அரசியல், ஆசிரியரிடமிருந்து..., ஊடக அரசியல் 1 நிமிட வாசிப்பு
ஊடக ஆசிரியர்கள், அதிபர்களுக்கு சுயமரியாதை வேண்டும்
வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகர்களைக் குரங்குகளோடு ஒப்பிட்டு பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது. எவர் ஒருவர் சக மனிதரை அவமதிப்பதன் மூலமாகவும் அடிப்படையில் தன்னையே அவமானப்படுத்திக்கொள்கிறார். அவரவர் வெறுப்பு, அவரவர் இழிவின் வெளிப்பாடாகவே இத்தகைய நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டும்.
சமீப ஆண்டுகளாகவே ஊடகர்கள் மீதான இத்தகு தாக்குதல்கள் தமிழகத்தில் தொடர் நிகழ்வாகிவருகிறது. இப்படி மோசமாகப் பேசும் முதல் அரசியலர் அண்ணாமலை இல்லை. இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பல அரசியலர்களையும் உதாரணம் காட்ட முடியும்.
இப்படியான அசிங்கங்களை வெறுமனே விமர்சனங்கள் அல்லது கண்டங்கள் வழியாக மட்டும் எதிர்கொள்ள முடியாது. பொத்தாம்பொதுவாக “ஊடகர்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று குத்து நியாயம் பேசிவிட்டும் கடக்க முடியாது.
ஒரு செய்தியாளர் இன்றைக்கு யாரைச் சந்திக்க வேண்டும், பேட்டி காண வேண்டும் என்பதெல்லாம் அவருடைய பணியுரிமை எல்லைக்குள் வருவது இல்லை; அது ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் பணியின் ஒரு பகுதி. அப்படியென்றால், இதற்கான பொறுப்பை ஊடக ஆசிரியர்களும், நிறுவன அதிபர்களுமே ஏற்க வேண்டும்.
திருச்சியில் நான் 'தினமணி'யில் பணியாற்றிய காலத்தில் எங்களுடைய புகைப்படக்காரர் ஓர் அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னொரு நிறுவனப் புகைப்படக்காரர் அதைப் படம் எடுத்திருந்தார்.
அப்போது 'தினமணி' திருச்சிப் பதிப்பின் செய்தியாசிரியராக இருந்த எம்.பாண்டியராஜன் அந்தப் படத்தைப் பெற்று, மறுநாள் ‘தினமணி’யின் போஸ்டரிலும், முதல் பக்கத்திலும் அந்தப் படத்தை வெளியிட்டார். சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மன்னிப்பு வரும் வரை எந்தச் செய்தியும் வராது என்பதையும் வெளிப்படையாக அறிவித்தார். அடுத்த நாளே வழிக்கு வந்தார்கள்.
ஒரு பதிப்பின் செய்தியாசிரியராலேயே அப்படி துணிச்சலாகச் செயல்பட முடியும் என்ற நிலையும் இதே தமிழக ஊடகத் துறையில் சில ஆண்டுகளுக்கு முன்புகூட இருந்தது.
நான் செய்தியாளராக இருந்த காலத்தில் யாரேனும் ஒருவரிடம் ஒரு தலைவர் சின்ன அளவில் முகத்தைக் காட்டினால்கூட அத்தனை பேரும் வெளியே நடந்திடுவோம். தன்னளவிலான துணிச்சலின் வெளிப்பாடு மட்டும் இல்லை இது; நிறுவனம் தரும் தார்மிகப் பலமும் சேர்ந்தது.
என் கேள்வி இதுதான்: நீங்கள்தான் செய்தியாளர்களைப் பணிக்கு அனுப்புகிறீர்கள். அவர் எதிர்கொள்ளும் அவமானம் தனிப்பட்டது இல்லை. அது நீங்கள் அனுப்பிய பணியின் பொருட்டு அவருக்கு நேர்வது. இந்த அவமானத்தில் உங்களுக்குப் பங்கு இல்லையா? ஓர் எளிய வெளிநடப்பு, சில நாள் செய்திப் புறக்கணிப்பு, நாலு வரி கண்டனப் பதிவு இத்தகு அசிங்கங்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். அதைக்கூட செய்ய முடியாத அளவுக்கு உங்களுக்கு என்ன நிர்ப்பந்தம்?
இப்படி செய்தியாளர்களை நோக்கி உமிழப்படும் எச்சில் உங்கள் முகத்தையும், உங்கள் நிறுவனத்தின் முகத்தையும், உங்களுடைய மொத்தத் துறையின் முகத்தையும் நோக்கியே உமிழப்படுகிறது. ஊருக்கு எல்லாவற்றையும் உபதேசிக்கும் நீங்கள் முதலில் சுயமரியாதையைக் கற்றுக்கொள்ளுங்கள்!

5

1





பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.