தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

திரிபுரா அரசின் அராஜக ஆட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

ஆசிரியர்
16 Nov 2021, 5:00 am
0

திரிபுராவில் ஊடகர்கள் சம்ரிதி சகுணியா, சுவர்ண ஜா இருவரும் கைதுசெய்யப்பட்டிருப்பதானது, கடுமையான கண்டனத்துக்கு உரியது. மோசமான தன்னுடைய அத்துமீறல் போக்கிலிருந்து, பாஜகவின் பிப்லப் குமார் தேவ் அரசு விடுபடப்போவதில்லை   என்பதையே இது காட்டுகிறது.

திரிபுராவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து அரங்கேறிவருகின்றன. துர்கா பூஜை நாட்களில் வங்கதேசத்தில், தங்களுடைய புனித நூலை அவமதித்துவிட்டதாக அந்நாட்டு முஸ்லிம்களில் ஒரு பிரிவினர், அங்கு வாழும் இந்துக்களுக்கு எதிராக வன்செயல்களை அரங்கேற்றினர். இந்த வன்முறைக்கு எதிராக வங்கதேச அரசு உரிய வகையில் செயலாற்றியது. சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதனூடாகவே திரிபுராவில் வெறுப்பரசியலுக்கான வேலைகள் தொடங்கிவிடப்பட்டிருந்தன.

வங்கதேசத்தை ஒட்டியுள்ள மாநிலம் திரிபுரா என்பதோடு, மாநிலத்தின் 70% மக்கள்தொகையை வகிக்கும் வங்காளிகளில், பெரும்பான்மையினர் வங்கதேசத்திலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் திரிபுராவை வந்தடைந்தவர்கள். இவர்களில் பெரும் தொகையினர் இந்துக்கள். மாநிலத்தின் மொத்த எண்ணிக்கையிலும் ஆகப் பெரும்பான்மையினர் இவர்களே. மாநிலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சற்றேறத்தாழ 10% மட்டுமே. பெருமளவில் 'பழங்குடிகள் எதிர் வங்காளிகள்' என்றுள்ள திரிபுரா அரசியலை 'இந்துக்கள் எதிர் முஸ்லிம்கள்' என்று திருப்பும் வேலைகள் ஏற்கெனவே நடந்துவருகின்றன.

இத்தகு சூழலில், வங்கதேச வன்முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரமாண்ட பேரணிகளை நடத்தின இந்துத்துவ  அமைப்புகள். இந்தப் பேரணியை ஒட்டி அங்கொன்றும், இங்கொன்றுமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பித்தன. கடைகளும், வீடுகளும் தாக்கப்பட்டன. மசூதிகளும் தாக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. திரிபுரா அரசு இதைக் கடுமையாக மறுக்கிறது.

இன்று திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக வரும் எந்தச் செய்தியையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் திரிபுரா அரசும், காவல் துறையும். இந்த வன்முறைகள் தொடர்பான செய்திகள் முடக்கப்படுகின்றன. மசூதிகள் தாக்கப்படுகின்றன, முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதை மறுக்கும் அரசு, இந்த வன்முறைச் செய்திகளை வெளிக்கொணர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் ஏவுகிறது.

வன்முறைகள் தொடர்பில் பொதுவெளியில் பேசியதற்காகவே இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட’த்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 68 ட்விட்டர் கணக்குகள், 32 பேஸ்புக் கணக்குகள், 2 யூ டியூப் கணக்குகள் குறிப்பிடப்பட்டு, உரியவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

டெல்லியிலிருந்து உண்மைச் சூழலை அறிந்துகொள்வதற்காகச் சென்ற வழக்கறிஞர்களைக் கொண்ட உண்மையறியும் குழுவும், திரிபுரா அரசின் நடவடிக்கைக்குத் தப்ப முடியவில்லை. அவர்கள் மீதும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டப்படி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜனநாயக அமைப்புகள் இதைக் கண்டித்தன.

இந்த எதிர்ப்புகள் எல்லாம் முடிக்குச் சமானம் என்பதைப் போலவே, இரு பெண் பத்திரிகையாளர்களை திரிபுரா காவல் துறை கைதுசெய்திருக்கிறது. சட்ட நடவடிக்கைக்குள்ளான இரு பெண் பத்திரிகையாளர்களும் இந்த வன்முறைகள் தொடர்பில் விசாரித்து எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள். கிரிமினல் சதி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டது, வெவ்வேறு பிரிவினருக்கிடையே பகைமையை வளர்க்கும் வகையில் செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூன்று பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதோடு இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பேசுவோரை அச்சுறுத்தும் வகையில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது திரிபுரா அரசு.

நாட்டில் ஒரு தரப்பு மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடப்பதாகவும், அவர்களுடைய இடங்கள் சூறையாடப்படுவதாகவும் தகவல் வெளியாகும்போது, உடனடியாக அரசுத் தரப்பு அங்கே நிற்க வேண்டும். வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றால், எப்படித் தொடர்ந்து இப்படித் தகவல்கள் வரும்; அரசு தன் மக்களில் எல்லாத் தரப்பினர் மீதும் அக்கறையோடுதான் இருக்கிறது என்றால், இதுகுறித்து உண்மையை அறிந்துகொள்ளச் செல்வோர் மீது ஏன் அரசு ஆத்திரப்பட வேண்டும்?

இப்படிப்பட்ட சூழல் நிலவும் ஒரு பிராந்தியத்தில் உண்மையை வெளிக்கொணரும் பொறுப்பு ஊடகங்களுக்கும், வெளியிலிருக்கும் ஜனநாயகர்களுக்கும் உண்டு. இந்திய அரசமைப்பும் உறுதிசெய்யும் உரிமை இது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை எப்படி சமூக விரோதிகள் என்று குற்றஞ்சாட்ட முடியும்? ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம்’ (யுஏபிஏ) உள்பட இத்தகு சட்ட நடவடிக்கைகளை உரிய முகாந்திரம் இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறது. சமீபத்திலும்கூட ஒரு வழக்கில் இதைத் தெளிவுபடுத்தியது.

அரசின் நடவடிக்கையை விமர்சித்தாலோ அரசின் கருத்துடன் உடன்பட மறுத்தாலோ அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட ஏதேனும் ஒரு கடும் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்து, அவர்களை அலைக்கழிப்பதும் அச்சுறுத்துவதும் இப்போதைய அரசுகளின் வழக்கமாகிவருகிறது. ஜனநாயகத்துக்குப் பெரும் கேடு இது. உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியது.

திரிபுரா போன்ற ஒரு மாநிலத்தில் அமைதியான சூழல் உருவாகவே ஒரு பெரும் காலகட்டம் தேவைப்பட்டிருக்கிறது. இனப் பிரிவினைவியமும், கலவரச் சூழலும் நிரம்பிய அங்கு ஆயுதப் படைகளின் கடும் போக்கு இல்லாமல், அமைதியான ஒரு சூழலைக் கொண்டுவந்தது மாணிக் சர்காருடைய சாதனை; அவர்  தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கட்சி அரசு அந்த மாநிலத்துக்குக் கொடுத்த மகத்தான பங்களிப்பு அது. பிப்லப் குமார் தேவ் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே மோசமான அரசியலாட்டம் ஆரம்பமானது. எதிர்க்கட்சிகளும், எதிர்க்குரல்களும் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றன. மோசமான முதல்வர்களில் ஒருவராகியிருக்கிறார் பிப்லப் குமார் தேவ்.

மக்களிடையே அச்சத்தையும் பகைமையையும்  வளரவிடுவதானது, வெறுப்புக்கும் பிளவுக்குமே வழிவகுக்கும். மிக ஆபத்தான போக்கு இது. தற்காலிக அரசியல் நலன்களுக்காக இது அனுமதிக்கப்படுவது மிக அபாயகரமான விளைவுகளைக் கொண்டுவரும். இத்தகு அநீதியான சட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் குறுக்கிட்டு தடுக்க வேண்டும். பிரதமர் மோடி தன்னுடைய முதல்வரை எச்சரிப்பதோடு, உரிய நடவடிக்கையை உத்தரவாதப்படுத்தவும் வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

எரிகிறது மணிப்பூர்; வேடிக்கை பார்க்கிறது அரசுமாரிதாஸ்வெள்ளப் பேரிடர் 2023வெறுப்பு அரசியல்ரத யாத்திரைதேசிய பால் துறைஉபநிடதம்முத்தலாக்சமஸ் வடலூர்அமர்த்யா சென் பேட்டிஅரசமைப்புச் சட்ட சீர்திருத்தக் குழுகணினிமயமாக்கல்காணொலிபாதகமா?கலைச்சொற்கள்புதிய நாடாளுமன்றத்தில் ஒளி எங்கே?E=mc2கல்வி மொழிதமிழக மன்னர்கள்ஜாதிய படிநிலைவைசியர்கூடாதாசமாஜ்வாதி கட்சிசீர்மைபிரம்ம முகூர்த்தம்வன்முறையற்ற இந்து‘மற்றும்’ ஏன் ‘And’ ஆகாது?உலகத் தலைவர்குடியுரிமைமீண்டும் கறுப்பு நாள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!