கட்டுரை, சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

மண்டையில் இருக்கும் போலீஸ்காரரைக் கீழே இறக்குவது எப்படி?

சமஸ் | Samas
22 Sep 2021, 5:00 am
0

ண்பர் ஷங்கர் நேற்று ஒரு போலீஸ்காரரைச் சந்தித்திருக்கிறார். அவர் ரகசியப் பிரிவில் பணியாற்றுகிறவர். பிரதமர் மோடி அறிவித்த ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாகப் பேச்சு போயிருக்கிறது.

ஷங்கர் சொல்லியிருக்கிறார், “நடவடிக்கை சரியாகக்கூட இருக்கலாம். கூடவே, உரிய முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால், மக்கள் இவ்வளவு அல்லல்பட வேண்டியதில்லை.” இப்படிச் சொல்லிவிட்டு, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துபோன கதையையும், நாட்டில் ஆகப் பெரும்பாலான மக்களுக்கு வேலை அளிக்கும் அமைப்புசாரா துறை முடங்கிக் கிடக்கும் கதையையும் பேசியிருக்கிறார் ஷங்கர்.

போலீஸ்காரர், “நாட்டுக்காக இவையெல்லாம் தாங்கிக்கொள்ளப்பட வேண்டிய கஷ்டங்கள்தான்” என்றிருக்கிறார். இப்படிச் சொன்னவர், ‘‘உங்களுக்குத் தெரியுமா? இந்த 15 நாட்களில், காவல் துறைக்கு ஒரு ஆள் கடத்தல் புகார்கூட வரவில்லை’’ என்றும் சொல்லியிருக்கிறார். பின்னர், ஷங்கர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து வள்ளலாரைப் பற்றிப் பேசியவர், தான் ஒரு சன்மார்க்கர் என்று சொல்லி, சன்மார்க்க நெறிகள் தொடர்பிலும் பேசியிருக்கிறார். இந்த முரணைப் பற்றி வெகுநேரம் ஷங்கர் பேசிக்கொண்டிருந்தார்.

 

ள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர். அவரைச் சரணடைய முற்படும் ஒரு மனம் எப்படி அரசின் முன்னேற்பாடின்மையால், கோடிக்கணக்கான மக்கள் வருமானம் முடங்கிக் கிடக்கும் துயரங்களையும் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் மரணங்களையும்கூடப் போகிறபோக்கில் நியாயப்படுத்துகிறது! ஒருபுறம், அமைப்புக்காக சமூகத்தைக் கண்காணிக்கும் ரகசிய போலீஸ்காரர்; மறுபுறம் ஒவ்வொரு உயிரிலும் தன்னைக் காணும் சன்மார்க்கர். இருவரில் எவர் உண்மையானவர்?

ஒரு அமைப்புக்குள் இருக்கும் நம் ஒவ்வொருவரின் மண்டைக்குள்ளுமே இப்படி அமைப்பின் தவறுகளை நியாயப்படுத்தும் ஒரு ரகசிய போலீஸ்காரர் எப்போதும் உட்கார்ந்திருக்கிறார். நெஞ்சில் இருக்கும் சன்மார்க்கரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள மண்டையிலிருக்கும் போலீஸ்காரருடன் சதா போராட வேண்டியிருக்கிறது.

இந்திரா காந்தி பிறந்த நூற்றாண்டு நாளன்று ஒரு விவாதம். தோழர் பாலசுப்பிரமணியம் “இன்றைக்கு நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டால், இந்தியா அதை எப்படி எதிர்கொள்ளும்?” என்று கேட்டார். “ஆச்சரியப்பட ஏதுமிருக்காது. பெரும்பான்மை இந்தியா அதை வரவேற்கும். ஏனென்றால், அன்றைக் காட்டிலும் நாட்டில் இன்று போலீஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது” என்றேன் நான்.

இன்னொரு நெருக்கடிநிலை ஏற்பட்டால் முன்பைக் காட்டிலும் அது மோசமாகக்கூட இருக்கலாம். ஐந்து காரணங்களைச் சொல்லலாம்.

1. இந்திரா கொண்டுவந்த நெருக்கடிநிலையைத் தேர்தல் அறிவிப்பின் மூலமாக இந்திரா தானே வலிய திரும்பப் பெற்றாரே ஒழிய, இந்நாட்டு மக்களின் ஏகோபித்த எதிர்ப்பின் காரணமாக அல்லது ஒரு புரட்சி காரணமாக நெருக்கடிநிலை திரும்பப் பெறப்படவில்லை.

2. நெருக்கடிநிலையை அறிவித்தாலும் இந்திரா தன் மன அளவில் மருண்டார். ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்ற பலருடனான அவருடைய சந்திப்புகள் இதை நமக்கு உணர்த்துகின்றன. உள்நாட்டு அரசியலைத் தன் காலடியில் வைக்க முடிந்தாலும், நேருவின் மகளாக சர்வதேசத்துக்கு முகங்கொடுக்கக் கூசினார்.

3. அன்றைக்கு எதிர்த்தரப்பில் பெருமளவிலான இடதுசாரிகள், தாராளர்களுடன், வலதுசாரிகளும் கைகோத்திருந்தனர். நெருக்கடிநிலையைக் கொண்டுவந்தாலும் இந்திராவின் அரசு கொள்கை அளவில் சோஷலிஸத்தை முன்னிறுத்திய அரசு.

4. எதிரணியில் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோர் ஆகட்டும், காங்கிரஸிலிருந்து பிரிந்திருந்த காமராஜர் போன்றோர் ஆகட்டும், நேர்மையாளர்கள்; தேசத்துக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள். எதிர்த் தரப்பினர் என்பதையும் தாண்டி, அவர்களுடைய ஆகிருதி தார்மிகரீதியாக இந்திராவின் அரசை உலுக்கியது.

5. தொழிற்சங்கச் செயல்பாடுகளும் மாணவர் இயக்கங்களும் அன்றைய இந்தியாவில் உயிரோட்டமாக இருந்தன. அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் களப் போராட்டங்களுக்கும் சிறைவாசத்துக்கும் அஞ்சாதவர்களாக இருந்தனர். கும்பல் மனோபாவத்திலிருந்து வேறுபட்ட, துடிப்புமிக்க ஊடகங்களும் கணிசமாக இருந்தன. தியாகத்துக்கும் லட்சியயியத்துக்கும் சமூகத்தில் மிச்ச உயிர் இருந்தது.

இன்றைய சூழல் என்ன?

இப்படியும் சொல்லலாம், மோடியும் பாஜகவும் இந்தக் காலகட்டத்தில் உருவாகி வரவில்லை; மாறாக, இன்றைய காலகட்டத்தில் மோடியும் பாஜகவும் உருவாகிவந்திருக்கிறார்கள்!

இயல்பாகவே இந்திய மக்களிடத்தில், எவ்வளவு அழுத்தப்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் எதிர்வினையாற்றத் தலைப்படாத பண்பு உண்டு. சார்ந்திருக்கும் அமைப்பு அழுத்தும்போது, அதற்கு எதிர்வினையாற்ற மட்டும் அல்ல; அது அழுத்துகிறது என்று உணர்வதையேகூடத் தவிர்க்க விரும்பும் மனம். இந்த எதிர்ப்புணர்வின் காரணமாகக் கைவசமிருக்கும் குறைந்தபட்சப் பிடிமானத்தையும் நிம்மதியையும்கூட அமைப்பு பறித்துவிடுமோ எனும் அச்சம். எதிர்ப்பு உருவாக்கும் சின்ன அசௌகரியத்தையும்கூட அது விரும்புவதில்லை.

மண்டையில் இந்த இடத்தில்தான் போலீஸ்காரர் சிம்மாசனத்தைப் போட்டு உட்கார்ந்துகொள்கிறார். அவர் அநீதிகளை நம்ப மறுக்க நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். மாறாக, உள்ளுணர்வு, மனசாட்சியின் உருவில் சன்மார்க்கர் உண்மையைக் கண் முன் கொண்டுவரும்போது, அமைப்பின் தவறுகளை போலீஸ்காரர் நியாயப்படுத்தச் சொல்லிக்கொடுக்கிறார். எதிர்ப்பவர்கள் அனைவரையும் எதிரிகளாகக் கட்டமைக்கிறார்.

லகமயமாக்கலுக்குப் பிந்தைய காலகட்டம் இந்த போலீஸ்காரரை மேலும் மேலும் போஷித்து வளர்க்கிறது. கல்விக்கூடங்களிலும் பணிக்கூடங்களிலும் இன்றைக்கு அமைப்பு தொடர்பில் விவாதிக்கவோ அரசியல் பேசவோ இடம் இல்லை. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் தவறிழைத்தால், அவருடைய தவறைச் சுட்டிக்காட்ட வாய்ப்பேதும் இல்லாதபோது, ஆசிரியரும் பள்ளிக்கூடமும் என்ன செய்தாலுமே நல்லதுதான் என்று பழக்கப்படுத்தப்படுகிறது குழந்தையின் மனம். பணியிடத்திலும் பொதுவெளியிலும் அதுவே தொடர்கிறது.

அமைப்பை விமர்சிப்பதால் ஏற்படும் சங்கடங்கள், ஆபத்துகள் இல்லை. இயலாமை தரும் மன உளைச்சல் இல்லை. மேலதிகமாக, அமைப்பின் மீது காட்டும் நிபந்தனையற்ற விசுவாசத்துக்கான பிரதிபலன் கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் விமர்சகர்களைக் காட்டிலும் விசுவாசிகளுக்கே பாதைகள் விரிந்திருக்கின்றன.

எல்லாவற்றையும் தாண்டி ஒரு கேள்வி இருக்கிறது, அடிப்படையில் பள்ளிக்கூடம் யார் நலனுக்கானது? குழந்தையை மௌனமாக்கிவிடுவதால், இந்தக் கேள்வியை மௌனமாக்கிவிட முடியாது. பள்ளிக்கூடமானது இனி பள்ளிக்கூடத்தின் நலனுக்கானது என்பது இன்றைய இந்தியாவின் தேசியம்.

எல்லாமே வெற்று முழக்கம். சாமியை விட்டுவிட்டு கோயிலைச் சுற்றும் சடங்கு. போலீஸ்காரருக்குச் சாமி முக்கியம் இல்லை. கோயிலும் சடங்குகளும் சடங்குகளின் ஒழுங்குகளுமே முக்கியம்.

சாமியைப் பார்க்க வேண்டும் என்றால், மண்டையிலிருக்கும் போலீஸைக் கீழே இறக்க வேண்டும். சன்மார்க்கர் அங்கு உட்கார வேண்டும். அநீதிக்கான எதிர்ப்பு மனிதநேயத்தின் மெய்யுறுதி. எளிதல்ல. அருளைப் பெற வேண்டின் இருப்பதை இழக்கும் துணிவு வேண்டும். சமரசமின்மை வேண்டும். வாடும் உயிரைக் காணும்போதெல்லாம் தானும் வாடும் கருணை வேண்டும்!

- நவம்பர், 2016, ‘தி இந்து’ தமிழ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மாதிரிப் பள்ளிகள் திட்டம்மதுரை விமான நிலையம்சங்கரய்யா: நிறைவுறாப் போராட்டம்பீட்டர் அல்ஃபோன்ஸ் பேட்டிடாக்டர் வெ.ஜீவானந்தம்பதின்பருவத்தினர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்னதிருக்குறள் மொழிபெயர்ப்புதேசியப் பொதுமுடக்கம்பாமணியாறுஎதிர்ப்புகௌதம் பாட்டியாநீதிபதி கே.சந்துருஅப்பாவின் சுளுக்கிஅஜ்மீர்கூடுதுறைதேசிய பள்ளிஅதீத வேலைமுஸ்லிம்களுக்கு கிடைக்குமா அரசியல் அங்கீகாரம்?சோமநாத்தனிநபர் வருவாய்காரிருள்தான் இனி எதிர்காலமா?காங்கிரஸ் தோல்விஅல் அக்ஸாமறுசீரமைப்புஅருஞ்சொல் ஜாட்விவாதம்பதற்றம்சிற்றரசர்கள்காட்சி ஊடகம்கேரளத் தலைவர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!