கட்டுரை, வாழ்வியல், வேலையும் வாழ்வும் 6 நிமிட வாசிப்பு

அலுவலக அரசியலை எப்படி எதிர்கொள்வது?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
27 Nov 2021, 5:00 am
4

ளைஞர் ஒருவர் - ன் உறவினர் - கொஞ்ச காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஒன்று பெரிய நிறுவனம், இன்னொன்று கொஞ்சம் நடுத்தர நிறுவனம். பெரிய நிறுவனத்தை விட்டுவிட்டு, நடுத்தர நிறுவன வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டார். "ஏம்பா, அதுவும் நல்ல, பெரிய கம்பெனிதானே, அந்த ஆஃபரை ஏன் விட்டே?" எனக் கேட்டால், "அந்தக் கம்பெனில ஒரே பாலிடிக்ஸ்னு கேள்விப்பட்டேன். அதான் வேணாம்னு டிசைட் பண்ணிட்டேன்" என்று பதில் வந்தது. 

"அந்தக் கம்பெனில வேலைக்கு சேராதீங்க; ஒரே பாலிட்டிக்ஸ்!" என்பது மாதிரியான புகார்களை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். அலுவலக அரசியல் என்பது இந்தியாவில் மிக சகஜமாகப் புழங்கும் வார்த்தை. அலுவலகத்தில் ஓர் ஊழியர் இன்னொரு ஊழியரை கவிழ்க்க முயல்வது, அல்லது அவரது பெருமையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றைக் குறிப்பதற்கு இந்த சொற்றொடர் வழங்கப்படுகிறது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் பலருக்கு இது தொல்லையாகவே இருக்கும். ஒழுங்காக வேலையில் கவனம் செலுத்த இயலாமல் போகும். யார் நம்மைக் கவிழ்க்கிறார், அதற்கு பதிலாக யாரை நாம் கவிழ்க்க வேண்டும் என்று கணக்கு செய்துகொண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி கொஞ்சம் பின்னடைவில் இருந்தால் என்ன தோன்றும்? "அந்த அணி இந்த அணியிடம் தோற்க வேண்டும்; இந்த அணி அந்த அணியை வெல்ல வேண்டும்; இதெல்லாம் நடந்தால் நாம் ஃபைனலுக்குப் போய் விடலாம்" என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டு இருப்பார்களே, அது போல ஆகிவிடும். அப்படிப்பட்ட கணக்குகள் உலகக் கோப்பைக்குப் போடலாம். அதில் நமக்குத் தனிப்பட்ட அளவில் பெரிய நஷ்டமில்லை. ஆனால் நமது சொந்த வாழ்விலேயே, பணியிடத்தில் அப்படி சில கணக்கீடுகள் செய்துகொண்டே வாழ வேண்டும் என்றால் அது நம்மைப் பெரிய அளவில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கும் அல்லவா?

"அந்தக் கம்பெனில ஒரே பாலிடிக்ஸ்" போன்ற வதந்திகள் மன்னார் & கம்பனி மாதிரி நிறுவனங்களுக்கு மட்டுமில்லை.  லட்சக்கணக்கான ஊழியர்களை வைத்து வெற்றிகரமாக நடக்கும் நிறுவனங்களிலும், நவீன தொழில் நுட்பங்களை வைத்து இயங்கும் ஐடி, பயோடெக் போன்ற நிறுவனங்களைக் குறித்தும் பேசப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளை எப்படி அணுகுவது? அதற்கு நம்மிடம் வழிமுறைகள் இருக்கின்றனவா? அப்படி எழும் அலுவலக அரசியலை எப்படி எதிர்கொள்வது, என்று பார்ப்போம். 

அலுவலகத்தில் அரசியல் இல்லை 

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்வோம். அரசியல் என்பது அலுவலகத்தில் இல்லை. நமது வாழ்வில், நம் சமூகத்தில் இருக்கிறது. தான் முன்னேற அடுத்தவரை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்து செயல்படும் ஒருவர் அதே அணுகுமுறையை தனது பணியிடத்திலும் காட்டவே செய்வார். வீடு, ஆபீஸ், கோயில் என்ற பேதங்கள் அவரிடம் இருக்காது. அப்படி நினைத்து செயல்படுபவர் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் தனது கவிழ்க்கும் பணியை செவ்வனே செய்துவருவார். எனவே, அரசியல் இடங்களில் இல்லை. மனிதர்களின் மனங்களில் இருக்கிறது. 

அரசியலை ஊக்குவிக்கும் அலுவலகங்கள் கிடையாது 

இந்த நிறுவனத்தில் அரசியல் அதிகம் என்று எங்குமே பிரத்தியேகமாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்க வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் முதலாளியே மெனக்கெட்டு அரசியல் ஆட்டங்களை ஊக்குவிப்பவராக இருக்க வேண்டும். அறிவுள்ள எந்த முதலாளியும் அப்படிச் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்ள மாட்டார். எனவே 'இந்தக் கம்பனியில் அரசியல் ஜாஸ்தி' என்பதே ஓர் உண்மையற்ற வாக்கியம். 

அலுவலக அரசியல் - இரட்டைக் கூர் கத்தி 

ஒரு நிறுவனத்தில் அல்லது ஓர் இடத்தில் அரசியல் அதிகம் இருப்பது குறித்து யார் கவலைப்பட வேண்டும்? உண்மையில் அரசியல் விளையாட்டு விளையாடுபவர்கள் மட்டும்தான் கவலைப்பட வேண்டி இருக்கும். காரணம், அலுவலக அரசியல் என்பது இரண்டு பக்கமும் வெட்டும் கத்தி. நீங்கள் அந்த விளையாட்டை விளையாடுபவராக இருந்தால் உங்களையும் பாதிக்கும். நீங்கள் யாரையாவது கவிழ்க்க தோண்டிக் கொண்டிருந்தால், உங்களைக் கவிழ்க்க இன்னொருவர் பின்னே குழி தோண்டிக் கொண்டுதானே இருப்பார்? யார் எப்போது எந்தக் குழியில் விழப் போகிறார்கள் என்பது விழும் வரை தெரியாதுதானே!

இதற்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது: எந்த விளையாட்டையும் ஆடாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு கடக்க வேண்டும். அப்போது நாமும் யாருக்கும் குழி தொண்ட வேண்டியதில்லை; நமக்கும் எதிரிகள் தோன்றி பின்னே குழி தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது. 

அலுவலகம் வேலை செய்ய மட்டும்தான்

அலுவலகத்தில் நமது பொறுப்பு என்னவாக இருக்க வேண்டும்? கொடுக்கிற வேலையைத் திறன்பட செய்து முடிக்க வேண்டியது மட்டும்தான். அதைத்தாண்டி வேறு ஒன்றும் இல்லை. முக்கியமாக யாரைப் பற்றியும் வம்பு பேசும் முயற்சிகளில் ஈடுபட ஒப்புக் கொள்ளாதீர்கள். "அவன் அந்தப் பொண்ணு கூட சுத்தறான்" என்று யாராவது ஆரம்பித்தால் "யார் வேணா யார் கூட வேணா சுத்தட்டும். நமக்கு வேலையை ஒழுங்கா முடிச்சி வீட்டுக்குப் போகணும்!" என்று முடித்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் பற்றிய வம்புகளில் ஈடுபடும் பொழுதுதான் ஒவ்வொருவர் பற்றிய முன்முடிவுகளை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட முன்முடிவுகள்தான் அவர்கள் குறித்த நேர்மறை, எதிர்மறை பிம்பங்களை ஏற்படுத்தி நம் அணுகுமுறையை பாதிக்கிறது. அலுவலக அரசியல் உருவாகும் புள்ளி இதுதான். 

அலுவலக அரசியல்வாதி ஒரு பலவீனர்

தங்களது சுயம் பற்றிய பலவீனமான கருத்தைக் கொண்டிருப்பவர்கள்தான் பொதுவாக அலுவலக அரசியலில் ஈடுபடுவார்கள். தங்களது திறமையைக் காட்டி முன்னேற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவேதான் வேறு யாரையாவது மட்டம் தட்டித் தாங்கள் முன்னேற இயலுமா என்று முயல்கிறார்கள். அப்படிப்பட்ட முன்னேற்றங்கள் குறுகிய காலத்தில் பலன் கொடுத்தாலும் நீண்ட கால அளவில் அவர் எங்காவது எதிலாவது சிக்கிக் கொண்டு தத்தளிக்கவே செய்வார். உங்களைப் பற்றி நீங்கள் பலவீனமானவர், திறமையற்றவர் என்று உணர்ந்தால் நீங்களும் அரசியல் விளையாட்டை அலுவலகத்தில் விளையாட ஆரம்பிக்கலாம். மாறாக, உங்கள் திறமை, உழைப்பு பற்றிய நம்பிக்கை மற்றும் தைரியம் இருந்தால் உலகில் எந்த அரசியல் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. (திறமை பற்றிய சந்தேகம் இருந்தால் முதலில் அதை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் இறங்குங்கள்.)

அலுவலக அரசியல் அங்கே அதிகம், இங்கே குறைவு என்றெல்லாம் சொல்வது தனி மனித கருத்துதான். அது எதற்கும் ஆதாரம் இருக்க வாய்ப்பில்லை. எங்கே அரசியல் இருக்கிறது என்ற கேள்விக்கு எளிமையான விடை இருக்கிறது: அரசியல் விளையாடாதவரை சுற்றி அரசியல் இல்லை. அரசியல் விளையாடுபவரைச் சுற்றி அரசியல் நிரம்பி இருக்கிறது.

ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.
பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

MANI N    1 year ago

யாரும் கண்டுகொள்ளாத ஆனால் மிக முக்கியமான பிரச்சினையைப் பற்றி கட்டுரையாளர் பேசுகிறார். ஒரு முறை மறைந்த எம்.எஸ்.எஸ் பாண்டியன் அவர்களை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. அதற்கு முன்பு நேரடியாக அறிமுகம் இல்லை. ஏன் எம்.ஐ.டி.எஸில் இருந்து நின்றுவிட்டீர்கள் என்று கேட்டேன். அங்குள்ள இன்டர்ல் பாலிட்க்ஸ் தாங்க முடியவில்லை என்றார். தற்போது என்ன‌ செய்து கொண்டு இருக்கிறீர்கள்? என்றேன். "வருடத்தில் மூன்று மாதம் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றுக்கு பாடம் கற்பிக்க செல்கிறேன். இங்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் சம்பளம் அதில் கிடைத்து விடுகிறது போதும் பார்க்கலாம்"என்றார். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் புத்தகாப் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று கொண்டு இருந்தீர்களே! இப்போதும் செல்கிறீர்களா? என்றேன். "இல்லை. அதையும் நிறுத்தி விட்டேன். பெரும்பாலான ஆசிரியர்கள் பாடங்களை கவனிப்பதில்லை. சிலர் தூங்கவும் செய்கிறார்கள். அவ்வளவு அக்கறை அற்ற மனிதர்களுக்கு வகுப்பு எடுத்து காசு பார்க்கவில்லை என்றால் என்ன" என்றார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சென்று பணியாற்றி மறைந்தார். பணியில் சேர்ந்த புதிதில், பல கல்லூரிகளில் அலுவலக அரசியல் பெரும் பிரச்சினையாகப் பட்டது. இது பணிப் பளு குறைவின் துணை விளைவு என்று நினைத்தேன். பின்னர் தான் தெரிந்தது அது அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள் முற்றிலும் பணி நிரந்தரம் அற்ற பணியாளர்கள் பணியாற்றும் இடம் என எங்கும் இந்த அலுவலக அரசியல் நிறைந்து இருக்கிறது. இது எந்த வகையிலும் ஆரோக்கியமானது அல்ல என்றாலும் சமூக பொருளாதார அரசியல் ஆற்றாமைகள் நீடிக்கும் வரை எந்தப் பயனும் இல்லை என்றாலும் அற்ப மகிழ்ச்சிக்காவும் தனிநபர் குறைந்த பட்ச தற்காலிக இலாபங்களுக்காவும் தொடரவே செய்யும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Almas Ahamed N   1 year ago

"அலுவலகத்தில் நமது பொறுப்பு என்னவாக இருக்க வேண்டும்? கொடுக்கிற வேலையைத் திறன்பட செய்து முடிக்க வேண்டியது மட்டும்தான்." மிகவும் விரும்பி வாசித்தேன்..!! நன்றி!! 👌☺️

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

MuVeki   1 year ago

மிகவும் மேம்போக்காக எழுதப்பட்டிருக்கும் கட்டுரை. பரவாயில்லை. அருஞ்சொல் போன்ற தீவிர அரசியல் பேசும் தளத்தில் இப்போன்ற மேம்போக்கான கட்டுரைகள் வெளிவருவது அருஞ்சொல் தீவிர அரசியல் பேசும் தளம்தானா என்ற சந்தேகம் வருகிறது. அலுவலகங்களில் அரசியல் இருக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாம் உண்டு நாம் வேலை உண்டு என்று இருக்க வேண்டுமாம். அலுவலக அரசியல் என்ன என்பதை விவரித்த கட்டுரையாளர், அதை போராடித்தான் வெல்ல வேண்டும் என்று கூற மறந்திருக்கிறார். இதிலிருந்து விலகிப்போகிறவர்களின் வளர்ச்சி எப்படி இடைமறிக்கப்படுகிறது என்பதையெல்லாம் பேசாமல் நுனிப்புல் மேய்த்திருக்கிறார் கட்டுரையாளர். ஒரு குழுவாக செயல்படும்போது, சிறந்த வெளியீட்டை(Output வழங்க அனைவரும் மற்றவருடைய வேலையே கறாராக சரிபார்ப்பதும் குற்றம் கண்டுபிடிப்பதும் அரசியல் என்று தவறான அர்த்தம் கொள்ளும் இளைய தலைமுறைக்கு தெளிவூட்ட இருந்த வாய்ப்பையும் தவற விட்டிருக்கிறார். தனியார் துறைக்காகவா? அரசு துறைக்காகவா?யாருக்காக இதை எழுதியிருக்கிறார் என்ற தெளிவும் இல்லை. ஒரு ஒரு மேம்போக்கான தீர்வை சொல்லும் கட்டுரைகள் எழுதப்படாமலே இருக்கலாம். -முவெகி https://www.facebook.com/muve.ki.5

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

Dear sridhar sir.. I'm suffering from office politics in govt institution. Your article is really very nice.. But I felt that is not talking about govt institution higher official torture

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

பா.இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது அருஞ்சொல் கட்டுரஆளுநர் பதவி ஒழிக்கப்படட்டும்...!கணினி அறிவியல் படிப்புஜி ஜின் பிங்விமான நிலையக் காவல்: காவலன் காவான் எனின்இம்ரான் கான்சூர்யா ஞானவேல்மருத்துவத்துறை அமைச்சர்காஷ்மீர்charu niveditaஹேக்கர்கள்மகாஜன் ஆணையம்சீனாஅண்ணா சாலை விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்முல்லை பெரியாறு அணைபஞ்சாங்கக் கணிப்புஎழுபத்தைந்தாவது ஆண்டுஉடல் பருமன்டாக்டர் கு கணேசன்ஹரிஹரசுதன் தங்கவேலு கட்டுரைஸ்பைவேர் எனும் டிஜிட்டல் ஆயுதம்தனித்த உயிரினங்களா அரசு ஊழியர்கள்?இந்தியா வங்கதேசம்மதிப்பு உருவாக்கல் (Value Creation)இந்தியப் பெண்கள்தமிழ் மொழிகாதில் சீழ் வடிந்தால்?பள்ளிக்கூடங்களில் ஹிஜாப்பட்டியல்மைக்ரோ மேனஜ்மென்ட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!