கட்டுரை, அரசியல், சர்வதேசம், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

ரஷ்ய-உக்ரைன் போரில் இந்திய நிலைப்பாட்டின் பின்னணி என்ன?

ஆரென்டெட் மைக்கேல்
07 Jul 2022, 5:00 am
1

லகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடாக நீண்ட காலமாக விளங்கிவரும் இந்தியா, ஜனநாயகம் சார்ந்த போராட்டங்களைக் கையாள்வதில் பல்வேறு நாடுகளுக்கு உதவிவருகிறது. இந்த ஆதரவானது இரு தரப்புகளும் பல தரப்புகளும் மேற்கொள்ளும் முன்முயற்சிகளின், குறிப்பாகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கலவையாகும்.

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (நிரந்தர உறுப்பினர் அல்லாத முறையில்) அது நடந்துகொள்ளும் விதமும் ஜனநாயகத்திற்கு அது அளித்துவரும் ஆதரவுக்கு முரணாக உள்ளன. போரின் தொடக்கத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐநா கொண்டுவந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கி நின்றது ஐநா உறுப்பு நாடுகள் பலவற்றைக் கோபப்படுத்தியது. 

வாக்களிக்காமல் ஒதுங்கி நின்ற தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக இந்தியா ‘வாக்களிப்புக்கான விளக்கம்’ என ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது. “ராஜதந்திரப் பாதைக்குத் திரும்ப வேண்டும்” என்றும், “வன்முறையையும் விரோதப் போக்கையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றும் இந்தியா அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டது. “சமகால உலக நாடுகளின் நிலையானது ஐநாவின் சாசனம், சர்வதேசச் சட்டம், நாடுகளின் இறையாண்மை, இடப்பரப்பு சார்ந்த உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பு நாடுகளும் ஆக்கபூர்வமான வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தக் கொள்கைகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளையும் சச்சரவுகளையும் தீர்த்துக்கொள்வதற்கான ஒரே வழி உரையாடல் மட்டுமே. இந்தத் தருணத்தில் எவ்வளவுதான் கடினமானதாகத் தோன்றினாலும் அதுதான் ஒரே தீர்வு” என்று இந்தியா அந்த அறிக்கையில் கூறியது.

இந்திய-ரஷ்ய உறவு

இந்த அறிக்கைகளும் உரையாடலுக்கான அழைப்பும் ஐநாவின் சாசனத்திலுள்ள நோக்கங்கள், பொருத்தப்பாடுகள் குறித்த இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டிற்கு ஏற்ப அமைந்திருந்தாலும், இந்தியாவின் கொள்கை முழக்கத்திற்கும் அது நடந்துகொள்ளும் விதத்திற்கும் இடையிலான முரண்பாடு தெளிவாகவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஐநா சபை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் ரஷ்யாவுடனான ‘நல்ல உறவு’தான் இந்தியாவுக்கு முக்கியம் என்பதாகவே முதல் பார்வைக்குத் தெரிகிறது. வியூக முக்கியத்துவம் வாய்ந்த சுயாதிகாரத்திற்கான தீவிர முனைப்பைக் கொண்டிருப்பது என்பது இந்தியாவின் வெளியுறவு மற்றும் வியூக முக்கியத்துவம் சார்ந்த முக்கியமான கொள்கைகளில் ஒன்று. வாக்களிப்பிலிருந்து விலகி நின்றதன் மூலம் அந்தக் கொள்கையை இந்தியா மீறிவிட்டதாகவே தோன்றுகிறது.

போர் வியூகம் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சோவியத் ஒன்றியம் ஆப்கனை ஆக்கிரமித்தபோது நடந்துகொண்ட விதத்திலேயே இந்தியா இப்போதும் நடந்துகொள்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் தேசியப் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. ஆசியாவிலும் உலகிலும் புவிசார் வியூக முக்கியத்துவம் தொடர்பான அதன் தற்போதைய செல்வாக்கும் எதிர்காலத்தில் இருக்கக்கூடிய செல்வாக்கும் ஆபத்தில் உள்ளன.

ராணுவரீதியாக ரஷ்யாவை இந்தியா சார்ந்திருக்கிறது. இந்தச் சார்புநிலை பூதாகரமானது என்பதுடன் அபாயகரமான நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ‘இந்திய-சோவியத் அமைதி, நட்பு, ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ 1971இல் கையெழுத்தானது. அதிலிருந்து, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் நீண்ட கால அடிப்படையிலான போர்த் தளவாட விநியோக ஒப்பந்தங்களும் நடைமுறையில் உள்ளன. 2000 அக்டோபர் முதல் இந்தியாவும் ரஷ்யாவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த உறவை மேற்கொண்டுவருகின்றன. 2020 டிசம்பரில், ‘வியூக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக் கூட்டாண்மை’யாக இது மேம்படுத்தப்பட்டது. 

ராணுவம் எனும் வர்த்தகம் 

கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தபோதிலும், 1996-2015க்கு இடையில், இந்திய ராணுவ இறக்குமதியில் ரஷ்யத் தயாரிப்புகளின் பங்கு கிட்டத்தட்ட 70%ஆக இருந்தது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2016-20க்கு இடையில் அது ஏறத்தாழ 49%ஆக இருந்தது என்றும் தெரிகிறது.

சொல்லப்போனால், தற்போது பயன்பாட்டில் உள்ள இந்திய ராணுவ உபகரணங்களில் 70% ரஷ்யாவில் நேரடியாகத் தயாரிக்கப்பட்டவை. அவற்றின் பெரும்பாலான பாகங்கள் ரஷ்யாவில் தயாரானவை அல்லது ரஷ்யாவின் உரிமம் பெற்றவை. பெரும்பான்மையான இந்திய டாங்கிகள், இந்தியாவிலுள்ள ஒரே விமானம் தாங்கிக் கப்பல் (பெரிதும் மேம்படுத்தப்பட்ட கியேவ்-ரக விமானம் தாங்கியான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா), எம்ஐஜி-29 (MiG-29) ரகப் போர் விமானங்கள், ஆறு போர்க் கப்பல்கள், நான்கு நாசகாரக் கப்பல்கள், அணு ஆயுதம் கொண்ட ஒரே ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை 2020ஆம் ஆண்டில் இவற்றில் இடம்பெற்றிருந்தன.

இந்தியக் கடற்படையின் 14 நீர்மூழ்கிக் கப்பல்களில் எட்டு ரஷ்ய கிளோ வகையைச் சேர்ந்தவை. இந்திய விமானப் படையில் ‘சுகோய் சு-30 எம்கேஐ’, ‘மில் எம்ஐ-17’ ஆகியவை உள்ளன. இவை முறையே, போர் விமானங்களிலும் பயன்பாட்டு ஹெலிகாப்டர்களிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றைத் தவிர ரஷ்ய டேங்கர் விமானங்களும் உள்ளன. இந்தியா அண்மையில் ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்பையும் வாங்கியது.

இந்தியா தற்போது ராணுவரீதியாக அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற பிற நாடுகளையும் நாடிவருகிறது. வெளிநாட்டு இறக்குமதிகளை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டு தன் சொந்தத் தயாரிப்புகளையும் அதிகரித்துவருகிறது. என்றாலும், புதிய இந்திய-ரஷ்ய திட்டங்கள் பலவும் கருத்தளவில் அல்லது அமலாக்க நிலையில் உள்ளன. 2021 டிசம்பரில், ‘2+2 உரையாடல்’ (வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்திலானது) என்றழைக்கப்படும் அமைப்பின் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய கட்டம் ஒன்றைத் தொடங்கின. இதே அமைப்பைப் பயன்படுத்தி இந்தியா வியூகரீதியில் தனது முக்கியப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வியூகம், பாதுகாப்பு, உளவு ஆகிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்திவருகிறது. இந்தப் பட்டியலில் ரஷ்யாவும் புதிதாகச் சேர்ந்துள்ளது. 

ரஷ்யாவும் இந்தியாவும் 2031 வரை பரஸ்பர ராணுவ உறவுகளை மேலும் ஆழப்படுதிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா ரஷ்ய ஆயுத அமைப்புகளை வழக்கம்போல வாங்கிவருகிறது. இதற்கு அடுத்த கட்டமாகப் பொதுவான பல ஆராய்ச்சித் திட்டங்களுக்கும் புதிய ஆயுதங்களை உருவாக்குவதற்குமான ஒப்பந்தங்களையும் இரு நாடுகளும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த ஆயுதங்களின் உற்பத்தி இரு நாடுகளிலும் சமமாக நடைபெறும். புதிய போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல் ஏவுகணைகள், கலாஷ்னிகோவ்கள் ஆகியவை இந்த ஆயுதங்களில் அடங்கும்.

இந்தப் பரஸ்பர ஈடுபாட்டின் ஆழம், குறிப்பாக ரஷ்யாவின் மீதான இந்தியாவின் சார்பு, வியூகம் சார்ந்த கடுமையான விளைவுகளை மட்டுமின்றிப் பிராந்திய அளவில் நீண்ட கால அடிப்படையிலான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய பெரிய இக்கட்டான நிலையையும் எடுத்துக்காட்டுகிறது. ரஷ்யாவிற்கு எதிரான உலகளாவிய பொருளாதாரத் தடைகள் ரஷ்யப் பொருளாதாரத்தையும் ராணுவத்தையும் இலக்காகக் கொண்டுள்ளன. மைக்ரோசிப்கள் அல்லது விமான உதிரிபாகங்கள் போன்ற முக்கியமான பொருள்கள் விஷயத்தில் ரஷ்யா விரைவில் பற்றாக்குறையைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, இருக்கும் உபகரணங்களைப் பழுதுபார்த்தல், கட்டமைத்தல், உதிரி பாகங்களைக் கையிருப்பில் வைத்திருத்தல் ஆகியவற்றிலும் ரஷ்யாவின் திறனை இந்தத் தடைகள் முடக்கிவிடும்.

சீனா போன்ற பிற நாடுகள், சர்வதேசத் தடைகளைத் தவிர்த்துவிட்டு ரஷ்யாவுக்கு உதவி செய்தாலே ஒழிய தன் ராணுவத்தைக் கவனித்துக்கொள்வதில் ரஷ்யாவுக்கு ஏற்படக்கூடிய இயலாமை பல துணை விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவுடனான ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவது ரஷ்யாவுக்குச் சாத்தியம் இல்லை. உதிரி பாகங்கள் இல்லாததும் ரஷ்ய ஆயுத உபகரணங்களைப் பொறுத்தவரை இந்திய ராணுவத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடியது. கொள்முதல் ஒப்பந்தங்கள், பொதுவான திட்டப் பணிகள் ஆகிய அனைத்தும் ஆபத்தில் உள்ளன. இந்தியா, முன்னெப்போதையும்விட இப்போது ரஷ்யாவின் நல்லெண்ணத்தை நம்பியுள்ளது.

அரசியல் நகர்வுகள்

ராணுவச் சார்புக்கு அடுத்தபடியாக, பொருளாதார, அரசியல் துறை சார்ந்த காரணிகளும் இந்தியாவின் வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. உலகளாவிய பொருளாதாரத் தடைகள் ஏற்கனவே எரிபொருள், எரிவாயு விலை பெருமளவில் உயர வழிவகுத்துள்ளன. இந்தியா இவற்றில் 80% வரை இறக்குமதியை நம்பியுள்ளது. எனவே, இத்தகைய அத்தியாவசியமான பொருள்களை இறக்குமதி செய்ய இந்தியா கூடுதலாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். ரஷ்ய உபகரணங்களுக்குப் பதிலாகப் பிற நாடுகளிலிருந்து ராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதும் இந்தியாவின் செலவைக் கணிசமாக அதிகரிக்கச்செய்துவிடும். இவை அனைத்தும் சேர்ந்து, ஏற்கெனவே கோவிட்-19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மேலும் கடுமையாகப் பாதிக்கின்றன. 

அரசியல்ரீதியாக, சீனா-பாகிஸ்தான் கூட்டணியின் காரணமாகத் தெற்காசியாவில் இந்திய மேலாதிக்கம் குறிப்பிடத்தக்க அளவில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவின் பார்வையில் இந்தக் கூட்டணி ஏற்கனவே மிகவும் கொந்தளிப்பான நிலையில் உள்ள இந்திய-பாகிஸ்தான் உறவுக்குத் தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. போதாக்குறைக்கு, 2020, மே மாதத்தில் இமயமலை எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீன உள்கட்டமைப்புத் திட்டங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தி இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக அமைந்தன.

இது இந்திய-சீன உறவை மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டுசென்றது. அது மட்டுமல்ல. தென் சீனக் கடல் மீது சீனா முன்வைக்கும் உரிமைகோரல்களை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. இலங்கை, மாலத்தீவுகள், குறிப்பாக பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நோக்கிய சீனாவின் நகர்வுகள் சீனாவின் மீதான இந்தியாவின் அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. சீனா இந்தியாவைச் சுற்றி வளைக்கும் கொள்கையைப் பின்பற்றுவதாக இந்தியா கூறுகிறது. 

இந்தியா தான் சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டில், உக்ரைனுக்கு வாய்மொழி ஆதரவை அளிக்கும் அதேவேளையில், ரஷ்யாவை அந்நியப்படுத்திக்கொள்ளாமல் இருக்கும் யதார்த்த அரசியலைப் பின்பற்றுகிறது. இதன் முரண்பாடான விளைவாக, ரஷ்யா இப்போது அதிக தள்ளுபடியில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதுடன் அதிக முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடனான தனது இராணுவ உறவை மேம்படுத்திக்கொள்ள பிரிட்டன்  பரிந்துரைத்துள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வழங்கவும் அது முன்வந்திருக்கிறது.

இந்திய அரசியல் கட்டமைப்பைப் பொறுத்தவரை ராணுவரீதியாகவோ வர்த்தகரீதியாகவோ ரஷ்ய ஆதரவைக் கைவிட முடியாது. ரஷ்யா மலிவான விலையில் இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயுவைத் தருகிறது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தேசியப் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், எல்லைகளைத் தாண்டியும் இந்தியாவின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் முன்னிறுத்த வேண்டிய தேவை இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது. 

© பென்சில்வேனியா பல்கலைக்கழகம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆரென்டெட் மைக்கேல்

ஆரென்டெட் மைக்கேல். ஜெர்மன் ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் விரிவுரையாளர். பல்வேறு விருதுகள் பெற்ற ‘இண்டியா’ஸ் ஃபாரின் பாலிஸி அண்டு ரீஜினல் மல்டிலிட்ரலிஸம்’ (India’s Foreign Policy and Regional Multilateralism) நூலின் ஆசிரியர். ‘ஏஷியன் செக்யூரிட்டி’, ‘கேம்ப்ரிட்ஜ் ரிவ்யூ’, ‘ஹார்வர்டு ஏஷியா குவார்ட்டர்லி’ உள்ளிட்ட இதழ்களில் இவருடைய கட்டுரைகள் வெளியாகின்றன. தொடர்புக்கு: post@arndt-michael.net

தமிழில்: அரவிந்தன்

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

மேற்கத்திய நாடுகள் தங்களுடைய benchmarkஐ மாற்றிக்கொள்ளும் பொழுதெல்லாம் இந்தியாவும் அதை பின்பற்றவேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லாம ஒன்று.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

வடவர் ஆதிக்கம்தமிழக அரசுவிடுதலைப் போராட்டங்கள்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்2024: யாருக்கு வெற்றி?சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிமன்னார்குடி நீடூழி வாழ்க குடியரசு!நடுவில் இரண்டு வர்ணத்தைக் காணோம்மீட்புநாம் செய்ய வேண்டியது என்ன?ஓவியப் பாரம்பரியம்பெகஸஸ்அகவிலைப்படிசமூக நலத் திட்டங்களும் அதிகாரப்பரவலாக்கமும்மங்கோலிய இனத்தவர்மூர்க்குமா செ கட்டுரைநகரமைப்பு முறைசர்வாதிகார நாடாகிறதா இந்தியா?கி. ராஜாநாராயணன்சுயாட்சி – திரு. ஆசாத்எம்எஸ்எஸ்: பெரிய தலைக்கட்டுமுன்னோடியாக விளங்கட்டும் மாநில கல்விக்கொள்கைதனியார்மயம் பெரிய ஏமாற்றுரிலையன்ஸ் நிறுவனம்அர்விந்த் கெஜ்ரிவால்ஏக்நாத் ஷிண்டேமாபெரும் தமிழ்க் கனவு கிரா பேட்டிபுதிய ஆட்டம்ரத்தமும் சதையும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!