கட்டுரை, அரசியல், சர்வதேசம் 7 நிமிட வாசிப்பு

வல்லரசுகளைத் தோற்கடித்த 4 ராணுவ சாகசங்கள்

ராமச்சந்திர குஹா
04 Mar 2022, 5:00 am
3

க்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறான நான்கு பெரிய ராணுவப் படையெடுப்புகளைப் பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. மிகப் பெரிய நாடுகள், ராணுவரீதியில் வலிமையும் வாய்ந்தவை, உலக அரங்கில் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாகக் கருதி, பெரும் அவமானத்தில் முடிந்த அந்த நான்குப் படையெடுப்புகளை மேற்கொண்டன. அத்தகைய பழைய வரலாறுகளை, நம் வாழ்நாளில் நிகழ்ந்தவையாகச் சுருக்கிக்கொள்ள வேண்டும் என்றால், இது - அந்த வரிசையில் நான்காவது படையெடுப்பு. வியட்நாமிலும் இராக்கிலும் அமெரிக்கா நடத்திய இருவேறு தனித்தனி படையெடுப்புகள், ஆப்கானிஸ்தான் மீது அன்றைய சோவியத் ஒன்றியம் தவறான கணிப்பின்பேரில் நிகழ்த்திய படையெடுப்பு இதற்கு முந்தையவை. இந்த மூன்று படையெடுப்புகளும் எந்த நாட்டின் மீது படையெடுப்பு நடந்தனவோ அந்த நாட்டை மிகப் பெரிய பொருளாதாரச் சேதாரத்தில் தள்ளியதுடன், படையெடுத்த நாட்டுக்கே மிகப் பெரிய தலைக்குனிவையும் ஏற்படுத்தின. அத்துடன் தொடர் விளைவாக பல நிகழ்வுகள் உலகில் இடம்பெற்றன.  

என்னிடம் பதில் இல்லை

அமெரிக்க அதிபர் ஜான்சன் 1965ஆம் அண்டு வியட்நாமில் அமெரிக்காவின் தலையீட்டைத் தீவிரப்படுத்தினார், அப்போது நான் வட இந்தியாவில் சிறிய பையனாக வளர்ந்துவந்தேன். அந்தப் போர் எப்படி வளர்ந்தது என்பது தொடர்பாக எனக்கு அதன் நினைவுகள் இல்லை, ஆனால், அது எப்படி முடிந்தது என்பதை நினைவுகூர முடியும். நான் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் கல்லூரி மாணவனாக இருந்தேன். அப்போது சைகோனிலிருந்து கடைசி விமானத்தில் அமெரிக்கத் துருப்புகள் ஏறிச் செல்வதை நேர்முக வர்ணனையாக பிபிசி வானொலியில் கேட்டேன். சக ஆசிய நாட்டின் மீதான தோழமை உணர்விலும், வங்கதேசம் பிறப்பதற்கு முன்பு நடந்த நெருக்கடிகளின்போது கொடூரமான, இனப்படுகொலையுடன் பிற அக்கிரமங்களையும் செய்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியை ஆதரித்த நாடு அமெரிக்கா என்ற கோபத்திலும் அவர்களுடைய அந்த அவமானகரமான படை விலக்கலை, இனிப்பு உண்டு மகிழும் கொண்டாட்ட நிகழ்வாகவே கருதினோம்.

சோவியத் ஒன்றியம் 1979ஆம் ஆண்டு டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது படைகளுடன் உள்புகுந்தது. அப்போது டெல்லியில் இடைக்கால அரசின் தலைவராக பிரதமர் சரண்சிங் பதவி வகித்தார். காலனியாதிக்க நாடுகளுக்கு எதிராக, பாரம்பரியமாகக் கொண்டிருந்த வெறுப்பின் அடையாளமாக, நாம் நீண்ட காலமாக நட்பு கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஒன்றியம் போர் தொடுத்ததை, அந்த நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்று அவர் கண்டித்தார்.

ஆனால், 1980 ஜனவரி மாதம் மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற இந்திரா காந்தி, சோவியத் ஒன்றியத்தின் நடவடிக்கை சரியே என்று ஆதரித்தார். அப்போது டெல்லியில் இருந்த சோவியத் ஆதரவு பத்திரிகையாளர்கள் இந்திராவின் நிலைப்பாடே சரி என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தார்கள். ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த சோவியத் ஒன்றிய ஆட்சியாளர்கள், காபூலுக்குச் சிற்றுலாவாகக் கூட்டிச் சென்ற இந்தியப் பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானில் பண்ணையாட்சி முறையும், ஒடுக்குமுறைகளும் விடைபெற்று சோஷலிசத்துக்கும் சமத்துவத்துக்கும் வழியேற்படுத்திவிட்டதாகப் புகழ்ந்து எழுதினார்கள்.

அமெரிக்காவுக்கு 1986ஆம் ஆண்டு முதல் முறையாகச் சென்றேன். கல்கத்தா துணைத் தூதரகத்திலிருந்து அதற்கான ‘விசா’ பெற்றேன். ஹாரிங்டன் சாலை என்று அழைக்கப்பட்ட அந்தச் சாலை பிறகு 1967ஆம் ஆண்டு ஹோ சி மின் சாரணி என்று இடதுசாரி அரசால் பெயர் மாற்றம் பெற்றது. ‘அமர் நாம் – துமர் நாம் – வியட்நாம்’ என்பது அப்போது மிகவும் பிரபலமான முழக்கம். நான் அப்போது பயிற்றுவித்த அமெரிக்க பல்கலைக்கழகத்தில், ஆப்கானிஸ்தானின் சுதந்திரத்துக்காக வெளிநாடுகளிலிருந்து போராடும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கூட்டம் நடந்தது. நானும் அவர்களுடைய உரையைக் கேட்கச் சென்றேன்.

உலகப் புகழ்பெற்ற தாஜிகிஸ்தானைச் சேர்ந்த அகமது ஷா மசூதின் ஆதரவு வீரர்கள்தான் அவர்கள். அவர்களைப் பார்க்கும்போதே கருத்தைக் கவர்ந்தார்கள், தேசப் பற்றைப் பெருமையுடன் வெளிப்படுத்தினார்கள், மதச் சார்பின்மையில் ஆழ்ந்த பற்றுள்ளவர்களாகவும் இருந்தனர். அந்தக் கூட்டத்துக்கு சென்றவர்களிலேயே ஒரேயொரு இந்தியன் நான்தான். அங்கிருந்த ஆப்கானியர் ஒருவர் என்னிடம் கூறினார்: “இந்திரா காந்தி எங்களைக் கைவிட்டுவிட்டார். எங்கள் நாட்டை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்திருப்பதை எப்படி அவர் ஆதரிக்கலாம்? இந்திய அரசு எப்படி இதைச் செய்ய முடியும்?" என்று கேட்டார். அவரிடம் கூற என்னிடம் பதில் ஏதும் இல்லை.

வல்லரசு எனும் அகங்காரம்

ஆப்கானிஸ்தானின் சுதந்திரத்துக்காகப் போராடிய அவர் மிக உயரமாக இருந்தார், நல்ல உடல் வாகுடன் இருந்தார், தலையில் அழகான தலைப்பாகை அணிந்திருந்தார். இப்போது இதை எழுதும்போதுகூட அவருடைய முகம் என் மனக்கண்ணில் அப்படியே மீண்டும் தோன்றுகிறது. அவர் கேட்டது சரிதான், இந்திரா காந்தி தலைமையில் இருந்த இந்திய அரசு சோவியத்துகளை ஆதரித்து தவறிழைத்துவிட்டது. அதற்குப் பதிலாக சோவியத்தின் ஆக்கிரமிப்பு விரைவாக முடிய இந்தியா பாடுபட்டிருக்க வேண்டும்.

இந்தியாவும் பிற தோழமை நாடுகளும் அளித்த ஆதரவால் துணிச்சல் பெற்ற சோவியத் ஒன்றிய ராணுவம், பத்தாண்டுகளுக்கும் மேல் அங்கேயே இருந்தது. அதன் விளைவாக சோவியத்துக்கு எதிராகத் திரண்ட அமைப்பானது, மதவாதம் சார்ந்ததாகவும் மதப் பழமைவாதமாகவேகூட உருமாற்றம் பெற்றும், உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. இதனால் நாடு மேலும் நாசமானது. தலிபான்கள் எனும் மதப் பழமைவாதிகள் செல்வாக்கு பெற்றனர். வியட்நாம் நாட்டிலிருந்து அமெரிக்கர்கள் அவமானகரமாக திரும்பியதைப் போல சோவியத் ஒன்றிய ராணுவமும் ஆப்கானிஸ்தானத்தைவிட்டு வெளியேறும்படி ஆயிற்று.

ஆப்கானிஸ்தான் மீது 2001இல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய அமெரிக்கா பிறகு தனது துருப்புகளையும் அனுப்பியது. சோவியத் முன்னுதாரணத்தைவிட அமெரிக்காவின் செயலுக்கு ஓரளவு நியாயமான தகுதியும் சிறிதளவு இருந்தது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-காய்தா, 2001 செப்டம்பர் 11 அன்று நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி தருவதற்காக, அவர்களுக்கு எல்லாவித ஆதரவும் தந்த தாலிபான் அரசின் அதிகார மையத்தைத் தகர்க்க அமெரிக்கா, காபூல் மீது தாக்குதலை மேற்கொண்டது.

2002ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் பத்திரிகையாளர் தாமஸ் ப்ரீட்மேன் பெங்களூரு வந்தார். இருவருக்கும் தெரிந்த நண்பர் வீட்டில் ப்ரீட்மேனைச் சந்தித்தேன். ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா அடுத்து இராக் மீதும் ஏன் படையெடுக்க வேண்டும் என்பதற்காக பலவிதமான போலி காரணங்களை முன்வைத்து அவர் பேசினார். என்னால் முடிந்தவரை அவருடைய வாதங்களை மறுத்தேன். இரட்டைக் கோபுரம் மீது நடந்த தாக்குதலில் இராக்குக்கு எந்தவிதப் பங்கும் இல்லை என்பதை சுட்டிக்காட்டினேன். வியட்நாமில் அமெரிக்கர்களுக்கு நேர்ந்த தோல்விகளையும் அவமானங்களையும் அவருக்கு நினைவூட்டினேன். வரலாற்றுபூர்வமான ஆதாரங்களோ, தர்க்கங்களோ அவரை மாற்றிவிடும் என்று தோன்றவில்லை. அமெரிக்கா தொடுத்த போரை ஆதரிக்கும் கூட்டத்துக்குத் தலைவனாக அவர் விரும்பிச் செயல்பட்டார்.

இராக் மீது நிகழ்த்திய சட்ட விரோத, தார்மிக நெறிகளுக்குப் புறம்பான தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்க, அணு ஆயுதங்களைத் தயாரித்து ஏராளமான  எண்ணிக்கையில் பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்கர்கள் கதைகளைக் கட்டினார்கள்.

உண்மை என்னவென்றால், உலகின் மிகப் பெரிய வல்லரசு நாம்தான் என்ற அகங்காரம் அவர்களுடைய கண்களை மறைத்தது. அதனால் ஏற்பட்ட நாசகரமான விளைவுகளை நாம் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இராக் மீது அமெரிக்கா நிகழ்த்திய படையெடுப்பால் விளைந்த துயரங்களுக்குக் காரணம் தாமஸ் ப்ரீட்மேன் அல்லது நியூயார்க்கரின் டேவிட் ரெம்ணிக் அல்லது அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஆகியோரும்தான். இராக்குக்கு நேரிட்ட பெருந்துயரம் மட்டுமல்ல; அதற்குப் பிறகு நிகழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளுடைய உள்நாட்டுப் போர்களுக்கும் அதுவே காரணம். இந்த நடவடிக்கை உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் உலகுக்கும் நன்மையையே செய்யும் என்று வரலாற்றாசிரியர்கள் ஜான் லூயி கட்டிஸ், நியால் பெர்குசன் ஆகியோர் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷைத் தவறாக ஊக்குவித்துக்கொண்டே இருந்தனர்.

மறக்கப்படும் வரலாறு

அமெரிக்கர்கள் வியட்நாமைவிட்டு 1975இல் வெளியேறினர். அவர்களே இராக் மீது 2003இல் படையெடுத்தனர், அதாவது 28 ஆண்டுகளுக்குப் பிறகு. சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து 1989இல் வெளியேறியது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது 2022இல் படையெடுத்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு படையெடுப்பும் நீண்ட கால இடைவெளியில், அந்த தலைமுறைக்குப் பிறகு அடுத்த தலைமுறையில் நடந்துள்ளன. பழைய படையெடுப்புக்குக் கூறப்பட்ட காரணங்கள், அதனால் ஏற்பட்ட முடிவுகள், தங்கள் நாட்டுக்கே ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றை ஒரு தலைமுறை கிட்டத்தட்ட மறந்தேவிட்ட நிலையில் மீண்டும் இவை அடுத்து நிகழ்கின்றன. மக்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களும் கடந்த கால வரலாற்றை மறந்துவிடுகின்றனர். எனவே நம்முடைய நாட்டு நலனுக்காகத்தான் இந்த ராணுவ நடவடிக்கை என்று இன்றையத் தலைமுறையை அரசியல் தலைவர்களால் எளிதில் மூளைச் சலவைசெய்துவிட முடிகிறது.

நிச்சயமாக இந்தப் படையெடுப்புகளில் வேறுபாடுகளும் உள்ளன. வியட்நாமும் இராக்கும் புவியியல் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடுகள். ஆப்கானிஸ்தானம் சோவியத் ஒன்றியத்துக்குப் பக்கத்திலும் உக்ரைன் ரஷ்யாவுக்குப் பக்கத்திலும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடுகள். உலகின் ஒரே வல்லரசு நாம்தான், நாம் நினைத்தால் எந்த நாட்டின் தலைவிதியையும், எல்லாக் காலத்திலும் மாற்றி எழுதிவிட முடியும் என்ற ஆணவத்தால் நிகழ்த்தப்பட்டதுதான் இராக் படையெடுப்பு. ரஷ்யாவை இப்போது உலக வல்லரசாக எந்த நாடும் மதிக்கவில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் யார் என்பதைக் காட்டிவிட வேண்டும் என்ற உந்துதலால் நிகழ்த்தப்பட்டிருப்பதுதான் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு.

இந்த நடவடிக்கைகளில் காணப்படும் ஒற்றுமைகள், வேற்றுமைகளைவிட முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நான்கையும் ஒன்றிணைப்பது எதுவென்றால் எந்தவித சீண்டலும் இல்லாமல், இறையாண்மையுள்ள நாடுகள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. வியட்நாமிலோ, இராக்கிலோ சென்று போரிட வேண்டிய அவசியமே அமெரிக்காவுக்கு கிடையாது. அதே நிலைதான் 1979இல் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ஒன்றியம் படையெடுத்ததற்கும், இப்போது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதற்கும். ‘நம்முடைய நாடுதான் உயர்ந்தது - பெரியது, பொருளாதாரத்தில் வலிமைமிக்கது, ராணுவ பலம் வாய்ந்தது, நம்மைவிட சிறிய நாடு அல்லது குறைவான ஆயுத பலம் கொண்ட ராணுவம் உள்ள நாட்டின் மீது படையெடுக்க நமக்குத் தெய்வீக உரிமை உண்டு’ என்ற சிந்தனையே இதற்குக் காரணம்.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு எப்படி மாறும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. உக்ரைனிலிருந்து ரஷ்யப் படைகள் உடனடியாகப் பின்வாங்கிவிட வேண்டும் என்பதே நியாய உணர்வுள்ள மக்களுடைய எதிர்பார்ப்பு. இப்போதைக்கு அப்படி நடப்பதற்கு சாத்தியம் இல்லை. தன்னுடைய செயல்களை நியாயப்படுத்த இராக் மீது நிகழ்த்திய படையெடுப்பைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் புதின். இராக்கில் சதாம் உசைனுக்குப் பதிலாக வேறொருவரை ஆட்சிப்பீடத்தில் அமர்த்திய ஜார்ஜ் புஷ்ஷின் முன்னுதாரணத்தை குறிப்பால் உணர்த்துகிறார்.

மேற்கத்திய அரசியல் விமர்சகர்களால் இதை ஏற்க முடியாமல் போகலாம் அல்லது ஏற்க விருப்பம் இல்லாமலும் இருக்கலாம், பிற நாடுகள் மீது அமெரிக்கா நிகழ்த்திய படையெடுப்புகளே இப்போது ரஷ்யா தன்னுடைய பக்கத்து நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன. 'ஃபைனான்சியல் டைம்ஸ்' நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரையில் – ‘வரலாறு காட்டும் வழியின்படியே, புடின் மிக துணிச்சலாகவும் வலுவாகவும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்’ என்று பெருமை பொங்க குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2003இல் இராக் மீது படையெடுத்தபோது ஜார்ஜ் புஷ் சார்பிலும் இப்படியே பெருமையோடு குறிப்பிட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

ரஷ்ய வரலாற்றாசிரியர்கள் சொல்வதை அதிபர் விளாடிமிர் புடின் கேட்பாரா என்று வியக்கிறேன். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மன உறுதி குலைந்ததால்தான் அன்றைய சோவியத் ஒன்றியம் சிதறி பல்வேறு நாடுகளாக பிரிந்தன என்பதை யாராவது அவருக்கு நினைவூட்டினால் நல்லது. அல்லது இராக்கில் தகுந்த காரணமோ நியாயமோ இல்லாமல் அமெரிக்கா நிகழ்த்திய படையெடுப்பால் எப்படி உலக அரங்கில் அந்த நாட்டுக்கு வலிமை குறைந்தது என்பதையாவது அவரிடத்தில் கூறினால் நல்லது. தொடக்க சில நாட்களில் கிடைக்கும் வெற்றிகளால், இந்தப் போரினால் ஏற்படும் செலவுகள் தோல்வியுறும் நாட்டுக்கே அதிகம் என்று புதின் கணக்குப் போடலாம். ஆனால், ஆக்கிரமிப்பு அல்லது படையெடுப்பு நீடித்துக்கொண்டேபோனால் ரஷ்ய நாட்டுக்கும் ரஷ்ய மக்களுக்கும்கூட பொருளாதாரச் சுமை அதிகரிக்கும்.

வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக், இப்போது உக்ரைன் படையெடுப்புகள் எல்லாம் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நிகழ்ந்தவை. எனவே இவற்றைத் தனித்தனியாகப் பார்க்கும் எண்ணமே தோன்றும். இந்த நான்குக்கும் உள்ள ஒற்றுமையை எதிர்கால வரலாற்றாசிரியர்கள் அடையாளம் காண்பார்கள். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்டுள்ள தவறான சுய நம்பிக்கைகளால் வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமல்ல; உலக நாடுகளுமே கடுமையான விலையைத் தந்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

2

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Aravindh Rajendran   2 years ago

ரஷ்யா,அமேரிக்கா வின் சென்ற நூற்றாண்டு படையெடுப்புகள் அவற்றின் பனிப்போர் வல்லமையை காட்டுகின்றன. பனிப் போரில் சிறிய நாடுகள் , இவ்வல்லரசுகளின் இராணுவ மற்றும் சிந்தனை வலிமையை நிகழ்த்திக் காட்ட மேடைகளாக விளங்கின. இப்போது உருவாகி வரும் போர் யுக்தியானது 'ஆபத்து, பழிவாங்கல் ,பாதுகாப்புக்கு பங்கம்' என்ற பெயரில் நிகழ்கின்றன. சர்வதேச அளவில் போர்கள் குறித்த கருத்தரங்கமும், அதற்கென ஒரு நிறுவனம் -வல்லரசு நாடுகளைத் தவிற மற்ற நாடுகளின் பிரதிநிதிகளோடு -அமையப் பெற வேண்டும். வல்லுநர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதே அவசியம் என கருதும் மனநிலை தனிமனித சுதந்திரத்தை விதந்தோதும் இன்றைய இளைஞர்கள் புரிந்துணர்வது இன்றியமையாதது, நீண்ட கால அமைதியை வலியுறுத்துவது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

இந்த சமயத்தில், Europe union படைகளை அனுப்பி உதவ முடியும். ஆனால் அது அணு ஆயுத போர் ஆக மாற வாய்ப்பு உள்ளது.. உக்ரைன் அதிபர் சரண் அடையும் முடிவில் இல்லை.. இந்த போர் விரைவில் முடியாவிடில், இது ஒரு மூன்றாம் உலக போர் ஆக வாய்ப்பு உள்ளது...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Jerald   2 years ago

ரஷ்யா, உக்ரைன் மீது அநியாயமாய் தாக்குதல் நடத்த ஆரம்பித்து, ஒரு வாரம் கடந்த நிலையில், தாமதமாக, நேற்றும் இன்றும் அதைக் குறித்த கட்டுரைகள் வந்தது, மகிழ்ச்சி என்று சொல்ல மாட்டேன். நல்லது என்றே சொல்கிறேன். இதைக் குறித்த வரலாற்றுப் பின்னணியை எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

இன்சுலின்திஷா அலுவாலியா கட்டுரைவகுப்புவாதம்உணவு விற்பனைமுக்கியமானவை எண்கள்இறக்குமதிஉடல் உறுப்பு தானத் திட்டம் சீரமைக்கப்படுமா?திமுக அரசுநவீன சிந்தனைகள்சாரு நிவேதிதா சமஸ் ஜெயமோகன்வெயில் காலம்பாலு மகேந்திரா பேட்டிதங்கம் தென்னரசுகுழந்தைகளுக்குத் தடுப்பாற்றல் குறைந்திருப்பதுவன்முறைக் களம்கருத்துரிமை காத்த கலைஞர் சமஸ் உரைமானுட செயல்கள்மோகன் பகவத்சுவாசம்2024 பாஜக வெற்றி நிச்சயமில்லைபெண்களின் வெயிட்டிங் லிஸ்ட்பட்டாபிராமன்பில்கிஸ் பானுதலைமுறைதமிழக நிதிநிலை அறிக்கை 2022ஊடக ஆசிரியர்கள்andஇந்தியத் தொல்லியல் துறைபயிற்றுமொழிஉதிர்கிறதா இறையாண்மை?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!