டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்குத் தோழர்கள் திருமாவளவன், ரவிக்குமார் இருவருடனும் செல்ல நேர்ந்தது ஓர் அரிதான வாய்ப்பு.
அப்போதுதான் அந்த மையத்துக்கு முதல் முறையாக வந்திருந்தார் தோழர் திருமாவளவன். கிட்டத்தட்ட குலதெய்வ கோயிலுக்குள் நுழைந்த மனநிலையில் அவரைக் கண்டேன். அம்பேத்கரைப் பற்றி எடுக்கப்பட்ட காணொளி, அங்கிருந்த படங்கள், அவரைப் பற்றிய குறிப்புகள் என்று ஒவ்வொன்றையும் ஒரு குழந்தையின் அல்லது மாணவரின் பரவசத்துடன் பார்த்தவர் அம்பேத்கர் உருவச் சிலை முன்பு நெக்குருகி நின்றார். நான் அந்தக் கணத்தைப் புகைப்படம் எடுத்தேன்.
அம்பேத்கர் சிலையைப் பார்த்தபடி இரு கைகளையும் கூப்பி, "எப்பேர்ப்பட்ட பின்னணியிலிருந்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறார், எவ்வளவு மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறார்!" என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப திருமா உச்சரித்துக்கொண்டே இருந்தார். இந்தச் சொற்களைக் கவனியுங்கள். அவை கடந்த காலத்தில் இல்லை.
திருமாவின் வாழ்க்கையைப் பற்றி அவர் பேசக் கேட்கும்போதெல்லாம் அல்லது அவரைப் பற்றி யாரிடமேனும் பேசும்போதெல்லாம் இதே சொற்களை நான் கூறுவது உண்டு. திருமா நம் காலத்தின் பெரும் தலைவர்களில் ஒருவர். இந்திய அளவில் அம்பேத்கருக்கு அடுத்து, சித்தாந்தரீதியாக அம்பேத்கரியத்தில் பெரும் தாவல் திருமாவின் சிந்தனைகள் என்ற மதிப்பீடு எனக்கு உண்டு. அவ்வளவு பெரிய ஆளுமை அன்று ஒரு குழந்தையைப் போல அம்பேத்கர் முன் நிற்பதைக் கண்டேன்.
பெரும் தலைவர்களின் நினைவில்லம் செல்கையில், அவர்கள் உருவச் சிலை முன் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே என்னிடமும் உண்டு. என்னைப் பொருத்த அளவில் கோயில்களின் சாமி கும்பிடுவதன் நீட்சி அது. திருமா இறைநம்பிக்கையாளர் கிடையாது. சடங்குகளைப் புறந்தள்ளுபவரும்கூட. தன்னுடைய இன்றைய வாழ்க்கைக்குப் பின் ஒரு தலைவரின் வாழ்வும் தியாகமும் எவ்வளவு முக்கியமான ஆதாரம் என்பதை வெளிப்படையாக உணர்த்தும் ஆழமான நன்றியுணர்வின் வெளிப்பாடாகவே அதை நான் உணர்ந்தேன்.
நாடெங்கிலும் பல்வேறு தலைவர்களின் நினைவிடங்களுக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலான நினைவிடங்கள் பெரும்பான்மை மக்களுக்கு வெறும் காட்சியகங்கள், பொழுதுபோக்கிடங்கள். அம்பேத்கர் நினைவிடங்களில் மட்டுமே எவ்வளவு பெரிய / எளிய பின்னணியிலிருந்து வருவோரும் உணர்ச்சிப் பெருக்கோடு அவர் சிலை முன் நிற்பதையும், கண்ணீர் உகுப்பதையும், குழந்தைகளைத் தூக்கி அவர் சிலையைத் தொட்டு கும்பிடச் சொல்வதையும் காண்கிறேன். அம்பேத்கரியர்கள் பலருடைய வீடுகளில் சாமி படத்துக்கு இணையான மரியாதையுடன் அம்பேத்கர் படம் இடம்பெறுவதையும் இதோடு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
நம் தலைவர்களில் அம்பேத்கருக்கு மட்டுமே லட்சக்கணக்கான மக்களிடம் இத்தகு மரியாதை வாய்த்திருக்கிறது. திரும்பக் கூறுகிறேன், காந்திக்கு இல்லை; பெரியாருக்கு இல்லை; அண்ணாவுக்கு இல்லை; ஏனைய எவருக்கும் இல்லை; விதிவிலக்குகள் தனிக் கதை; அம்பேத்கருக்கு மட்டுமே மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு குலச்சாமிக்கான இடம் இவ்வளவு பரிபூரணமாகக் கிடைத்திருக்கிறது; ஆழமான நன்றியுணர்வின் நெருக்கமான வெளிப்பாடு.
அம்பேத்கரியர்களிடமும், தலித்துகளிடமும் ஏனைய இயக்கத்தினரும் சமூகங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய மகத்தான பண்புகளில் ஒன்று இந்த நன்றியுணர்வு என்று கருதுகிறேன். ‘என்னுடைய இன்றைய வாழ்வின் மேன்மைக்கு நானும், என்னுடைய குடும்பமும் மட்டுமே காரணம் இல்லை; எத்தனையோ தலைவர்களின் ஒப்பற்ற தியாகங்கள் இருக்கின்றன’ என்ற புரிதலும் இத்தகு வெளிப்பாடும் ஆழமான அரசியலுக்கான அடிப்படைப் பாடமும்கூட என்று நினைக்கிறேன்!
4
8
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
prabagaran P 2 years ago
ஆசிரியர் அண்ணன் சமஸ் அவர்களின் எழுத்து எப்பொழுதும் போல இப்போழுதும் மிக அருமை ஆனால் எனக்கு சில கேள்விகள் உண்டு அவற்றை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன். 1. முதலில் இந்திய அளவில் வெகுஜன மக்களால் அம்பேத்கரை விட கடவுளுக்கு நிகராக கருதக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை என்று சொல்வதற்கான புள்ளி விவரம் ஏதாவது உண்டா? 2. இங்கு பெரும்பாளான அம்பேத்கரிய தலித்திய அமைப்புகள் (திருமா போன்ற ஒருசில தலைவர்களை தவிர்த்து. மீண்டும் சொல்கிறேன் தலைவர்களை தவிர்த்து தொண்டர்கள் கூட அல்ல) அம்பேத்கரை ஏனைய கடவுள்களை போன்ற மனநிலையில் வழிபடுகிறார்களே தவிர அவர் எதற்காக சிந்தித்தார் எப்படி சிந்தித்தார் எதை சிந்தித்தார் அதற்காக அவரின் வழியில் நாம் நம்மளவில் என்ன செய்கிறோம் என்று சிந்திப்பதே இல்லை என தோன்றுகிறது அதைபற்றி உங்கள் கருத்து. 3. இத்தகைய கண்மூடித்தனமான வழிபாட்டு மனநிலை அவரின் தத்துவத்தையும் சிந்தனையையும் மழுங்கடித்து விட்டது என தோன்றுகிறது. அதனால் தான் அவர் பின்பற்றிய தத்துவத்திற்கு நேர் எதிராக உள்ள மத, சாதிய வாதிகளால் அவரை தங்கள் பக்கம் உள்ளவராக (மக்களின் கண்மூடித்தனமான வழிபாட்டு மனநிலையை பயண்படுத்தி) காட்டிக்கொள்ள முடிகிறது என நினைக்கிறேன் அதற்கான உங்கள் கருத்து.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Duraiswamy.P 2 years ago
காந்தியை தெய்வமாக வழிபடுபவர்கள் இல்லை என்ற பொருளில் ஆசிரியர் சமஸ் கருத்து தெரிவித்தது தவறு என்று எண்ணுகிறேன். காந்தி தான் அம்பேத்கர் உட்பட மற்ற யாரையும் விட பல மடங்கு அதிக மக்களால் தெய்வமாகவும் வழிகாட்டியாகவும் கொள்ளப்படுகிறார் என்பதை சமஸ் அவர்கள் உணராது இருப்பது விந்தையானது. காந்தியை வழிபடுபவர்கள் ஆர்ப்பாட்டத்துடன் இருப்பதில்லை என்பதால் சமஸ் அவர்கள் உணரவில்லை போலும்.
Reply 4 2
Login / Create an account to add a comment / reply.