கட்டுரை, அரசியல், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

உக்ரைன் விவகாரத்தில் மௌனம் அவமானம்

ராமச்சந்திர குஹா
03 Aug 2022, 5:00 am
3

க்ரைனுக்குள் ரஷ்ய ராணுவ டேங்குகள் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் உக்ரைனிய நகரங்கள் கிராமங்கள் மீது ரஷ்யப் போர் விமானங்கள் குண்டு வீசி அழிப்பதும் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. இது மிகவும் கொடூரமான, ரத்த பலி கேட்கும் போர். இதுவரை சண்டையில் 20,000 ரஷ்யப் போர் வீரர்களும் அவர்களைப் போல இரண்டு மடங்கு உக்ரைன் வீரர்களும் இறந்துவிட்டனர். உக்ரைனைச் சேர்ந்த சிவிலியன்கள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடம் தேடி தங்களுடைய நாட்டை விட்டே ஓடி பிற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவிட்டனர்.

உக்ரைனின் பொருளாதாரம் நாசமாக்கப்படுகிறது. இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும்கூட, தன்னுடைய பழைய நிலைக்குத் திரும்ப உக்ரைனுக்கு இன்னும் பல பத்தாண்டுகள் தேவைப்படும். சாமானிய ரஷ்யர்களின் வாழ்க்கையும் அன்றாடப்பாடும்கூட துக்கப்படும் நிலைக்குச் சென்றுவிட்டன. மேற்கத்திய நாடுகள் எடுத்துவரும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளாலும் அதிபர் புடினால் தொடங்கப்பட்ட போரின் விளைவாக ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, வருவாய் இழப்பு, அவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு உள்ளிட்ட இன்ன பிற செயல்களாலும் ரஷ்யர்களும் துயரங்களில் ஆழ்ந்துள்ளனர். 

தொடரும் சித்திரவதை

ஒரு மனிதன் என்ற வகையில், ரஷ்ய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். எல்லா உக்ரைனிய நகரங்களின் அடித்தளக் கட்டமைப்புகளையும் திட்டமிட்டு அழிக்கின்றனர். மருத்துவமனைகள், மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் தங்கியுள்ள நிலவறைகள் போன்றவற்றையும்கூட குண்டு வீசி தகர்க்கின்றனர். பெண்களைப் பாலியல் வல்லுறவு உள்பட எல்லா வகையிலான தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்குகின்றனர்.

இந்தியக் குடிமகன் என்ற வகையில், என்னுடைய அரசின் கோழைத்தனத்தைக் கண்டு திகைப்படைகிறேன். ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்காமலும் அவர்களுடைய அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பதையும் கண்டு வருந்துகிறேன்.

கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கிய மாதத்திலோ அல்லது அடுத்த மார்ச் மாதத்திலோ இந்தியா எந்த ஒரு முடிவையும் திட்டவட்டமாக எடுக்காமல், பொறுத்திருந்து பார்க்கலாம் என்று செயல்பட்டதை ஓரளவுக்கு அவசியம் என்றுகூட கருதலாம். இரு நாடுகளும் மோதலை விரைவிலேயே முடித்துக்கொண்டுவிடும் என்றுகூட பேசப்பட்டது. உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்டு இந்தியாவுக்குக் கூட்டி வருவதே அப்போது முன்னுரிமையாக இருந்தது.

மார்ச், பிறகு ஏப்ரல், பிறகு மே என்று போகப்போக ரஷ்யாவின் குரூரமான தாக்குதல்கள் அதிகமாகின. இதற்குப் பிறகும் இந்தியா நடுநிலை வகிப்பதை ஏற்க முடியாது. மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலால்தான் ரஷ்யா பதிலடியாக உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்தது என்ற வாதம் மிகவும் குறுகிய அடிப்படையைக் கொண்டது, உண்மையல்ல அது என்பது வெகு விரைவிலேயே வெளிப்படத் தொடங்கியது.

நேட்டோவில் உக்ரைன் சேர்ந்துவிடாமல் தடுக்க, இந்தத் தாக்குதலை புடின் எடுக்கவில்லை; மாறாக தன் எண்ணத்துக்கேற்ப அடங்க மறுத்ததற்காக உக்ரைனியர்களைக் கடுமையாகத் தண்டிக்கவே இந்நடவடிக்கையை அவர் தொடர்கிறார். ரஷ்ய அதிபருக்கு சர்வாதிகார வெறி பிடித்திருக்கிறது. தன்னை வரலாற்றின் இடைக்கால சக்ரவர்த்தியாக நினைத்துக்கொண்டு, தன்னுடைய பக்கத்து நாடுகளையெல்லாம் ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டு மிகப் பெரிய உலகத் தலைவராக உருவெடுக்க முயல்கிறார்.

புடினும் அவருடைய ராணுவமும் தங்களுடைய கற்பனையான கனவுகளை நினைவாக்க - உக்ரைனியர்களுக்கு அல்லது ரஷ்யர்களுக்கேகூட கடுமையான சேதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை - முயன்று பார்த்துவிடுவோம் என்று தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவருகின்றனர். (உக்ரைனிலிருந்து கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டு ஒடசா பிரதேசத்தின் பெரிய துறைமுகத்தின் மீது குண்டுகளை வீசி, கடுமையாக சேதப்படுத்தியிருக்கிறது புடின் அரசு).

‘உக்ரைனியர்கள்’ என்பதே ரஷ்யர்களுக்கு இன்னொரு அடையாளம் என்று நம்புகிறார் புடின். எனவே, அவர்கள் அனைவரும் சொந்த தாய்நாட்டுடன்தான் இணைந்திருக்க வேண்டும் – அதற்காக ராணுவ பலத்தை முழுதாகப் பயன்படுத்துவதிலும் தவறில்லை என்று கருதுகிறார். இந்த ஐந்து மாதப் போர் எதையாவது உணர்த்தியிருக்கிறது என்றால் அது உக்ரைனியர்களுக்குள்ள தேசிய உணர்வு வலுவானது என்பதைத்தான். தாங்கள் வித்தியாசமானவர்கள், தனித்துவம் மிக்கவர்கள், தங்களுடைய தேசிய அடையாளம் மறைந்துவிடாமல் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு முன்னால் ரஷ்யர்களுக்கும் தங்களுக்குமிருக்கும் கலாச்சார ஒற்றுமையையும் இரு நாட்டவர்களுக்குமுள்ள பரஸ்பர மொழிப் பழக்கத்தையும்கூட வெளிப்படையாகப் பேசிப் பெருமைப்பட்டனர். இப்போது அவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. வீடுகளில் ரஷ்ய மொழியே பேசும் உக்ரைனியர்கள்கூட இனி ரஷ்யாவுடன் அரசியல்ரீதியாக இணைந்து வாழ்வதை நினைத்துக்கூடப் பார்க்கத் தயாரில்லை.

ரஷ்ய ஏகாதிபத்தியம்

ரஷ்ய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உக்ரைனியர்கள் வெளிப்படுத்தும் தேசிய உணர்வு, ஒருகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்த வியட்நாமியர்களின் தேசிய உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெற்ற இந்தியா, அமெரிக்காவை எதிர்த்த வியட்நாமைத்தான் ஆதரித்தது என்பதை இந்திய அரசு நினைவுகூர்வது புத்திசாலித்தனமாகக்கூட அமையும். வியட்நாமியர்கள் முதலில் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும் பிறகு அமெரிக்கர்களின் மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலைக்காகப் போராடினார்கள்.

அமெரிக்காவிடமிருந்து பொருளாதார – ராணுவ உதவிகளுக்காக அண்டியிருந்த 1960களில்கூட, ‘வியட்நாம் விவகாரத்தில் அமெரிக்கா செய்வது தார்மிகரீதியாக தவறு, அரசியல்ரீதியாக புத்திசாலித்தனமற்றது’ என்று சுட்டிக்காட்டத் தவறவில்லை இந்தியா. அமெரிக்காவிடமிருந்து கோதுமை, பால் பவுடர் உள்ளிட்ட பொருளாதார உதவியை மிகவும் நம்பியிருந்த அந்தக் காலத்தில்கூட அதன் தவறைச் சுட்டிக்காட்ட இந்தியா தயங்கவில்லை.

நம் நாட்டுடன் நேரடித் தொடர்புள்ள, இதே போன்ற இன்னொரு வரலாறும் நினைவுக்கு வருகிறது. 1970களில் மேற்கு பாகிஸ்தானால் பொருளாதாரரீதியாகச் சுரண்டப்படுவதையும், சமூகரீதியாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதையும், அரசியல்ரீதியாக ஒடுக்கப்படுவதையும் விரும்பாத அன்றைய கிழக்குப் பாகிஸ்தானிய வங்காளிகள், தங்கள் மீது திணிக்கப்பட்ட இஸ்லாமிய அடையாளத்தை எதிர்த்தனர். தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று தீவிரமாகச் சிந்தித்தனர்.

ஆனால், இஸ்லாமாபாதில் ஆட்சி செய்த ராணுவத் தலைமை, ‘உங்களுடைய ஒரே அடையாளம் பாகிஸ்தானியர் என்பதுதான், வங்காளிகள் என்பதெல்லாம் பிறகுதான்’ என்று மூர்க்கமாக மறுத்து ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியது. தங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த வங்காளிகளைக் கடுமையாக ஒடுக்க முற்பட்டது. இதனாலும், லட்சக்கணக்கான வங்காளிகள் உயிர் பிழைப்பதற்காக இந்திய எல்லை நோக்கி வரத் தொடங்கியதாலும் இந்தியா ராணுவ உதவியுடன் தலையிட நேர்ந்தது. அதற்குப் பிறகு வங்கதேசம் என்ற சுதந்திர நாடு உதயமானது.

ஒருகாலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வங்காளிகள் எப்படியோ அப்படித்தான் இப்போது ரஷ்யர்களுக்கு உக்ரைனியர்கள். ஒரே அடையாளம் – ஒரே வரலாறு என்று ரஷ்யா தவறாகக் கூறுவதை உக்ரைனியர்களும் ஏற்கவில்லை. வலுமிக்க நாட்டின் பிடியிலிருந்து விடுதலைபெற உக்ரைன் இப்போது போராடுகிறது. 1970-71இல் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்காக பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா சரியாகவே தண்டித்தது.

கிழக்கு பாகிஸ்தானிலிருந்து புகலிடம் தேடி வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் தந்தது. தேவைப்பட்ட நேரத்தில் உரிய அளவு ராணுவ பலத்தையும் பயன்படுத்தியது. வங்கதேசம் நம்முடைய நாட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தது, உக்ரைன் வெகு தொலைவில் இருக்கிறது என்பதால் அப்படி உதவ வாய்ப்பில்லை. ஆனால், நாம் இப்போது நடந்துகொள்ளும் முறையைக் கைவிட்டு, நேர்மாறான நிலையை எடுக்க வேண்டும்.

இதுவரையில் நாம் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்பைக் கண்டிக்காமலேயே இருக்கிறோம், அதன் காரணமாக உக்ரைனில் புடின் நிகழ்த்தும் அக்கிரமங்களுக்கு உடந்தையாக இருக்கிறோம் என்றுகூட கருதப்படும்.

இந்தியா எங்கே? 

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து திருப்தியைத் தராத விளக்கங்கள் பல கூறப்படக்கூடும். ரஷ்யாவின் ஆயுதங்களையும் ராணுவ உதவிகளையும் பெருமளவுக்கு நம்பியிருப்பதால் அவர்களைக் கண்டிக்க முடியாமலிருக்கிறது என்று கூறப்படுகிறது. உக்ரைனியர்களுக்குத் தனி சுதந்திர நாடாக இருக்கும் உரிமை இருக்கிறது என்று நாம் சொன்னால், நாளையே காஷ்மீர் மக்களுக்கும் நாகாலாந்தின் நாகர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறிவிடுவார்கள் என்று ஒன்றிய அரசை ஆளும் பாஜகவின் தலைவர்கள் சிந்திப்பதாகத் தெரிகிறது.

இன்னும் சிலர், சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை கடுமையாக உயர்வதால் இந்தியாவில் அவற்றின் விலை உயர்வதையும் பணவீக்கம் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்க முடிகிறது என்பதால் இந்தியா கண்டிக்காமல் இருப்பதாகக் கூறுகின்றனர். சர்வதேச புவி அரசியலில் நல்ல அனுபவம் இல்லாததால் பிரதமர் மோடி தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழம்புகிறார். எனவே, இந்தியாவால் இதில் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறது.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், இந்திய அரசின் நிலை - அல்லது எந்த நிலையையும் எடுக்க முடியாத நிலை, தார்மிகரீதியாக ஏற்க முடியாததாக இருக்கிறது, அரசியல்ரீதியாக செயல்திறமற்றதாகத் தெரிகிறது. நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிருஷ்ண மேனனை அடியொற்றிப் பேசுகிறார். ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து வாங்கிக்கொண்டே, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாமா என்று இந்தியாவைப் பார்த்து, ஐரோப்பிய நாடுகள் ஆஷாடபூதிகளைப் போல கேட்கின்றன என்று சாடுகிறார்.

ஐரோப்பிய நாடுகள் சந்தர்ப்பவாதம் பேசுவது செய்தியல்ல, நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டைப் பெரிய விழாவாகக் கொண்டாடிக்கொண்டு, அப்படிப்பட்ட சுதந்திரத்தை இழக்க விரும்பாத உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவைக் கண்டிக்காத இந்திய நிலைதான் சந்தர்ப்பவாதம். சுதந்திரம் பெறுவதற்காக இந்தியா எதிர்த்த ஏகாதிபத்தியம் மறைந்துவிடவில்லை, இன்றைக்கு உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்த ரஷ்யாவின் வடிவில் அது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இழப்புகள் அதிகமாகிவரும் நிலையிலும் அடிபணிந்துவிடாமல் ரஷ்யாவைத் தொடர்ந்து எதிர்க்கும் உக்ரைனியர்களின் தீரத்தை ஆதரித்தாக வேண்டிய தார்மிக கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கிறது. அரசியல்ரீதியிலும் இதற்குத் தேவையிருக்கிறது. நம்முடைய பொருளாதார வலிமை, மக்கள்தொகை, ராணுவத்தின் அளவு – ஆற்றல், இன்னும் பிற அம்சங்கள் காரணமாக உலக அரங்கில் இந்தியா சொல்வது கவனமுடன் கேட்கப்படுகிறது.

புடின் செய்வதை சீனம் கள்ளத்தனமாக அங்கீகரிக்கும் நிலையில், நம்முடைய அரசு அந்த ஊடுருவலைக் கடுமையாகக் கண்டித்திருந்தால் புடினுக்கும் ரஷ்யாவுக்கும் அழுத்தம் அதிகமாகியிருக்கும். உக்ரைனை இந்தியா ஆதரித்திருந்தால், ரஷ்யாவுக்கு எதிர்மறையான அழுத்தம் அதிகமாகியிருக்கும், சமரசப் பேச்சுகளுக்கு ரஷ்யாவை அது வரவழைத்திருக்கும். அப்படி இந்தியா நடந்துகொண்டிருந்தால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்கும். அத்துடன் உக்ரைன் மட்டுமல்ல - ஏராளமான நாடுகளின் துயரங்களுக்கும் முடிவு ஏற்பட்டிருக்கும்.

ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

4

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Sivakumar ganesan    6 days ago

இலங்கையில் கூட இந்திய படைகளின் தலையீடு இவ்வாறு தானே இருந்தது... கிழக்கு வங்காளத்தின் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட மொழி ஆதிக்க அரசியலை தானே இன்றுவரை ஒன்றிய அரசு பிராந்தியங்களின் மீது மேற்கொள்கிறது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Abi   6 days ago

உண்மை தான் ஐயா.. ஆனால் nato முதுகில் குத்தும் (வான் எல்லைகளை மூடாமல்) என்று zelenski எதிர் பார்க்கவில்லை.... ஒவ்வொரு நாடும் இப்படி சுயநலம் கொண்டு இருப்பின் 3 வது உலக போருக்கு வாய்ப்புகள் இல்லை. அதனால் சற்று ஆறுதல்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    6 days ago

எந்த பத்திரிகையும் இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டை வலுவாக கண்டிக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கிருந்தது. இந்தியா உலகத்தின் ஆன்மிக குரு என்று நம்மை ஆள்பவர்கள் கூசாமல் சொல்லிக் கொள்கின்றனர். திரௌபதி துகில் உரியப்படுவதை கண்டிக்காத பீஷ்மர் போல் இந்தியா நடந்து கொள்கிறது(நம்மை பீஷ்மர் வகையறா என்று நாம்தான் நினைத்துக் கொள்ள வேண்டும், வேறு எந்த நாடும் நம்மை அப்படிக் கருதாது) இளமைக் காலத்தில் சோஷலிசத்தை ஆதர்சமாக எண்ணிய, அரசு சாராத சிலருக்கு கூட ரஷ்யா என்றால் ஒரு soft corner. ரஷ்யா என்ன இப்போது சோஷலிசத்தை வளர்க்கும் காரியத்தையா செய்கிறது?

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அமெரிக்காவில் சாதிநீர் மேலாண்மைசமஸ் பாலு மகேந்திராக்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்விக்கிப்பீடியாகலைஞர் தோற்கக் கூடாதுன்னு நெனைச்சார் எம்ஜிஆர்: ஹண்பிரஷாந்த் கிஷோருக்கு பிஹார் வசப்படுமா?ஆண் பெண் உறவுபணமதிப்புநீக்கம்தமிழக நிதிநிலை அறிக்கைஜி ஸ்கொயர்அரசுகருணை அடிப்படையில்சில்லுன்னு ஒரு முகாம்சமூக மாற்றம்திருமாவேலன்வ.உ.சி.இந்திய நாடாளுமன்றம்சிறப்பு அந்தஸ்துசேமிப்புஆன்லைன் வரன்கழுத்து வலியால் கவலையா?ஈஸ்ட்ரோஜென்கட்டுப்படாத மதவெறிஆட்சி மாற்றம்டி.வி.பரத்வாஜ் கட்டுரைபெருநகரங்கள்state autonomyகரிசல் கதைகள்ரயில் பயணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!