வாசகர்களோடு ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘ஆசிரியரிடமிருந்து’ பகுதி வெளியிடப்படுகிறது. கூட்டங்கள், சமூகவலைதளங்கள் வழி ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் குறிப்பிடத்தக்க செய்திகள் இங்கே இடம்பெறும்.
பிரிட்டன் போயிருந்த சமயம். நண்பர் ஒருவர் வீட்டில் அதைப் பார்த்தேன். ‘கிங்ஸ் அண்டு க்வின்ஸ்’ என்று ஒரு சின்ன புத்தகம். பிரிட்டனின் ஆயிரம் வருஷ ஆட்சியாளர்கள் வரலாற்றையும் பங்களிப்பையும் அந்த நூல் பட்டியலிட்டது. பிரிட்டிஷ் மியூசியம் சென்றிருந்தபோது அதை வாங்கி வந்தேன்.
பிரமாதமான நடை. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரால் சில மணி நேரங்களுக்குள் அந்நாட்டின் வரலாற்றுப் பின்புலத்தைத் தெரிந்துகொண்டுவிட முடியும்.
தமிழ்நாட்டில் வரலாற்றுத் துறை சார்ந்து இயங்கும் / கூடுதல் ஆர்வத்தோடு வரலாற்றை வாசித்துத் தெரிந்துகொண்டிருக்கும் வெகு சிலரைத் தவிர்த்து வேறு எவருக்கும் நம்முடைய ஆட்சியாளர்களுடைய வரலாறு தெரியாது. எவ்வளவு படித்தவர்களாயினும் சரி; குறைந்தபட்சம் எந்தெந்தப் பகுதியில் யார் ஆண்டார்கள், கால வரிசைப்படி எப்படி ஆண்டார்கள் என்ற விவரம்கூட தெரியாது.
இத்தனைக்கும் 2,500 வருஷ செழுமை மிக்க வரலாற்றின் புதல்வர்கள் நாம்.
நம்முடைய வரலாற்றையும் வரலாற்று நாயகர்களையும் பள்ளி மாணவர்களுக்கும் வாசிக்கும்படி, படு சுவாரஸ்யமாக, அதேசமயம் ஆழமான பார்வையோடு பொதுமக்களுக்கான புத்தகங்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது இப்படித்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘தி இந்து’விலிருந்து வெளியேறி ‘அருஞ்சொல்’ தொடங்கியபோது அடுத்த 10 ஆண்டுகளுக்கான பதிப்புத் திட்டத்தில் தலையாயதாக இதையே கொண்டிருந்தேன்.
முன்னதாக, நவீன வரலாற்றை இப்படிச் சுருக்கமாகத் தரும் வகையில் வெளியான ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரு நூல்களும் இந்த வகையில் தமிழில் வெற்றிகரமான முன்னோடியாக ஆகிவிட்டிருந்தன. வாசகர்கள் இந்நூல்களைக் கொண்டாடினர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழில் அதிகம் விற்ற நூல்கள் இவை. இரண்டும் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்து, ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் விற்பனையில் முன்னணி வகிக்கின்றன.
அடுத்தது இப்படி ஒன்று எப்போது வரும் என்று கேட்டவர்களுக்கான பதிலைத்தான் கடந்த ஓராண்டாக உருவாக்கிக்கொண்டிருந்தோம். வரலாற்றில் தமிழ்நாட்டின் முதல் பெரும் பேரரசை நிறுவியவர்களும், இன்று நம்மிடம் இருக்கும்படியான தமிழ்நாட்டை மொழியாலும், நிலத்தாலும், நீராலும் ஒருங்கிணைத்தவர்களுமான சோழர்கள் வரலாற்றைச் சொல்லும் ‘சோழர்கள் இன்று...’ நூல்தான் அந்தப் பதில்.
உண்மையில், சோழர்களை மையப்படுத்தினாலும், ஒட்டுமொத்த அரச மரபினரையும், முழுத் தமிழ்நாட்டின் வரலாற்றையும் அறிமுகப்படுத்துவதாகவே இந்நூலைக் கொண்டுவந்திருக்கிறோம். வெறும் ஒரு நாளுக்குள் புத்தகத்தைப் படித்துவிட முடியும்; ஆனால், அப்படிப் படிக்கும் ஒருவருக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும் எனும் வகையிலான நூல். அடுத்த வாரம் அச்சிலிருந்து வருகிறது.
நிறையப் பகிர்ந்துகொள்ள இருக்கிறது. கொண்டாட்டமாக இருக்க வேண்டிய நாட்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருங்கிக் கிடப்பது துயரம். ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொள்கிறேன். இந்தப் பதிவில் நூலின் பெயரும், அறிவிப்பும்; அடுத்தடுத்த பதிவுகளில் எல்லாமும்!
இனி நம் வரலாற்றை நாவல்களிலும் சினிமாவிலும் நாம் தேட வேண்டாம், நமக்கான வரலாற்றை நாமே உருவாக்குவோம்!
-சமஸ், ஃபேஸ்புக் குறிப்பு 07.05.2023
1
7
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Kumaragurubaran Mannan 2 years ago
பெரும் முயற்சி ! விரைவில் நலம் பெற வாழ்த்துகள்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Rajarajacholan 2 years ago
சிறப்பு... சோழர் வரலாற்றை அண்ணன் சமஸ் அவர்களின் எழுத்துநடையில். படிக்கக் காத்திருக்கும் கோடி கணக்கான வாசர்களில் நானும் ஒருவன். காத்திருத்தல் சுகம்... மகா.இராஜராஜசோழன். சீர்காழி.
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
Thambi Thaya 2 years ago
நல் முயற்சி, வாழ்த்துக்கள்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.