்கும் என நம்புவோமாக!!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

C Sundaram   1 year ago

அருமை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

MAHESHWARAN S   1 year ago

நல் வழிக்காண கட்டுரை வாழ்த்துக்கள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஹார்மோன்ஜெயகாந்தன்போக்குவரத்துக் கொள்கைபுரட்சிஅகரம்நக்சல்பாரிஎளியவர்களின் நலன் காக்க ஒன்றிய அரசு முன் வர வேண்டுஎங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்?சிறப்பு நிர்வாகப் பகுதிதிரிணமூல் காங்கிரஸ்சமஸ் அருஞ்சொல் ராகுல்அருஞ்சொல் மாயாவதிபயத்திலிருந்து விடுதலைஇல.சுபத்ராகாந்தி படுகொலை: ஏன் சிரிப்பு வருகிறது?ஜெயமோகன் சமஸ்அரசுப் பள்ளிக்கூடம்கலப்பு மொழிஸ்ரீதர் சுப்ரமணியம் கட்டுரைசிறை வாழ்க்கைசரண் சிங்இந்துஸ்தான்டாக்டர் கணேசன்ஆ.சிவசுப்பிரமணியன்படையெடுப்புபில்கிஸ் பானுநிதிநிலை அறிக்கைதொழில் துறை 4.0மதன்லால் திங்க்ராவிஸ்வேஷ் சுந்தர் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!