வாழ்வியல், இரு உலகங்கள் 8 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு ஏன் சைதன்யா தீர்ந்துபோனார்?

அனுஷா நாராயண்
09 Oct 2021, 5:00 am
26

கொல்கத்தா இப்போது எனக்குப் போதாது என்று தோன்றுகிறது. திருமணமாகி தமிழ்நாட்டிலிருந்து வந்தபோது இந்த ஊர் எனக்கு அந்நியமாகத் தெரிந்தது. நாளடைவில் இந்த ஊரிடம் நான் மெல்ல அறிமுகப்படுத்திக்கொண்டேன். கொல்கத்தா என்னிடம் அதன் பெண்தன்மையை அறிமுகப்படுத்திக்கொண்டது. காளி என்பது அதன் வடிவம்தான். கொல்கத்தாவின் வடிவம். ஊர்தான் காளி. சுதந்திரமான, பரந்து விரிந்த, காதல் மிக்க காளி. இப்போது காளி எனக்கு முன் சுருங்கிவிட்டாள்.

கொல்கத்தாவே சின்னதாகிவிட்டதாகத் தெரிகிறது. வருஷம் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் ஹுக்ளி நதி சிற்றோடைபோலத் தெரிகிறது. கொல்கத்தாவும் பெண்தான்; நான் அவளைவிட வேகமாக வளர்கிறேன்போல இருக்கிறது. பெண் வளர்ந்துகொண்டே இருக்கிறாள். எல்லாவற்றையும்விட. அப்படித்தான் தோன்றுகிறது. அதனால் எல்லாம் சின்னதாகிவிடுகின்றன. சமந்தாவின் வலி மிகுந்த கடிதத்தைப் படித்தபோது, அதனால்தான் என் கணவரிடம் சொன்னேன், “சமந்தா வளர ஆரம்பித்துவிட்டாள்.” துரதிருஷ்டவசமாக, ஒரு பெண் வளரும்போது முதலில் ஆண்களே சிறுத்துப்போகிறார்கள். 

சமந்தா - நாக சைதன்யா மணமுறிவு என்னை மிகவும் பாதித்தது. நடிகர்கள், பிரபலங்கள் என்பது காரணம் இல்லை. இந்த மணமுறிவு வெகுவாகப் பேசப்பட்டது. சமந்தா வசைப்பாடப்பட்டார். இங்கே வங்காளிகளுக்கு அவரைப் பற்றி என்ன தெரியும்! அவர்கள்கூட பேசினார்கள். பெண்கள் சுதந்திரமாக எடுக்கும் எந்த முடிவும் இந்த நாட்டில் அப்படிப் பேசப்படும்.

சமந்தாவின் ட்விட்டைத் திரும்ப வாசிக்கிறேன். “விவாகரத்து என்பதே தன்னளவிலேயே ஒரு வலிமிக்க நிகழ்வு. அதோடு சேர்த்து, ‘நான் கருக்கலைப்பு செய்துகொண்டேன், வேறு தொடர்புகளில் இருந்தேன், குழந்தையே வேண்டாம் என்றேன், சந்தர்ப்பவாதியாக இருந்தேன்’ என்றெல்லாம் வதந்திகளைப் பரப்புவது இரக்கமற்றது. என்றாலும், இந்த வார்த்தைகளெல்லாம் என்னை துவண்டுவிடச்செய்ய நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்!”

எல்லா ஆண்களும் நாக சைதன்யா ஆகிவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களால் இதைத் தாங்க முடியவில்லை. இது என்றால், பிரிவை அல்ல; சமந்தாவின் முடிவை. ஏனென்றால், ஆண்களுக்கு ஒன்று தெரியும், பெண்கள் இறுதி முடிவு எடுக்காதவரை மணவுறவுக்கு ஆபத்தே இல்லை. அப்படியென்றால், அவர்கள் நல்லதாக ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம், ‘ஏன் சமந்தாவுக்கு நாக சைதன்யா தீர்ந்துபோனார்?’

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

 

ரு ஆணிற்கும் பெண்ணிற்குமான - குறிப்பாக கணவன் மனைவி - உறவு எப்போது தீர்ந்துபோகிறது? அந்த உறவில் ஒரு பெண் என்ன எதிர்பார்க்கிறாள்? அதுவும் ஏழாண்டு காலம் காதலில் இருந்து பின் திருமணத்திற்குள் நுழைகிற ஒரு இணைக்கு நான்கே ஆண்டுகளில் அது ஏன் வறண்டுபோகிறது! எனில் அவளது தேர்வு தவறானதா?

எனக்குத் தெரியவில்லை. வாழ்நாள் முழுமைக்கும் ஒரு பெண்ணுக்கு முழுமை அளிக்கும் ‘தி பர்ஃபெக்ட் மேன்’ ஒருவனை அவளால் தேர்வுசெய்ய முடியுமா? அப்படி ஒருவன் இருக்கிறானா? அப்படி ஒருவன் தேவைதானா? 

இந்தியாவில் வாழ்விணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லாப் பெண்களுக்கும் இல்லை. அந்த விஷயத்தில் சமந்தா கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. ஆனாலும், தன் வாழ்நாளுக்குமான ஓர் இணையைத் தேர்ந்தெடுப்பது எந்தப் பெண்ணுக்குமே அவ்வளவு எளிது இல்லை.

என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் லேகாவிற்குப் பதினெட்டு வயதில் திருமணம் முடித்திருக்கிறார்கள். அவளிடம் கேட்டால், ‘இதுவே தாமதம், என் அக்காவுக்குப் பதினாறில் முடித்தார்கள்’ என்கிறாள். கணவன் தூரத்துச் சொந்தம். சின்ன வயதிலிருந்தே ஆண்கள் சகவாசம் இல்லாமல் வளர்ந்தவள். ‘ஆணுக்கும், பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் என்று புரிவதற்குள்ளேயே பத்து வருஷம் ஓடிவிட்டதக்கா’ என்பாள்.

சரி, என்னுடைய திருமணம் எப்படி நிகழ்ந்தது? நான் படித்திருந்தேன். வேலையிலுமிருந்தேன். இருபத்தைந்து வயதாகியிருந்தது. அதன் பிறகுதான் திருமணம் நிச்சயமானது. லேகாபோல ஆண்வாசம் தெரியாமல் வளர்ந்தவள் இல்லை நான். நண்பர்கள் இருந்தார்கள். வெவ்வேறு காலங்களில் சிலரோடு நேசம் இருந்தது. இப்போதும்கூட அது காதல் என்று சொல்லும் அளவுக்கு அன்று பக்குவப்படாமலேயே நான் அன்றைக்கு இருந்தேன். காதல் என்னும் பெயரில் ஓர் ஆணை அனுமதிக்கிற தைரியமே எனக்கு வாழ்வில் இல்லாமல் இருந்தது. ‘உனக்காக, உன் படிப்பிற்காக எங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்திருந்தோம்’ என்னும் பாவனையை எப்போதும் சூடிக்கொண்டு நடமாடுகிற பெற்றோருக்கு நான் திருப்பிச் செலுத்தும் பரிசாக என் வாழ்க்கைத் துணையைத்  தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு அளிப்பதில்தான் இருந்தது. இப்போது யோசித்துப்பார்த்தால், என்னிடமிருந்து அவர்கள் பரிசாக அதைப் பறித்துக்கொண்டார்கள் என்பது புரிகிறது.

ஒருவேளை, தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கே அளிக்கப்பட்டிருந்தால், இயல்பாக எனக்கே கிடைத்திருந்தால், நான் அந்த ‘மிகப் பொருத்தமான துணை’யைக் கண்டடைந்திருப்பேனா? அப்படி யாரையேனும் நான் சந்திந்திருக்கிறேனா?

Ω 

வீட்டைச் சுற்றிலும் விளைந்து கிடக்கும் காலிஃப்ளவர் செடிகளுக்கு எப்போதாவது மருந்தடிக்க வரும் பிரபா என் வாழ்வில் நுழைந்த முதல் ஆண். ‘மிகப் பொறுப்பானவன் - பண்பானவன்’ என அம்மா - அப்பா அடிக்கடி பேசிக்கொண்டபோது, அவரைப் போல ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அந்த பதினேழு வயதில் தோன்றியது. அவர் வருகின்ற தினங்களிலெல்லாம் மனம் கிளர்ந்தது நினைவுக்குவருகிறது. எப்போது பிரபா உள்ளே வந்தார், எப்போது வெளியே போனார்? பேசுவோம்.

கல்லூரியில் படிக்கும்போது, நடனம் என்னை ஆட்கொண்டிருந்தது. போட்டிகளுக்குச் செல்வது அப்போதைய சந்தோஷங்களில் ஒன்றாக இருந்தது. எல்லாவற்றிலும் தோல்விதான். மனம் சோர்ந்து கிடக்கும். ‘ஜஸ்ட் கிவ் யுவர் பெஸ்ட், அண்டு லீவ் த ரெஸ்ட்’ என்று சொன்னார் என்னுடைய பேராசிரியர் ஒருவர். அவர் எனக்கானவர் என்ற எண்ணம் சீக்கிரமே சூழ்ந்துகொண்டபோது எனக்கு வயது பத்தொன்பது. அதன் பிறகு போட்டிகளில் ஜெயிக்க ஆரம்பித்தேன்.  பரிசுடன் கல்லூரிக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும் அவர் எந்த வகுப்பில் இருந்தாலும் வெளியே காத்திருந்து நின்று, அவர் கையில் கோப்பையை ஒப்படைத்து வாங்க ஏங்கி நின்றிருக்கிறேன். அவர் நினைவுடனேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது. எப்படி பேராசிரியர் உள்ளே வந்தார், எப்படி வெளியே போனார்? பேசுவோம்.

திருமணத்துக்குள் இப்படி உள்ளே வந்து சென்ற ஒவ்வொரு ஆணைப் பற்றியும், திருமணத்துக்குப் பின்னரும் வந்து செல்லும் ஆண்களைப் பற்றியும் பேசுவோம். அப்படி என்றால், நான் என்னவாக இருக்கிறேன் என்ற கற்பனைக்குள் பறக்காதீர்கள். நான் எல்லாப் பெண்களையும்போலவே இருக்கிறேன். அவர்களில் ஒருத்தியாகவே பேசுகிறேன். உங்களுக்கு ஒரு செய்தியை இங்கே சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். நான் பேசப்போவது, பெண்களைப் பற்றி இல்லை, ஆண்களைப் பற்றி. பெண்களின் உலகத்தில் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி!

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

ன்னுடைய இருபதாவது வயதில் ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலை வாசித்தேன். எனது கனவு ஆண் என முழுமையாக ஒரு சித்திரத்தை எப்போதேனும் வரைந்து பார்த்திருக்கிறேனா என இப்போதும்கூட உறுதியாகத் தெரியவில்லை.  ஆனால், அப்போது எனது கனவுப் பெண் கல்யாணியாகத்தான் இருந்தாள். 

அந்த நாவலில் வரும் கல்யாணியும் ரங்காவும் ரசனையின் அடிப்படையில் ஏற்பட்ட ஈர்ப்பிலும் மரியாதையிலும்தான் மணம் முடிக்கிறார்கள். ஆனால், கல்யாணியின் ஆக்கிரமிப்பற்ற அன்பு, அவளது காதல் மீதே ரங்காவை சந்தேகம் கொள்ளச் செய்கிறது. ‘டூ யூ லவ் மீ?’ என்று அவன் அவளிடம் கேட்கிறான்.

தனது தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற ஒரு பெண்ணின் காதல் எதிர்கொள்ள நேர்கிற கேள்விகளையும் சூழல்களையும் கல்யாணி எதிர்கொண்ட விதம் என்னிடம் பெரிய யோசனைகளை உண்டுபண்ணியிருந்தது. என் அறைத் தோழியிடம் சொன்னேன், “கல்யாணம் என்பதே ஒரு தேவையற்ற பந்தம். உடலுறவுக்காக ஏற்றுக்கொள்கிற வாழ்நாள் சுமையாகவே அது இருக்கும் என்று தோன்றுகிறது.” 

பாலுறவோ, பாலியல் நாட்டமோ, பாலியல் தேர்வோ அவ்வளவு சாதாரணமான விஷயங்கள் இல்லை என்பதையும் அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை என்றாலும், இப்போதும் அன்றைய எண்ணத்தில் பெரிய மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நாவலின் இறுதியில் கல்யாணிக்கு ஏற்படுகிற உடல் நலிவு, மீண்டும் இணைந்து வாழலாம் என அவர்கள் முடிவெடுக்கக் காரணமாய் அமைகிறது. அந்தக் காதலின் பொருட்டு நாடக நடிகையான அவளது காலை செயலிழக்கச்செய்ய வேண்டி வந்தது என முன்னுரையில் ஜெயகாந்தன் கூறுகிறார்.

இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இணைந்து வாழ விருப்பமில்லாமல், குடும்பத்தைவிட்டு வெளியேறுகிற நிமிஷாவின் கதையும் நினைவிற்கு வருகிறது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடிந்தவர்களால்கூட அந்தப் படத்தின் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது செயற்கையாய் இருப்பதாக என்னுடைய தோழிகளே பலரும் சொன்னார்கள்.

நான் என் கணவருடன் அந்தப் படத்தைப் பார்த்தேன். அவருக்கும் அதே கருத்துதான். “நீ என்ன நினைக்கிறே!” என்றார். “இதேபோல, குடும்பத்தைவிட்டு வெளியேறுகிற அந்த உடைதலும் விரக்தியும் எனக்கும்கூட ஏற்பட்டிருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை,  கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுக்குமே ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தத் தருணத்தை எப்படியோ கடந்துவிடுகிறோம். கழிவு நீரை தேநீர் டம்ளரில் பரிமாறுகிற அளவிற்கும் அதையே முகத்தில் வீசியடிக்கிற அளவிற்கும் நிமிஷாவிற்கு ஏற்படுகிற வெடிப்பில் எனக்கு எந்தச் செயற்கைத்தன்மையும் தெரியவில்லை.”

அவர் அதிர்ச்சியாக என்னைப் பார்த்தார். வெகுநேரம் அமைதியாக இருந்தார். மிகுந்த நல்ல மனிதர் அவர். இப்படி ஒரு கணவர் நல்ல மனிதராக இருப்பதற்கும், அப்படியும் அவர் மனைவிக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்கும்கூட தொடர்பு இல்லை என்று சொன்னால், உங்களுக்கு அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது உண்மை.

ஒரு பெண் மணம் முடிக்கும்போது ஓர் ஆணை மட்டுமல்ல, ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர்களின் வாழ்முறையையும் பழக்கவழக்கங்களையும் சேர்த்தே மணம் முடிக்கிறாள். பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவற்றோடு ஒத்திசைய வேண்டிய சூழலுக்குள் நுழைகிறாள். உயிர் வாழவே முடியாத அளவிற்கு மூச்சு முட்டும்போது அவள் அங்கிருந்து வெளியேற முனைகிறாள். எந்தப் பெண்ணுக்கு எந்த சொல் / சைகை / பழக்கம் அந்த மூச்சுமுட்டலை எந்த நொடியில் ஏற்படுத்தும் என்பதை அவளாலேயேகூட முன்கூட்டி அறிந்திருக்க முடிவதில்லை.

Ω 

தின் வயதுகளில் எனக்கு காதலில் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதை எண்ணுவதே சாகசமாக இருந்தது. எனக்கும் ‘ஒரு கனவு ஆண்’ வேண்டும் என்று இருந்தது. யார் யாரோ சேர்ந்து தூவும் வண்ணங்களால் இந்தக் கனவு ஆணை அவள் வரைகிறாள். பெற்றோர் உண்டாக்கும் மதிப்பீடுகள், தோழிகள் சொல்லும் கதைகள், நாவல்களும் சினிமாக்களும் உண்டாக்கும் கற்பனைகள் எல்லாமும் சேர்ந்தே இந்தக் கனவு ஆண் உருவாகிறான்.

இப்போது யோசித்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது! ஒரு பெண்ணின் கனவு ஆண்கூட இப்படி வெளியாட்களால்தான் இங்கே உருவாக்கப்பட வேண்டுமா? ஆமாம், அப்படித்தான் நடக்கிறது. அவளால் காதலிக்கப்பட்டவனாகவும்கூட இருக்கலாம்; அவளது தேர்வை அவளது உள்ளார்ந்த மதிப்பீடுகளால்தான் அவள் தேர்ந்தெடுத்தாள் என்று முழுமையாகச் சொல்லிவிட முடிவதில்லை. இப்படி உருவாகும் கனவு ஆணும் அவளுக்குக் கை சேராதபோது அவளுடைய உடல் உறுப்புகளில் ஒன்றை இழந்தவளாகவே அவள் வேதனைக்குள்ளாகிறாள்.

சமந்தா கதையிலும்கூட எனக்கு இதுதான் தோன்றியது. சமந்தாவின் தேர்வாகவே நாகசைதன்யா இருக்கலாம். அவளுடைய உண்மையான தேர்வுதானா அவன்? நாகசைதன்யாவுக்கும் இதே பிரச்சினைக்கு இருக்குமா? ஆண்களும் இப்படியான மனநிலைக்குள்தான் சிக்கி போராடி வெளியே வருகிறார்களா? தெரியவில்லை.

இந்தியாவில் மட்டுமல்லாது, உலகெங்கும் திருமணம் எனும் உறவு பெரும் அழுத்தத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த உறவு முக்கியம் என்றும் எல்லாச் சமூகங்களும் உணர்கின்றன. இல்லாவிட்டால், ஏன் தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட பிரிவு அவ்வளவு வலி தருகிறது என்று சமந்தா எழுதுகிறார்? உறவு பிழைக்க வேண்டும் எனில் அழுத்தம் குறைய வேண்டும். அதற்கு, உறவில் உண்டாகும் இரு தனிநபர்களின் பிரச்சினை இல்லை இது, இரண்டு உலகங்களுக்கு இடையிலான பிரச்சினை எனும் புரிதல் வேண்டுமோ என்று தோன்றுகிறது. இதுபற்றியெல்லாம் நாம் பேச வேண்டும். பேசினால்தானே தெரிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியும்? 

இனி இரு உலகங்களையும்  பேசுவோம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

9

5

1


1


பின்னூட்டம் (26)

Login / Create an account to add a comment / reply.

Sankar Ram   2 years ago

Very good article. I felt it is 200% true.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Venkat Gj   2 years ago

கட்டுரைக்கு விமர்சன கருத்துக்களை சொலல முடியவில்லை.. அனுஷா நாராயணன் கனவர் போல எல்லாரும் பெண்மையை புரிந்து கொண்டால் எந்த வலியும் ஏற்படாது என்று நினைக்கிறேன். அது போல அனுஷா அவர்கள் போல பெண்களும் ஆண்களிடம் உண்மையாக இருந்தால் ஆண்களுக்கும் எந்த வலியும் ஏற்படாது. மேலும் நான் சமந்தாவின் தீவிர ரசிகர்..

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

I didn't read oru nadigai nadagam parkiral. I didn't watch malayala movie

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

//பதின் வயதுகளில்...// I liked this para. நானும் அப்படி இருந்ததாக ஞாபகம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

//ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளும் போது கணவனை மட்டும் அல்ல, அவர்களது குடும்பத்தினர் அனைவரையும், அவர்களது பழக்க வழக்கம் அனைத்தையும் திருமணம் செய்து கொள்கிறாள். // Loved this paragraph &totally agreed

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Jagadesh   3 years ago

அருமையான கட்டுரை தோழி.. என் மனைவியிடம் கண்டிப்பாக பரிந்துரைபேன்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Prakash   3 years ago

கட்டுரை அருமையாக ஆண் , பெண் இரு பாலாருக்கும் நடுநிலைமையாக, நேர்த்தியாக நல்ல சொற்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஆனால் பலரும் குறிப்பிட்டுள்ளது போல் தலைப்பு மட்டும் ஒரு தலைப்பட்சமாக உள்ளதாக எண்ணுகிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

பத்மாவதி பத்மாவதி   3 years ago

அனுஷா நாராயணன் நிறைய கேள்விகளை எனக்குள்ளே எழச்செய்தார்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

கலியபெருமாள் வீராசாமி   3 years ago

நடிகர்களாக பார்காமல் இருக்க முடியவில்லை எந்த அளவுக்கு வாழ்க்கையை நேசிக்கிறோமோ அதே அளவுக்கு ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகலாம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Shan Kajendran   3 years ago

“சமந்தாவுக்கு ஏன் சைதன்யா தீர்ந்துபோனார்?” தலைப்பே மிக அபத்தமானது. சமந்தாவுக்கு சைதன்யா தீர்த்து போனாரா இல்லை சைதன்யாவுக்கு சமந்தா தீர்த்து போனாரா என்று தெரியாமலே நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இப்படி கட்டுரைகள் வருவது தமிழில் ஒரு அவலம்.

Reply 18 2

Login / Create an account to add a comment / reply.

Malathipackyaraj   3 years ago

எல்லா உறவுகளும் அது எந்த உறவாக இருந்தாலும் ஒரு நாள் தீர்ந்து தான் போகிறது. அனிச்சை செயலாக வாழ்க்கை நகர்ந்து போகிறது. அது நிற்கும்போது, அடுத்து என்ன? என்ற கேள்விற்கான பொறுத்தமான பதில் கிடைப்பவர்கள் நகர்ந்து செல்கின்றனர். பதில் கிடைக்காதவர்கள் தொடர்கின்றனர்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

பொன்.முத்துக்குமார்   3 years ago

// நாகசைதன்யாவுக்கும் இதே பிரச்சினைக்கு இருக்குமா? ஆண்களும் இப்படியான மனநிலைக்குள்தான் சிக்கி போராடி வெளியே வருகிறார்களா? // நிச்சயம் இருக்கும். தனது கனவுப்பெண் என்று நினைத்து ஆண் தேர்வு செய்யும் பெண்ணும் இப்படிப்பட்ட ’யார் யாரோ தூவும் வண்ணங்களால்’ உருவாக்கிக்கொள்ளும் உருவம்தான். அந்த பிம்ப பெண்ணுக்கும் நிஜ பெண்ணுக்குமான வேறுபாடுகள், உரசல்கள்-தான் பிரச்சினையக்கொண்டுவருகின்றன.

Reply 14 0

Login / Create an account to add a comment / reply.

Kumarkrishnan   3 years ago

ஆண்,பெண் உரிமை,உறவு பற்றி நமது சமூகத்துக்கு தெளிவு வேண்டுவது மிகவும் அவசியமும் அவசரமும் கூடத்தான். ஆயின் , சமந்தா,நாகா இருவரும் பிரபலமானவர்களாக இருப்பதால் மட்டும் , அவர்களின் உறவுகள்,ஊடல்கள் பற்றி நாம் அலசி ஆராய்வது கொஞ்சம் நளினமில்லாத செயல் என்று கருதுகிறேன். அவர்களில் யாராவது பொது வெளியில் ஆலோசனை கேட்காத பட்சத்தில் நாம் உள் நுழைய எந்த முகாந்திரமும் இல்லை. அவர்கள் இருவரையும் விலக்கி இந்த உறவுகளின் சிக்கல் பற்றி பேசுவது நல்லதுதான். காதலி/காதலன் மறுப்பதால் ,விலகுவதால் ஏற்படும் வருத்தங்கள், கோபங்கள்,வலிகளை எப்படிக் கையாள்வது என்பதை தெளிவு படுத்த மனிதாபிமானிகள்,உளவியலார்கள் ஆலோசனை இக்கால இளசுகளுக்கு அவசியம் தேவை. திருமணத்திற்கு முன்னோ,பின்னோ மனமாற்றம் ஏற்படக்கூடாது என்று எந்த சட்டமும் போட முடியாது. உடனடித் தேவை புரிதல்! சிந்திப்போம்.

Reply 11 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   3 years ago

புத்தம் புது உலகம் ! நித்தம் தரும் நிம்மதியா ? நிறைவுதரும் அமைதியா ? அமைதி தந்த அன்பா ? அன்பால் விளைந்த உறவா ? உறவால் வந்த உரிமையா ? உரிமை உணர்த்தும் கடமையா ? கடமையால் காலம் கடக்கிறதா ? உள்ளம் உருகுகிறதா ? உணர்வு உண்மையை உணர்த்துகிறதா ? தர்மம் தானம் நிலையா ? எல்லாம் கேள்வியா? எண்ணம் வேள்வியா? நல்ல களம் சனிதோரும் அணிவகுக்கட்டும் ஆசிரியருக்கும் கட்டுரையாளருக்கும் . நன்றி!!!! வண்ணநிலாக்களின் எண்ணங்களை வார்த்தெடுக்க!!!!! நீலனூர் கே கே தாஸ்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   3 years ago

இதுவரை கருத்துக்கள் எல்லாம் ஆண்களிடமிருந்து மட்டுமே வந்துள்ளது. யோசிக்க வேண்டிய விஷயம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

சிபு   3 years ago

நல்ல கட்டுரை..கோர்வையாக எழுதியவிதம் அருமை. ஆனால் ஆழமாக எடுத்துச்செல்வதாக நினைத்து, சம்பவங்களையும் விதிவிலக்குகளையும் வைத்துக்கொண்டு அணுகப்பட்ட ஒரு மேலோட்டப் பார்வையே இந்தக் கட்டுரை. ஆண் பெண் பற்றி அவர்களிடம் பேசாமல், அவர்களின் உறவுகளில் சிக்கலை மாய்ந்து மாய்ந்து பேசுவது நுண்ணறிவல்ல. ஆண், பெண் இனத்தின் படைப்பியல்புகளை மனிதர்கள் அறிந்திடாத வரையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்தாலும், குழந்தைப் பெற்ற அடுத்த வருடமே விவாகரத்தில் தான் போய் முடியும். இவர்கள் எம்மாத்திரம். சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் படைப்பியல்புகளை அறிந்தவர்களா என்றால் இல்லை.. ஆனால் தாங்கள் படைப்பியல்புகளை உணர்ந்து எதிர்பாலினத்தை கையால்கிறோம் என்று உணராதவர்கள். இந்தக் கட்டுரையில் ஆண் பெண்களின் படைப்பியல்புகளை பற்றி ஒரு வரி கூட பேசியதாக தெரியவில்லை. எல்லாமும் சம்பவங்களையும், ஆதங்கங்களையும் முன் வைத்து எழுப்பட்ட கேள்வியாகவே இருக்கிறது.. இங்கு சம்பவங்கள் என்பதே படைப்புவிதி எது என்று அறியாமல் நிகழும்போது, அதை முன் மாதிரியாகக் கொண்டு பிணையப்படும் எல்லாமும் சரியான தீர்வு என்றோ, இல்லை சரியான அலசல் நோக்கு என்று நினைத்தல் கூடாது. பெண் எப்போதுமே ஆணைவிட வலிமை மிக்க படைப்பு. காரணம் பெண் இனத்துக்கு குற்ற உணர்ச்சி வராது. தந்திரத்தில் ஒரு சராசரி பெண் சராசரி ஆணைவிட 10 மடங்கு சிறந்தவள். பெண் இனம் குற்ற உணர்ச்சிக்கு அகப்படாத வகையில் தான் இயற்கை வடிவமைத்திருக்கிறது. அப்படியே வந்தாலும், அதை தனக்குள்ளேயேப்காய் நகர்த்தி நியாயப்படுத்திக்கொண்டு, சர்வ சாதரணமாய் கடந்து விடுவார்கள். ஆனால் வெளியில் அப்படி காட்டிக்கொள்ள மாட்டார்கள்.. ஆண் இனம் தான் செய்யாதவற்றைக்கும் சேர்த்து குற்ற உணர்ச்சி அடைந்துகொள்ளும். இது மனித படைப்புவிதி அல்லது படைப்பியல்பு. இது நாடு, வீடு வளர்ப்பு விதம், பழக்கம் என்பதற்கேற்ப வெளிப்படும் விதம் மட்டுமே மாறுபடும். பெண் இனம் தனக்கு துணையாக ஒரு ஆணை தேர்ந்தெடுப்பது இந்தக்கட்டுரையில் கூறுவது போல கடினமில்லை. பாதுகாப்புணர்வு, ஆளுமைத்திறன், பொருளாதாரம், உடல்திறன் இவை நான்கும் தன் துணையிடம் நிரம்பியிருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஆளுமைத்திறன் என்பது ஆதிக்கம் அல்ல.. ஒரு செயலில் பிரச்சனைகளை கையாளும் விதத்தில் எப்படி ஆளுமை செலுத்துகிறார்கள் என்பது தான் அது.. இங்கு பெண் விலங்கினங்களுக்கும் இதே படைப்பியல்புதான். அதில் மற்ற ஆண்விலங்குகளை விட முன்னிலையில் இருக்கும் ஆண் விலங்கையே பெண் விலங்கு தேர்ந்தெடுக்கும்.. மனிதஇனம் சற்று வித்தியாசமாய் அதில் ஏதேனும் ஒன்று அதீதமாய் குறையும்பட்சத்தில், அது மற்றவைகளை வைத்து சரி செய்துவிடலாம் என்று நினைக்கும்.. அது வேலைக்காகாது என்னும்பட்சத்தில், மற்றொன்றை தேர்ந்தெடுக்கும்.. உதாரணமாக, உடல்திறன் மிகக்குறைந்த ஆண் பொருளாதாரத்தில் மிக உயரிய நிலையில் இருந்தால், அந்த பெண், அவன் உடற்திறனை நோக்கி கேள்வி எழுப்ப மாட்டாள். பொருளாதாரம் மிககுறைவான நிலையில் உள்ள ஆண், அந்த பெண்ணுக்கு முழுமையான பாதுகாப்பு உணர்வை வழங்கினால், அவனின் பொருளாதார நிலைய பொருட்படுத்த மாட்டாள். இவைகள் படைப்பு விதி. விதி என்றால் விதிவிலக்கு உட்பட என்று பொருள். இங்கு விடிய விடிய இரு இனங்களும் பேசிக்கொண்டாலும், அது அவரவர்களின் பழக்கயியல்பைப் பற்றி மட்டுமே இருக்கிறது. ஏனென்றால், படைப்பு இயல்பைப் பற்றி மனிதர்களுக்கு தெரியவில்லை. அதை உணர்ந்த ஆண் பேசுவதில்லை. தெரிந்த பெண் ஏற்றுக்கொள்வதில்லை.. இதுவும் படைப்பியல்புகளில் ஒன்றுதான். ஒவ்வொரு உயிருக்கும் படைப்புப்பண்புகள் உண்டு, அதில் ஆண் உயிரிகளுக்கு தனிப்பண்புகளும், பெண் உயிரிகளுக்குத் தனிப்பண்புகளும் உண்டு. வெட்டுக்கிளி, அணில், கழுதைப்புலி, குரங்கு சிங்கம், யானை போன்ற யாவும் அதில் அடக்கம். அப்படிதான் உயிரிகளின் உச்சமான மனிதர்களுக்கும். ஆண் பெண்ணுக்கு தனித்தனி படைப்புப்பண்புகள் உண்டு.. அதை அறியாத வரையில், ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் கையாளத்தெரியாத வெவ்வேறு வகையான புதிர்கள் என்றே தோன்றும். இயற்கையின் படைப்பு விதியில் பெண் உயிரினத்துக்குத்தான் தேர்ந்தெடுக்கும் உரிமை. விதிவிலக்குகளை தூக்கிக்கொண்டு வர வேண்டாம். அப்படியும் பார்த்தால், ஒரு பெண் அனுமதித்தால் மட்டுமே, உறவில் சேரவோ, விடுபடவோ முடியும். விடுபடுவது கூட பெண் படைப்புப்பண்புகளில் ஒன்றுதான். ஆண் இனம் பெண் இனத்துக்கு ஒரு பயன்பாட்டுப்பொருள் மட்டுமே, பெண் இனத்துக்கான அன்பு, அரவணைப்பு, பாதுகாப்புணர்வு, ஆளுமைத்திறன் எல்லாமும் இதில் அடக்கம். இவை அறியாத ஆண் இனம், தன்னை உள்ளும் புறமும் மெறுகேற்றிக்கொள்ளாமல் தான் நினைத்த போதெல்லாம் பெண்ணை தன்வயப்படுத்த முடியாது என்ற படைப்பியல்பை உள்வாங்காமல், அதை இயலாமையாக நினைத்துக்கொண்டு, பெண் இனத்தின் மேல் தன் ஆதிக்கத்தை வன்முறையாக பாய்ச்சுகிறது. ஆனால் பெண் இனம் அதவிடவும் வன்முறையை நிகழ்த்தும் என்பது வேறுகதை. இப்படி மனிதர்களிடம் மனிதர்கள் பற்றி பேசாமல், அவர்கள் சார்ந்தவைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் இதே நிலையே தொடரும். பிரச்சனைகள் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, அதற்கு காரணமாக விளங்கும் மனித படைப்பியல்புகளைப் பற்றி பேசுங்கள்.. அதுவே தீர்வை நோக்கி நகர்த்தும். இல்லையேல் பிரச்சனையைப் பிரச்சனையாகவே அணுகி, அதிலிருந்து விடபடுவதை மட்டும் பேசிவிட்டு அதை முடித்துக்கொள்ள நேரும். "எது ஒன்றை மனிதர்கள் அறியவில்லையோ, அதுவே அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்." ஆண் இனத்தை அறிந்துகொள்ளாத பெண் இனமும், பெண் இனத்தை அறிந்துகொள்ளாத ஆண் இனமும் எப்போதும் மன அழுத்தத்திலே காலம் கழிக்கும்.. அது திருமணமோ, நட்போ, வேறு உறவுகளோ எல்லாமும் அடக்கம். மனிதர்களின் மீதான மனிதர்களின் நிலைபாடுகளைப் பேசாமல், மனிதர்கள் எத்தகையானவர்கள் என்பதை மனிதர்களிடம் பேசுவதே எல்லாவற்றுக்கும் தீர்வு. அதைவிடுத்து ஒன்றின் மேல் ஆதங்கப்பட்டு, பரிதாபத்தின் பேரில் மறைமுகமாகப் புனிதப்படுத்தும்போது, அங்கே நேரடியாக புனிதமுடைத்தலும் நடைபெறும் இது இயற்கையின் விதி. ஆண் பெண் படைப்பியல்புகளை பற்றி, விரிவாக எழுதினால் சில 200 பக்கங்களைத் தாண்டும். ஆனால் தங்களைப் பற்றி முழுமையாக ஏற்றுக்கொள்கிற பக்குவம் மனித இனத்துக்கு பரவலாக்கப்படவில்லை என்பதே உண்மை. காலம் அதற்கு வகை செய்யட்டும்.. உண்மையை மழுப்பல் இல்லாமல் அணுகும்போது அது கடினமாகவே இருக்கும்.. -அனுஷா நாராயண் மற்றும் ஆசிரியர் சமஸ் அவர்களுக்கு நன்றி.

Reply 66 2

சசிகுமார் சாமிக்கண்   3 years ago

உண்மையிலே அனுஷா அவர்களின் கட்டுரையை விட இந்த விமர்சன உரை எதார்த்தமாக இருக்கின்றது. ஒரு பெண்ணியவாதியாக அவர் அப்படி அணுகி இருக்க கூடும்... வரும் வாரங்களில் பார்ப்போம்.

Reply 11 0

Login / Create an account to add a comment / reply.

Ramachandran   3 years ago

மறை நூல்கள் ஆண் பெண் கடமைகளை கூறியிருப்பதாகவே நம்புகிறேன். அதை மீறிய அனைத்து இசங்களுமே(ism) வெற்று பிதற்றலாகவே தொடரும் ஐம்பூதங்களும் உள்ள வரை.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

M.Sp.Rajasekaran   3 years ago

தங்கள் கட்டுரையை படிக்கும்போது கமலாதாஸ் அவர்கள் எழுதிய " என்கதை " புத்தகம் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் உரையாடல் ...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கிழவன்    3 years ago

வரும் வாரங்களில் இரு உலகங்களோட நிறுத்திவிடாமல், பிரபஞ்சத்தையும் பற்றியும் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்பான் இந்த கிழவன்...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

R.Subramanian    3 years ago

ஆண்களுக்கும் நீங்கள் சொன்ன எல்லாக் குழப்பங்களும் உண்டுதான். ஆண் பெண் உறவு மட்டுமல்ல, பொதுவாக மனித உறவுகளான நட்பு, சகோதரத்துவம் எல்லாவற்றிலும் இந்தப் பிரச்சினை உண்டு. என்ன அந்த உறவுகளை நாம் நினைத்த விதத்தில் தள்ளி வைக்கவோ முறித்துக் கொள்ளவோ முடிகின்றது. திருமண பந்தத்தில் அது எளிதன்று. விவாகரத்து கூட குழந்தைகள் இல்லாத பட்சத்தில் ஓரளவு சாத்தியம். இங்கு உறவு என்பது இயல்பாகவும் சுதந்திரமாகவும் பகிரக்கூடிய ஒன்றாக இல்லை. ஒருவரையொருவர் உடைமையாக்கிக் கொள்வதையே இங்கு உறவாகப் புரிந்துகொள்ளப் படுகின்றது. அதுதான் சிக்கல்.

Reply 10 1

Login / Create an account to add a comment / reply.

panneerselvam Marimuthu   3 years ago

அருமையான துவக்கம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Suresh kumar   3 years ago

அருமையான துவக்கம். ஆண் பெண் உறவு குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் இன்றைய உலகின் தேவை.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

அற்புதமான மொழியில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. மணத்தேர்வும் மணமுறிவும் ஆண்களைவிடப் பெண்களை அதிகம் குழப்புவதைப் பார்க்கிறேன். அதற்கு முக்கியமான பங்கு சமூகக் கட்டமைப்புதான். சமந்தா-சைதன்யா நடிகர்கள் என்பதால் எல்லோராலும் பொதுவெளியில் பேசப்படுகிறது; மற்றவர்களுக்கு சொந்தங்களும் சுற்றத்தாரும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Naveenkumar M   3 years ago

Excellent content and flow. Looking forward to it.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Harish karuppan    3 years ago

relationship pathi oru 25 vayathu இளைஞனை சிந்திக்க வைத்த பதிவிற்கு நன்றி....... 👌🏿👌🏿

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

தென்னாப்பிரிக்க நாவல்காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?ராஜஸ்தான் முன்னேறுகிறதுஇறக்குமதி சுமைஅசோகா: போர்ட்ரைட் ஆஃப் ஏ ஃபிலாஸபர் கிங்நவீன் குமார் ஜிண்டால்லிமிடட் எடிசன்அமெரிக்கை நாராயணன்வேண்டும் வேலைவாய்ப்புவர்ண தர்ம சிந்தனைலீவேலைவாய்ப்புகள்கோம்பை அன்வர் அருஞ்சொல் காலநிலை மாற்றம்‘வலிமையான தலைவர்’ எனும் கட்டுக்கதை இந்திய நலன்களுகவிமான நிலையம்மொழிப் போர் தியாகங்களை மறக்க முடியுமா?வெறுப்பு மண்டிய நீதியின் முகம்இந்திய ஆட்சிப் பணியாளர்களின் மேட்டிமை மனநிலை!காதல் எனும் சாறு பிழிந்துபெட்ரோல் டீசல் விலை உயர்வுகொடிக்கால் ஷேக் அப்துல்லாஓலைச்சுவடிகள்சிறைவிரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டிஅடுத்த தலைமுறைச் சீர்திருத்தம்அதீத முதலீடுகள்திருவையாறுதொழிற்சாலைகள்கல்வித் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!