கட்டுரை, அரசியல், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தைக் கூட்ட வேண்டியதன் அவசியம்

ரவிக்குமார்
21 Jun 2022, 5:00 am
2

முக்கியத்துவம் மிக்க கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். சென்ற வாரத்தில் அவர் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதமானது, ‘அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (Inter State Council) கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. மாநில உரிமைகள் அதிக அளவில் பறிக்கப்படும் இன்றைய சூழலில் இந்தக் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அரசுகளுக்கிடை ஆணையத்தின் முக்கியத்துவம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 263 அரசுகளுக்கு இடையிலான ஆணையம் (Inter State Council) ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 40 ஆண்டுகள் கழித்துதான் அந்த ஆணையம் அமைக்கப்பட்டது.  ‘ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தவரை அதுகுறித்த விவாதங்கள் எதுவும் எழவில்லை. 1967ஆம் ஆண்டுக்கு முன்பு அதுபற்றிய பேச்சே எழுந்ததில்லை’ என்கிறார் இந்திய அரசமைப்புச் சட்ட ஆய்வறிஞர் கிரான்வில் ஆஸ்டின் (Working a Democratic Constitution 1999).

"நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் தனது அறிக்கையில் 2 ஆண்டுகளுக்கு பரிட்சார்த்த முறையில் அரசுகளுக்கிடையிலான ஆணையத்தை  அமைக்கலாம் எனப் பரிந்துரைத்தது. அதன் பின்னர் ஜனசங்கம், சுதந்திரா கட்சி, ப்ரஜா சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை 1968 முதல் 1972 வரை பல முறை அந்த கோரிக்கையை வலியுறுத்தின. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழுவின் அறிக்கைதான் அந்த கோரிக்கைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. அதன் பின்னர் பல்வேறு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் அது இடம்பெறத் தொடங்கியது" என கிரான்வில் ஆஸ்டின் குறிப்பிடுகிறார்.

மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் ந்த கவுன்சில் ஒரு நிலையான அமைப்பாக பிரதமரின் தலைமையில் 1990ஆம் ஆண்டு மே மாதம் நிறுவப்பட்டது. ஒன்றிய அரசின் அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் அதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மோடியும் ஆணையமும் 

இதில் 2006ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது அந்த ஆணையத்தின்  10ஆவது கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் வரை அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதற்குப் பிறகு 2016 ஜூலை 16ஆம் தேதி அவரது தலைமையில் அந்த ஆணையத்தின் 11ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கூட்டத்தில் துவக்கவுரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி “மத்திய, மாநிலத் தலைமைகள் ஒன்றாகக்கூடும் சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.  இந்த ஆணையம்  மக்களின் நலன்கள் குறித்து ஆலோசிக்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், கூட்டாகவும், உறுதியாகவும் முடிவுகளை எடுக்கவும் சரியான அமைப்பாகும். இது நமது அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்களின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார்.

நம் நாட்டைப் போன்ற பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஜனநாயகத்தில், வாக்குவாதம், கலந்துரையாடல் மற்றும் விவாதம் ஆகியவை அடிப்படை யதார்த்தத்துடன் தொடர்புடைய கொள்கையை உருவாக்க உதவுகின்றன.  மிக முக்கியமாக, அவை அத்தகைய கொள்கைகளைத் திறம்படச் செயல்படுத்த உதவுகின்றன” என 2000இல்  நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் பேசியதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, “அரசுகளுக்கிடையிலான ஆணையம் என்பது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான மன்றமாகும், இதைக் கொள்கையை உருவாக்குவதற்கும் அதைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும். எனவே, நமது ஜனநாயகம், நமது சமூகம், நமது அரசியலை வலுப்படுத்த இந்த மன்றத்தை ஒரு பயனுள்ள கருவியாகப் பயன்படுத்துமாறு மாநிலங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“அரசுகளுக்கிடையிலான கவுன்சில் நிச்சயமாக ஒன்றிய – மாநில உறவுகளையும் மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளையும் வலுப்படுத்துவதற்கான மிக முக்கியமான தளமாகும். கடந்த 2006இல் நடந்த கூட்டத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி உள்ளது, ஆனால், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முயற்சியால், இந்த நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஓராண்டில், ஐந்து மண்டல கவுன்சில் கூட்டங்களை அவர் கூட்டியுள்ளார்” என்று அந்த உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “ஒன்றிய, மாநில அரசுகள் தோளோடு தோள் சேர்ந்து நடந்தால்தான் நாடு முன்னேற முடியும்.  எந்தவொரு அரசாங்கமும் தன்னிச்சையாக ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது கடினம்” என்றார். 

அதேபோல், “சொர்க்கத்திற்கான பாதை போன்றதுதான் இந்தியாவில் சமூக சீர்திருத்தத்துக்கான பாதை- அது பல தடைகளால் நிறைந்திருக்கிறது. இந்தியாவில் சமூக சீர்திருத்தத்திற்கு நண்பர்கள் சிலர்தான். ஆனால், விமர்சகர்களோ பலர் உள்ளனர்” என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி “பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய வார்த்தைகள் இன்றும் பொருந்துகின்றன. எனவே, விமர்சனங்களைத் தவிர்த்து, பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் சமூக சீர்திருத்தத் திட்டங்களை மேம்படுத்துவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் விவாதத்துக்காக நான்கு விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை,

  1. ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள்  
  2. மானியங்கள் முதலானவற்றைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஆதாரைப் பயன்படுத்துதல் 
  3. கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்   
  4. உள்நாட்டுப் பாதுகாப்பை அதிகரித்தல் 

மாநிலங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்த பின்னர் கூட்டத்தின் இறுதியில் நிறைவுரை ஆற்றிய பிரதமர், பூஞ்சி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து மாநில முதல்வர்கள் கூறிய கருத்துகளைக் கவனத்தில் கொள்வதாகவும், இது ஒரு நல்ல தொடக்கம் என்றும், இதுகுறித்து ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. கூட்டத்தைத் திரும்பக் கூட்டவும் இல்லை.

இந்த ஆணையத்தின் அவசியம் என்ன? 

நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஒன்றிய அரசு நிறைவேற்றிவரும் பல சட்டங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளன. அந்தச் சட்ட மசோதாக்களைப் போதுமான அளவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை.

“இந்தியக் கூட்டாட்சி என்பது மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக்கடிய இடமாகும்” என ஜிஎஸ்டி சட்டம் குறித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து இங்கு நினைவுகூரத்தக்கதாகும். அத்தகைய ஆரோக்கியமான உரையாடல் நடக்க வேண்டும் என்றால் அரசுகளுக்கிடையிலான ஆணையக் கூட்டம் முறைப்படி கூட்டப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் உணர்ந்துதான் அரசுகளுக்கிடையிலான ஆணையக் கூட்டத்தை ஆண்டுக்கு மூன்று முறை கூட்ட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு 2022 ஜூன் 16ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். “மாநிலங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எந்த ஒரு சட்ட மசோதாவையும் மாநிலங்களுக்கிடையிலான ஆணையக் கூட்டத்தில் வைத்து விவாதித்து அதன் பிறகே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் கூறியிருக்கிறார். இதை மற்ற மாநில முதல்வர்களும் வலியுறுத்துமாறு தமிழ்நாடு முதல்வர் கேட்க வேண்டும். அத்துடன் ராஜமன்னார் குழுபோல ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கவும் வேண்டும்.

தமிழ்நாடு தொடர்ந்து கூட்டாட்சிக்கான முன்னகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய காலம் இது!

ரவிக்குமார்

ரவிக்குமார், எழுத்தாளர், கவிஞர், அரசியலர். விசிக பொதுச்செயலர். மக்களவை உறுப்பினர். தொடர்புக்கு: manarkeni@gmail.com


3

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

K.SUSILKUMAR   2 days ago

அருமையான பதிவு தோழர், எளிமையாக விளக்கப்பட்டுள்ளது உங்களின் கட்டுரை தொகுப்பு.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Piku   8 days ago

இக்கட்டுரை மிக மேம்போக்காக எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆணையத்தின் அவசியம் என்று தலைப்பிட்டுக்கொண்டு மூன்றில் ஒரு பங்கு கூட அதன் அவசியத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லவில்லை. ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னணி ஒரு பங்கு; பிறகு, 2016ல் மோடி பேசியதன் மொழிபெயர்ப்பு ஒரு பங்கு (தேவையே இல்லை); பிறகு போனால் போகிறதென்று ஒரு பத்தியில் அதன் அவசியம் என்று எழுதி இருக்கிறார் கட்டுரையாளர். கூடுதலாக முதல்வருக்கு புகழ்மாலை வேறு! Inter-state council-ன் முக்கியத்துவம் என்பது வெறும் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே மட்டும்ல்ல, பிற மாநிலங்களுடனும் அதன் தேவை இருக்கிறது. அதுபற்றி ஒரு வரி கூட இக்கட்டுரையில் இல்லை. மேலும் என்னென்ன வகையில் இந்த ஆணையத்தைச் செம்மையாக பயன்படுத்தலாம் என்ற துறை ரீதியான விவரிப்பும் இல்லை (உதா:- ஜிஎஸ்டி, நீர் பங்கீடு, சுற்றுச்சூழல் ஒத்திசைவு, உள்நாட்டு பாதுகாப்பு). ஆங்கில இந்துவில் வெளியான செய்தியை முன்பின் சேர்த்து பட்டி டிங்கரிங் பார்த்ததுப் போல் இருக்கிறது. இன்னும் விரிவான கட்டுரை எழுதப்பட வேண்டும்! நன்றி.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உயர் சாதியினரின் கலகம்தலித்துகள்chennai rainரஜினிகாந்த்‘தி டெலிகிராப்’ நாளிதழுடன் வளர்ந்தேன்உட்கார்வதற்கான உரிமைபொங்கல்அருஞ்சொல் டாக்டர் கணேசன்மானுடவியலாளர் எஸ்.ஜே. தம்பையாநிதிச் சீர்திருத்தம்காலவெளியில் காந்திகரோனா இடைவெளிநவீன எலக்ட்ரிக் வாகனங்கள்LICவரவேற்புthulsi goudaகால்பந்து வீரர்பணவீக்கம்பிரதமர் மோடிநோங்தோம்பம் பிரேன் சிங்டாடாபுஜ எலும்பு முனைகள்நானும் நீதிபதி ஆனேன்திருமாவேலன்தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம்தன்வரலாறுபோஸ்ட்-இட்கடவுளின் விரல்ஆளுநர் பதவி ஒழிக்கப்படட்டும்...!காலத்தின் கப்பல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!