கட்டுரை, அரசியல் 9 நிமிட வாசிப்பு

கடுமையான தலைவரை யார் விரும்புவார்கள்?

ப.சிதம்பரம்
07 Mar 2022, 5:00 am
1

நிலைமை கடுமையானால், கடுமையான தலைவர்கள் அதிலிருந்து மீள வழி காண்பார்கள்  என்றொரு பேச்சு வழக்கு அமெரிக்காவில் உண்டு. கடுமையான, உறுதியான, விட்டுக்கொடுக்காத, சமரசத்துக்கே இடம் தராத தலைவர் என்றெல்லாம் அடைமொழி சேர்த்துச் சொல்கிறார்களே அந்த ‘கடுமையான’ என்பதற்கு என்ன பொருள் என்று பல முறை நான் வியப்பதுண்டு. வெவ்வேறு சூழ்நிலைகளில் இந்த வார்த்தைக்கு வெவ்வேறு பொருள்கள் பொருத்தமாக இருக்கும். கடுமையான என்றால் உறுதியான மனம் உள்ளவர், கடுமையான சூழ்நிலைகளிலும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் ஆற்றல் உள்ளவர், விளையாட்டுகளில் அணியின் பிற ஆட்டக்காரர்கள் திறமையைக் காட்டத் தவறும்போதும் உறுதி குலையாமல் விளையாடி அணியை மீட்பவர், எத்தனை பேர் எத்தனை விதமாக எதிர்த்தாலும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வராதவர் என்று இந்தக் கடுமையான என்பதற்குப் பல விளக்கங்களைச் சொல்லலாம். கடுமையான என்றால் முரட்டுத்தனமான, போக்கிரியான, வன்முறையைக் கையாளத் தயங்காத என்ற பொருள்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

சுதந்திரச் சிந்தனையாளர்கள் கடுமையானவர்களாக மாறினர்

வழக்கமாக, ஜனநாயகபூர்வமாக உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் - நீண்ட காலம் அந்தப் பதவியிலிருந்த பிறகு - பதவியை விட்டு விலக மனமில்லாமல் ‘கடுமையான’ தலைவராக மாறிவிடுவது உண்டு. நான் பிறப்பதற்கு முன்னால் அப்படி இருந்த தலைவர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர். நான் வளர்ந்தபோது, நம்முடைய பிரதமர் நேருவின் சமகாலத்தவர்களும் நெருங்கிய நண்பர்களுமாக சர்வதேச அரங்கில் விளங்கிய கானா நாட்டின் அரசியல் சிந்தனையாளரும் புரட்சியாளருமான குவாமி என்க்ருமா, யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் புரட்சியாளருமான ஜோசப் பிராஸ் டிட்டோ, எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ ஆகியோர் அவரவர் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள். தேர்தலில் மக்களுடைய அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள். இறுதியில் ‘கடுமையான’ தலைவர்களாக மாறி, தத்தமது நாடுகளில் ஜனநாயகத்தைப் புதைத்துவிட்டு, தங்களுடைய ஆட்சி முறையையே பாரம்பரியமாக விட்டுச் சென்றவர்கள்.

பஞ்சசீலக் கொள்கையை வகுத்து அதில் கையெழுத்திட்ட ஐந்து உலகத் தலைவர்களில்  நேரு மட்டுமே விதிவிலக்காக இறுதி வரை பூரண ஜனநாயகராகத் திகழ்ந்தார். அவர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் - 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கும் நடந்த பொதுத்தேர்தல் முழுக்க முழுக்க ஜனநாயக நெறிகளின் அடிப்படையிலேயே நடந்தன.

தேர்தலில் நேரு நிகழ்த்திய பரப்புரைகள் ஒவ்வொன்றும், ஜனநாயகத்தை விளக்கும் பாட உரைகள். அவருடைய உரையைக் கேட்கத் திரண்ட பாமரர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர் பேசிய ஆங்கிலம் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே புரியாவிட்டாலும் - ஜனநாயகம், மதச்சார்பின்மை குறித்தும், தேசத்தின் கட்டுமானப் பணிகள் எவ்வளவு சவாலானவை என்பதைப் பற்றியும், வறுமையை ஒழிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், மக்களுடைய நலனில் அரசின் பங்கு என்ன என்பது குறித்தும் விளக்குகிறார் என்று தெளிவாகப் புரிந்துகொண்டனர். அனைவராலும் விரும்பப்பட்டவர் நேரு, அவர் எப்போதுமே ‘கடுமையான’ தலைவராக மாறியதில்லை.

இப்போதைய உலகில் முழுக்க முழுக்க ‘கடுமையான’ தலைவர்கள்தான் நிரம்பியுள்ளனர். சுதந்திரமாகவும் நேர்மையாகவும் பொதுத் தேர்தல்கள் நடந்தால் அவர்களில் ஒருவர்கூட பதவிக்கு வர முடியாது. அப்படிப்பட்ட ‘கடுமையான’ தலைவர்களில் மிகவும் பேசப்படுகிறவர்கள் பிரேசில் அதிபர் ஜைர் பல்சோனாரோ, துருக்கியின் அதிபர் ரெசிப் எர்டோகன், எகிப்து அதிபர் அப்துல் அல்-சிசி, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான், பெலாரஸ் அதிபர் அலெக்சாந்தர் லுகஷென்கோ, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், இன்னும் இப்படி அவரவர் நாடுகளைத் தவிர பிற நாடுகளில் அதிகம் அறியப்படாதவர்கள் டஜன் கணக்கில் இருக்கின்றனர். இவர்களில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் தனி ரகம்.

அவரைப் போலத்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும். இருவரும் ‘கடுமையான’ தலைவர்கள், தங்களுடைய வாழ்நாள் முழுவதும் தாங்களே ஆள வேண்டும் என்றே திட்டமிடுபவர்கள். நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே, ‘கடுமையான’ தலைவரான புடின் ராக்கெட்டுகளையும் குண்டுகளையும் ராணுவரீதியாக உதவிக்கு வர யாருமில்லாத உக்ரைன் மீது மழையாகப் பொழிந்துகொண்டிருக்கிறார். உலகில் இப்போது 52 நாடுகளை, ‘சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகள்’ என்று வகைப்படுத்திவிடலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கடுமையை விரும்பும் மோடி

உத்தர பிரதேச சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‘கடுமையான’ தலைவரையே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பாஹ்ரைச் நகரில் பேசுகையில், “உலகில் கொந்தளிப்பு நிலவும்போது, இந்தியா வலிமை பெற வேண்டும், மிகவும் சோதனையான கட்டங்களில் நாட்டை வழிநடத்திச் செல்ல கடுமையான தலைவர் தேவை” என்று வலியுறுத்தியிருக்கிறார் (தி எகனாமிக் டைம்ஸ், பிப்ரவரி 23, 2022). உத்தர பிரதேசத்தில் வறியவர்கள் 70%-க்கும் மேல் உள்ள மூன்று மாவட்டங்கள் என்று ‘நிதி ஆயோக்’ அடையாளம் கண்டுள்ளவற்றில் இந்த பாஹ்ரைச்சும் ஒன்றும் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

உத்தர பிரதேசத்தின் பாஜக தலைவரான யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - ஏனென்றால் அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காதவர் என்று வெளிப்படையாகவே கூறுகிறார் பிரதமர் மோடி. சோதனையான இந்தக் காலகட்டத்தில் ‘கடுமையான’ தலைவர்தான் தேவை என்கிறார். சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட எப்படிப்பட்ட நடவடிக்கைகளையும் எடுக்கலாம், தனக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது என்று நம்புகிறார் ஆதித்யநாத். குற்றவாளிகள் என்று காவல் துறை அடையாளம் காண்போரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ‘என்கவுன்டருக்கு’ இப்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என்று கருதப்படுவோரை வழக்குப் பதிந்து, கைதுசெய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணைக்குப் பிறகு தண்டிக்கும் நடைமுறை அவசியமே இல்லை – ஆங்காங்கே அப்படியே சுட்டுக்கொன்றுவிட்டால் போதும் என்று அரசு கருதுகிறது. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் (13 ஜூலை 2021) செய்திப்படி, 2017 மார்ச் தொடங்கி 2021 ஜூன் வரையில் காவல் துறையினருடனான மோதல்களில் 139 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், 3,196 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆதித்யநாத்துக்கு மிகவும் பிடித்த வார்த்தை ‘புல்டோசர்’. சுல்தான்புரி மாவட்டத்தின் கர்கா பஜார் என்ற இடத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 27-ல் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத் புல்டோசரை சுட்டிக்காட்டி, “நாம் இந்த இயந்திரத்தை விரைவு நெடுஞ்சாலைகளை அமைக்க மட்டுமல்ல, குற்றவாளிகளையும் குற்றச் செயல்களில் குழுவாக ஈடுபடும் மாஃபியாக்களையும் ஒடுக்கவும் பயன்படுத்துகிறோம். இங்கே வரும்போது நான்கு புல்டோசர்களைப் பார்த்தேன். இங்கே ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தொகுதிக்கு அனுப்புவோம், பிறகு எல்லாம் சரியாகிவிடும்” (இந்தியா டுடே) என்று பேசியிருக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் சமூ கவிரோதிகள் என்று கருதப்படுவோரின் வீடுகளையும் கட்டிடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கவும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்தவித ஆவணங்களுமின்றி குடிசைகள் அமைத்து காலங்காலமாக வாழும் அப்பாவிகளை வெளியேற்றவும் நீதிமன்ற ஆணைகளும் நடைமுறைகளும் அவசியமில்லை என்று மாநில அரசு கருதுகிறது.

ஆதித்யநாத் எந்த அளவுக்குக் கடுமையான தலைவர் என்றால், ஹத்ராஸ் என்ற இடத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணைப் பற்றி விசாரித்து செய்தி வெளியிட்ட கேரளத்தைச் சேர்ந்த சித்திக் கப்பன் என்ற பத்திரிகையாளர் 2020 அக்டோபர் 5 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ‘தி வயர்’ இதழின் செய்தியின்படி, ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற நாள் முதல் இதுவரையில் மொத்தமாக 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 48 பேர்  அடித்து – உதைக்கப்பட்டனர், 66 பேர் வெவ்வேறு சட்டப் பிரிவிகளின் கீழ் வழக்கு போடப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 20% ஆக இருந்தும் 403 தொகுதிகளில் ஒன்றில்கூட பாஜக  சார்பில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அளவுக்கு ஆதித்யநாத் ‘கடுமையானவர்’.

‘கடுமையான’ இந்தத் தலைவரின் ஆட்சியில்தான் உத்தர பிரதேசத்து ஏழைகள் மேலும் ஏழைகளாகிவிட்டனர். வறியவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் மேலும் 40% கூடியிருக்கிறது. மாநிலத்தின் கடன் சுமை மிகப் பிரம்மாண்டமாக ரூ.6,62,891 கோடியளவுக்கு அதிகரித்திருக்கிறது.

கனிவும் ஆழ்ந்த அறிவும்

‘கனிவான’ தலைவர்கள்தான் சிறந்தவர்கள் என்று கருதுகிறேன். அவர்கள் அறிவு வளம் மிக்கவர்கள், மென்மையாக – அமெரிக்கையாகப் பேசுவார்கள், மக்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்பார்கள், தேசிய நிறுவனங்கள் அனைத்துக்கும் உரிய மரியாதை அளிப்பார்கள், சட்டத்தை மதிப்பார்கள், நாட்டின் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவார்கள், மக்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்தப் பாடுபடுவார்கள், அதிகாரப் பதவிகளை - அடக்கமாகவே விட்டுச் செல்வார்கள். அடுத்தவர்கள் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ வழிசெய்வார்கள். அவர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள், தரமான கல்வியையும், சுகாதார வசதிகளையும் மக்களுக்குச் செய்து தருவார்கள்.

கனிவான தலைவர்கள் போர்களுக்கு எதிரானவர்கள், பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுப்பதில் உறுதியாகச் செயல்படுவார்கள். உலகில் அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்தார்கள் – இப்போதும் இருக்கிறார்கள். எவருடனும் ஒப்பிடவே முடியாத தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களில் ஒருவர். மேலும் உதாரணங்கள் வேண்டுமென்றால் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல், நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆடெர்ன், நெதர்லாந்தின் மார்க் ரூட் இன்னும் சிலர்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு எப்படிப்பட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எனக்குத் தெரியாது. இந்த மாநிலங்கள் எதிலாவது எனக்கு வாக்குரிமை இருந்தால் நான் ‘கனிவான’ – ‘அறிவாளியான’ தலைவருக்கே வாக்களிப்பேன்.

 

 

 

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1

3

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

அடிமைகளுக்குதான் தலைவர்கள் தேவை. மற்றவர்களுக்கு நண்பர்கள் போதும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தில்லி கலவர வழக்குகள்வாரிசுரிமை வரிபிரதமர் பதவிமாரி செல்வராஜ்மேலும் ஜனநாயகப்படட்டும் புத்தகக்காட்சிகள்வரதட்சணை ஒரு செய்திவார இதழ்இன்டியாதடுப்பாற்றல்சாதிப் பாகுபாடுகள்பாஜக கூட்டணிமாணவி உயிரிழப்புமூலம் நோய்க்கு முடிவு கட்டலாம்!இரும்புச் சிலைசவுரவ் கங்குலிபுதியன விரும்புஅன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்நிதியமைச்சர்பிளாக்செயின்சந்திர கிருஷ்ணா கட்டுரைபணவீக்க விகிதம்சமூக ஒற்றுமைஅமில வீச்சுஈரானியப் பெண்கள்சுகாதாரம்கொள்முதல்கறுப்புப் பணம்அமைதிமோடியின் உத்தரவாதம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!